நாட்டுப்புறக் கதை

இழைப்புளி எத்திராஜுன்னா, நாட்டுல வருமான வரி கட்டுற அத்தனை பெரிய மனுசர் களுக்கும் தெரியும். அதேபோல அந்த டிபார்ட் மண்டுல இருக்கிற அத்தனை அதிகாரிகளுக்கும் அவரு ரொம்ப பிரசித்தம்.

எப்படி மகாத்மா காந்தி ‘தர்மகர்த்தா’ திட்டம் மூலமா பெரும் பெரும் முதலாளிகளை யெல்லாம் மனசு இரங்கி வந்து ஏழையம்பதி களுக்கு கொடுத்து உதவச்சொல்லி பாடுபட் டார்ன்னு சொல்லுவாகளோ, எப்படி வினோபாஜி பெரிய பெரிய நிலச்சுவான்தார்கள்ட்டெப் போயி மன்றாடி அரை ஏக்கர் ஒரு ஏக்கர்ன்னு நிலங்களை யாசகமா வாங்கி ஏழை உழவர்களுக்கு கொடுத் தார்ன்னு சொல்லுவாகளோ, அதே மாதிரி வருமான வரி கட்டாம டிமிக்கி கொடுக்கிற அசகாய ஏமாத்து பேர்வழிகளிடத்துலயெல்லாம் நேரடியாப் போய் ஆற அமர உட்கார்ந்து நயமாப் பேசி நம்ம ஏழை நாட்டோட நடப்பு நெலைமை களைச் சொல்லி அவங்க மனசை இழையோ இழைன்னு சன்னஞ்சன்னமா இழைச்சி வருமான வரியை கட்டவைக்கிறதுலெ பெரிய சமர்த்தர்ன்னு பேரு வாங்குனவர். அதனாலதான் அவருக்கு இழைப்புளி எத்திராஜுன்னு பேரு துலங்குனது.

மத்தவங்களை மாதிரி தடாபுடான்னு படை பரிவாரங்களோட போயி பங்களாவுக்குள்ள நொழஞ்சி சோதனை போடுறதோ கணக்கு கேக் கிறதோ வம்பு வழக்குன்னு கோர்ட்டுக்கு அலைய விடுறதெல்லாங் கிடையாது. அப்படியொரு சூதானமான அஹிம்சா அதிகாரி.

ஒரு திட்டத்தோடுதான் இந்த ஊருக்கு அவரை மேலிடத்துலயிருந்து மாத்தி அனுப்பிச் சிருக்காங்க. இந்த ஊர்ல பெப்பையா பெப் பையான்னு ஒரு பெரிய மனுசர். பாக்கிறதுக்கு ஒரு பரதேசி மாதிரிதான் தெரியுவார். ஒண்ணாம் நம்பர் ஈயாப் புத்தியுள்ள மனுசன்.

இவர்கிட்டெயிருக்கிற நிலபுலன்களை மட்டும் கணக்கிலெடுத்தா கிழக்கே வேம்பார் கடல்லயிருந்து மேற்கே கழுகுமலை மந்தை வரைக்கும் ஆயிரக்கணக்கான நிலங்கள் இவரு மண்ணுதான். திருநெல்வேலியிலயும் மதுரை யிலயும் ஏகப்பட்ட கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறதா சொல்லுவாங்க. ஊர்ல ஒரு சனம் வெளியெ வேலைக்கு போகப்படாது. எல்லாம் இவரு நிலத்துலதான் வேலை பாக்கணும். எவனுக் காவது வெளியில வேற மேனத்தான வேல மேல நெனப்பு வந்ததோ!

ஒண்ணுஞ்செய்யமாட்டார். கோபப்பட மாட்டார், ஆத்திரப்படமாட்டார். அவனுக்கு உதவுற மாதிரி ஆரம்பிச்சி கடைசியில் ஒருவாய்க் கஞ்சிக்கு இல்லாமல் பண்ணி தன்னால அல்லாட விட்டிருவார்.

அப்படித்தான் போன வருசம் அந்த ஊரு நாவிதன் தன் மகன் வேலை விசயமா அவர்கிட்டெ ஒரு சிபாரிசுக்கு போயிருக்கான்.

