சபாநாயகரவர்களே, சபையோர்களே!
இந்த மகாநாட்டில் எனக்கு முன் பேசிய கனவான்கள் ஒவ்வொருவரும் முக்கியமாக கதர், மதுவிலக்கு, தீண்டாமை என மூன்று விஷயங்களைத்தான் சொல்லியிருக்கிறார்கள். நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. ஏதோ என் மனதிலுள்ள சில விஷயங்களைச் சொல்ல அநுமதி கொடுத்ததால் சொல்லுகிறேன். கொங்குவேளாள குலத்தினர் இத்துடன் மூன்று மகாநாடு கூடியாகிவிட்டது. சற்று உணர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. மகாநாட்டிற்கு வேளாள சமூகத்தினர் திருவிழாவுக்கு வருவதுபோல் எண்ணி வருகிறார்கள். காப்பியும் சாப்பாடும் சாப்பிட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். இந்த சமூகத்தார்களிருக்கும் நிலைமைக்கு இச்சங்கம் இந்த வேலை செய்தது போதியதல்ல. இச்சமூகத்தின் கஷ்டந்தான் நாட்டின் கஷ்டமாகும். இச்சமூகத்தின் முன்னேற்றந்தான் நாட்டின் முன்னேற்றமாகும்.
கதரும், மதுவிலக்கும் உங்கள் சமூகத்தினர் செய்யாதது பெருங்குறை. உபசரணைக் கமிட்டித் தலைவர் ஸ்ரீமான் ஞ.ரத்தினசபாபதிக் கவுண்டர் கதரைப்பற்றித் தமது பிரசங்கத்தில் குறிப்பிட வில்லையென்று ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாரவர்கள் குறிப்பிட்டார். அதன் காரணம் வேறொன்றுமில்லை; அவர் கதர் கட்டவில்லை; ஆதலால் அவர் குறிப்பிடவுமில்லை. கதரை மனிதன் கட்டினாலும், மரங்கட்டினாலும், யார் கட்டினாலும் அதன் பலனை நீங்கள்தான் அடைகிறீர்கள். பஞ்சமென்று சொல்வது வியாபாரிக்கல்ல, வக்கீலுக்கல்ல, உத்தியோகஸ்தனுக்கல்ல, பஞ்சத்தால் குடிக்கக் கூட தண்ணீர் இல்லையென்றால் யாருக்கில்லை? குடியானவர்களுக்குத் தானில்லை. ஆகையால், பஞ்சம் என்றால் குடியானவர்களுக்குத் தான் என்று கருதவேண்டும். பஞ்சம் வரக்காரணம் விளையாமையினாலல்ல; பணமில்லாமையினாலல்ல; முன் காலத்தைவிடத் தற்காலம் ஊர் நத்தம், மலை, புறம்போக்கு எல்லாம் விளைவு செய்யப்படுகிறது. விளைவும் குறைந்ததாகக் காணோம். தானியங்கள், பருத்தி, மிளகாய், நிலக்கடலை, தானியம் முதலிய சரக்குகள் எல்லாம் தற்காலத்தில் முன்னைவிட 1-க்கு நாலு பாகம் அதிக விலைக்கே விற்கப்படுகிறது. எத்தனை பணம் வந்தாலும் நம் நாட்டில் பணம் தங்க மார்க்கமில்லாமல் போயிற்று.
பண்டம் மாற்றிக் கொண்டு பணமில்லாமலே அக்காலத்தில் பஞ்சமின்றிப் பிழைத்தோம். கொஞ்சம் பணம் வந்தாலும் புதைத்து வைப்போம். அக்காலத்தில் பஞ்சமில்லை. இத்தனை பணம் வந்தாலும் இக்காலத்தில் எவ்வளவு பெரிய குடும்பமாயிருந்தாலும் கலியாணம் வந்தாலும் இழவு வந்தாலும் நாட்டுக்கோட்டையாரிடந்தான் போக வேண்டி வந்துவிட்டது. அநேக குடும்பங்கள் இன்சால் வெண்டு விண்ணப்பம் போட வேண்டியதாய்த்தானிருக்கிறது. சாதாரணக் குடியானவர்கள் நிலை எப்படி இருக்கிறதென்று யோசித்துப்பாருங்கள். பட்டணங்களுக்கு வந்து பால், விறகு விற்றுப் பிழைக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு பஞ்சம் வரக்காரணம் வேலையில்லை, தொழிலையெல்லாம் மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டோம். ஆகையால், நம் நாட்டு ஏழை மக்கள் வெளிநாட்டுக்குப் போவதைத் தடுக்க முடியவில்லை. காங்கய நாட்டில் ஏழைக்குடியானவர்கள் கட்டில், சட்டி, பானையுடன் பஞ்சத்தால் வெளிநாடு செல்வதைக் கண்டு விசனமடைந்தேன். அவர்கள் வெளிநாடு சென்றும் கால்ரா, பெரு வயிறு இவைகளால் கஷ்டப்பட்டு அநேகர் மாண்டும் போயினர். இந்தப் பஞ்சம் நமக்கு எது வந்தாலும் தீராது. சர்க்கார் உத்தியோகம் வந்தாலும் தீராது. சர்க்கார் கொடுக்கும் சுயராஜ்யம் வந்தாலும் தீராது. எந்த நிலை நமக்கு நன்மை, எந்த நிலை நமக்குத்தீமை என்பதைக் கவனிக்க வேண்டும்? அவரவர்கள் கையிலேயே தொழிலிருக்கிறது.
