ஒற்றைமரம் தோப்பு ஆகாது; அதுபோல் ஒற்றைக் கவிதையும் தொகுப்பு ஆகாது. ஆனால் கவிஞர் ஏகாதசியின் ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு ஒரு 'தோப்பு' ஆகியுள்ளது. நூலின் தலைப்பே ஒரு கவிதைபோல்.

இயக்குநர் ஏகாதசியின் கிராமிய இசைப் பாடல்களை நூலில் வாசித்தோரும் மேடைகளில் பாடக் கேட்டோரும் அதன் அருமையில் மனம் லயித்திருப்பார்கள். இப்போது அவரது மற்றொரு படைப்புதான் இந்த ஹைக்கூ.

"பூவும் தீயும்" என்கிற முரண் தலைப்பிலான தமது முதல் ஹைக்கூ தொகுப்பை 15 ஆண்டுகளுக்கு முன்பு தந்த ஏகாதசி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது இரண்டாம் ஹைக்கூ தொகுப்பை - தோப்பைத் தந்திருக்கிறார்.

"மனதில் பச்சை குத்திக்கொண்ட ஞாபகங்கள் வண்டிக்கணக்காய் எனக்கு கிடக்கையில், நான் எதற்கு என் வேர்களை அறுத்துக்கொண்டு வெளியேற வேண்டும். அதனால்தான் ஹைக்கூ (க) விதைகளை என் மண்ணில் விதைத்துத் தோப்பாக்கியுள்ளேன்" என்கிறார். தனது 'தோப்பு' க்குள் அமர்ந்துகொண்டு இக்கவிஞர்.

சமூக வாழ்வின் வெளிக்குள் காணும் ஒவ்வொரு துளி நிகழ்வையும், தோற்றத்தையும்நுட்ப உணர்வுகளையும் தன் கவி மனசுக்குள் கொண்டுவந்து அர்த்தத்தோடும் அழகியலோடும் - மூன்றே வரிக்குள் - ஒரு சிறுகதைக்கான செறிவோடு காட்சிப் படிமங்களாக்கியுள்ளார் ஏகாதசி. பனித்துளிபோலும், கனல் துளிபோலும் எழுதப்பட்ட ஹைக்கூ கவிதைகள் நூலெங்கும் விலைவாசி உயர்வினால் மனம் கூடுதல் கஷ்டப்படுகிறவர்கள் வீட்டில் சமைத்துப் போடும் அம்மாமார்கள்தான்.

"காய்கறிப் பை

 அம்மாவால் முடியவில்லை

விலையைச் சுமக்க"

இங்கே கவிஞர் காய்கறிப் பையின் கனத்தில் கைவலிப்பதைப் பார்க்கவில்லை. தாங்க முடியாத விலை உயர்வால் அம்மாவின் மனம் வலிப்பதைப் பார்க்கிறார். இதுதான் கவிமனம். வெளித் தோற்றத்தின்வழி உள்மனத்தைக் காண்கிறார் கவிஞர். இதிலே மனித நேயமும் சமூகத்தின் மீதான அக்கறையும் வெளிப்படுகிறது.

"ஒரே சாலையில்தான் செல்கின்றார்கள்

சிறுவர்கள்

பள்ளிக்கூடத்திற்கும்

சித்தாள் வேலைக்கும் "

சாலை ஒன்றேயாயினும் வாழ்க்கைப் பாதைகள் இருவேறாய் முரணாகிப் பிரிந்துகிடக்கிறது.

பள்ளிக்குச் செல்ல முடியாமல் வறுமையினால் தடுக்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர் நிலையை இப்படி நெஞ்சம் கனக்கச் சொல்கிறார் ஏகாதசி.

நட்சத்திரங்களை சோளப் பொரிகளாய்ச் சொன்ன நாட்டுப்புறப்பாடல் ஒன்று உண்டு. இந்தக் கவிஞர் இன்னொரு வித்தியாசமாக -

"மழை விற்ற

காசுகள்

நட்சத்திரங்கள்"

- என்கிறார்.

இரவில் மழை பெய்து ஓய்ந்து மேகத்திரை விலகிய பின்னர் கருத்திருக்கும் வானத்தில் சிதறிய வெள்ளிக்காசுகள் போல்தான் நட்சத்திரங்கள் தோன்றும். ஒரு புறக்காட்சி கவிஞரின் அகத்தில் வேறொரு காட்சியாக விரிகிறது.

விளை நிலங்களிலெல்லாம் கட்டடங்கள் முளைப்பதைப் பார்க்கும் கவிஞனின் மனம் இப்படிக் கற்பனை செய்கிறது.

" நடக்கிறது

விவசாயம்

முளைப்பாரியில் மட்டும்"

ஏழைகள் எப்படித் தங்க மோதிரம் வாங்க முடியும்? ஆனாலும் ஏழைச் சிறுவர் தங்கள் ஆசையை இப்படி நிறைவேற்றிக் கொள்கிறார்கள்:

"ஏழைச் சிறுவர்கள்

வாங்குகின்றார்கள்

மோதிர அப்பளம்"

முழு வெண்நிலவைப் பார்க்கிறபோது அதில் உள்ள நிழல் ஆலமரம் போன்ற வடிவில் தெரியும். அந்த 'ஆலமரத்தின்' அடியில் அமர்ந்து ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருப்பதாக அல்லது நெல் குத்திக்கொண்டிருப்பதாக அந்தக் காலத்தில் ஒரு பாட்டிக் கதை உண்டு. இதைப் பேரப்பிள்ளைகள் கேட்டுப் பிரமிப்பார்கள். இப்போது கவிஞர் ஏகாதசிக்கு ஒரு சந்தேகம்.

"நிலவின் பின்பக்கம் கயிற்றுக் கட்டிலில் படுத்திருப்பாரோ நெல்குத்தும் கிழவியின் வீட்டுக்காரர்"

சமூக அக்கறையுள்ள பல கவிதைகளோடு இதுபோன்று ரசித்து மகிழத்தக்க கற்பனாலங்காரக் கவிதைகளும் இந்நூலில் உள்ளன. தமிர்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், கவிஞர் முருகேஷ் இருவரின் பாராட்டு உரைகளோடு இந்நூல் வந்துள்ளது.

இந்த ஹைக்கூ தோப்புக்குள் உலவினால் அழுத்தமான சிந்தனையையும் சுகமான ரசனையையும் சுவாசிக்கலாம்.

'தோப்பு' விலை ரூ.60-

தாய் வெளியீடு

42/ 45, இராஜாங்கம் மத்திய வீதி

வடபழனி, சென்னை - 600 026.

 ***

நூலாக்கம் & விற்பனை உரிமை:

பாரதி புத்தகாலயம்

421, அண்ணாசாலை

சென்னை - 600 018

தொலைபேசி : 044-24332424

Pin It