நாட்டுப்புறக் கதை

நல்லா கேட்டுக்கிடுங்க கதைய. வெள்ளாட்டாங் கிடாய்தானே இதுக்கென்ன விபரந் தெரியும்ன்னு மட்டும் நெனச்சிராதீக. என்னைப் பிடிச்ச கிரகசாரம் உலக நடப்பெல்லாம் நல்லா தெரிஞ்சிருந்தும் இந்த ஒத்தக் காலன் கிட்டெ கிடந்து சீரழியுறேன்.

எனக்கு விபரந் தெரிய நான் பால்குடி குட்டியா இருந்தபோது, என்னை மாதிரி குட்டி குறுமானங்களைச் சேக்காம ரெண்டு மொய் ஆடு இருந்தது. ஒத்தக்காலன் பாணிப்புல சொல்லப்போனா பத்து அறுபது உருப்படிக இருந்தது. இவனைப் பிடிச்ச தரித்திரியமோ இல்லே அதுகளோட நல்ல நேரமோ, அல்லுஞ்சில்லுமா அருகிப்போயி மிஞ்சினது என்னமோ நான் ஒருத்தன் தான். நானும் இவனை விட்டு தப்பிக்க வழியில்லாம முழிக்கிறேன். கேட்டால் வர்ற ஆள்களிடத்துல சொல்றான், நான்தான் அவனுக்கு சாவு முதலாம்.

ஒரு ஆம்பளையாகப்பட்டவன் தொட்டதுக்கெல்லாம் மூசுமூசுன்னு அழுதான்னா ஏழேழு சென்மம்ன்னாலும் அந்த வீடு விருத்திக்கு வருமா? இருந்தாப்புலயிருந்து துண்டையெடுத்து வாயில பொத்தி அழுக ஆரம்பிச்சிருவான். ஏன் அழுகிறான்னு இப்பொ வரைக்கும் விபரம் கண்டுபிடிக்க முடியல.

இவனோட அழுகாச்சியினால ஆக்கங்கெட்டுப் போயி உருப்படிக குறைஞ்சதா. இல்லே உருப்படிக நாளுக்குநா குறையுறதனாலே அழுது குமிக்கிறானான்னு பட்டிமன்றந்தான் நடத்தணும்.

வாணாள்ல நல்ல சோறு இவன் தின்னதில்ல. யானை சுகங்கொண்டு தூங்குனதில்லே. ஒரு பத்துக்கு பத்து குச்சுலு ஒண்ணு வச்சிருக்கான். அட அதிலயாவது பனிக்கு மழைக்கு நனையாம போத்தி படுத்தானா வெட்ட வெளியில அசைபோட்டு படுத்திருக்கிற எங்க கூட்டத்துக்கு நடுவிலே வந்து படுத்து எங்களை தடவிக்கிட்டே படுத்தாத்தான் அவனுக்கு தூக்கம் வரும். காலையில எழுந்திருச்சதும் பால் குடி குட்டிகளை அததோட தாய் ஆடுகள்ட்டே பால்குடிக்க விடுவான். அதுகள் வயிறு நிறைஞ்சதும் துள்ளி துள்ளி ஒண்ணுமேல ஒண்ணு காலைத் தூக்கிப் போட்டு விளையாடுறதைப் பார்த்து இவனுக்கு வயிறு நிறைஞ்ச மாதிரி அதுகளைத் தூக்கி இவன் மேல போட்டுக்கிட்டு ஒத்தக் காலை இழுத்து இழுத்து களம் பூராவும் சுத்தி வருவான்.

குட்டிகள் சுத்தி சுத்தி இவன் முதுகை மூஞ்சியை மாறிமாறி நக்கும்போது சந்தோசமா வாயை இளிச்சமட்டுல கழுத்தைச் சுருக்கி சுருக்கி சொணங்குவான். இதிலே சுகங் கண்டவன் மயிரா கல்யாணம் முடிப்பான்?

