நாட்டுப்புறக்கதை

கணபதி வாத்தியாரும் வெங்கடாசல வாத்தியாரும் போல குணவான்க ஊர்ல யாரும் கிடையாது. யாரும் பட்டினி கிடக்க சகிக்க மாட்டாங்க. மழையில்லாம வேலை வெட்டிக்கு துப்பில்லாத இப்படி காலங்கள்ல எங்காவது கோயில் கொடை நடந்தா நாடகம் போடுறோம்ன்னு அப்புராணி சப்புராணியான கைவாணங்களை கூட்டிக்கிட்டு கிளம்பிடுவாங்க. நாடகம் முடியுந்தண்டிக்கும் சோத்துப்பொழுது போனாப் போதும். மேக்கொண்டு வெத்திலைபாக்கு புகையிலை, பீடி ரெண்டு தேறம் தேத்தண்ணி அவ்வளதான். போன இடங்கள்ல நாடகத்தை லேசுல முடிக்கிறதில்லை. வாரக்கணக்கு, மாதக் கணக்குல நாடகம் சவ்வா இழுபடும். முடிச்சுட்டா சோத்துக்கு? இன்னொரு ஊரிலிருந்து ஆப்பர் வருந்தண்டிக்கும் நாடகம் முடி யாது. கனஞ்சாம்பட்டியில் ஒரு மாத்தெக்கி முன்னாடி பத்தவச்ச அடுப்பை அமத்தாம பொங்கிபொங்கி போட்டுத்தான் பாக்கிறாங்க. ம்ஹும் நாடகம் முடியுற பாட்டைக் காணோம். சீதையிடத்தில் வந்து ராவணன் கெஞ்சுவான்: அந்த தேவாதி தேவர்களை உனக்கு அடிமையாக்குகிறேன். ரம்பை, திலோத்தமை, ஊர்வசியை உனக்கு பணிவிடை செய்யச் சொல்கிறேன். சூரிய சந்திர வாளை உன் காலடியில் வைக்கிறேன். என் ஆசைக்கு மட்டும் இடங்கொடு என்பான். சீதையோ “ஏ துஷ்டா நான் நினைத்தால் அரை க்ஷணத்தில் உன்னை எரித்து சாம்பலாக்கு வேன். அது என் புருஷனுக்கு இழுக்கு. நீ நினைப்பது நடக்காது ஓடிப்போ” என்று சொல்வாள். சரி இன்றுபோய் நாளை வருகிறேன்னு ராவணன் போனதும் நாடகம் முடிஞ்சிடும் ஜனங்களும் போயிட்டு நாளைக்கு வருவோம்ன்னு போயிடு வாங்க. இந்த சீன் மட்டும் இப்பொ ஒரு வாரமா நடக்குது.

நடிகர்கள் சாப்பாட்டு செலவுக்கு வசூல் பண்ணுன ரூபாய் தான்யம் எண்ணை புண்ணை எல்லாம் காலியாகி திரும்பவும் ரெண்டு தடவை தலக்கட்டு வரி வசூல் பண்ணி அதுவும் செல வாகிப் போச்சி நாடகம் முடிஞ்சபாடில்லை. கணக்கு வரவு செல வெல்லாம் ஊர் தலையாரிதான் பொறுப்பு. அவர் மேற் கொண்டு செலவுக்கு வழியில்லாமல் எந்த வழியிலாவது நாடகத்தை நிறுத்த விசாரங்கொண்டிருந்தார்.

சீதையை போகும்போதும் வரும்போதும் குறுகுறுன்னு பார்த்தார். ஒரு பொம்பளைக்கு இவ்வளவு ராங்கித்தனம் ஆகாதுன்னு அவரு மனசுல ஓடுனது. அவருக்கு தெரிஞ்ச ராமாயணம் எப்படியாப்பட்டதோ! அதோட பகல்ல விஏஓ கூட தாலுகா ஆபீஸ் போயிர்றதாலே சீதையா நடிக்கிறது பொம்ப ளையாவே உறுதிபண்ணீட்டார். அது கூழ்மாரியப்பன்ங்கிற ஆம்பளைன்னு தெரியாது.

பொம்பளை மொத மொத நம்ம ஊருக்கு வந்ததுக்கு இப்பொ கொஞ்சம் ஆளு மினுமினுப்புதான். இந்த ஊரோட ராசி. இந்த தண்ணிய குடிச்சாலே வர்றவளுக்கு வாய்க் கொழுப்பேறி வாயான வாய் பேசுவான்னு அவருக்கு தெரிஞ்சது தான். உலகம் பூராம் உப்புத்தண்ணி. கனஞ்சாம் பட்டி நல்லதண்ணி. நல்லதண்ணி மாப்பிள்ளைக்கு ஓடிவாங்கடி வாக்கப்படன்னு இந்த ஊர்ல சொல வடையே உண்டும்.

