சீதாவிற்கு அழுதழுது கண்ணில் உள்ள நீரெல்லாம் வத்திவிட்டது. தன்னை எப்படி நிரூபிப்பது... யாரிடம் நிரூபிப்பது..? எந்த காலிப் பயலோ தெருமுக்கில் கொளுத்திப்போட்ட சரவெடி வீடுவரை வந்து வெடித்துவிட்டது.

இனி தெருவில் எப்படி தலைகாட்டுவது? அழுதழுது சோர்ந்தாள். கொல்லைப்புறத்தில் அண்ணி பாத்திரங்களை உருட்டுவது மங்கலாகக் கேட்டது. சத்தம் கூடவா மங்கிவிடும்?

காதுகள் ரெண்டும் கிர்ரென்றிருந்தது. நேற்றிரவு அண்ணன் அடித்த அடியில் கண்களும் உதடுகளும் வீங்கி முகத்துக்குப் பதிலாக ஒரு பூசணிக்காயை வைத்தது போல் கனத்துக் கிடந்தது.

வீட்டில் உள்ள அனைவரும் இழவுவீடு போல் துக்கித்துப்போய் அமர்ந்திருப்பதை கண்களில் நீர் தழும்ப பார்த்தாள். அம்மா, சுருட்டிப் போட்ட பழந்துணியாய் மூலையில் முடங்கிக் கிடப்பது நிழலுருவாய்த் தெரிந்தது.

வழக்கமாக மகள் திவ்யாவை வைத்து விளையாடும் அண்ணன் மாணிக்கம் வாசலுக்கும் கூடத்துக்கும் இடையில் உள்ள நடையில் ஒரு நாற்காலியைப் போட்டு உறைந்து போய் அமர்ந்திருந்தான். கையில் பேப்பர் இருந்தாலும் கண்கள் சூன்யத்தை வெறித்தது.

அவனைச் சொல்லிக் குத்தமில்லை. யோசித்துப் பார்த்தால் ஒரு பொறுப்புள்ள அண்ணனாகத்தான் இதுவரை இருந்திருக்கிறான். அம்மாவின் பத்து பவுன் நகைகளையும் புதுமோஸ்தரில் அழித்துச் செய்து தயாராக வைத்திருந்தான். தாயின் வெண்கல வெள்ளிப் பாத்திரங்களை அவன் மனைவியைத் தொடக்கூட விடவில்லை. பூர்வீகச் சொத்து வித்ததில் பத்தாயிரத்தை அவள் பேருக்குப் போட்டதில் அதுவும் முதிர்நிலையில் இருந்தது. இன்னும் பத்திருபது கடன் வாங்கினால் சிக்கனமாய் முடித்துவிடலாம்.

ஆனால் இவனது மாப்பிள்ளைக் கணக்கு இரண்டாயிரம் வருடத்தியது என்றும், இப்போது ஒரு சுமாரான மாப்பிள்ளைக்கு முப்பது பவுனும் ஒரு பெரிய வண்டியும் பண்டபாத்திரங்களும் என்று தரகர்கள் மார்க்கெட் நிலவரம் சொன்னார்கள்.

மாணிக்கத்துக்குத் தன் தங்கையின் அழகிலும் சமர்த்திலும் நம்பிக்கையிருந்தது. சீதா பத்தோடு பதினொன்று ரகமில்லை. கண் பார்த்தால் கை செய்யும் கற்பூரப் புத்திக்காரி.!

ப்ளஸ்டூவில் நல்லமார்க் எடுத்திருந்தும் மேலே படிக்க அனுப்பவில்லை. சீதா எவ்வளவோ கெஞ்சியும் அவன் மசியவில்லை. அவளை விட அதிகம் படித்த மாப்பிள்ளையாய்ப் பார்க்க வேண்டுமே? ஓய்வு நேரத்தில் தையல் வகுப்புக்குப் போய் வந்தாள். வாசல் நிலையிலிருந்து தலையணை வரை அவள் கைவண்ணங்கள்தான் ஜொலிக்கும். மார்கழி வீதியில் அவள் வாசலில் மட்டும் கோலம் பார்க்கவே ஒரு கூட்டம் களைகட்டும். அவள் வைக்கும் மோர்க்குழம்பின் ருசிக்கு அம்மாவின் கைவாகு கூட பிச்சை கேட்கும் என்று சப்புக்கொட்டுவான் அண்ணன்.

