சிஐடியு  சங்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து வெளியிட்டுள்ள இந்த நூலை 1982 முதல் சங்கத்தின் செயலாளராகவும், தற்போது சிறப்பு தலைவராகவும் உள்ள தோழர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். சங்கம் துவங்கிய  நாள் முதல் இன்று வரை தொடர்ந்து நடந்த போராட்டங்களை தோழர்கள் மூலம் கிடைத்த தகவல் அடிப்படையிலும், தானே தலைமை தாங்கி நடத்திய அனுபவங்கள் மூலமும் ஒன்றுவிடாமல் பதிவு செய்துள்ளார். 'போராட்டத்தில் பூத்த' என்ற தலைப்பு எவ்வளவு பொருத்தம் என்பது நூலை படிக்கும் போது உணர முடிகிறது.

சங்கம் உருவாவதற்கு முன்பு தொழிற்சாலை உருவாக கம்யூனிஸ்ட்கள் எப்படி முன்முயற்சி எடுத்தார்கள் என்பதை நூலின் ஆரம்பத்தில் காண்கிறோம். தோழர் டி.கே.ரங்கராஜன் தன் முன்னுரையில், தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்லாமல் தொழில் வளர்ச்சிக்கும் கம்யூனிஸ்ட்கள் பாடுபட்டதை அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார். பொதுத்துறையை உருவாக்குவதிலும், பாதுகாப்பதிலும் கம்யூனிஸ்ட்கள் பங்கை டி.கே.ஆர்.முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

நெய்வேலி பகுதியில் பழுப்பு நிலக்கரி உள்ளதை 1875 ஆம் ஆண்டு முதலில் கண்டுபிடித்தாலும், தொடர்ந்து 1935,1940, 1951 ஆகிய ஆண்டுகளில் பல ஆய்வுகள் செய்யப்பட்டாலும் இறுதியில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி.ராமமூர்த்தி, அனந்தன் நம்பியார் முயற்சியால் தான் நெய்வேலி சுரங்கம் வெட்டப்பட்டது. 1952 ல் கிழக்கு ஜெர்மனி, பெர்லின் நகருக்கு தொழிற்சங்க மாநாட்டிற்கு சென்ற பி.ராமமூர்த்தி அங்கு பழுப்பு நிலக்கரியை பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை நேரில் பார்த்து, இங்கும் அதை பயன்படுத்த முடியும் என ஆணித்தரமாக வாதிட்டார். மின் உற்பத்தி நிலையம் அமைக்க மத்திய அரசு பல முதலாளித்துவ நாடுகளை அணுகியபோது, மறுத்தனர். சோவியத் யூனியன் முன்வந்து மின் உற்பத்தி நிலையம் உருவாக்கிக் கொடுத்தது. 1956ல் பிரதமர் நேரு அடிக்கல் நாட்டினார். 1962ல் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் மின் உற்பத்தியை துவக்கி வைத்தார். இன்று தமிழக மின் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு நெய்வேலியில் உற்பத்தியாகிறது. இந்த வரலாற்றுப் பதிவுகளை இன்றைய தலைமுறைக்கு இந்நூல் மூலம் ஜி.ஆர்.வழங்கியுள்ளார்.

சங்கம் உருவான பின்னணியும் சாதாரணமானது அல்ல. பரீட்சார்த்த குவாரி வேலைகள் துவங்கிய காலத்திலேயே விபத்து நடந்தது. காயமுற்ற தொழிலாளிகள் மருத்துவமனையில் இருந்தபோது, அங்கு கைதியாக சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த தோழர் சி.கோவிந்தராஜன் அவர்களிடம் தன் முதல் முயற்சியைத் துவக்கினார்.