ராட்டினம் ஒன்று நம்மை விட்டுப் போனதும், அநேக பணத்தை நாம் இழக்க நேரிட்டது. மிஷின்கள் வந்த பின்னேதான் நமக்குப் பங்கம் வந்தது. ஒரு நெல்லு மூட்டை குத்தினால் இரு குடும்பம் ஒரு நாள் வயிறார சாப்பிட ஏழைகளுக்கு வழியிருந்தது. இம்மாதிரி ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு சாப்பாடு கிடைத்து வந்தது. இப்போது ஆயிரக்கணக்கான ஏழைகளின் வாயில் மண்ணைப் போட்டு விட்டு நெல்மிஷின் என்ற பிசாசு அந்த லாபத்தைக் கொண்டு போய்விடுகிறது. பருத்தி நூல் மிஷின்களும் அப்படியேதான். ஒருநாள் 1-க்கு 40 ஆயிரம் பேர் நூற்கும் நூலை ஒரு மிஷின் நூற்றுவிடுகிறது. அந்த கூலி, 40 ஆயிரம் குடும்பத்தை பட்டினிப் போட்டுவிட்டு முதலாளிக்குத்தான் போய்ச்சேருகிறது. இதில் சில நூற்றுக்கணக்கான கூலிகளுக்குத்தான் கூலி கிடைக்கிறது. ஆகையால் ஒரு மிஷின் முதலாளிக்கு லாபத்தையும் சில பேருக்கு சொற்பகூலியையும் கொடுத்துவிட்டு ஒருநாள் 1 - க்கு 40 ஆயிரம் ஏழைகள் வாயில் மண்ணைப்போடுகிறது. 3 ராத்தர் பஞ்சு எடையுள்ள ஒரு மல் பீஸில் 1 - 4 - 0 ரூபாய் பஞ்சுக்கு விலை நமக்குக்கிடைக்கிறது. பாக்கி பீஸ் 1 - க்கு 13-12-0 ரூபாய் அந்நிய நாடு போய்விடுகிறது. அந்த 13 - 12 - 0 ரூபாயை நம் நாட்டில் நிறுத்தவேண்டும்.
காங்கயம் பிர்க்காவில் பஞ்ச நிவாரண வேலை செய்ததாக சிலர் பெயர் பெற்றுக்கொண்டார்கள். அது சரியான நிவாரண வேலையென்று சொல்ல முடியாது. உண்மையில் பஞ்ச நிவாரண வேலை செய்தது மகாத்மா காந்திதான். திருப்பூர், காங்கயம் பக்கம் பஞ்சத்தில் வாடிய ஏழைகளை அரைக்கஞ்சியாவது ஊற்றிக் காப்பாற்றியது கைராட்டினம்தான். அதனால்தான் மகாத்மா மில் தொழிலை ஆதரிக்கவில்லை. கதர் கொஞ்சம் விலை அதிகமாயிருந்தாலும் கொஞ்ச காலம் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான். டிராமா, காப்பி, பீடி, வக்கீல் இவைகளுக்கு செலவாவதில் கதருக்கு கொஞ்சம் உபயோகிக்கலாம். ஆகையால், நாம் விட்டுவிட்ட தொழிலை மீண்டும் கொள்ளவேண்டும். போய்விட்ட யோக்கியதையை சம்பாதிக்காதவர்கள் எப்படிப் புது யோக்கியதையை சம்பாதிக்கப் போகிறீர்கள்? குடியைப்பற்றிக்கூட எனக்கு முதலில் அவ்வளவு கவலையில்லை, கதரைக் கட்டுங்கள், குடியை விட கதர் பிரதானமானது என்றுதான் சொல்லுவேன்.
குறிப்பு: 20.2.26 ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெற்ற கொங்குவேளாளர் 3 ஆவது மகாநாட்டு சொற்பொழிவு.
(குடி அரசு - சொற்பொழிவு - 07.03.1926)