சமச்சீர்க் கல்வி ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடநூல் உருவாக்கத்தில் தாமும் ஒருவராகப் பங்கேற்றுப் பணியாற்றிய பேராசிரியர்            ச.மாடசாமி அது குறித்த தமது அனுபவத்தைச் சொல்லி செம்மலரில் (ஜூலை,2010) “அகங்காரத் தமிழ்” எனும் தலைப்பில் கட்டுரையொன்று எழுதி யுள்ளார். மாணவர்கள் ஆர்வமுடன் வாசிக்கும் விதத்தில் இதுவரை இல்லாத எளிமை, அழகான தோற்றம் ஆகியவற்றை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு “மாணவர்களை நோக்கிய அற்புதமான நகர்வு இது” என்று பாராட்டியுள்ளதுடன், ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் நேர்ந்துள்ள சில தவறுகளை யும் சுட்டிக் காட்டி, மனம் நொந்து, நியாயமாக விமர்சிக்கவும் செய்துள்ளார்.

அவற்றுள் ஒன்று  இக்கட்டுரைப் பொரு ளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அவர் கூறுகிறார் -

“எல்லாவற்றுக்கும் மேலாக, ‘நாட்டுப்புறம்’  என்று வருகிற இடத்தில் எல்லாம் ‘நாட்டுப்புரம்’ என்று திருத்தி, கடுமையாக உழைத்து உருவாக்கப் பட்ட இப்பாடப் புத்தகத்துக்கு தீராத களங்கத்தை உண்டு பண்ணினார்கள்”

நெடுங்காலமாகத் தமிழ் அறிஞர்களாலும் ஆசிரியர்களாலும், மாணவர்களாலும், மக்களா லும் எழுதப்பட்டும் பேசப்பட்டும் வரும் ஒரு பெயர்ச் சொல்லின் சரியான வடிவத்தை, உச்சரிப்பைத் தமிழ்ப்பாட நூலில் இப்படி அதிரடி யாகத் திருத்தம் செய்வது ஏற்புடையதல்ல. மாணவர்களுக்கு ஒரு சொல்லை எழுத்துப் பிழை யோடு கற்பிக்கச் செய்யும்  தவறு இது.

ஆறாம் வகுப்பு தமிழ்ப்பாட நூலில் பல பக்கங்களிலும் நாட்டுப்புறம் என்பது நாட்டுப்புரம் எனத் தவறான பிரயோகத்தில் உள்ளது. ‘ற’ வின் இடத்தில் ‘ர’ வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் அறிஞர்களும் மொழியியல் அறிஞர் களும் பத்திரிகைகளும் இன்று வரை எழுதி வருவது ‘நாட்டுப்புறம்’தான். அனைத்து தமிழ் அகராதிகளில் உள்ளதும் நாட்டுப்புறம் தான்.

சென்னைப் பல்கலைக் கழகம் 1963 -ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளியிட்ட “ ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம்” அகராதியில் ஊடிரவேசல எனும் ஆங்கிலச் சொல்லுக்கு வரும் தமிழ் அர்த்தங்களில் ஒன்று `ற’வுடனான நாட்டுப்புறம் தான்.  ஊடிரவேசல சார்ந்து வரும் அனைத்து ஆங்கிலச் சொற்களுக்கும் வருவது நாட்டுப்புற வீடு; நாட்டுப்புற உறவினர்; நாட்டுப்புறவாசி; நாட்டுப் புறத் தோற்றம்; நாட்டுப்புற மக்கள்; நாட்டுப்புறச் சூழிடம்; நாட்டுப்புற மகள் - என்று வல்லின `ற’ வுடனான நாட்டுப்புறம்தான். இடையின `ர’ என்பது இங்கே இல்லை. சிறந்த தமிழ்-ஆங்கில மொழியியல் அறிஞர்கள் உருவாக்கிய அகராதி நூல் இது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலரில் வெளிவந்துள்ள இரு கட்டுரைகளின் தலைப்புகள் இவை:

“தமிழக நாட்டுப்புறக் கலைகள்”

“நமது பண்டைய இலக்கியமும் இன்றைய நாட்டுப்புற இலக்கியமும்”

- இவற்றில் நாட்டுப்புறம் என்று சரியாக வந்துள்ளது.