என்ன பெருமை இருந்தென்ன? எல்லாமே தரையில் கொட்டிய பாலாய் தாறுமாறாகி விட்டதே?

நேற்று காலை ஏழு ஏழரை இருக்கும் தெரு முக்கில் டீ வாங்கப் போன கமலத்தம்மாள் தலைவிரிகோலமாய் ஓடிவந்தாள். வந்த வேகத்தில் குளித்துக் கொண்டிருந்த சீதாவை நோக்கி,

“அடியே சண்டாளி...... அங்கே எவனோ சேத்தை வாரிப் பூசி வச்சிருக்கான்.... உனக்குக் குளிக்கிறது ஒரு கேடா?” என்று இரைந்தாள்.

கமலத்தம்மாள் ஒரு வாயில்லாப் பூச்சி. அவளது பேச்சு மூணாம் பேருக்குக் கூடக் கேட்காது.... அவளே மூணுகட்டும் தெறிக்கும் படி இப்படி அலறுகிறாளென்றால்....

சீதா பதறியடித்துக் கொண்டே மாற்று உடையைப் போட்டபடி “என்னம்மா...?” என்றாள். நைட் ஷிப்ட் வேலைக்குப் போன அண்ணனின் நினைவு ஒரு கணம் வந்து தூக்கிவாரிப் போட்டது. அண்ணன் ஒரு முன்கோபக்காரன் .....யாரோடும் சண்டை போட்டிருப்பானோ? இல்லை... மிஷினுக்குள் கையக் கால விட்டுக் கொண் டானோ?

அவளைப் போலவே அவள் அண்ணியும் பதறியடித்து ஓடி வந்தாள். தூங்கிக் கொண்டிருந்த திவ்யாக்குட்டி கூட எழுந்து அழ ஆரம்பித்தது.

அதற்குள் கமலத்தம்மாள் சுதாரித்துக் கொண்டு குரலைத் தாழ்த்தினாள். மகளைக் கட்டிக்கொண்டே புலம்பினாள். அவள் விக்கலும் விம்மலுமாய்ச் சொன்னதைக்கேட்டதும் அதிர்ந்து போனார்கள்.

சீதாவையும் யாரோ ரமேஷ் என்பவனையும் இணைத்து சுவர்களிலும் பொதுக்கழிப்பிட அறைகளிலும் கன்னாபின்னாவென்று எழுதப்பட்டி ருக்கிறதாம். டீக்கடை முழுவதும் இதே பேச்சாம்....

மாணிக்கமும் இன்னும் வரவில்லை, நைட்ஷிப்ட் முடித்து விட்டு யாரோ.... பிரண்டைப் பார்த்துவிட்டு வருவதாக நேற்றே சொல்லி யிருந்தான். பெண்கள் மூவரும் ஒருவரையொருவர் பார்த்து அழத்தான் முடிந்தது.

அண்ணி மல்லிகா மட்டும் மெல்லச் சுதாரித்துக் கொண்டு குடத்தை எடுத்துக் கொண்டு வெளியில் போனாள். போன வேகத்திலேயே தளும்பிய கண்ணீரும் சிவந்த முகமுமாய் காலிக்குடத்தோடு திரும்பிவந்தாள்.