“மொதலாளி எம்மவன் அவனுக்கு விவரந் தெரிஞ்சதுலருந்து உங்க புஞ்சையிலதான் வேலை பாக்கான். இப்பொ முழு இளவட்டமாயிட்டான். வெயில்ல நிக்கெ, காட்டு வேல பாக்க கொஞ்சம் மலைக்கான். நாலு எழுத்து படிச்சவன். ஐயாவுக்கு மேலாவுள தெரியாத பெரிய மனுசர் கிடையாது. கொஞ்சம் மனசு வச்சி இந்தப் பயலுக்கு நிழலோட் டமா ஒரு கவர்மெண்ட் வேல வாங்கிக் கொடுத்தா புண்ணியமாப் போகுஞ்சாமி” அப்படீன்னு வந்து நின்னான்.

பெப்பையாவுக்கு கோபம்ன்னா இன்ன மட்டுமின்னு இல்லெ. படவா இரு இருன்னு மனசுல கறுவிக்கிட்டு, முகத்தை பூப்போல சிரிச்சமட்டுல “இந்தா இப்பொ ரெடி பண்ணிர்ரேன்”னு அப்பவே பேப்பர் பேனாவை

எடுத்து எழுத ஆரம்பிச்சார்.

மகா ஸ்ரீ மகா கனம் பொருந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்களுடன் முடுக்குலாம்பட்டி பெப் பையா எழுதுவது என்னவெனில், இங்கு யாபேரும் நல்ல சௌக்கியம். அதேபோல் தாங்கள் சுகத்திற் கும் தங்கள் பாரியாள் கமலாவின் nக்ஷமத்திற்கும் உங்கள் சிரஞ்சீவி குமாரத்தி சௌபாக்கியவதி ப்ரியதர்ஷிணி நலத்திற்கும் சகல ஆசீர்வாதங்களும் தர வேணுமாய் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நிற்க,

இது லிகிதம் கொண்டு வரும் எங்கள் ஊர் நாவிதன் குருவன் மகன் சடையன் அஞ்சாம் வகுப்புவரை படிச்சவன். தற்போது வேலையில்லா மல் கஷ்டப்படுகிறான். நானறிந்த வரையில் தற்போது குஜராத்தில் கவர்னர் வேலையொன்று காலியாக இருப்பதாக அறிகிறேன். அந்த வேலையை குடிநபருக்கு அளித்து ஆதரிக்க வேண்டுகிறேன். மற்றவை நேரில் (என்னமோ அடிக்கடி சந்திக்கிற மாதிரி!)

“இந்தா இந்த தபாலைக் கொண்டுக்கிட்டு குடும்பமாப் போயி டவுனுக்குள்ளிருக்கிற மூணு ராந்தல் ரோட்டுல நின்னுக்குங்க. பிரதமர் எங்குட்டுச் சுத்தியும் ஒருநா ஒரு பொழுது அந்த வழியாத்தான் வருவாரு. பாத்து இன்னார் அனுப் புனாகன்னு மட்டும் சொல்லு. அடுத்த நிமிசம் ஒங் குடும்பத்தையே அவரு வண்டியில ஏத்தி கூப்பிட்டுப் போயிருவாரு”

குருவன் மூணுமாசமா குடும்பத்தோட வேலையுங்கெடுத்து கடங்கப்பு வாங்கி மூணு ராந்தல் ரோட்டுல ரவ்வும் பகலும் படுத்துக் கிடந்ததுதான் மிச்சம். கடைசியில் குலை பட்டினியா ஊருவந்து சேந்து மொதலாளி கால்ல விழுந்தான்.

“உங்க மேல எந்த சொஷ்டிக்கொறவும் கிடையாது முதலாளி. அந்த மனுசன்தான் இந்த திசைக்கிடைக்கே காணோம்”.

“என்னப்பா எழவு உன் கிரகசாரம். ம். . . . சரி அவரு இல்லேன்னா என்ன இந்தா இன்னொரு தபால்தாரேன் இதைக் கொண்டு போயி வல்ல பாய் படேல்ட்ட கொடு. . . . . . . . ”

“ஐயையோ எஜமான் ஒண்ணும் வேண்டாம். எங்களுக்கு எதாச்சும் கூலி வேலையை கொடுங்க சாமி அல்லை வத்திப்போச்சு சாமி உங்க நல்ல குணத்துக்கு ஜென்மத்துக்கும் உழைக்க கடமைப் பட்டவங்க ராசா நாங்க. ”

