கனன்று கொண்டிருக்கும் எரிமலை ஓர்நாள் வெடித்துச்சிதறும்! அதுதான் தற்போது அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறது.

"வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்" என்ற முழக்கத்தோடு நியூயார்க்கில் துவங்கியுள்ள எழுச்சிப் போராட்டம், லண்டன், பாரிஸ், ரோம், பிரஸ்ஸல் என உலகெங்கிலும் சுமார் 1000 நகரங்களுக்குப் பரவியிருக்கிறது.

எகிப்திலும், அரபு நாடுகளிலும் நடந்துவரும் போராட்டத்தை பரபரப்பாகக் காட்டிய ஊடகங்கள், உலகையே ஆட்டிப்படைக்க எண்ணும் அமெரிக்காவில் நடக்கும் போராட்டத்தையோ அப்போராட்டத்தின் வீச்சையோ முழுமையாக உலகிற்கு தெரிவிக்கவில்லை.

உலகப்பொருளாதாரத்தை, உலக நாடுகளைத் தன் காலடியின் கீழ் கொண்டுவர எத்தனிக்கும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மிகப்பெரும் வர்த்தகங்கள் -பேரங்கள் பங்குச் சந்தை ஊக வணிகங்கள் எல்லாம் நடக்கிற இடம்தான் வால் ஸ்ட்ரீட் எனும் தெரு, நியூயார்க் மாநகரத்தின் மையப்பகுதியில் இருக்கிறது. இந்தத் தெருவில் இருந்து இயங்கும் பகாசூரப் பன்னாட்டுப் பெரும் நிறுவனங்கள்தான் இன்றைக்கு உலக வர்த்தகத்தை உலகச்சந்தையை, உலகம் முழுவதும் உள்ள மக்கள் எதைச் சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும், என்ன விலை கொடுத்து வாங்கிச் சாப்பிட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன.

இந்த நிறுவனங்களின் நலனை - இந்நிறுவனப் பெரு முதலாளிகளின் நலனைக் காப்பதற்காகத்தான் உலகையே ஒட்டச் சுரண்டும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அமெரிக்க அதிகார வர்க்கம் உருவாக்கியது. உலக வர்த்தக மையம், சர்வதேச நிதி நிறுவனம், உலக வங்கி ஆகிய அமைப்புகளின் உதவியோடு உலக நாடுகளில் எல்லாம் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற நாசகரக் கொள்கைகளை அமலாக்குமாறு நிர்ப்பந்தித்தது.

நமது இந்தியா உட்பட ஏராளமான நாடுகள் 1980களில் துவங்கி, கடந்த 30 ஆண்டுகாலமாக இந்தக் கொள்கைகளைத் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.

இதன் நேரடி விளைவாக விவசாயம் பேரழிவைச் சந்தித்தது. சிறுதொழில்கள், அழிந்தே போயின. லட்சக்கணக்கான மக்கள் வேலைகளை இழந்தனர். கையில் இருந்த துண்டு துக்காணி நிலங்களையும் இழந்து, வெறுங்கையோடு கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி வேலைதேடி, வாழ்வைத் தேடி இடம்பெயர்ந்தனர். நகரங்களிலும் பணிப்பாதுகாப்போ, சமூகப் பாதுகாப்போ இன்றி அத்துக்கூலிகளாக, தினக்கூலிகளாக கிடைத்த வேலையைச் செய்து, வெந்ததைத் தின்று விதியை நொந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நமது நகரங்களில் மட்டுமல்ல... உலகம் முழுவதிலும் இதே நிலைமைதான்; சீனா, கியூபா போன்ற சில நாடுகளைத் தவிர, ஒட்டுமொத்த உலகமும் இப்படித் துயரத்தை அனுபவிப்பது யாருக்காக?வால்ஸ்ட்ரீட் எனும் அந்தத் தெருவில் மையம் கொண்டிருக்கும் உலகப் பெரும் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக! இப்படி லாபவெறிகொண்டு, தறிகெட்டு கண்மண் தெரியாமல் ஓடிய இந்த முதலாளிகளது மூலதனம், எதிர்பார்த்தபடியே திடீரென அதலபாதாளத்தில் விழுந்துவிட்டது. இப்படி விழுந்ததற்கு சில முக்கியக் காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது, வேலையில்லாப் பட்டாளம்.

ஒரு ஊரில் கலவரம் நடந்தால் அதை அடித்து நொறுக்கி ஒடுக்குவதற்கு ரிசர்வ் போலீஸ் படையை வைத்திருப்பதைப் போல, ஏற்கெனவே வேலையில் இருப்பவர்கள் கூடுதலாக கூலி கேட்டாலோ - போராடினாலோ, "நீ வேலைநிறுத்தம் செய்தாலும் கவலையில்லை; அந்த வேலையைச் செய்ய இதோ இத்தனைபேர் காத்திருக்கிறார்கள்" என்று மிரட்டுவதற்காகவே மிகப்பெரும் பட்டாளத்தை - வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர் பட்டாளத்தை நிலையாக வைத்திருக்கிறது மேற்கண்ட முதலாளிகளுக்கு ஆதரவான அரசின் கட்டமைப்பு.

