கிழட்டு ஆடு

அவளுடைய நாற்பத்தி மூன்றாவது வயசில் மூத்தமகன், வேடிக்கையாக, “அம்மா உங்களைப் பாத்தா. . . ஒரு கிழட்டு ஆட்டைப் பாக்கிற மாதிரியே இருக்குதும்மா. . . ” என்று சொன்னான். அவளும் அவனுடைய சிரிப்பில் சேர்ந்து கொண்டாள்.

ஆனால் அன்று அவர்கள் எல்லோரும் வீட்டி லிருந்து வெளியேறிய பிறகு, அவள் கண்ணாடியை எடுத்து கவலையோடு தன்னுடைய முகத்தைப் பரிசோதித்தாள். தன்னுடைய ஒட்டிய கன்னங் களில் மறுபடியும் சதைவைக்க ஏதாவது வழி யிருந்தால், தன்னுடைய வாழ்க்கையும் அதோடு சேர்ந்து புஷ்டியாகும் என்று அவளுக்குத் தோன்றியது.

இளமையும் அழகும் இருந்த காலத்தில், அவள் தரையில் பாய் விரித்து படுத்து உறங்கியது கிடையாது. ஆனால் ஒவ்வொன்றையும் நினைத்து கண்ணாடியைப் பார்த்துக் கொண்டேயிருப்பதற்கு அவளுக்கு மனசு வரவில்லை. அடுக்களையில் பால் பொங்கத் தொடங்கிவிட்டது.

காலை முதல் நடுநிசி வரை ஓய்வில்லாமல் வேலை செய்து அவள் குடும்பத்தை வளர்த்து வந்தாள். மெலிந்து, வெளுத்துப்போய் அங்கே யிங்கே ஒடிந்து போன மாதிரியிருந்தது அவளு டைய தேகம். ஆனால் அவள் ஒரு தடவை கூட தளர்ந்து படுக்கையில் விழவோ, ஆவலாதிகள் சொன்னதோ கிடையாது.

அதனால் அவள் தண்ணீர் நிறைந்த குடங் களைத் தூக்கிக்கொண்டு குளியலறையிலிருந்து அடுக்களைக்கும், அடுக்களையிலிருந்து குளிய லறைக்கும் நடந்தலையும்போது அவளுடைய கணவனோ, வளர்ந்த பெரிய மகன்களோ உதவி செய்ய முனைந்ததில்லை.

அவள் படிப்பும் நாகரிகமும் இல்லாதவள். வீட்டைப் பெருக்கித் துடைத்துச் சுத்தப்படுத்தவும், சமையல் செய்யவும் துணிமணிகளைத் துவைத்து இஸ்திரி போட்டு வைக்கவுமான அவளது திறமையைப் பற்றி அவர்கள் எப்போதாவது இடையிடையில் புகழ்ந்து பேசுவார்கள். அந்தப் பாராட்டைக் கேட்கும் போதெல்லாம் தன்னுடைய தேய்ந்த பற்களைக் காட்டி அவள் புன்சிரிப்பைத் தூவுவாள்.

ஒரு தடவை அவளுடைய இளையமகன் ஸ்கூலிலிருந்து வரும்போது அவளுக்காக ஒரு நெல்லிக்காயைக் கொண்டு வந்தான். அன்று அடுக்களை இருட்டில் நின்று ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள். நாளா வட்டத்தில் அவனுடைய பார்வையிலும் அவள் ஒரு பிசாசாகிவிட்டாள்.

ஸ்கூலில் நடக்கிற டிராமா பார்ப்பதற்கு அவளும் வருவதாகச் சொன்னபோது,

“அம்மா நீ வரவேண்டாம். . . எனக்கு அவமானமாக இருக்கும். . . ”

என்று அவன் சொன்னான். அதற்கு அவள்,

“ஏன் அப்படிச் சொல்றே. . . . நான் பட்டுச் சேலை கட்டிக்கிட்டு வாரேன். . . என்னோட கலியாணச்சேலை. . . . ” என்று சொன்னாள். அவன்,

“இல்ல. . . வேண்டாம். . . . ”

என்று சொல்லிவிட்டான். மெலிந்த கால்கள் இரண்டு அறைகளுள்ள அந்தச் சிறிய வீட்டில் ஓய்வில்லாமல் நடந்து கொண்டேயிருந்தன. முடிவில் அந்த இயந்திரத்திற்கும் கேடு வந்தது. அவளுக்குக் காய்ச்சலில் ஆரம்பித்து வயிற்றில் வலியும் துவங்கியது. இஞ்சிச்சாறும், மிளகு ரசமும் அவளுக்கு உதவவில்லை. பத்தாவது நாள் டாக்டரிடம் காண்பித்தபோது அவர்,

“இவங்களை உடனே ஆசுபத்திரிக்குக் கொண்டு போகணும். . . . இது சீரியஸான மஞ்சக் காமாலைக் கேஸ். . . ”

என்று சொன்னார். பாடப்புத்தகங்களுக்கு நடுவில் உட்கார்ந்திருந்த குழந்தைகள் அதைக் கேட்டதும் நடுங்கினார்கள். ஒரு பணியாளர் அவளை சக்கரக்கட்டிலில் படுக்க வைத்து, தள்ளிக்கொண்டு ஆஸ்பத்திரியின் அறைக்குள் நுழைந்தபோது கண்களைத் திறந்த அவள்,

“அய்யோ. . . பருப்பு கருகிப்போச்சு!”