மற்றும், உலகத் தமிழ்ச் செம்மொழி ஆய் வரங்கச் சிறப்பு மலரிலும் “நாட்டுப்புறப்பாடல்கள் சங்க இலக்கியம் எனும் தொகை நூல்கள்”

“வரலாற்று மீட்டுருவாக்கத்தில் நாட்டுப் புறப் பாடல்கள் மற்றும் கதைப் பாடல்களின் பங்களிப்பு”

- எனும் தலைப்புகளில் இரு இலக்கியத் தகவல் குறிப்புகள் உள்ளன. இவற்றின் மேற்கண்ட தலைப்புகளில் உள்ளதும் வல்லின `ற’ வுடனான நாட்டுப்புறம்தான். இங்கு சொல்லப்பட்ட எல்லா வற்றிலும்-எல்லாரிடத்திலும் நாட்டுப்புறம் என்றி ருக்க இந்தத் தமிழ்ப் பாடநூலில் மட்டும் நாட்டுப் புரம்..!

தமிழின் உடன் பிறப்பாகிய மலையாளத் திலும் ‘நாட்டுப்புறம்’தான் உள்ளது. மலையாள நிகண்டுவில் நாட்டுப்புறம் என்றும்,  சற்றுத் திரிந்து நாட்டும்புறம் என்றும் ஒரே பொருளிலான இரண்டு சொற்கள் உள்ளன. இரண்டிலும் உள்ளது வல்லின ‘ற’தான்.

இனி நாட்டுப்புறம் என்கிற சொல்லைக் கொஞ்சம் பகுத்துப் பார்ப்போம்.  இது  ஓர் ஒட்டுச் சொல். நாடு+புறம் இவை இரண்டும் சேர்ந்து சந்தி இலக்கணப்படி நாட்டுப்புறம் ஆகிறது. ‘நாடு’ என்பதற்கு தேசம் என்கிற மறுபெயர் மட்டுமல்ல, கிராமம் அல்லது சிற்றூர் என்கிற அர்த்தமும் உண்டு. கிராமத்து மக்களைக் குறிக்கிற நாட்டுப் புறத்தான், நாட்டுக்கட்டை, நாட்டாண்மை ஆகிய சொற்களும் மற்றும் நாட்டுப்பாடல்கள், நாடன் பாட்டுக்கள் (மலையாளம்), நாட்டார் பாடல் கள்(மூலம்: யாழ்ப்பாணத்தமிழ்), ஆகிய சொற் களும் ‘நாடு’ எனும் முதன்மைச் சொல் கொண்ட வையாகும்.

கேரளத்தில் மலையாளம் பேசும் மக்கள் “உங்கள் ஊர் எது?” என்று கேட்பதற்கு “நிங்ஙளுடே நாடு ஏதாணு?” என்பார்கள். நாடு எனும் சொல் தோன்றிய மிகப் பழங்காலத்தில் நாடு என்பது ஒரு கிராமத்து வட்டார அளவுதான் போலும்! இன்றும் கூடத் தமிழ்நாட்டில் சில `நாடுகள்’ உண்டு அவை: செட்டிநாடு, மேலாண்மறைநாடு, வருசநாடு, ஒரத்தநாடு, பாப்பாநாடு... பின்னர் ஒவ்வொரு கால அளவிலும் நாடு எனும் சொல் உணர்த்தும் நிலப்பரப்பு விரிவடைந்துகொண்டே போயுள் ளது. என்றாலும், மரபார்ந்த அடையாளமாக -ஆகுபெயராக- இன்றும் அந்த ‘நாடு’ என்பது நாட்டுப்புறமாக விளங்கி வருகிறது. கேரளத்திலும் அந்த `நாடுகள்’ உள்ளன. அவை வயநாடு, குட்டநாடு.

‘புறம்’ என்பதற்கு இடம், பின்னால், வெளியே, முதுகு, போர், புறங்கூறல் எனப் பல அர்த்தங்கள் உண்டு. எனவே நாட்டுப்புறம் எனும் போது அது ‘நாடு’ ஆகிய கிராமத்தையும் அதனைச் சார்ந்து புறத்தே- வெளியே உள்ள விரிந்த விவசாய நிலப்பரப்பையும் அவற்றின் இயற்கைச் சூழலை யும் கொண்ட முழுமையை அடையாளப் படுத் தும். காடும் காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை என்பது போல!