பிறகு 1953 ல் சுரங்கம் தோண்டும்போது எந்திரத்தின் ஒரு பாகம் உடைந்ததற்காக சண்முகம் என்ற தொழிலாளி கைகளை பின்புறம் கட்டி காவல்நிலையத்திற்கு இழுத்து வரப்பட்டார். நிர்வாகத்தின் இந்த கொடூரச் செயலைக் கண்டு கொதித்த தொழிலாளர்கள் ஒன்று திரண்டனர். சி.கோவிந்தராஜன் காவல்நிலையம் வந்து போராடி தொழிலாளியை விடுவித்தார். அப்பொழுதுதான் லிக்னைட் மைன்ஸ் லேபர் யூனியன் பதிவு எண் 1803 துவக்கப்பட்டு அன்றைய ஏஐடியுசி யில் இணைக்கப்பட்டது. 1960ல் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சங்கத்தில் இணைந்தனர். 1974 ல் ஊழியர் சங்கம் இணைக்கப்பட்டு நெய்வேலி பழுப்பு நிலக்கரி தொழிலாளர் மற்றும் ஊழியர் சங்கம்' என்று உருவாகி சிஐடியு வில் இணைந்து இன்றுவரை செயல்பட்டு வருகிறது. இவ்வாறு சங்கம் பிறந்து வளர்ந்த விதத்தையும் ஜி.ஆர். கோர்வையாக எழுதியுள்ளார்.

1967க்குப் பிறகு திமுக அரசு அமைந்தது. தொமுச தலையீடு. முதல்வர்களாக அண்ணா, கலைஞர் ஆகியோர் தொழிலாளர் பிரச்சனைகளை கையாண்டவிதம் முதலியன விரிவாக எழுதப்பட்டுள்ளது. சங்கம் தீவிரமான போராட்டம் நடத்தி தினக்கூலி சம்பளத்தை மாதச் சம்பளமாக மாற்றியது. 1970ல் முதல் ஊதிய ஒப்பந்தம் உருவாக போராட்டம் துவங்கியது. கலைஞர், இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்றார். துப்பாக்கிச் சூடு நடந்தது. இறுதியில் போராட்டம் வெற்றி பெற்றது. 3 ஆண்டு ஒப்பந்தம் உருவானது. கலைஞர் அரசு உள்துறைச் செயலாளர் மூலம் 'விசாரணை' நடத்தி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், தடியடி அனைத்தும் நியாயம் என 'தீர்ப்பு' வழங்கியது.

சிஐடியு தொழிற்சங்கம் ஊதிய ஒப்பந்தம் அல்லாது பல்வேறு பிரச்சனைகளை எடுத்து போராடி வெற்றி கண்டதை ஜி.ஆர். பதிவு செய்துள்ளார். நெய்வேலி தொழிற்சாலைக்கு நிலம் வழங்கிய 60 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு நஷ்டஈடு, வேலை வழங்கப்பட வேண்டும் எனவும், சுரங்க தூசியால் ஏற்படும் பாதிப்பிற்கு தூசிப்படி, சுரங்கத் தண்ணீரை வழங்காமல் சுத்தம் செய்த தண்ணீர் வழங்குதல், மின் நிலையத்தில் வெளியேறும் சாம்பலை சோவியத் தொழில்நுட்ப உதவியுடன் தடுத்து நிறுத்திய போராட்டம், கேண்டீனில் விலையேற்றம் செய்ததை தடுத்து நிறுத்தியது. விரிவாக்கம் செய்தபோது புதிதாக வந்த ஊழியர்களுக்கு புதிய வீடுகள் கட்ட, நகரியம் பராமரிக்கப்படாமல் இருந்தபோது 21 ஆயிரம் குடும்பங்களுக்கும் சென்று கேள்வித்தாள் பெற்று நிர்வாகத்தை பணிய வைத்தது; விருந்தினர் மாளிகை தனியார்மயத்தை தடுத்து நிறுத்தியது; மருத்துவமனை சீர்கேட்டை சரிசெய்ய; தலித், பழங்குடி மக்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடத்திய போராட்டம் என அத்தனை பிரச்சனைகளிலும் சங்கம் தலையீடு செய்து போராடி வெற்றி கண்ட பெருமை மிகு வரலாறு மிகையில்லாமல் விவரிக்கப்பட்டுள்ளது.

