அம்மாவும் நிலவைக் காட்டியே
சோறூட்டினாள்
அம்மாக்களைப் போலவே...
நிலவு குறித்தான கனவு
கனவாய் நீளும்..
நிலவோடு சேர்த்து
காகம், நரி, முயல் பற்றியும்...
பீர்பால், தெனாலி பற்றியும்...
மேகம், மழை, வானவில் பற்றியும் விரியும்...
வடை சுடும் பாட்டி
எப்படி வாழ்வாள் தனியாக...
கதைகளால் ஆன கதைகளை
அம்மா சொல்ல, சொல்ல
தின்று கொண்டிருப்பேன்
சோற்றை, கதைகளோடு சேர்த்து...

நட்சத்திர முத்துக்களை உதிர்த்து
கனிந்த பழமொன்றையும்
ஈரமிகுந்த முத்தத்தையும் ஊட்டினாள்...
கண் மயங்கிச் சாயும் வரை...

கதைகளில் நிரப்பப்பட்ட
புனைவுகளிலிருந்து பிரியங்களை
கற்றுக் கொண்ட இதயம்
கனவுக்குள் அமிழ்ந்து

கவிதைகளைக் கற்றுக் கொண்டன....
அவசர வாழ்வில்
அபரிதமான வாழ்வின்
சுவையற்று நிலாச்சோறு
வெறும் கனவாகிப் போனது...
இப்போது குழந்தைகளுக்கு...

வலைத்தளத்தில் சிக்கிவிட்ட
அவர்களுக்கு
வண்ணத்துப்பூச்சியின்
சிறகசைப்பும்
சிட்டுக் குருவியின்
சில்மிஷமும்
தூரம் தான் நிலவைப்போல...

அவர்கள் கனவையும்
நனவையும் கணிப்பொறி
கவனித்துக் கொள்ளும்...

Pin It