எதித்த பக்கத்து வீட்டுல மொய்க்கணக்குல ஆடுகள் புதுசு புதுசா வர்றதும் போகிறதும் அதுகள் வேனுகள்ல சவாரியென்ன லாரிகள்ல மொத்த மொத்தமா பிரயாணம் போறது என்ன

இவனை மாதிரி காலு ஒச்சமானவனோ கை ஒச்சமானவனோ ஒரு ஆளு அங்கு வர்றானா போறானா? ஒவ்வொருத்தனும் எத்தந்தண்டி ஆளுன்னு நெனக்கிறீக. மொக்கை மொக்கையான மனுசங்க சுத்தி உட்கார்ந்து பாட்டிலை திறந்து குடிச்சி ஒரு கும்மாளமா கூத்தா அடேயப்பா? சட்டியோட நடுவுல குமிச்சி நெருநெருன்னு கடிக்கிறது, சப்பு சப்புன்னு உறியுறது. ஊ ஆன்னு செருமி மீசைகளை ஒதுக்கி விட்டு சடச்சடன்னு புதூ தாள்களை எண்ணிக் கொடுத்ததும் நம்ம இனத்ததுகளை ஊர்வலமா லாரியில பட்டினப் பிரவேசத்துக்கு கொண்டு போயிர்றாங்க.

கொடுத்து வச்சதுக. புண்ணியம் செய்ததுக. எங்கெல்லாம் பரதேசம் சுத்துதுகளோ... எங்க ஒத்தக்காலன் சொல்றான், எல்லாம் மிலிட்டரிக்கு போகுதாம். இவனை மாதிரியே இன்னொரு அட்டத் தரித்திரியம் பிடிச்சவன்கிட்டெ சொல்றான். அதெல்லாம் பாவமாம். அதானே என்ன மாதிரி இவன்கிட்டெ கிடந்து சீரழியணும். நல்லாயிருக்கிறதுதான் இவனுக்கு பிடிக்காதே. அந்த மிலிட்டரியில இதுகள் சொர்க்கமா அனுபவிக்கும்ன்னு நெனைக்கிறேன். நாங்கள் இந்த கரிசல் பூமிபூராவும் வெயிலா மழையா நனைஞ்சு மேய்ஞ்சி வந்து ராத்திரி போடுற புழுக்கைகளை குப்பையாய்ச் சேர்த்து விக்கிற காசுலதான் ஜீவனம் பண்ணுறான். அதாவது நீடிச்சதா இப்பொ நா ஒருத்தன் போடுற புழுக்கையை வச்சி என்ன செய்வான். வெறுங்கையைத்தான் நக்குறான்.

வர்றவன் போறவனெல்லாம் இவனுக்கு சப்போட்டு. என்னைப் பாத்ததும் ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சிருவாங்க. அப்பொவெல்லாம் ஒத்தக்காலனுக்கு கால்கள் ரெண்டும் செய்து வச்ச மாதிரி ரெட்டைப்பனை போல ஒண்ணுபோல இருக்குமாம். நடந்து வந்தாலே தரை அதிர வருவானாம். நான் ஏ ஆத்தா வயித்துல நிறைமாத்தச் சூலியாயிருக்கும்போது கூட்டமா மேய்ச்சத் தரைக்கு போகிற வழியில நடுரோட்டுமேல ஈத்தலைஞ்சி நிக்கையிலெ மணல் லாரி ஒண்ணு இன்ன வேகம்ன்னு இல்லாம நெருங்கிருச்சாம்.

எங்கிருந்தோ ஓடியாந்தவன் ஆத்தாளை தள்ளிவிட்டு இவன் உள்ளே விழுந்து ஒரு கால்மேல லாரி ஏறி ஆத்தா மேலேயும் ஏறி இறங்க ஈத்துலயே என்னை விட்டுட்டு செத்துப் போனா. ஒத்தக் காலனுக்கு அதிலிருந்து எம்மேல ரொம்பப் பிரியமாம். நான் மொதல்லயே சொன்னேனே என்னை சாவு முதலா வச்சிருக்கிறாம்ன்னு.

நடக்கிற நடப்பை வச்சி ஒண்ணுமட்டும் என்னால உறுதியாய்ச் சொல்லமுடியும். நாலுகால் பட்ட சீவனை வச்சி காலட்சேபம் பண்ண ஒத்தக் காலனுக்கு லபிக்கலைன்னு நெனைக்கிறேன். இவனுக்கு தம்பி மகள் ஒரு பொண்ணு இருந்தாள். தம்பிபாடு ரொம்ப லம்பல்ள இருந்ததுனால ஒத்தக்காலன்தான் கண்ணாலம் மூச்சு வச்சான்.

