அமெரிக்க வல்லாதிக்க வெறியாட்டத்தின் விளைவாக சிரியா, ஈராக், லிபியா, தெற்கு சூடான், சோமாலியா, ஆப்கானிஸ்தான், உக்ரைன், காங்கோ என அடுத்தடுத்த நாடுகள் கிழித்தெறியப்படுகின்றன. அந்த வரிசையில் இப்போது, ஏமன்.

முகமது நபிகள் நாயகம் இறப்பையட்டி பிறந்த ஷியா - சன்னிப் பிரிவும், அவற்றுக்கு இடையேயான குருதிக்களரியும் வரலாறு நெடுகிலும் தொடர்கின்றன. நபிகள் நாயகத்திற்குப் பிறகு, இசுலாமிய சமூகத்தின் தலைமை பீடம் நபிகளின் குருதி உறவினர்களுக்கே வரவேண்டும் என்று வலியுறுத்தியவர்கள் ஷியா பிரி வாகவும், நபிகள் நாயகத்தின் மெய்யியல் வாரிசுகளே அடுத்துத் தலைமைக்கு வரவேண்டும் என வலியுறுத்தி யவர்கள் சன்னிப் பிரிவாகவும் மாறி மோதிக் கொண் டார்கள்.

வரலாற்று ஓட்டத்தில் உலகெங்குமுள்ள முஸ்லிம் களுக்கிடையே, சன்னிப் பிரிவினர் பெரும்பான்மையி னராக இருந்தாலும், மத வழிபாட்டு முறையில் சில சமரசங்கள் ஏற்பட்டதால் உலகின் பெரும்பாலான இடங்களில் ஷியா - சன்னி மோதல் நடைபெறவில்லை.

ஆனால், முதலாளியம் முற்றி வளர்ந்த காலத்தில் குறிப்பாக அராபிய மண்ணில் பெட்ரோலியம் உள்ளதை அறிந்த பிறகு, ஏகாதிபத்தியங்கள் இந்த சன்னி - ஷியா பிரிவினையை ஊதிப் பெருக்க வைத்து, ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஆதரவளித்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டன.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கை மேலோங்கி இருந்த காலத்தில், ஷியா முஸ்லிம்களின் ஆட்சிப் பகுதி யாக ஈரானும், சன்னி சிறுபான்மையினரின் ஆட்சிப் பிடியில் இருக்குமாறு ஈராக்கும் இருபதாம் நூற்றாண் டின் தொடக்கத்தில், இரு நாடுகளாக எல்லைக் கோடுகள் கிழிக்கப்பட்டன.

இன்று அதே பாதையில், அமெரிக்க வல்லாதிக்கம் செல்கிறது.

ஷியா - சன்னிப் பிரிவினைகளைத் தாண்டி, அராபிய தேசிய எழுச்சி ஏற்படும் போதெல்லாம் அவ்வாறான ஒரு தேசியத் தலைமை நிலைபெறாமல் பார்த்துக் கொள்வதில், அமெரிக்க வல்லரசு குறியாக இருந்தது.

எகிப்தில் கமால் அப்துல் நாசர் தலைமை உறுதிப் பட்டு, மதப்பிரிவினைகளைத் தாண்டி அராபிய தேசியம் எழுச்சி கொண்ட போது, அது அமெரிக்க வல்லாதிக்கத்துக்குப் பெரும் அறைகூவ லாக அமைந்தது.

அதே காலகட்டத்தில், மிகப்பெரும் இசுலாமிய நாடான இந்தோனேசியாவில் சுகர்னோ தலைமையில் மதவெறியற்ற இந்தோனேசிய தேசியவாதம் உறுதிப் பட்டு மக்கள் சார்பான பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்ட போது, அதுவும் அமெரிக்க ஆதிக்கத் துக்கு அறை கூவலாக அமைந்தது.

இந்த ஆட்சிகள் அந்தந்த நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்றிருந்த போதிலும், உலகத்திற்கு சனநாயகத் தைப் போதிக்கும் அமெரிக்காவால் இந்த ஆட்சிகளை சகித்துக் கொள்ள முடியவில்லை. ஏனெனில், எப்போதுமே ஏகாதிபத்தியங் களால் அந்தந்த மண்ணின் தேசிய எழுச்சி, தங்கள் ஆதிக்கத்திற்கான அறைகூவலாகவே பார்க்கப்படு கிறது.