அன்றைக்கு நாடகம் ஆரம்பிக்கவும் தலையாரி ஒரு முடிவோட ஒரு ஓரமா நின்னுக்கிட்டிருந்தார். வழக்கம்போல முதல் காட்சியில் வானரங்க ளெல்லாம் கூடி நான் அந்த திசை போனேன். நான் இந்த திசை போனேன். சீதையைக் காணலை. தெற்கே போன அனுமனும் காணலையேன்னு பல மாதிரி புலம்பி முடிச்சதும் கடைசியில் இலங்கேஸ் வரன் - சீதை காட்சி வழக்கம்போல நடந்தது.

ராவணன் கெஞ்சினான். சீதை பதிலுக்கு “ஏ துஷ்டா நான் நினைத்தால் அரை க்ஷணத்தில் உன்னை சாம்பலாக்குவேன் அது என் புருசனுக்கு இழுக்கு...” ன்னு ஆரம்பிக்கவும் தலையாரி இதை எதிர்பார்த்து “அந்தா பாத்தியா”ன்னு மொணங்கிக் கிட்டெ மேடைக்கு வந்து சீதைகிட்டெ “இந்தாம்மா தாயி! ஒத்தவரியில சரின்னு சம்மதிச்சி விவகாரத்தை முடிக்கிறதுக்கு பாரும்மா. எம்புருச னுக்கு இழுக்கு. எம் புருசனுக்கு இழுக்குன்னி யின்னா ஊருக்குள்ள பத்துப்பைசா பெரட்ட முடி யாம எங்களுக்கு தன்னால இங்கெ நெஞ்சுக்கும் கூட்டுக்கும் இழுக்கு. உலகத்துக்கேத்தது நமக்கு சரிதான்னு சொல்லி கதையை முடிப்பியா சொன்னதையே சொல்லிக்கிட்டு” மறிச்சு நின்னு தலையாரி மன்றாடிக்கிட்டிருந்தார்.

மேடையிலே தலையாரியோட ரௌசைப் பார்த்ததும் வாத்திமார் ஓடியாந்தாங்க. “பெரிய வரே இதென்ன வள்ளி திருமணமா? முருகன் கிட்டெ விடியவிடிய தர்க்கம்பண்ற வள்ளியை சமா தானம் பண்ணி மாலை மாத்த வைக்கிறதுக்கு? இதுவேற. சீதாபிராட்டி ஸ்ரீராமன் பெண்ஜாதி. லட்சுமி அவதாரம். ஒரு அரக்கன் வந்து பிராட் டியை வல்ரூட்டியம் பண்ணுறான். அதுக்கு சீதை யை சரிப்போடச்சொல்லி கதையை முடிம் மான்னா அர்த்தம் வேண்டாம்?

“பிறகென்ன? அந்தப்பொண்ணு சொல்றதைப் பாத்தா அவபுருசன் வந்து இவனோட மல்லுக் கட்டி அடிபிடியாகியில்ல கதைமுடியும் போலுக்கோ. அலை ஓயுறதெப்போ தலைமுழுகிற தெப்போ சின்ன ஊர்ல செலவு தாக்குபிடிக்கணு மில்லே. எங்கமேல தப்பு. பேசாம கரகாட்டம் கொண்டாந்திருக்கலாம்.

“அந்தப் படுபாதக ராவணன் சீதை நாச்சியாரை இத்தினி ராத்திரி இம்ச பண்ணுனான்னு ஜனங் களுக்கு தெரியணுமில்லே” கணபதி வாத்தியார் ஒப்புக்கு சொன்னாலும் நெசத்தில் வேற ஊரிலி ருந்து இன்னும் ஒருபயலும் நாடகம் போட தேடி வரலையேன்னு அவருக்குக் கவலை. கதை சீக்கிரம் மங்களமா முடிஞ்சா ஊர்ல மழை தண்ணி பெய்யு முன்னு தலையாரிக்குக் கவலை.

ராவணனாய் நின்ன சீனிக்கொத்தனிடம் தலையாரி நெருங்கிப்போய் “ஐயா நீங்களாச்சும் கொஞ்சம் அந்தப் பொண்ணுகிட்டெ அணச்சி பேசிப்பாருங்க. நாளை ஒரு பொழுதில் கதை முடியுற மாதிரி!”