இடையின ‘ர’ சேர்க்கப் பட்ட நாட்டுப்புரம் என்பது காஞ்சிபுரம் ,விழுப்புரம், லட்சுமிபுரம், நாகலாபுரம், சங்கராபுரம்  என்று, குறிப்பிட்ட ஒரு நகர் அல்லது ஊர்ப் பெயர் போலத் தோன்றும். புரம் சேர்ந்த ஊர், நகர்ப் பெயர்கள் உண்டு. ஆனால் ‘புறம்’ சேர்ந்த ஊர், நகர்ப் பெயர் ஏதேனும் உண்டா?

நகர்ப்புறமென்றாலும், அது நகரும் நகர் சார்ந்துள்ள புறமும் சேர்ந்த முழுமைதான். அது நாட்டுப்புரம்போல நகர்ப்புரம் என்று திருத்தப் பட்டால் அந்த ‘நகர்ப்புரத்திற்கு’ என்ன பொருள்?

ஜூன் 30 - ஆம் தேதிய  தினமலரில் “சரியான சொல் நாட்டுப்புரமா, நாட்டுப்புறமா? - சர்ச்சையில் சிக்கிய சமச்சீர் கல்விப் பாடம்” என்கிற தலைப்பில் ஒரு செய்தி வந்துள்ளது. அதில் பாடத் திட்டம் எழுதிய நிபுணர்கள் கூறியதாக உள்ள ஒரு கருத்து இங்கே -

“நாட்டுக்குள் அல்லது நாட்டகத்தே என்பதற்கு எதிரான சொல் `நாட்டுப்புறம்’. அதாவது நாட்டுக்குப் புறத்தே அல்லது வெளியே என்று பொருள் தரும். இதனால்தான் பேராசிரியர் லூர்து தனது நூலை, `நாட்டார் வழக்காற்றியல்’ என்றும், வானமாமலை என்பவர், `தமிழர் நாட்டுப்பாடல்கள்’  என்றும் குறிப்பிடுகின்றனர். நாட்டுப்புறப்பாடல்கள்  என்று  குறிப்பிடவில்லை என்று தெளிவுபடுத்தினர்.”

இந்த நிபுணர்கள் நாட்டுப்புறத்தை நாட்டுக்குப் புறம் என்று பார்த்து விட்டார்கள். இவர்கள் ‘நகர்ப்புறம்’ என்பதற்கு என்ன பொருள் சொல்வார்கள்? அதில் ‘நகர்’ இல்லையா? நகர்க்குப் புறத்தே அல்லது வெளியே என்பார்களா? பிறகு எதற்கு நகர் சேர்ந்த‘புறநகர்’எனும் சொல்! நகரும் புறநகரும் சேர்ந்த முழுமைதான் நகர்ப்புறம் என்பது. நகர் +புறம்=நகர்ப்புறம். நாட்டுப்புறம் போல் நகர்ப்புறம்.

பேராசிரியர் லூர்துசாமியின் நாட்டார் வழக் காற்றியலில் உள்ள ‘நாட்டார்’ எனும் சொல்லின் விரிவாக்கம் நாட்டுப்புறத்தார்தான். அது போல் தான் நா. வானமாமலை யின் ‘நாட்டுப் பாடல்கள்’ என்பதன் விரிவாக்கமும் நாட்டுப்புறப் பாடல்கள் என்பதுதான். நாட்டார் என்பதும், நாட்டுப் பாடல்கள் என்பதும் ஒரு சொல் செறிவுக்குத்தான். ‘அது என்னுடைய புத்தகம்’ என்பதை ‘அது என் புத்தகம்’ என்றும் எழுதலாம். இரண் டாவதில் சொல் செறிவு உள்ளது. என் என்பதன் விரிவாக்கம் என்னுடைய. ‘ற’ சேர்ந்த நாட்டுப்புறம் எனும் சரியான சொல்லுக்கு ஒரு நெடிய மரபு உண்டு. மொழியில் மொழிமரபு என்பது முக்கிய மானது. அதை அதிரடியாய்த் திருத்துவது திருத்தம் ஆகாது; அது திரிபு.