அவ்வகை ஆட்சிகளை, அவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளாக இருந்தாலும் கவிழ்ப் பதிலும் அந்த நாடுகளில் தங்கள் கைப்பாவை ஆட்சியை நிறுவு வதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் முனைப்பாகவே உள்ளது. அதற்காக எவ்வளவு உயிர்களையும் பலியிட அமெரிக்க வல்லாதிக்கம் தயங்குவ தில்லை.

நாசர் மெல்லச் சாகும் நஞ் சூட்டப்பட்டு இறந்து போனார். இந்தோனேசிய சுகர்னோ ஆட்சி அமெரிக்க வல்லரசின் தாக்குத லுக்கு உட்பட்டு, பல்லாயிரம் உயிர் கள் பலியிடப்பட்டு, தூக்கியெ றியப் பட்டது. அமெரிக்கக் கையா ளான சுகார்த்தோ இந்தோனேசிய ஆட் சித் தலைவரானார்.

ஈரானில் மக்கள் ஆதரவோடு தேர்தலில் வெற்றி பெற்ற மோ சாத்தின் ஆட்சி, அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் வெற்றி கரமான கவிழ்ப்பு அரசியலின் விளைவாக வீழ்த்தப்பட்டது. அங்கு, அமெரிக்க கைப்பாவையான மன் னர் ஷா ஆட்சியில் அமர்த்தப் பட்டார். மோசாத் ஆட்சி, ஈரானில் இயங்கி வந்த பிரிட்டனின் எண்ணெய் நிறுவனங்களையும், அமெரிக்காவின் பல்வேறு தொழில் நிறு வனங்களையும் அரசுடைமை யாக்க முடிவு செய்ததுதான், இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கான காரணம் ஆகும்.

அன்று சோவியத் ஒன்றியம் வலுவான எதிர்முனையாகத் திகழ்ந் ததால், நேரடிப் போரைவிட ஊடுருவல் வேலைகளையே தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முதன் மை வழியாக, அமெரிக்க வல்லரசு கையாண்டது.

ஈரானின் மரபுசார்ந்த பெரு மிதங்களை அழித்தால்தான், அங்கு நிலை கொள்ள முடியும் என்பதைப் புரிந்து கொண்ட அமெரிக்க வல் லரசு, அதற்கான பணிகளில் இறங்கியது. ‘நவீனப்படுத்துவது’ என்ற பெயரால், ஈரானின் பாலை வன நாகரிகத்தை அழிப்பதற்கு அமெரிக்கா முயன்றது.

இந்த நுணுக்கமான சதியைப் புரிந்து கொண்ட ஈரானிய தேசிய வாதிகள், அதனை எதிர்த்தனர். “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’’ என்ற தனது நூலில் ஜான் பெர்க்கின்ஸ், இச்சிக் கல் குறித்து கூறுவது கவனிக்கத் தக்கது.

யாமின் என்ற பெயரில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஈரா னிய தேசிய சிந்தனையாளர் ஒருவ ருடன் நடைபெற்ற உரையாடலை, ஜான் பெர்க்கின்ஸ் கீழ் வருமாறு கூறுகிறார்.

“பாலைவனம் பூத்துக் குலுங்கும் ((Flowering Desert Project) திட்டம் பற்றி எனக்குத் தெரியுமா என்று யாமின் கேட்டார். ‘எங்கள் பாலை வனங்கள் ஒரு காலத்தில் பசுமை நிறைந்த சமவெளிகளாகவும், அடர்ந்த காடுகளாகவும் இருந்தன என்று (மன்னர்) ஷா நம்புகிறார். அல்லது அவ்வாறு கூறிக் கொள் கிறார். ஷாவின் கருத்துப்படி மகா அலெக் சாண்டரின் படையெடுப் பின் போது இலட்சக்கணக்கான மனிதர் களும், செம்மறி ஆடுகளும் இப் பகுதிகளைக் கடந்து சென்ற போது புல்லும், தாவரங்களும் அழிக்கப் பட்டுப் பாலைவனமாகி விட்டது. ஷா என்ன சொல்கிறா ரென்றால் இலட்சோபலட்சம் மரங்களை நாங்கள் நட்டால் போதும் மந்திரம் போட்டதுபோல் மழை திரும்ப வந்துவிடும். பாலைவனம் பூத்துக் குலுங்கத் தொடங்கி விடும். இதற் காக நாங்கள் பல்லாயிரம் கோடி டாலர்கள் செலவிட வேண்டி யிருக்கும்’ அவர் சற்றே நிறுத்தி கழிவிரக்கத்தைக் காட்டும் வகையில் ஒரு புன்னகையை உதிர்த்தார். ‘இந்தத் திட்டத்தின் மூலம் உங்களு டையதைப் போன்ற கம்பெனிகள் கொள்ளை இலாபம் அடிக்கும்.’