“அதெப்படிங்க முடியும். சீதையை நெருங்க முடியுமா ராவணன்? பெரியவர் நீங்க. உங்களுக்குத் தெரியாததா?”

“அதுசரி. அதுசரி. நானுங் கவனிச்சேன்”. தலை யாரி சீதையை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்துட்டு பரிதாபமாய் சீனிக்கொத்த ராவணனிடம் காதோடு காதா “மாசமா இருக்காளோ..?” -அந்தக் காரணத்தினாலதான் சால்ஜாப் சொல்றா போலுக் கோன்னு தலையாரி அபிப்ராயம்.

இந்த வார்த்தையைக் கேட்டதும் வெங்கடாசல வாத்தியாருக்கும் கணபதி வாத்தியாருக்கும் சுவத்துல முட்டிக்கிடுவமா, மண்டையை உடைச் சிக்கிடுவமான்னு இருந்தது.

ஊர் பெரிய மனுசன் ராமாயணம் தெரிஞ்சு வச்சிருக்கிறதும் இந்தக் கூழப்பயல் திட்டமில்லாம தின்னுபோட்டு வயித்துப்பிள்ளைக்காரி மாதிரி தள்ளிக்கிட்டு நிக்கறதும்... சே... ஒருத்தரை யொருத்தர் செருப்பைக் கழத்தி மாறிமாறி அடிச்சிக்கிடலாம் போல இருந்தது. சீதையைப் பாத்து நறநறன்னு பல்லைக் கடிச்சாங்க.

 மறுநாள் கணபதி வாத்தியார் இதுக்குமேல இந்த ஊரு தாக்குப்பிடிக்காது. கரிசல்பட்டியில கொடை நடத்துறதா கேள்வி. போயி சாரிச்சிட்டு வர்ரேன்னு போயிட்டாரு. அவர் போன முகூர்த்தம் பார்த்து கூழப்பயல் ஊருக்கு ஓடியே போயிட் டான். “குறையாத் திம்பையா, இனிமே அளவோட திம்பையா” ன்னு வெங்கடாசலம் வாத்தியாரு வயித்துலயே மிதிமிதின்னு மிதிச்சுப் போடுவாரு. அவ்வளவு கோபக்கார மனுஷன்.

அசோக வனத்துல புருசனைப் பிரிஞ்சு குலை பட்டினியா கிடக்கிற சீதையை மாசமா இருக் காளான்னு கேக்க வச்சுட்டேயேடா. வரும்போது இப்படியாடா வந்தே...ம்...ம்... அளவோட திம்பையா இனிம்மே குறைச்சித் தின்பேன் சாமின்னு சொல்றா சொல்றா... வாத்தியாரை நெனச்சு நெனச்சு ராத்திரியோட ராத்திரியா ஓடுன கூழப்பயலைப் பற்றி கேள்விப்பட்டதும் வாத்தி யாருக்கு திகீர்ன்னு ஆகிப்போச்சி. அட கோட் டிப்பய கெடுத்தானே! இனி யாரை வச்சு ஸ்திரீ பார்ட் போடுறதுன்னு புலப்பத்துல பிடிச்சிட்டார். கையைப் பிசைஞ்சுக்கிட்டே திரிஞ்சார்.

அவருக்கு ஒரு யோசனை தோணுனது. சீனிக் கொத்தன் பெண்டாட்டி நாலெழுத்து படிச்சவ. மேடைக்கும் பொருத்தமா இருப்பா. வசனம் அந்த நாலு வார்த்தைதானே. அவன்கிட்டெச் சொல்லி இன்னைக்கி ஒரு பொழுது எப்படியாச்சும் சமாளிப்போம்.

விசயத்தைக் கேள்விப்பட்டதுதான் தாம்சம். சீனிக்கொத்தன் றெக்கைகட்டி பறக்க ஆரம்பிச்சான். மனசுல ஒரே கொந்தளிப்பு. அவனும் எவ்வள நாள்தான் தாக்குப்பிடிப்பான் பாவம்.

எல்லோருக்கும் மூணுதேறம் சோத்துமுறை கழிஞ்சா போதும்ங்கிற கவலை. சீனிக்கொத்தன் சங்கதியே வேற. வீட்டுல அவன் பொண்டாட்டிய படுத்துற ரோதனை மிஷின் தாவலை. சித்தநேரம் அந்தப் பொண்ணை சூசுவான்னு இருக்கவிடாம மேனியை புண்ணாக்குவான்.