அதன்பின் சீதாவிற்கும் வெளியில் போகத் துணிவில்லை. தான் வேலை பார்க்கும் பேன்ஷி ஸ்டோருக்கும் இத்தகவல் எட்டி இருக்குமோ என்று கவலைப்பட்டாள். அங்கே அனுப்பக்கூட முதலில் மாணிக்கம் மறுத்துவிட்டான். அதன் ஓனர் அப்பாவின் நண்பர் என்பதாலும், அவரே அண்ணனைப் பார்த்துக் கேட்டுக்கொண்டதாலும் தான் அனுப்பினான். அதில் வரும் ஆயிரம் ரூபாயில் புடவை, பவுடர் வகையறாக்களுக்கு அண்ணனைத் தொந்தரவு செய்யாமல் சமாளிக்க முடிந்தது.

யார் இதை எழுதியிருப்பார்கள்? எந்த விதத்திலும் ஆதாரமில்லாத ஒரு செய்தியை இப்படி எழுத எப்படித்தான் மனசு வந்தது? அவர்களுக்கு நான் என்ன பாவம் செய்தேன்?

சீதா எண்ணியெண்ணி மறுகினாள்.

சென்றமாதம் நாலைந்து நாள் விடாமல் தொடர்ந்து வந்து காதலிப்பதாய்ப் பிதற்றிக் கொண்டிருந்த அரைலூஸ் வெங்கிட்டு இந்தக் காரியத்தைச் செய்திருப்பானோ? அண்ணனின் பரமவைரியான அடுத்ததெரு மாரியப்பன் தன் குடும்ப கௌரவத்தை குலைப்பதற்காக இந்த இழிசெயலில் இறங்கியிருப்பானோ?

யார் இந்த ரமேஷ்?

ஊரில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில ரமேஷ்களைக் கேள்விப்பட்டிருக்கிறாள். தஞ்சாவூர் மாமா பையனின் பெயர் ரமேஷ்தான்... அவன் சின்னபையன்... சென்னையில் டென்த் படித்துக் கொண்டிருக்கிறான். இவ்வூர் அரசு வைத்தியரின் பெயரும் ரமேஷ்தான்... அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள்...

யார் இந்த ரமேஷ்...?

அன்றிரவு மாணிக்கத்தின் வரவிற்குப்பிறகு இதற்கு ஓரளவு விடை கிடைத்தது.

வரும் போதே கண்கள் இரண்டும் செக்கச் சிவக்க ரௌத்ரதாரியாய் வந்தான். அப்பாவைக் கண்டால் குதியாட்டம் போடும் திவ்யாகூட “கப்சிப்” பென்றிருந்தது. எவனும் மெனக்கெட்டுப் போய்ச் சொன்னானோ.... இல்லை... இவனே சுவர்களைப்படித்துத் தெரிந்து கொண்டானோ?

காலையிலிருந்து இந்த மோசமான நேரத்தை எதிர்ப்பார்த்துக் கிலி பிடித்துப் போயிருந்த மூவரும் ஏதும் செய்யத் தோன்றாமல் நடுநடுங்கி நின்றனர்.

வந்த வேகத்தில் கொத்தாக அவள் முடியைப் பிடித்தான். அன்று முழுவதும் அன்னந்தண்ணி இல்லாமல் கிடந்தவள் ஓரே அறைச்சலில் அவன் கைகளில் தொய்ந்து விழுந்தாள். முகத்தில் தண்ணீரை அவனே சளார் சளாரென்று அடித்தான் தடுக்க வந்த தாயையும் மனைவியையும் தாட்சண்ய மின்றி தள்ளிவிட்டான். அரை மயக்கத்திலிருந்த சீதாவை மூர்க்கமாய் இழுத்து சுவரில் சாய்த்து முரட்டுத்தனமாய் உலுக்கி உலுக்கிக் கேட்டான்.

“எத்தனை நாளாடி இந்தப்பழக்கம்? ஒழுங் காகச் சொல்லு... நீ வரச்சொல்லித்தானே டூருக்கு வந்தான்?” ...