மருமகனா வந்த நக்கலமுத்தன் ஒரு பரோபகாரிபோலுக்கு. இவன்கிட்டெ கிடந்து உருப்படிகள் சீரழியுறதைப் பார்த்து ரெண்டு ரெண்டா கொண்டு போயிட்டான். அவன் நல்லாயிருக்கணும்! அப்படிப் புண்ணியவானை காண்கிறது அரிது. ஒத்தக்காலன் வாயைத் திறந்தானோ அவ்வளதான் பெண்டாட்டிய கொண்டுவந்து வீட்டுல விட்டுட்டுப் போயிருவான். பிறகு கேக்கிறதைக் கொடுத்து அனுப்பி வைக்கணும். கடைசியில ஒத்த ஆடும் ரெண்டு குட்டியும் மிஞ்சுனது. (எங்கதை தனியாயிருக்கு) குட்டிகள் ரெண்டும் ராமர் லட்சுமணர் மாதிரி ஒண்ணை விட்டு ஒண்ணு பிரிஞ்சு இருக்காது. ஒருநாள் பெண்டாட்டிய கொண்டுவந்து விட்டுட்டு, இந்தாரும்யா நீராச்சு ஒம்ம மகளாச்சுன்னு கிளம்புனான். இதுக்கு மேல என்னதான் கேக்கறீங்க மாப்பிள்ளைன்னு ஒத்தக்காலன் மருமகனை கெஞ்சுனான். இந்த ரெண்டு குட்டிகள்ல ஒண்ணை எடுத்துக்கிடுறேன்னு பதிலை எதிர்பாராம ஒரு குட்டியைத் தூக்கிக்கிட்டு ஒரு கையால பெண்டாட்டிய இழுத்துக்கிட்டுப் போனான்.

ரொம்பக் கோளாறோடதான் நக்கலமுத்தன் ஒரு குட்டியை தூக்குனான். அதுகதான் ராமர் லட்சுமணர் மாதிரி ஒண்ணைப் பிரிஞ்சு ஒண்ணு இருக்காதே. ஒரு குட்டி போனதிலிருந்து இன்ணொண்ணு தாய்ப்பால் கூட குடிக்காம அதெ நெனைச்சே மெலிஞ்சு போச்சு. ஒத்தக்காலன் இருக்கிற வைத்தியமெல்லாம் பண்ணிப் பார்த்தான். தாய்கிட்டெ நிக்கிற குட்டியே இப்படின்னா. இந்த ரெண்டையும் பிரிஞ்ச ஜோடிக்குட்டி அங்கே என்ன நெலவரத்திலிருக்குமோன்னு ஒத்தக்காலன் வந்த காலையும் வராத காலையும் இழுத்துக்கிட்டு இருபதுகல் தொலைவு நடந்தே போயி இந்தக் குட்டியையும் அங்கே கொண்டு போய் விட்டுட்டு வந்துட்டான்.

வீடு வந்துதான் சேந்திருப்பான். பின்னாலேயே நக்கலமுத்தன் ஆளனுப்பிட்டான். ரெண்டு குட்டிகளும் பாலில்லாம மெலிஞ்சு போச்சு. ஆட்டை கொண்டுவந்து விடுறானா இல்லே அவன் மகளை கூட்டிக்கிட்டு போறானான்னு கேளுன்னு சொன்னதா வந்தவன் சொன்னான்.

ஐயா சாமி எங்கிட்டெ வேற எனக்குன்னு அன்னோத்திரத்துக்குக்கூட வழி கிடையாது. இனி மேலாச்சும் அந்தப் பொண்ணை நல்லமுறையா வச்சுக்கிடச் சொல்லுன்னு ஆட்டை அவிழ்த்து விட்டான். தீர்ற காலத்துக்கு அருகம்புல் வேர்ல தீந்துபோகும்ன்னு சொலவம் சொன்னமாதிரி கிடந்த அத்தனை உருப்படிகளும் நக்கலமுத்தன் புண்ணியத்துல நல்ல வழி பொறந்து போயிருச்சுக. எனக்கு ஒரு வழி பிறக்க மாட்டேங்குது. ஆண்டவன் எல்லார்க்கும் எழுத்தாணி வச்சு எழுதிட்டு எனக்கு மாத்திரம் வேற எதையோ வச்சு எழுதிவிட்டுட்டான் போலுக்கோன்னு நான் நெனச்சிட்டு இருக்கும்போது, நக்கலமுத்தன் பெண்டாட்டி, பிள்ளையை இடுக்கிக்கிட்டு பெரியப்பன் வீட்டுக்கு சடவா வந்து சேந்துட்டா.