மறுபுறத்தில், பெரும் எண்ணிக்கையிலான படித்த மற்றும் திறமையான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிற தொழில் மற்றும் விவசாய உற்பத்தியைவிட, பங்குச் சந்தைகளை மையமாகக் கொண்டு செயல்படுகிற ஊகவணிகம் மூலமாக முன்னெப்போதும் இல்லாத லாபத்தை ஈட்ட முடியும் என்று பெரும் முதலாளிகள் எண்ணியதால், பொருள் உற்பத்தியை அதிகரிக்காமல் ஊகத்தின் அடிப்படையில் உலக வியாபாரம் மாறியது.

பொருள் உற்பத்தி அதிகரிக்காததால், சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் விலை தானாகவே உயர்ந்தது. குறைந்த பொருளுக்கு நிறைய லாபம் கிடைத்ததால், அந்தப் பொருளுக்கும் ஊக பேரத்தின் மூலம் மேலும் விலையை உயர்த்தி, மேலும் லாபம் ஈட்டத் துவங்கினார்கள் முதலாளிகள். வேலைவாய்ப்பற்ற பெரும் பட்டாளமும், குறைந்த கூலியே கிடைக்கப்பெறுகிற இதர மக்களும் பெரும் விலைகொடுத்து பொருட்களை வாங்கமுடியவில்லை; தேவையான அளவு நுகர முடியவில்லை. இதனால், பொருட்கள் தேங்கின. பொருள் தேங்கியதால் உற்பத்தி தானாகவே குறைகிறது. உற்பத்தி குறைவதால், பல தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை. தொழிற்சாலைகளை மூடியதால் மேலும் வேலையிழப்பு. இதனால், வங்கிகளில் வாங்கியிருந்த வீட்டுக்கடன்கள் போன்றவற்றை அடைக்க முடியவில்லை. கடன் வாங்கியவர்கள் எல்லாம் திரும்ப அடைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதால் வங்கிகளே திவாலாகின.

வங்கிகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதாலும், தாராளமயக் கொள்கையால் உலகம் முழுவதும் பல கிளைகள் பரப்பியிருப்பதாலும், ஒரு வங்கியில் ஏற்பட்ட சிக்கல், பல வங்கிகளைத் தாக்கியது. அடுத்தடுத்து வங்கிகள் திவாலாகின. வேகமாக சுழன்று கொண்டிருந்த பொருளாதாரச் சக்கரம், வேகம் குறைந்தது. நெருக்கடியில் சிக்கியது.

2008ம் ஆண்டில் அமெரிக்காவில் மையம் கொண்ட இந்த பொருளாதார நெருக்கடி, படிப்படியாக பிற நாடுகளுக்குப் பரவியது. கிரீஸ் போன்ற பல ஐரோப்பிய நாடுகளும் நெருக்கடியில் சிக்கின.

நெருக்கடியில் சிக்கிய பொருளாதாரத்தை மீட்டு, மீண்டும் ஓடச் செய்ய வேண்டுமானால் உடனடியாக ஒரே வழிதான் இருக்கிறது.

வேலையில்லாமல், கூலி இல்லாமல் பெருவாரியான மக்கள் உற்பத்திப் பொருட்களை வாங்காததால்தான், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால்தானே இந்த நெருக்கடி ஏற்பட்டது. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். வேலைவாய்ப்பை பெருமளவில் ஏற்படுத்த வேண்டும். இதற்கு அரசு நேரடியாக தலையிட்டு தொழில் நிறுவனங்களை இயக்க வேண்டும். உழைப்பைச் செலுத்தி தாங்கள் பெறுகிற கூலியை பெருமளவிலான மக்கள் வீட்டில் வைத்திருக்கப்போவது இல்லை. தங்களுக்குத்தேவையான பொருட்களை வாங்குவார்கள். பொருட்களின் விலையையும் அரசு தலையிட்டு, மானியம் கொடுத்து குறைக்க வேண்டும். இப்படிச்செய்தால் அதிகமான மக்கள் தங்கள் கையில் கிடைத்த கூலியை செலவிட்டு, பொருட்கள் வாங்குவார்கள். பொருளுக்கு கிராக்கி அதிகரிக்கும். கிராக்கி அதிகரித்தால் உற்பத்தி தானாக கூடும். உற்பத்தி கூடினால் மூடிய தொழிற்சாலைகள் திறக்கும். புதிய வேலைவாய்ப்பும் பெருகும். பொருளாதாரம் மீண்டும் வேகம் பிடிக்கும்.