சீதா நிஜமாகவே ஒன்றும் புரியாமல் முழித்தாள். அவளது திருதிருத்த முழியும் ஒரு வார்த்தையும் அவள் வாயிலிருந்து பிடுங்க முடியா ததும் அவன் ஆத்திரத்தை உச்சத்துக்குக் கிளப்பி விட்டது. இஷ்டத்துக்கு அவளை வெளுத்துத் தள்ளினான். மயங்கி விழுந்தவளை விட்டுவிட்டு கடைசியாகத் தாயிடம் வந்து உறுமினான்.

“கோயில் குளத்துக்குக் போகணும்னு நெனக்கிற ஆளு நீ மட்டும் போக வேண்டியது தானே? அவளையும் அடம்புடிச்சிக் கூட்டிக்கிட்டுப் போனே... இப்பாப்பாரு.... மூணு தலமொறக்கித் தேவையானதை வாங்கிக் கட்டிக்கிட்டு வந்திருக்கிறதா?”

“என்னடா சொல்றே? அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லேடா...”

“நீ நெனச்சுக்கிட்டிரு..ஒண்ணும் நடக்க லேன்னு... கூடப்போன பசங்கதான் கதை கதையா சொல்லுறாங்களே”...

“அடங்கொப்புரான சத்தியமா ஒன்னுமே நடக்கலடா... ஏம்பொண்ண எனக்குத் தெரியாதா? ஏதோ காவாலிப் பசங்க கதை கட்டிவிட்டா.. நீயும் அதை நம்புறே பாரு...”

“போதும் ஒங்களையெல்லாம் நம்புனது.... உங்களுக்கென்ன ? முட்டையிடுற கோழிக்கில்ல வலி தெரியும்? எப்படா இவள ஒரு நல்லவன் கையில் புடிச்சிக் கொடுப்போமுன்னு மண்ண மண்ணத்தின்னுக்கிட்டு இருக்கேன்... எல்லாத்தை யும் கெடுத்துப்புட்டு வந்து நிக்கிறாளே சண்டாளி .. நாளைக்கே போறேன்... அந்த படுபாவிப்பயலப் புடிச்சு எந்தங்கச்சிக்கு என்னடா வழின்னு கேக்கிறேன்....”

“டேய்... டேய்... மேலும் மேலும் சிக்கலாக் காதேடா... இத்தோட விடு... எல்லாம் நம்ம தல விதின்னு ஆகவேண்டியதைப் பாப்போம்”

“எதம்மா விடச் சொல்றே...? இவ நல்ல மாதிரி இருக்கயிலேயே வர்றவனெல்லாம் வரதட்சணையிலதான் கோளாறு சொல்லிட்டுப் போவான். இனி இது வேற.... இவள கட்டிக்க இனி எவன் வருவான்?”

மாணிக்கம் ஆங்காரமாய் உச்சஸ்தாயிலில் கத்தினாள். கையாலாகாத்தனம் அவனை முரட னாய் மாற்றியிருந்தது. கண் முழிகள் பிதுங்க கையில் அரிவாள் மட்டும் இருந்தால் அய்யனார் சிலை தோற்றுவிடும்.

“இங்க பாருங்க... யாரும் பேச வேணாம்.... நாளைக்கே அவுங்க வீட்டுக்கு நாலு பெரிய மனுஷங்கள அழைச்சிப் போயி நியாயம் கேப் போம். ஒத்துவந்தா பாக்கு மாத்திட்டு வர்றேன். இல்லேன்னா அந்தப் பயலோட தலை உருளுறது எங்கையாலதான் ....ரெண்டில் ஒண்ணு நடந்தாத் தான் இனி தலைநிமிந்து நடக்கலாம்...”

பேசிக் கொண்டே போன அண்ணனை ஓடி வந்து காலைகட்டிப்பிடித்துக் கொண்டு கேவினாள்.

