இலா. வின்சென்ட் எழுதிய தமிழ் நிலமும் இனமும்?

‘மீண்டெழுதல்’ சிறுகதைத் தொகுப்பு வழி யாக மார்க்ஸீயக் கண்ணோட்டம் கொண்ட யதார்த்தவாத மொழிநடைப் படைப்பாளியாக அறியப்பட்ட இலா. வின்சென்ட் ‘தமிழ் நிலமும் இனமும்?’ என்ற வித்தியாசமான-அறிவார்ந்த-ஆய்வுநூலை வழங்கியிருக்கிறார்.

தமிழ்ப்பற்று மிக்க வின்சென்ட் விஞ்ஞான ரீதியான வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப் படையில் கேள்விகளை எழுப்பிக் கொண்டு புதிய ஆய்வைத் தொடங்குகிறார்.

“கடல் கோள்களில் மூழ்கிப்போன குமரிக் கண்டமும், லெமூரியா கண்டமுமே, உலகின் முதல் நிலம், அதில் வாழ்ந்த தமிழினமே, ஆதி முதல் மனித இனம். அவன் பேசிய தமிழே, உலக மொழிகளுக்கெல்லாம் மூத்தது” என்ற ஆய்வு முடிவுகளை விசாரணைக்குட்படுத்துகிறார்.

ஏராளமான தரவுகள், ஆதாரநூல்கள், வரை படங்கள், தொல்லியலில் கண்டெடுக்கப் பட்ட செப்போடுகள், ஆயுதங்கள், பண்டங்கள், மொழி கள் உள்ளடங்கிய பட்டயங்கள் என்று ஏகப் பட்ட தகவல்களை ஆதாரமாக முன்வைத்து விவாதிக்கிறார்.

ஆழ்ந்துறைந்த அறிவார்ந்த நிதானத்துடன் கூடிய நுட்பமான ஆய்வுநோக்கு. ஆராய்ச்சிப் பயணம். களப்பிரர்களால், சமணர்களால், பௌத்தர்களால் தோற்கடிக்கப்பட்டிருந்த வேத மரபு புதுப்பிக்க... தமிழ் முழக்கம் பயன்பட்டது. தமிழ் ஆயுதமாக பயன்பட்டிருந்த வரலாற்றை முன் வைக்கிறார்.

மத்திய தரைக்கடல் நிலப்பகுதியே முதல் நிலம், ஆப்பிரிக்கரே உலகின் முதல் மனிதர் என்ற சில முக்கிய முடிவுகளுக்கு வருகிறது ஆய்வு.

‘இக்கருத்துக்களை நிறுவதற்கு இன்றும் வலுவான சான்றுகள் தேவைப்படுகிறது’ என்கிற பேரா. ஆ. சிவசுப்பிரமணியத்தின் விமர்சனத்தை புறந்தள்ளிவிட முடியாது.

‘அதே நேரத்தில் உணர்ச்சி வயப்பட்ட நிலை யிலேயே உறைந்திருக்கிற தமிழுணர்வைப் பற்றிய மறுபார்வை தேவைப்படுகிறது’என்ற தமிழ் நாடனின் கருத்துரையும் கவனிக்கத்தக்கது.

பயனுள்ள வகையில் மனசையும் அறிவையும் விசாலப்படுத்துகிற அறிவார்ந்த ஆய்வு நூல் இது. .           

வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600 018.           விலை : ரூ. 70

Pin It