இந்தச் சர்ச்சையில் பங்கேற்று தமிழறிஞர் தமிழண்ணல் கருத்து கூறுகையில், “புதிய பள்ளித் தமிழ்ப் பாடத்தில் ‘நாட்டுப்புரவியல்’ என வந் திருப்பது தவறு” என்று சொன்னதுடன் “நகர்ப்புறம், நாட்டுப்புறம் - இடம், பகுதி, சார்ந்த நிலம்” என `புறம்’ எனும் சொல்லுக்குப் பொருள் விளக்கம் தந்துள்ளார்.

மேலும் அவர் கூறுவது: “கதிரைவேற் பிள்ளை அகராதி நாட்டுப்புரம்-பட்டிக்காடு என்பது அச்சு தவறு. அவரே புரம்- இராஜதானி, ஊர், நகரம், மருதநிலத்து ஊர் என்றெல்லாம் பொருள் தருகிறார். ஜூபிலி தமிழ்ப் பேரகராதி நாட்டுப்புறம்-பட்டிக்காடு என்றே பொருள் தருகிறது...நகர்ப்புறம், நாட்டுப்புறம் என்ப வற்றில் புறம் என்பது இடத்தைக் குறிக்கும் பின்னொட் டாகும். இன்று கொல்லைப்புறம் வயல்புறம் என்றெல்லாம் சொற்கள் வந்துள. நாட்டுப்புறம் என்பதே அண்மைக்கால அறிஞர் பலரும் ஆண்டு வரும் சொல். அதைப் `புரம்’ என்பது தமிழுக்குப் புறம் போகும் செயலாகும்.”

- தினமணியில் (8.7.10) தமிழண்ணல் கடிதம்.

தமிழண்ணல் தமது “தமிழ் இலக்கிய வரலாறு” நூலிலும் நாட்டுப்புறம் என்றே எழுதி யுள்ளார். தமிழறிஞர் அ.கி.பரந்தாமனார் தமது “நல்லதமிழ் எழுத வேண்டுமா?” நூலில் நாட்டுப் புறம் என்பதே சரியானது எனக் குறிப் பிட்டுள்ளார்.

பலரும் வலியுறுத்தி வந்த சமச்சீர்க் கல்வியை தமிழக அரசு முதல் கட்டமாக முதலாம் வகுப் பிலும் ஆறாம் வகுப்பிலும் அமலாக்கியிருப்பது வரவேற்கத்தக்க நல்ல துவக்கம்.  ஆனால், இதற்கு முன் இல்லாத விதத்தில் அழகாக வடிவமைக்கப் பட்டு நல்ல தாளில் நன்றாக அச்சிட்டு உருவாக்கப் பட்டுள்ள எளிமையான ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாட நூலில், நெடுங்காலமாய் அறிஞர்கள் முதலான எல்லார் எழுத்திலும் பேச்சிலும் மனத்தி லும் மாறா வடிவத்தோடு இருந்து வரும் நாட்டுப்புறம் எனும் ஒரு நல்ல தமிழ்ப் பெயர்ச் சொல்லில் செய்யப் பட்ட பொருத்தமற்ற திருத்தம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

இனி பிழையான திருத்தத்தின் படியே மாணவர்கள் ‘நாட்டுப்புரம்’ என்று எழுதினால் தான் அதற்கு மார்க் கிடைக்கும் போலும்.

இவ்விஷயத்தில் கல்வித்துறை மறுசிந்தனை செய்து, சமச்சீர் ஆறாம் வகுப்பு தமிழ்ப்பாட நூலில் நாட்டுப்புரம் என்று வரும் எல்லாவற்றையும் வல்லின ‘ற’ சேர்த்து முந்தைய வடிவத்திலேயே தொடரும் படி ‘நாட்டுப்புறம்’ என்று மறு திருத்தம் செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு கல்வித்துறை இது குறித்து ஒரு சுற்றறிக்கை  அனுப்பி திருத்தம் செய்து கொண்டால் அந்தப் பெயர்ச் சொல்லை மாணவர் கள் பிழையின்றிக் கற்க உதவியாக இருக்கும். அது செம்மொழிக்குச் செய்யும் சேவையாகவும் இருக்கும்.

Pin It