“அண்ணே... அவன் யாருன்னே எனக்குத் தெரியாதுண்ணே... திருப்பதி டூருலே அடுத்தத் தெரு அதுக்கடுத்த தெரு பசங்க எல்லாம் நாலஞ்சு பேருகிட்டே வந்தாங்க... அதில் ஒருத்தன் அம்மா வுக்குத் தலைவலி மாத்திரை வாங்கியாந்து தந்தான்.. இதிலே யாரு ரமேஷ்ங்கறதெல்லாம் எனக்குத் தெரியாதுண்ணே. ஆனா எல்லாப் பசங்களையுமே தெருமுக்கிலே கடைத்தெருவில் எல்லாம் பாத்திருக்கேன்... அவ்வளவுதான் என்னைய நம்புங்கண்ணே?”

“உன்னைய நம்பி என்னம்மா செய்ய? வெள்ளம் தலைக்கி மேலே போயிருச்சு...” அவன் குரல் இளகியிருந்தது.

“இதவச்சு என் வாழ்க்கையை முடிவு செஞ் சிறாதீங்கண்ணே... தப்பு செஞ்சவன் எங்கேயோ சந்தோஷமா இருக்க நான் காலம் பூரா கண்ணீர் வடிக்கணுமா..?”

“இல்லேம்மா ... அவங்களப் போய் பாத்து எப்படியாது கெஞ்சிக் குலாவி...”

“வேண்டாண்ணே.... இந்தப் புரளிக்கெல் லாம் யாரும் பொண்ணு எடுத்துக்க மாட்டாங்க... மேலும் மேலும் களேபரமாயிரும்.. அதோட அவங்களும் பாதிக்கப்பட்டவங்களாத்தானே இருப்பாங்க....கொஞ்சம் பொறுமையா இருப் போம். .. நான் நிச்சயமா உனக்குப் பாரமா இருக்க மாட்டேண்ணே...”

சீதாவின் உடைந்த அழுகையில் அனை வரும் உள்ளம் குமுறினர். ஒரு பக்கெட் அவதூறைக் கரைத்து அவள் மேல் ஊற்றி விட்டு ஒரு வார காலம் ஓடி மறைந்தது.

“நெருப்பில்லாமல் புகையுமா?” தெருவாசி களின் வியாக்யானம். சீதா வேலைபார்க்கும் பேன்ஸி ஸ்டோரிலிருந்து ஒரு பையன் வந்தி ருந்தான். வேலைக்கு வரச்சொல்லி முதலாளி சொல்லியனுப்பியிருந்தார். இறுகிப்போய் அமர்ந் திருந்த மாணிக்கம் தன் தங்கை இனி வேலைக்கு வரமாட்டாள் என்று அழுத்தந் திருத்தமாய் சொல்லி அனுப்பினான்.

சீதா சோர்ந்து போனாள். வீடு கசந்தது. நாள் முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடப்பது பைத்தியம் பிடித்தது போல் இருந்தது. தோழிகள் பட்டாளமும் அவளைத் தள்ளி வைத்துவிட்டது.

மாணிக்கம் அவளை எப்பாடுபட்டாவது இந்த வருடத்தில் அனுப்பிவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அதே வேலையாய் அலைந்தான். புதிய மனிதர்களும் புதுப்புது ஜாதகங்களோடு வந்தார்கள்.

ஊரும் உலகமும் சீதாவையும் அவள் பிரச்சனைகளையும் மறந்து போனாலும் சீர்செனத்தி பேசும் போது மட்டும் அதற்கு உயிர்வந்தது.

அன்று வெள்ளிக்கிழமை வெள்ளிதோறும் உள்ளூர் அம்மன் கோவிலுக்குச் சென்று நெய் விளக்கேற்ற மட்டும் அனுமதி தந்திருந்தான் மாணிக்கம்.

கோயிலிருந்து வீடு திரும்பும்பொழுது வாசலில் புதிதாக இரு ஜோடி செருப்புகள் கிடக்கவும் சற்றே தயங்கினாள். ஆனாலும் உள்ளிருந்து ஒரு பழகிய குரல்.

“சும்மா வாம்மா...” என்றது.