இப்படியான கதைகள் பெப்பையாவைப் பற்றி நிறைய கேள்விப்பட்ட ஆபீஸர் சிரிச்சுக் கிட்டெ ‘அட ஒரு முதலாளி அப்படித்தானய்யா இருப்பான். இதையெல்லாம் நாம கண்டுக்கிடக் கூடாது. இப்படியெல்லாம் இரக்கங் காட்டாம கூலிகளை வேலை வாங்குறவன்தான் வரி கட்டுவான். அதுக்கான வேலைகளை நாம பாக் கணும். பெப்பையா வீட்டுக்கு ஆபீஸர் நேரடியாப் போனார். பேச்சு ஒண்ணொன்னா பல மாதிரி பேசி அப்படியே நம்ம நாடு, நாட்டு முன்னேற்றம், ஐந்தாண்டு திட்டம் பற்றாக்குறை, அந்நியக்கடன் பத்தியெல்லாம் நாள்தோறும் போயி மணிக் கணக்குல பேசுனார்.

தினசரி பேசிப்பேசி வாரக்கணக்குல ஆகி இப்பொ மாமாங்கம் ஆனபிறகு ஆபீஸருக்கு இப்பொதான் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. பெப்பையாவின் முகத்தில் நாளுக்கு நாள் ஒரு தெளிச்சி ஆகிக்கொண்டே வந்தது.

மொதல்ல ஆபீஸர்கிட்டெ வேண்டா வெறுப்பா நடந்துக்கிட்ட மனுசன் கொஞ்ச நாள்ல காபி கொடுக்க ஆரம்பிச்சார். இப்பொவெல்லாம் தாராளமா பண்டம் பலகாரம் கொடுத்து உபசரிக்க ஆரம்பிச்சிட்டார். இழைப்புளி இழைச்ச இழைப் புல பெப்பையா மளுமளுன்னு செதுங்கி பலனும் கொடுக்க ஆரம்பிச்சார்.

அந்த மாசம் மொத மொதல்ல ஐயாயிரம் ரூபா வருமான வரி கட்டுனார் பெப்பையா. வருமானவரி ஆபீஸே திருவிழா மாதிரி இருந்தது. மத்த சிப்பந்திகளெல்லாம் எத்திராஜுக்கு மாலை மரியாதைன்னு ஏகத் தடபுடல். ‘பெரிய்ய மலையவே இளக்கீட்டீங்க சார்’. பிறகும் ஆபீஸர் விடலை, பழையபடி பெப்பையாவை கரையோ கரைன்னு கரைச்சி அது கைமேல் பலன் கொடுத் தது. மாசா மாசம் வரி செலுத்துற தொகை கூடிக் கிட்டே போயி இப்பொ மாசம் ஒரு லட்ச ரூபாய் கட்டுறார்ன்னா பாருங்களேன். !

அப்பவும் பெப்பையா முகத்துல ஒரு களங்கமோ கவலையோ இவ்வளவு பணம் விருதாவுல போகுதேன்னு சின்னக் கலக்கங் கூட இல்லாம மனுசன் ரொம்ப தேஜஸா இருந்தார்.

இப்பொ ஸ்டேட் லெவல்ல பெரிய ஆபீஸரே வந்து இழைப்புளியை கண்ணு மூக்குத் தெரியாம பாராட்டுனார். பெப்பையாவை ஒரு தேசபக்தனா மாத்தாம இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்க முடியாது. முங்கிக்கிட்டிருக்கிற கப்பல் மாதிரி இந்தியா இருக்கு அதை எப்படி காப்பத்தறதூன்னு ஒரு தீர்வை நீங்க அவரை நடுநாயகமா வச்சி பேசுனதுல மனுசன் கலங்கிப் போனார்ன்னு இழைப்புளியோட திறமையை பெருமைப்படுத்தினாரு.

பெரிய ஆபீசருக்கு ராத்திரியெல்லாம் தூக்கங் கொள்ளலை. பெப்பையாவோட மனத் திண்மையை சோதிக்கணும்னு துடிச்சார். எப்படியிருந்த மனுஷன் இவ்ளோ யோக்கிய தாம்சமா மாறிப்போனாரு. அவரால் நம்ப முடியல. மனசார மாசம் ஒரு லட்ச ரூபா கட்டுறாரே!

‘இந்த மாசத்துலயிருந்து அஞ்சுலட்சம் போட்டிருக்குன்னு சொல்லுங்க என்ன செய் யுறார்ன்னு பாப்பம்.