“நீங்கள் இந்தக் கோட்பாட்டை நம்பவில்லை. இல்லையா?” நான் கேட்டேன்.

“இந்தப் பாலைவனம் ஓர் அடையாளச் சின்னம். பசுமையாக் கப்பட வேண்டிய ஒன்று என்பதை விடப் பெரிய விஷயங்கள் அதில் இருக்கின்றன”.

ஞ்.

“திருவாளர். பெர்க்கின்ஸ், உங்களிடம் உரிமையோடு ஒரு கேள்வி கேட்கலாமா? உண்மையிலேயே உங்கள் நாட்டுக்குச் சொந்தக்காரர் களான பழங்குடி இந்தியர்களின் பண்பாட்டை அழித்தது எது?”

பேராசை, உயர்தரமான ஆயு தங்கள் உள்ளிட்டப் பல கார ணங்கள் இருப்பதாக நான் நினைக் கிறேன் என்று பதிலளித்தேன்.

“உண்மைதான். எல்லாவற் றையும்விடச் சுற்றுச்சூழலை அழித் தது அந்தப் பண்பாடுகள் அழிந்து போக முக்கியமான காரண மல்லவா?” காடுகளும் காட்டெ ருமை போன்ற விலங்குகளும் அழிக்கப்பட்டவுடன், செவ்விந்திய மக்கள் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் பலவந்த மாகக் குடியேற்றப்பட்டவுடன் அவர்களின் பண்பாடு நீடித்து நிலைத்திருப்பதற்கான அடித் தளமே நொறுங்கிப் போய் விட்டது என்பதை யாமின் தொடர்ந்து விளக்கினார்.

“பாருங்கள் ஈரானிலும் அதே போலத்தான். இந்தப் பாலை வனம் தான் எங்கள் சுற்றுச்சூழல், இந்தத் திட்டம் எங்கள் ஜீவாதாரத்தையே அழித்துவிடக் கூடியது. இதை எப்படி நாங்கள் அனுமதிக்க முடியும்?”

(ஒரு பொருளாதார அடி யாளின் ஒப்புதல் வாக்குமூலம், ஜான் பெர்க்கின்ஸ், தமிழில்: இரா. முருகவேள், விடியல் பதிப்பகம் - 2006, பக்கம் 164 - 165)

ஒரு தேசிய இனத்தின் தேசியப் பண்பாட்டை, தேசிய வாழ் முறையை அழிப்பதன் மூலம் வெளி வல்லாதிக்கம் நிலைகொள்ள வைக்கப்படுகிறது என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம் இது.

பல்வேறு பண்பாடுகள், நாகரி கங்களுக்கிடையில் ஊடாட்டங்கள் இருப்பது இயல்பு. ஆனால், ஒரு தேசிய இனம், தனது உள் எழுச்சி யின் மூலம் தனது மரபில் தொடரும் சில பிற்போக்குத்தனங்களை விட்டொழிக்க வேண்டுமேயன்றி, நவீனம், வளர்ச்சி, முற்போக்கு என்ற பெயரால் வெளியார் பண்பாட் டுக்கு இரையானால், அதன் அடித் தளமே தகர்ந்து போகும், அத் தேசிய இனம் நிரந்தர அடிமை யாகிவிடும் என்பதற்கு இது ஒரு சான்று.

ஆயினும், 1970களின் பிற் பகுதி யில் ஈரானில் மன்னர் ஷாவுக்கு எதிராக அயத்துல்லா கொமேனி தலைமையில் எழுந்த இசுலாமியப் புரட்சி ஒரே நேரத்தில் ஈரானிய தேசிய எழுச்சியாகவும், ஷியா முஸ்லிம்களின் எழுச்சி யாகவும் அமைந்தது. அச்சூழலில் சன்னிப் பிரிவை சேர்ந்த ஈராக் ஆட்சியாளர் சதாம் உசேனை தனது துணை சக்தியாக அமெரிக்கா வைத்துக் கொண்டது.