யய்யா யய்யா நீ அனுப்புன ஆட்டோட கழுத்துல சங்கும் கம்பளிக் கயிறும் இல்லாததுனால நீ ஙொப்பன் வீட்டுக்குப் போடி உன்னைய வச்சுப் பிழைக்க முடியாதுன்னுட்டாருய்யான்னு ஒப்பாரி வச்சாள். அழுகை அழுகைதான் ஊடே ஊடே என்னையும் ஒரு மாதிரி பாத்தார். எனக்கோ அடிரா சக்கை நக்கலமுத்தன் எப்பேர்ப்பட்ட கலைஞனா இருந்தா ஆட்டுக்கு சங்கும் கம்பளிக் கயிறும் கட்டிப்பாக்க ஆசைப்பட்டிருப்பான். இந்த ஒத்தக் காலனுக்கு அந்த ரசனையெல்லாம் ஏது?

“யய்யா யய்யா ஒம் பேரனுக்கு முடியெடுக்க இருக்கன்குடி கோயிலுக்கு போறோம். இந்தா நிக்கிற கிடாயை கோயிலுக்கு அனுப்பி வைக்கச் சொன்னாரு”.

“ஹாய் ஹாய் நக்கலமுத்தன் எப்பேர்பட்ட மனுசன்யா, அடேங்கப்பா கடைசியா நான் ஒருத்தன் இங்க அனாதியா கிடக்கிறேன்னு ஞாபகம் வச்சி கூட்டியாரச் சொல்லியிருக்கானே”

இங்க பார்ரா ஒத்தக்காலன் கண்ணுல நீரு முட்டிக்கிட்டு நிக்கிறதை. ஏ ஒத்தக்காலா துப்புக் கெட்டவனே நீ நீதான்டா, நக்கலமுத்தன் நக்கலமுத்தன்தான்டா. அவம் மூத்திரத்தைக் குடிரா. போடா போயி இன்னொருக்கா மணல் லாரியில விழுந்து குறைக்காலையும் ஒடிச்சுக்கிட்டு சாவுடா.

மறுநாள் காலையில நக்கலமுத்தன் பைக்குல வந்து சேந்துட்டான். என்னை அவிழ்த்து செண்டா தூக்கி பைக்குல முன்னாடி வச்சுக்கிட்டு ஒத்தக் காலனை ஒரு ஜென்மமாவே மதிக்காம பெண் சாதியை பாத்து ‘ஊருக்கு வந்து சேர்’ அப்படீன்னு பைக்கை ஸ்டார்ட் பண்ணீட்டான்.

“தாய்ப்பால் அறியாது குட்டியிலிருந்து பிள்ளை போல வளர்த்த கிடாய் மாப்பிள்ளே! அது மேல என் உசிரையே வச்சிருக்கேன் மாப்பிள்ளே” பின்னாடியே ஓடியாந்தான் ஒத்தக்காலன். எனக்கோ ஆத்திரம், “மயித்தப் பிடுங்குனே போடா.... பைக்குல போறேன்டா வாணாள்ல பைக்கை தொட்டுப் பாத்திருப்பியாடா! பொழச்சி பொழச்சி ஒரு ஓட்டைச் சைக்கிளு உண்டுமா! நக்கலமுத்தன் நக்கல முத்தந்தான்டா, நீ நீதான்டா. பைக்கு போற வேகத்துல என் பார்வைக்கு ஒத்தக் காலன் பொட்டுப்போல சுருங்கிப்போனான். நக்கலமுத்தன் பைக்குல போற போதே என் புட்டாணியை புடிச்சி புடிச்சி பாத்தான் நான் மெலிஞ்சிருக்கேன்னு விசாரம் போலுக்கோ. என் தலையை தடவி ஹ்ர்ம்ம் ன்னு செருமி மீசையை இரண்டு பக்கமும் நீவி விட்டான். இந்த சந்nhசத்துலயே நான் தெளிஞ்சிற மாட்டேனா?