உள்ளே போகும்போது இருவரும் கண்ணில் பட்டார்கள். ஓருத்தர் பேன்ஸி ஸ்டோர் உரிமை யாளர் சிதம்பரம். இன்னொருத்தர் புதிதாக இருந்தார்.

இருவரையும் “வாங்க...” என்று பொதுவாக அழைத்து விட்டு உள்ளே சென்ற வளுக்கு ஏகக் குழப்பம். ஓனர் எதற்காக வந்திருக் கிறார்... ? மனசுக்குள் சின்ன நம்பிக்கை துளிர்த்தது. கடைக்கு அழைக்க நேரிலேயே வந்துவிட்டாரா?

அது அப்படி இருக்காது என்றே தோன்றியது.

“ம் ...” என்றால் அங்கே வேலைக்குப் போக எத்தனையோ பெண்கள் போட்டி போட்டு வருவார்களே.... அவள் வேலைக்குப் போனதற்கு காரணமே சிதம்பரம் குடும்ப நண்பர் என்ப தால்தானோ? ஆனாலும் அதையும் மீறி அவருக்கு சீதாமேல் அளவு கடந்த பாசம்.. கடையில் வேலை பார்க்கும் பத்துப்பேரிலும் அவளைத்தான் கல்லா வில் உட்கார வைப்பார்.

இப்போது எதற்கு வந்திருக்கிறார் என்றே தெரியவில்லையே... ஆனாலும் சீதாவிற்கு ஒரு நிம்மதி பிறந்தது. சிதம்பரம் அவள் பேரில் மிகுந்த அன்பு பூண்டவர். அதனால் அவரது வரவு அவளுக்கு நன்மை செய்வதாகவே இருக்கும் என்று நம்பினாள். வீட்டுப் புழக்கடையில் வேலையைத் தொடர்ந்தாள்.

 

அவள் வேலைகளையெல்லாம் முடித்து விட்டு கூடத்திற்குள் வரும் போது புதியவர் போய்விட்டிருந்தார். சிதம்பரமும், மாணிக்கமும் மட்டுமே பேசிக்கொண்டிருந்தனர். சிதம்பரம் அவளைக் கனிவாக நோக்கி “இப்படி உட்காரம்மா...” என்றார்.

“பரவால்லே மாமா...” என்றவாறு சீதா ஸ்டூலைத் தவிர்த்து தரையில் உட்கார்ந்தாள்.

“மாணிக்கம் பண்ணின காரியத்தப் பார்த் தியா?” மெலிதான கோபம் அவர் குரலில் இருந்தது.

“என்ன மாமா சொல்றீங்க?”

“ஒனக்கிட்டே ஓண்ணும் சொல்லியிருக்க மாட்டோனே....? வீடு வெலபேச ஆள் கூட்டியாந் திருக்கான்மா.. அதுக்கு இப்ப என்ன அவசிய முன்னு கேளேன்....?”

சீதா திக்கென்று நிமிர்ந்தாள். என்ன அநியாயம் இது? இதையும் வித்து விட்டு வாடகை வீடு கட்டுப்படி ஆகுமா? என்ன முட்டாள்தனம் இது? சீதா அண்ணனிடம் பேசப் பயந்தாள்.

மாணிக்கம்தான் அடிப்பட்ட குரலில் பேசினான்.

“மாமா... புரியாமப் பேசாதீங்க... அந்த சக்கம்பட்டி மாப்பிள்ளைக்கி அம்பது பவுனு கேக்கிறாங்க... அதுக்கு நான் எங்கே போறது...?”

“சீதா ஒனக்கிட்ட இப்ப கல்யாணம் பண்ணி வைங்கென்னு கேட்டாளா?”

“ஆமா... அவ எப்படிக்கேப்பா? அவளைத் தான் ஊரே சிரிக்கும்படி பண்ணிட்டாங்களே....?”