ஷியா பிரிவுத் தலைவராக இருந் தாலும், அயத்துல்லா கொ மெனி சன்னிப் பிரிவினர்களுடன் சமரசம் காண கடும் முயற்சிகள் மேற் கொண்டார். ஆனால், அவை எதுவும் வெற்றி பெற்றுவிடாமல் பார்த்துக் கொள்வதில் அமெரிக்க வல்லரசு கவனமாக இருந்தது.

கால ஓட்டத்தில் கொமேனி ஆட்சி வலுவிழந்தபோது, சதாம் உசேன் ஈராக்கில் தன்னை வலுப் படுத்திக் கொண்டார். அவர், ஒரு வகையில் அராபிய தேசியச் சின்ன மாக தன்னை முன்னிறுத்திக் கொண்டார். அமெரிக்க வல்ல ரசுக்கு எதிராக அணிசேர்க்கையில் இறங்கினார். உலக வணிகத்தில், டாலர் கோலோச்சிக் கொண்டி ருந்த காலத்தில் ஐரோப்பிய நாணயமான யுரோவில் அவர் வணிகம் நடத்தத் தொடங்கினார். ஒரே நேரத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும், மோசமான சர்வாதிகாரியாகவும் சதாம் உசேன் விளங்கினார்.

ஈராக் நாட்டில் பெரும்பான்மை மக்கள் ஷியா பிரிவு முஸ்லிம்கள். ஆனால், ஆட்சியோ சன்னிப் பிரிவினர் கையில். சதாம் உசேனின் பாத்திஸ்ட் கட்சி, கொள்கை யளவில் மதசார்பற்ற கட்சிதான் என்றாலும், நடைமுறையில் அவ ரது ஆட்சி சன்னிகளின் ஆட்சி யாகவே இருந்தது. பெரும்பான்மை யான குடிமக்களான ஷியா முஸ் லிம்களுக்கும், சதாமின் சன்னி ஆட்சிக்கும் இடையிலான முரண் பாடும் பொருமலும் தொடர்ந்தன.

சமயம் பார்த்து, இந்த முரண் பாட்டை தனது கொடிய வல்லா திக்க நோக்கத்துக்கு அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது. சதாம் உசேன் ஆட்சி வீழ்த்தப்பட்ட தோடு மட்டுமின்றி, இன்று ஈராக் உறுதியான அரசு ஏதுமற்ற நாடாக நிலைகுலைந்துள்ளது.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் பே நிலையான ஆட்சி நடத்தி அரசின் பொறுப்பில் கல்வியும் மருத்துவமும் மக்கள் மேற்பார்வை யில் வழங்குவதற்கு முன்னோடி யாகத் திகழ்ந்த சுமேரிய நாகரி கத்தின் சொந்தக்காரர்கள், இன்று அரசற்ற நிலைகுலைந்த இனமாக மாற்றப்பட்டுள்ளனர்.

ஈராக்கில் பெயருக்கு நட்டு வைக்கப்பட்டுள்ள மோரி அல் மாலிக்கி ஆட்சி, முற்றிலும் ஷியாக் களின் ஆட்சியாக உருக் கொண் டது. இந்த வடிவில், வரலாறு அமெரிக் காவின் வல்லாதிக்கக் கனவுக்கு இடையூறு செய்தது.

ஈராக்கில், ஷியாக்களின் ஆட்சி அமைந்ததானது அம்மண்டலத்தில் ஈரானின் செல்வாக்கு உயர்வதில் போய் முடிந்தது. ஏனெனில், அடுத்த அண்டை நாடான சிரியா வில் நடைபெற்ற அல்சதாத் அரசும், ஷியாக்களின் அரசே ஆகும்.

இப்பின்னணியில், சிரியாவில் அல்சதாத் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக எழுந்த மக்கள் கிளர்ச்சி விரைவில் சன்னிகளின் போராட் டமாக மாறியது. அதைத்தான், அமெரிக்காவும் விரும்பியது.