ஆனால் அமெரிக்க அரசோ, நெருக்கடியில் தீவிரமாக சிக்கியிருக்கும் பல நாடுகளின் அரசுகளோ இதைச் செய்யவில்லை. மாறாக இந்த நெருக்கடியால் எங்களுக்கு லாபம் குறைந்துவிட்டது என்று பிதற்றிய பெரும் முதலாளிகளுக்கு அரசுப்பணத்தை கோடிகோடியாக அள்ளிக்கொடுத்தது. மீட்பு நடவடிக்கை என்ற பெயரில் இதைச் செய்த அரசுகள் பின்னர் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், இருக்கிற கொஞ்ச நஞ்ச வேலைவாய்ப்புகளையும் வெட்டியுள்ளன. கூலியை கடுமையாக குறைத்துள்ளன. ஓய்வூதியத்தில் கைவைத்துள்ளன.

ஒரே ஒரு சதவீத பெரும் முதலாளிகளின் லாப நலனுக்காக 99 சதவீத மக்களின் வயிற்றில் அடித்துள்ளன.

இது பொருளாதாரத்தை சுழல வைப்பதற்குப் பதிலாக நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. அமெரிக்கக் குடிமக்கள் 6ல் ஒருவர் மிகக் கடுமையான வறுமையின் பிடிக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். கொடிய வறுமையில் உழலும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வரலாறு காணாத வகையில், வேலையின்மை 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. 140 லட்சம் அமெரிக்க இளைஞர்கள் வேலையின்றி வீதியில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் வாழும் கருப்பின மக்களிடையே வேலையின்மை 16.7 சதவீதம் என்ற அளவிற்கு கடுமையாக அதிகரித்துள்ளது. வருமான விகிதம் வீழ்ந்ததால் வறுமையின் விகிதம் 15.1 சதவீதமாக கடுமையாக அதிகரித்துள்ளது.

மொத்தம் 460 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர். அமெரிக்காவின் வரலாற்றில் இப்படி நிகழ்ந்ததே இல்லை. பெருவாரியான அமெரிக்க மக்கள் இப்படித் துன்புற்று உழன்று கொண்டிருக்கும் போது ஒபாமா அரசு, இவர்களை கவனிக்காமல் லாபம் போய்விட்டது எனப்புலம்பிய பெரும் முதலாளிகளுக்கு மேலும் மேலும் மீட்பு நிதியை அள்ளிக்கொடுத்தது.

இதன் விளைவாக 2011ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக் காலத்தில் மட்டும் மெரில் லிஞ்ச் நிறுவனம் 3.7 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ளது. கோல்டு மேன் சேக்ஸ் நிறுவனம் தனது உயரதிகாரிகளுக்கு போனசாக 5.23 பில்லியன் டாலர் பணத்தை வாரி வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் 11.89 பில்லியன் டாலர் கூடுதல் வருவாயை ஈட்டியுள்ளது. இதே போல ஜெ.பி.மார்கன் சேஸ், சிட்டி குரூப் உள்ளிட்ட பல நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடைந்துள்ளன.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் வால்ஸ்ட்ரீட்டில் இருந்தே இயங்குகின்றன. இந் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு, பல வங்கிகளில் தங்களது கொஞ்ச நஞ்ச பணத்தை சேமித்து வைத்துள்ள ஏழை-எளிய, நடுத்தர அமெரிக்கர்களின் இருப்புப் பணத்தை தூக்கிக் கொடுத்தது என்பதை கவனிக்க வேண்டும்.

இப்படியாக அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும், ஒரு சதவீத முதலாளிகளை பாதுகாப்பது, அவர்களுக்காக 99 சதவீத மக்களை கசக்கிப்பிழிவது என்பதாகத் தொடர்வதால் அந்த நடவடிக்கையை பொறுக்கமுடியாமல் கொதித்தெழுந்துள்ளது அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கம்.

சில நூறு பேர் கொண்ட அமைப்புகள் இப்போராட்டத்தை நடத்துவதாக அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் கூறுகின்றன ஆனால் உண்மையில் அமெரிக்காவின் 100 மாநகரங்களில் பற்றிப் பரவியுள்ள இப்போராட்டத்தில் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் களமிறங்கியுள்ளனர்.

வால்ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம் என்ற முழக்கம் உலகம் முழுவதிலும் எதிரொலித்துள்ளது. கடந்த செப்டம்பர் 17ம் தேதி துவங்கி தற்போது வரை ஒரு மாத காலத்திற்குள் 82 நாடுகளில் 1,500 போராட்டங்கள் இதே முழக்கத்துடன் நடந்துள்ளது. அனைத்திலும் மிகப்பெரும் எண்ணிக்கையில் திரண்டு முதலாளித்துவத்திற்கு எதிராக முழக்கமிட்டவர்கள் இளைஞர்கள், இளைஞர்கள், இளைஞர்களே...

Pin It