“ஏண்டா மத்தவங்க எது பேசினாலும் பேசட்டுண்டா.... நீயும் அ ப்படிப் பேசலாமா? உந்தங்கச்சி மேல ஒனக்கே நம்பிக்கையில்லையா?”

“அடப்போங்க மாமா ... நம்பிக்கையை வச்சு நாக்கு வழிக்கவா முடியும்? இவ்வளவுக்கு அப்புறமும் இந்த மாப்பிள்ளையாவது சம்மதிச் சானேன்னு இருக்கு...”

“அடப் போடா... சீதாவுக்கு நீ இப்படி ஒரு துரோகத்தப் பண்ணுவேன்னு நான் கனவிலேயும் நெனக்கலேடா.... என்ன, கேக்கப்பாக்க ஆளு இல்லேன்னு நெனச்சியா?

மாணிக்கம் தலைகுனிந்தான். அதைக் காணச்சகிக்காமல் சீதா குறுக்கிட்டு,

“மாமா ... அண்ணே என்ன செஞ்சாலும் எனக்கு நல்லதத்தான் செய்யும் மாமா.....?” என்றாள்

“பாருடா... அந்தப்புள்ள ஒம்மேல வச்சிருக் கிற நம்பிக்கை ... போன வருசம் வரைக்கும் நீ பாத்திருக்கிற இதே மாப்பிள்ளை பத்துப்பவுனும் சின்னவண்டியும் கேட்டான். அப்பவே நீ அவனை குடியும் கூத்தியுமா இருக்கான்னு வேணான் னுட்டே ... இப்ப அதே மாப்பிள்ளைக்கு வீட்ட வித்து அம்பது பவுனு போட்டு கல்யாணம் பண்ணனுங்கிறியே... இது நல்லாவா இருக்கு...?”

இதைக் கேட்டதும் சீதா அண்ணனை நம்ப முடியாமல் பார்த்தாள் “அவனா.. அந்த காலிப் பயலா எனக்குப் புருசன்?”

மாணிக்கம் தலை குனிந்து முணு முணுத்தான். “இப்படி ஒரு பேர வாங்கிக்கிட்டு எத்தனை நாளைக்கு வீட்டுக்குள்ளேயே அடஞ்ச கெடப்பா.. அதான்...”

சிதம்பரம் அவன் தலையை மெல்ல உயர்த்தினார்.

“மாணிக்கம்... ஒம்மாதிரியே உணர்ச்சி வசப்பட்டு பல பேரு இந்தத் தப்பப் பண்றாங்க... கல்யாணத்தப் பண்ணி எங்கேயாவது தள்ளி விட்டாப் போதுமுன்னு இப்பப்பண்ணினா நாளைக்கும் உந்தங்கச்சி கண்ணச் கசக்கிக்கிட்டு வந்தா அதையும் நீதானே சொமக்கணும்? இப்ப சீதாவுக்கு இருபத்திரெண்டு வயசுதானே ஆவுது. இது பெரிய வயசா? முப்பது வயசிலயெல்லாம் பொண்ணுங்களுக்குக் கல்யாணம் ஆவுறதில்லையா.. பொறுமையா பாப்போம்..”

“இவளை வீட்டிலேயே வச்சிக்கிட்டு.....”

 “ஏன் வீட்டிலேயே வச்சுக்கணும்... ஒண்ணு எங்கடைக்கு அனுப்பு.. இல்லேன்னா படிக்க அனுப்பு ... பன்னண்டாவதுல ஆயிரத்து இருபது மார்க் எடுத்திருக்கா... நல்லாப் படிக்கிற புள்ளைய வீட்டோட வச்சது ஓந்தப்பு.... அவளைப் படிக்க வச்சா அவளுக்கு இருக்கிற அறிவுக்கு அவளே நாலு பேருக்கு சோறு போடுவா.... அவளை அவளே பாத்துக்குவா...”

மாணிக்கம் யோசிக்க ஆரம்பித்தான்.

இப்போது சீதா சென்னையில் ஒரு பொறி யியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள்.

Pin It