வரைந்தவனின் பசி தீர்க்க
சில்லரைக் காசுகளுடன்
தெருவில் ஓவியமாய்
கடவுள்

கால் வைக்கத் தயங்கினேன்
நீர்அருந்திக் கொண்டிருக்கிறது
குளத்தில் நிலா

குழந்தையின் கையில்
தூரிகை
வீடெல்லாம் அழகு

அலைபேசியை
அணைத்து வைத்தேன்
கடற்கரையில்
'அலைகள் பேசிக் கொண்டிருக்கின்றன'

கடலைக் கண்டதும்
எழுந்தது
குழந்தையின் முகத்தில்
சந்தோஷ அலை

காய்க்காத மரம்
கிளையில் பழுத்திருந்தது
தேன் கூடு

குளிர்சாதன அறையில்
கூட்டம்
சூடான விவாதம்
உலக வெப்பமயமாதல் குறித்து

காற்று, மழை, நீர், உணவு தந்த
இயற்கைக்கு நாம்
பரிசளித்தோம்
பாலிதீன் பைகளை

மனித இன அழிவு
தொடங்கி வைக்கிறது
தொழிற்சாலைக் கழிவு

வீட்டுச் சிறையில்
முதிர் கன்னிகள் தங்கம் இன்றி
கோவில் அறைகளில்
தங்கக் குவியல்
கேட்பாரின்றி

உலக வங்கியில் கடன்
உள்ளூர் கோவிலில்
தங்கப் புதையல்

மூலவருக்கு ஒற்றைப் பூட்டு
ரகசிய அறைகளுக்கு
நான்கு அடுக்கு பாதுகாப்பு
பத்மநாப சாமி-நீ
பத்திரம் டா சாமி

தடுமாறவில்லை
குடிமகன்கள்
விலையேறிய பின்னும்
அலைமோதும் டாஸ்மாக் கடை

தலைக்கேறிய போதையில்
தரையிறங்கியது
இடுப்பிலிருந்த வேட்டி

ஊழலுக்குள் சிக்கித்
தவிக்கிறது
கூட்டணி தர்மம்
கைது செய்யப்பட்டது
கூடா நட்பு

அடுக்கடுக்கான புகார்
அடுத்தது யார்
காத்திருக்கிறது திகார்

அமைச்சரவையை
பங்கு போட்டுக் கொண்டது
திகார் சிறை

டாப்டென் மூவீஸ்
படவரிசை பத்து
வரிசையாக திரைப்படங்கள்
எப்பொழுதும் முதலிடத்தில்
குடும்ப தயாரிப்பாளர்கள்

சாலையெங்கும்
வாகனப் பெருக்கம்
போட்டி போடுகிறது
பெட்ரோல் விலையேற்றம்

ஆட்சியாளர்களின்
இயலாமை
அமலுக்கு வருகிறது
நள்ளிரவு முதல்

Pin It