அடேயப்பா எவ்வளோ பெரிய காரை வீடு. முன்னாடி திண்ணை. பசேல்ன்னு கினியாப்புல்லு. பக்கத்துல பெரிய தொன்னையில தண்ணி. அடடா அடடா நக்கலமுத்தன் நக்கலமுத்தன்தான். நாசமாப் போன ஒத்தக்காலன் ஒத்தக்காலன்தான். அவன் கிட்டயிருக்கிற வரைக்கும் திண்ணையக் கண்டனா தொன்னையக் கண்டனா. வீட்டுக்குள்ளயும் வெளியேயும் ஆளுகள் வரவும் போகவுமா கலகலன்னு வீடுன்னா இது வீடு. எப்படியோ அந்த சுடுகாட்டுலயிருந்து தப்பியாச்சு! மறுநாள் பெரிய வேன்வந்து நின்னது. ஆளுகள் மளமளன்னு ஆணும் பெண்ணும் ஏறுனாங்க. ‘ஏய் மறந்திராம கிடாயை ஏத்துங்கப்பா.’ அடடே நக்கலமுத்தனைச் சேர்ந்த சனங்களுக்கும் எவ்வளவு நல்ல மனசு. ‘இங்க பார்ரா தூரத்துல ஒத்தக்காலன் நின்னு பாத்துக் கிட்டிருக்கிறதை’ அவனைப்பாத்ததும்’ ஒத்தக்காலனை ஏத்திராதீங்க தரித்திரியம் பிடிச்ச பயன்னு கத்துனேன். நான் என்னமோ அவனைப் பாத்து பாசத்துல கத்துனதா நெனச்சிருப்பான்.

அடேயப்பா காத்தை எதுத்து பறிஞ்சு ஒரு வீச்சுல வேனு இருக்கன்குடி வந்திருச்சே. ஏயப்பா இதான் கோயிலா எவ்வள பெரிய ஆறு. இக்கரைக்கும் அக்கரைக்கும் எவ்வள தண்ணி. தூக்கி தண்ணியில போட்டு நீய விட்டாங்க. அடடா ஒத்தக்காலன் கிட்டெ ஒரு நீச்சலைக் கண்டமா ஒரு பாச்சலைக் கண்டமா.. ரெண்டு கொம்பிருந்தும் பாயலை நாலு காலிருந்தும் நீயலை... அடே ஒத்தக்காலா நீ நீதான்டா நக்கலமுத்தன் நக்கல முத்தந்தான்டா...

என்னை அப்படியே ஒரு புண்ணியவாளான் பொடதியில போட்டு கோயிலுக்கு கொண்டு போனான். சாமிக்கு நேரே என்னை நிறுத்தி ஜனங்களெல்லாம் குலவை போட்டு என் நெத்தியிலே பொட்டும் கழுத்துல பூவும் சுத்துனாங்க.. எனக்கு பெருமை தாங்கலை. சுத்தி எல்லோரையும் சந்தோசமா பாத்தேன். அந்தா! இங்கேயும் வந்துட்டான் ஒத்தக்காலன்! மேல் துண்டையெடுத்து வாயைப் பொத்தி அழுகிறான். அழு மூஞ்சி அழு மூஞ்சி... ஒந்தரித்திரியம் செத்தாலும் தீராது போ! அடேய் ஒத்தக்காலா நான் நல்லாயிருக்கிறது பிடிக்கலையா உனக்கு. நெனச்சிப்பாருடா நான் உங்கிட்டே ஒரு பூவைக் கண்டனா பொட்டைக் கண்டனா.. அட இப்பொ ஏன் அழுகுறே, அட இது நாள் வரைக்கும் ஏனப்பா அழுதே... என் தலையை படபடன்னு குலுக்கி யோசிச்சேன். ஆ... ஐயையோ... பக்கத்துல நின்னவன் பெரிய அரிவாளை ஓங்கி என் கழுத்துப் பக்கம் இறக்கிட்டானே... ஒத்தக்காலா... ஒத்தக்காலா.. ஓடி வாயேன்.. நா உன் பிள்ளையில்லையா.. அய்யோ.. நக்கலமுத்தன் நக்கலமுத்தன் தான்.. நீ... நீ... தா... ன்... 

Pin It