இத்தனைக்கும் அவ நாலஞ்சு பிள்ளை தாயா யிட்டா. உடம்புல ரத்தபுஷ்டிங்கிறதேயில்லைன்னு டாக்டர் சொல்லீட்டாரு. எத்தனை தடவைதான் கழிக்கிறது. அத்துக்கான சமாச்சாரங்களை பயன் படுத்துறதும் மயிராண்டிக்கு பிடிக்கிறதில்லை. அதென்ன உடம்பா இரும்பா? வேலைத் தளம் விட்டு வந்ததும் பொலிகாளை மாதிரி அணத்திக் கிட்டே திரியுவான். அதான் வேலைக்கு போயி கிழிச்சது போதும் இந்த நாடகக் காரங்களோட எங்கெயாவது கொஞ்சநாள் போயொழின்னு அடிக்கடி அவன் தகப்பனார் இழுத்திட்டு வந்து விட்டுட்டுப் போவார்.

அவனில்லைன்னாலும் ராவணன் வேசம் கட்ட வேற கொழுத்த ஆள் கிடையாது. அது போக எல்லா வகைக்கும் நல்ல தோதாய் இருந்தான். இதோ சொன்னவுடனே கால்ல சக்கரங் கட்டிப் போய் பெண்டாட்டிய கூட்டியாந்துட்டான். அவளும் சீதைவேசம் கட்டி தயாராயிட்டாள்.

ராத்திரி நாடகம் நடந்தது. தலையாரி தலையில துண்டைப்போட்டு மேடைக்குத் தள்ளி இழவு வீட்டுல உட்கார்ந்த மாதிரி உட்கார்ந்திருந்தார். சீதையில பெரிய வித்தியாசம் ஒண்ணும் இவருக்கு தெரியல. ஜனங்கள்ட்ட திரும்பி திரும்பிப் பார்த்து சீதை - ராவணன் வசனத்தை இவரு மனப்பாடமா ஒப்புச்சிக் காட்டினார்.

“இப்பொ பாரு இவன் அவளை வர்றியா இல்லையாம்பான். அவ அந்தச்சோலி எங்கிட்டெ ஆகாதும்பா. போயிட்டு நாளைக்கு வர்ரேன்னு கிளம்பிடுவான். பாத்துட்டு நீங்களும் போயிடுவீக. அங்கே ரெண்டு தேக்சா சோறு காலி. தினோமும் இந்தக் கூத்தா! “கதெ கடைசியில என்னாகும் மாமா . அந்தப்பொண்ணு சரிப்போட்டிருவாளா மாட்டாளா?” ஒரு பொம்பளை தலையாரிகிட்டெ அக்கறையா கதை விசாரிச்சா. தலையாரி கோபத்துல நாக்கைத் துருத்தி “இங்கே இடி விழுந்து ஆளே காலியாம். பஞ்சாங்கத்துல என்ன போட்டிருக்கான்னா கேக்குறே”.

நாடகம் முடிஞ்சு சாப்பாடு ஒரு குடுப்பு குடுத்து ஆத்துனதும் நாடகக்காரங்க வழக்கம் போல பள்ளிக்கூடத்துல படுத்துட்டாங்க. சின்ன அனு மாரா வேசங்கட்ட கூட்டியாந்த தன்னோட அஞ்சு வயசு பேரனை சீனிக்கொத்தன் பெண்டாட்டிக்கு துணையா அனுப்பிவச்சார் வாத்தியார்.

தலையாரிக்கு தூக்கம் புடிக்கல. அவரும் காலார நடந்து பள்ளிக்கூடம் போயி திண்ணையிலெ உட்கார்ந்தாரு. லைட்டெல்லாம் அணஞ்சது. கொஞ்ச நேரத்துல வாத்தியாரோட பேரன் தூக்கச் சடவோட வெளியே மெல்ல நடந்துவந்தான்.

அந்த நேரம் பார்த்து தன் வேசத்தைக்கூட கலைக்காமல் பய எப்படா வெளியே வருவான்னு காத்துக்கிட்டிருந்த சீனிக்கொத்தன் குபீர்னு பாய்ஞ்சி ரூமுக்குள்ள போனான்.

அவ்வளதான் தலையாரி துள்ளியெந்திரிச்சார். “யாய்! படவா ராஸ்கோல்... ஓகோ... அப்படியா சேதி...ம்ஹும்...” தலையை ஓந்திபோல ஆட்டு னார். “மூதி மொட்டைத் தவக்கா திருழாப்பாக்க போச்சாம். வண்டி பைதாபட்டு நஞ்சி பிஞ்சி போச்சாம்.” அவரா சொலவம் சொல்லிக் கிட்டாரு.