1982 ல் ஜி.ஆர்.செயலாளராக பொறுப்பேற்றபின் அவர் தலைமையில் நடைபெற்ற மகத்தான போராட்டங்கள் பல- ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நஷ்டஈடு, போனஸ் கோரிக்கைகள் முன்வந்தன. 1989 ஏப்ரல் 22 முதல் 5 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி ஒப்பந்த தொழிலாளர் நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் வெற்றி பெற்றன.

போனஸ், பஞ்சப்படி இரண்டையும் பெற்றுத் தந்தது சிஐடியு சங்கம் தான். முதன்முதலாக 1968 ல் 5 சதவீத போனஸ் ஒப்பந்தம், பிறகு 8.33 சதமாக உயர்ந்தது. உற்பத்தியுடன் இணைந்த போனஸ் என்பது நிராகரிக்கப்பட்டது. 1970 ல் விலைவாசிப் புள்ளி அடிப்படையில் பஞ்சப்படி ஒப்பந்தம் உருவானது. தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்களுக்காக போராடி டெண்டர் நோட்டீசில் குறைந்தபட்ச ஊதியம், பி.எப், நஷ்ட ஈடு போன்ற விஷயங்களை இணைத்ததும் சிஐடியு சங்கம் தான்.

இந்த போராட்டங்கள் அனைத்தும் தொழிலாளர்களின் பேராதரவை பெற்றது. கூட்டுறவு நாணயச் சங்கம், கேண்டீன் பொறுப்பு தேர்தல், வருங்கால வைப்பு நிதி இயக்குனர்கள் தேர்தல் போன்றவற்றில் சங்கத் தோழர்கள் வெற்றி பெற்று நேர்மையாக நிர்வாகம் நடத்தினர். முதன்முதலாக 2001ல் சங்க அங்கீகாரத்திற்காக ரகசிய வாக்கெடுப்பு நடந்த போது சிஐடியு இரண்டாவது இடத்திற்கு வந்தது.

தனியார்மயத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் சிஐடியு பாத்திரம் மகத்தானது. தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்திய பாஜக அரசு 2002ல் 49 சதவீத பங்குகளை விற்க முன்வந்தது. தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டம் காரணமாக அது கைவிடப்பட்டது. 2006ல் அமைந்த காங்கிரஸ் அரசு 10 சதவீத பங்குகளை விற்க அறிவிப்பு செய்தது. மீண்டும் ஒன்றுபட்ட போராட்டம் எழுந்தது. மத்திய அரசில் பங்கு பெற்ற திமுக தடுமாறியது. முதல்வர் கலைஞர் பங்குகளை தொழிலாளர்களுக்கு விற்கலாம் என சமரசம் செய்ய முயன்றார். சிஐடியு உறுதியாக எதிர்த்ததால் மத்திய- மாநில அரசுகள் பணிந்தன.

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த ஆண்டு 40 நாட்கள் போராட்டம் நடைபெற்றது. இறுதியில் நாள் ஒன்றுக்கு ரூ.60 ஊதிய உயர்வு கிடைத்தது. ஒப்பந்தத் தொழிலாளர் போனஸ் போராட்டமும் 2009ல் பல நாட்கள் உறுதியுடன் போராடி வெற்றி அடைந்தது.

இப்படி சங்கம் துவங்கிய நாள் முதல் சமீபத்திய போராட்டங்கள் வரை ஏராளமான விபரங்களை ஜி.ஆர்.இந்நூலில் பதிவு செய்துள்ளார். அதே போல் போராட்டத்திற்கு தலைமை ஏற்ற, ஆதரவு தந்த தலைவர்கள் பற்றிய விபரங்களையும், புகைப்படங்களையும் இணைத்துள்ளார். தமிழகத்தின் கேந்திர தொழிற்சாலையில் நடைபெற்ற போராட்டங்களை, அனுபவங்களை, வெற்றிகளை, தனது பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் ஒரு நூலாக எழுதி புதிய தலைமுறைக்கும், தொழிற்சங்க ஊழியர்களுக்கும் வழங்கியுள்ளது பாராட்டத்தக்கது. அனைவரும் படித்து பயன்பெற வேண்டிய நூல்.

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,

421,அண்ணா சாலை,சென்னை-600018

Pin It