என்று அவள் சொன்னாள். அவளுடைய கணவனின் கண்கள் நனைந்தன.

 

தண்டனை

நடுநிசிக்கு முன்போ என்னவோ தண்ணீர்த் தாகமெடுத்து பாட்டி விழித்தபோது தனக்கருகில் படுக்கையில் சுருண்டு படுத்து உறங்கிக் கொண் டிருந்த பதினைந்து வயதேயான பேத்தியைப் பார்த்து அதிர்ந்து போனாள். அவளை எழுப்பி அவளுடைய கணவனிடம் திருப்பி அனுப்பவும் பாட்டிக்கு மனசு வரவில்லை. ஆனால் எழுப்பாமல் இருக்க முடியுமா?

அவள் அந்தப் பெண்பிள்ளையின் தலை

முடியை கைவிரல்களால் கோதி விட்டுக் கொண்டே, “அம்மு!” என்று கூப்பிட்டாள். அம்மு கண்களைத் திறந்தாள். அவை வெகுநேரம் அழுத கண்களாக இருந்தன. கலங்கிய கண்கள். பாட்டி யின் இதயம் வலித்தது. ஆனாலும் அவள்,

“அம்மு! நீ அங்கே போம்மா. . . . . அவன் என்ன நெனைப்பான்? எப்பவும் பாட்டி கூடயே இருக்க முடியுமா?” என்று சொன்னாள். அதற்கு அம்மு,

“நான் நடுராத்திரிக்கு மேலே அங்கே இருக்கமாட்டேன். நான் கொஞ்சநேரமாவது தூங்கவேண்டாமா? கல்யாணம் முடிஞ்சா தூங்கவும் கூடாதா?” என்று கேட்டாள்.

பாட்டி சிரித்தாள். அம்மு சுவரினைப் பார்த்தபடித் திரும்பிப் படுத்தாள். பாட்டி,

“அவன் என்ன நெனைப்பான். . . ”

என்று முணுமுணுத்தாள். அப்போது,

“பாட்டி” என்று அம்மு கூப்பிட்டாள். அவளுடைய குரல் கொஞ்சம் பிசிறலாக இருந்தது.

“ம். . ” என்று பாட்டி சத்தம் கொடுத்தாள்.

“நான் பரிச்சையில பாசாயிருந்தா. . . எனக்கு கலியாணம் நடந்திருக்காது இல்லையா?”

“பொம்பிளைப் பிள்ளைக கலியாணம் முடிக்க வேண்டாமா? பொம்பிளைப் பிள்ளை களை நிறைய்யப் படிக்க வைச்சு என்ன ஆகப் போகுது?. . ” என்று பாட்டி கேட்டாள். ஆனால் அதைக் கவனிக்காமலே அம்மு,

“நான் பாசாயிருந்தா இப்போ கலியாணம் நடந்திருக்காது. . . . . . . இன்னுங் கொஞ்சம் நல்லா படிச்சிருக்கலாம். . . . ”

என்று சொன்னாள். அம்மு எழுந்து நின்றாள். தன்னுடைய காதிலும் கழுத்திலும் அணிந்திருந்த நகைகளைக் கழட்டி அலமாரியைத் திறந்து வீசி எறிந்தாள். பின்பு உடுத்தியிருந்த சரிகைச் சேலையையும் கழட்டி கட்டிலில் வீசினாள். முழுமையாக வளர்ச்சியடையாத ஒரு மெலிந்த உடம்புக்காரியாக இருந்தாள் அவள். பாட்டிக்கு அவளிடம் அனுதாபம் தோன்றியது. ஆனால் அவள்,

“அம்மு அவன் காத்திருப்பான். . . . நீ இங்கே படுத்துக் கிடந்தா அவன் என்ன நெனைப்பான்?” என்று சொன்னாள். அம்மு கட்டிலில் உட் கார்ந்துகொண்டு தன்னுடைய முகத்தை கைகளால் மூடிக்கொண்டே, “நான் இன்னுங்கொஞ்சம் நல்லா. . . . மனசா. . . படிச்சிருக்கணும். . . ” என்று முணுமுணுத்தாள்.

மலையாளத்திலிருந்து தமிழில் :  உதயசங்கர்

Pin It