ஒண்ணுக்கு அடிச்சிட்டு வந்த சிறுபயலை மறிச்சு, இவரு ரெண்டு உதட்டையும் உள்பக்கம் மடிச்சு கண்ணை திருச்சி முழிச்சி பொம்பளை ரூம்ல சீனிக்கொத்தன் நுழைஞ்சதை அபிநயம் பண்ணிக் காட்டினார். பயல் தூக்க கலக்கத்துல... ஞாம்ம்...ன்னு தலையை சொறிஞ்சமட்டுல போயிட்டான்.

தலையாரிக்கு நெல கொள்ளலை. விட்ட பாடில்லை. வெங்கடாசல வாத்தியாரை தேடிப் பிடிச்சு அவரைத் தூங்கவிடாம போய் உட்கார்ந்து மானாவாரியா பேசுறாரு. “கதையா நடத்துறீரு கதை என் வயிறு எரியுது.” வாத்தியாரு ஒண்ணும் புரியாம என்னடா இது எழவுன்னு மூஞ்சை சுருக்கிக்கிட்டு உட்கார்ந்திருந்தார். தலையாரி விசுக்குன்னு எழுந்திருச்சிபோயிட்டார். மறுநாள் பூராவும் பள்ளிக்கூடத்தை சுத்திசுத்தி உறுமிக் கிட்டே திரிஞ்சார். ராத்திரி நாடகம் ஆரம்பமானது. ராவணன் உக்கிரமான கோபத்துல சீதையைப் பார்த்து சீறுரான்.

“ஏ சீதை என் பொறுமையை சோதிக்காதே என் ஆசைக்கு இணங்கிறாயா இல்லையா”. “ஏ துஷ்டா நான் நினைத்தால் அரை க்ஷணத்தில் உன்னை எரித்து சாம்பலாக்குவேன். அது என் புருசனுக்கு...”

“அட சும்மா நிறுத்துமா பாத்தேன் ஒன் வவுசை நேத்துராத்திரி”

தலையாரி கீழிருந்து சத்தமா கத்துனார். “இவரு கூப்புடுவாராம் அவ மாட்டேம்பாளாம்... ஹூம்!... நேத்துள்ளே பாத்தேன் அந்த எழவை.” தலையாரி அவயம் போட்டு என்னம்மோ கத்துறாரு. கூட்டம் பூராவும் சலசலன்னு எழுந் திருச்சது. வாத்தியாருக்கு ஒண்ணும் புடிபடலை.

“சாடை போடத்தெரியாத சக்களத்தி கொய்யா மரத்துலயேறி விய்யா விய்யான்னு கத்துனாளாம். யோக்கியம்போல ஊர்மெக்கெ நாமாட்டேம் நாமாட்டேம்ங்கிறது. ராத்திரி சாமம்போல படுக்கிறது மட்டும் ஒரு பாயில...ம்... ஊர்க்காரங்க பேப்பயக!”

வெங்கடாசல வாத்தியாருக்கு இப்பொதான் விசயம் புரிய ஆரம்பிச்சது. ஜனங்கள் குழம்பி கிளம்பும் முன்னாடி அடுத்த சீனை ரெடி பண்ணினார். லங்கையிலிருந்து அனுமன் சீதையைப் பார்த்து திரும்புற கட்டம். அனுமாரைத் தேடுனார். அவன் அப்பொதான் பின்பக்கமா பீடி வாங்கப் போயிட்டான். அனுமார் வேஷத்தோட போனால் பெட்டிக்கடையில பீடி ஓசியா கிடைக்கும். வேற வழியில்லை வாத்தியாருக்கு. அடுத்த சீன் லங்கை யிலிருந்து சந்தோச சேதியில அனுமான். சின்ன அனுமனா பேரனுக்கு வேசங்கட்டி மேடைக்கு அனுப்புனார். அவன் ரெண்டு கையை யும் கும்பிட்ட மட்டுல கண்டேன் கண்டேன் கண் டேன்னான். தலையாரி சுதாரிச்சி. “இந்தா இந்தா கேட்டுக்கோ சாட்சி! ராத்திரி இவனுக்கு நான் தானய்யா நேரடியா காட்டுனேன். கேட்டுக்கோங்க. இம்புட்டுப் புள்ளெ பொய் சொல்வானா?”

Pin It