அடுத்த நாள் பணத்தை கொண்டுவந்து பெப்பையா கட்டீட்டு போயிட்டார். பெரிய அதிகாரியோட மனசுல இழைப்புளி மகாத்மாவை விட உயர்ந்துட்டார். சே! அப்படி என்னதான் பேசி அந்தக்கல்லை செதுக்கினீரைய்யா சரி இந்த மாசம் பத்துலட்சம் கட்டச் சொல்லுங்க சும்மாக்காச்சுந் தான் ஒரு சோதனை தானே!

ஒண்ணாம்தேதி கரெக்டா வரிப்பணம் பத்துலட்சமும் ஆபீஸ் கணக்குல வரவாயிருச்சி. அடடாடா இழைப்புளிக்கு கோயிலே கட்டலாம். என்னம்மோ சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக் காரங்களை திருத்துனாகளாம். இதுதானய்யா சாதனை.

சரி சரி. கடைசி கடைசியா இருபத்தஞ்சு லட்சம்ன்னு சொல்லுங்க. சும்மா ஒரு டெஸ்ட் தானே. கட்டுறாரா என்னான்னு பாப்பம். இது கொஞ்சம் எல்லாருக்கும் ஜாஸ்தியா தெரிஞ்சது. ஆனால் வந்த ஆபீஸரோ இழைப்புளியோட திறமையிலே அளவு கடந்து நம்பிக்கை வச்சிருந்தார். இதிலே பெப்பையா பாஸ் பண்ணீட்டா இழைப்புளியோட ரேஞ்சே தனி.

அடடா அடடா ஆச்சர்யமய்யா. பெப் பையா பெரிய்ய கோணிப்பையை தலையில் வச்சு தூக்காம மாட்டாம தூக்கிக்கிட்டு வந்துக் கிட்டி ருந்தார். பெரிய ஆபீஸர் பாத்து கலங்கிப் போனாரு.

“யோவ் யோவ் ஓடுங்கய்யா அந்தப் பெரிய மனுசன்ட்டெயிருந்து கோணிப்பையை இறக்குங் கய்யா. . . . ம். . . . எவ்ளோ உத்தமனாயிருந்தா நோட்டு கட்டுகளை கோணியில கட்டி தானா சுமந்திட்டு வருவாரு”.

எல்லாரும் கைத்தாங்கலா இறக்கி ஆபீஸ ருக்கு முன்னாடி கோணிப்பையை பிரிச் சாங்க.

‘ஙா!’ ஆபீஸர் பாத்துப் போட்டு வெல வெலத்துப் போயி நின்னார். அது ரூபா நோட்டுகள் இல்லே. ரூபா நோட்டு அடிக்கிற மிஷின். எல்லாரும் ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பாத்து திகைஞ்சி போய் நின்னாங்க. பெரியாபீஸர் விக்கினதுமில்லே வெறச்சதுமில்லே மெம்மறந்து போயி பெப்பையாவைப் பாத்து ‘யோவ் என்னய்யா இது’ தொண்டைக்குள்ளிருந்து வார்த்தை வராம கண்ணு முழி நெலக்குத்துன மட்டுல பாத்தபடி ஈனஸ்வரத்துல கேட்டார்.

பெப்பையா ரொம்ப சடைப்பா “பிற கென்ன சார் நானும் உங்களுக்காக எவ்வளதான் நோட்டுக்களை அடிச்சு குமிக்கிறது. காலை யிலிருந்து சாயுங்காலம் வரைக்கும் அடிச்சுத்தான் பாக்கேன் ம்ஹும் அப்பவும் உங்ககிட்டெ நல்லபேர் வாங்க முடியல்ல. இதே சோலியா யிருந்தா நானும் ஒரு நல்லது பொல்லது ஊரு நாடுன்னு போக வேண்டாமா அதான் மிஷினை இங்கேயே கொண்டாந் திட்டேன், முடிஞ்சமட்டும் அடிச்சுக்கோங்க”.

ஆபீஸர்கள் பூராவும் சுத்தி நின்னு என்ன செய்யுறதுன்னு தெரியாம முழிச்ச மட்டுல இருந்தாங்க. பெப்பையா “அப்பொ நான் உத்தரவு வாங்கிக்கிடுறேன் அய்யா”

பெரிய கும்பிடாப்போட்டு பெப்பையா திரும்பிப் போகும்போது அவராகவே இப்படி மொணங்கிக்கிட்டே போனார்:

“ஙொய்யால எங்கிட்டேயேவா. . ?”

Pin It