காட்டைக் கழனியாக்கி
காசு பார்த்த காலம் போச்சு
தொழிலில் பணத்தைப் போட்டு
தொகை பார்த்த காலம் போச்சு

வங்கியிடம் கடன் வாங்கி
வளர்ந்து வந்த காலம் போச்சு
சிறு சேமிப்பை ஊக்கப்படுத்தி
சில்லறை பார்த்த காலம் போச்சு
உள்நாட்டு வளத்தை வைத்து
நம் நலன் காத்த காலம் போச்சு

அரிசி பருப்பு சர்க்கரையும்
அயல் நாடு போகலாச்சு
கனிம வளம் அத்தனையும்
வெளி நாடு போகலாச்சு
வெளிநாட்டுப் பொருள்களுக்கு
நம்நாட்டில் கிராக்கியாச்சு
அரசு கொடுக்கும் மானியங்கள்
மறையவே துவங்கியாச்சு
சந்தை எல்லாம் தீர்மானிக்கும்
சர்ச்சையே இல்லாம போச்சு

நிதிச் சந்தையில் பங்கு போட
விதிமுறையில் மாற்றலாச்சு
பங்கு சந்தை ஒன்றையே
பாதுகாக்க காலம் பூரா போச்சு.
விவசாயம் தொழில் எல்லாம்
வீணா குறுகலாச்சு
வாகனக் கடன்கள்
வாசல் வரை வரலாச்சு
வட்டிக்கடை
வீதிக்கு வீதி வந்து
வீட்டுக் கதவைத் தட்டலாச்சு
நிதி அமைச்சர் சொல்வதெல்லாம்
'வாங்கும் சக்தி எகிறிப் போச்சு
வறுமை நாட்டில் ஒழிஞ்சு போச்சு'
ஊழல் எங்கும் பெருகிப் போச்சு
உலக மெல்லாம் சிரிக்கலாச்சு

- கே.துரைராஜ், ஈரோடு

Pin It