இந்த ஷியா - சன்னிப் பிரிவி னையை தனது வல்லாதிக்கத்தை நிறுவிக் கொள்வதற்கு மிக நுணுக்க மாக அமெரிக்கா கையாண்டு வருகிறது.

எந்தக் கட்டத்திலும் அராபிய தேசியத்தின் வடிவிலோ, அந்தந்த மண்ணின் மரபோடு ஒட்டியெழும் மத உணர்வின் அடிப்படையிலோ தனது வல்லாதிக்கத்திற்கு எதிராக எந்த எழுச்சி ஏற்பட்டாலும், அராபிய பாலைவன மண்ணில் குருதி வெள்ளம் ஓடவிட்டாவது அதனை வீழ்த்துவதில் அமெரிக்க வல்லரசு கவனமாக உள்ளது.

ஒருபுறம் ஜியோனிய வல்லர சான இசுரேலை தனது நிரந்தரக் கூட்டாளியாக அரபு மண்ணில் நிறுத்தியிருந்தாலும், அராபிய- ஆப்பிரிக்கப் பகுதிகளில் தனது வல்லாதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள அது மட்டுமே போதாது என்பதில் அமெரிக்கா தெளிவாக இருக்கிறது.

இந்தத் திசையில், நீண்டகாலத் திட்டமிடலில் உலகின் முதன்மை யான எண்ணெய் வள நாடான சவுதி அரேபியாவைத் தனது கைய டக்கக் கூட்டாளியாக உருவாக்கி யது.

1970களின் தொடக்கம்வரை, அராபிய அணிவகுப்பில் அமெரிக்க வல்லரசுக்கு எதிராக செயல்பட்ட சவுதி அரேபியாவை நிரந்தரமாக அமெரிக்க அடியாள் அரசாக எவ்வாறு மாற்றினார்கள் என்பதை, மேற்சொன்ன நூலில் ஜான் பெர்க்கின்ஸ் விளக்குவது கவனிக் கத்தக்கது.

1973ஆம் ஆண்டு இறுதியில், எகிப்தையும் சிரியாவையும் தாக்கிய இசுரேல் அந்நாடுகளுக்கு மிகப் பெரும் சேதத்தை விளைவித்தது. இந்த நிலையில், எண்ணெய்யை ஆயுதமாகப் பயன்படுத்தி அமெரிக் காவுக்குப் பதிலடி கொடுக்க அரபு நாடுகள் அணியமாயின. அதற்கு, தலைமை வகித்த நாடாக சவுதி அரேபியா விளங்கியது.

அராபிய எண்ணெய் வள நாடுகள் பெட்ரோலிய விலையை 70 விழுக்காடு உயர்த்தியதோடு, தங்கள் எண்ணெய் உற்பத்தியை மாதத்திற்கு 5 விழுக்காடு என்ற அளவில் குறைப்பது என்றும் அறிவித்தன. முற்றிலும் அரபு நாடுகளைத் தனது பெட்ரோலியத் தேவைக்காக சார்ந்திருந்த அமெ ரிக்கா நிலைகுலைந்தது. அமெரிக்க நகரங்கள் அனைத்திலும் பெட் ரோல் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னால் வாகனங்கள் வரிசையாக நின்றன. தொழில் நிறுவனங்கள் முடங்கின.

இந்த சிக்கல் அமெரிக்க வல்லரசுக்கு சவுதி அரேபியாவின் முகாமைத் தன்மையை எடுத்துக்காட்டி யது. சவுதி அரேபியாவை தனது வளையத்திற்குள் வைத்துக் கொள்ள வில்லையென்றால் மீண்டும் மீண்டும் இது போன்ற, சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்க ஆட்சியாளர்கள் உணர்ந்தனர்.

சன்னிப் பிரிவின் கண்டிப்பான மதக் காவலர்களாக விளங்கிய வகாபி பிரிவினர்தான், சவுதி அரேபிய ஆட்சியாளர்கள். குரானின் நெறிப்படி கட்டுத் திட்டமாக, தங்கள் வாழ்க்கையையும் தங்கள் நாட்டு ஆட்சியையும் நடத்திய அவர்களை அவர்களது பண் பாட்டு மரபிலிருந்து வெளியில் இழுத்து வந்து எப்படி அமெரிக்கா வின் நிரந்தரக் கையாள்களாக மாற்றினார்கள் என்பதை ஜான் பெர்க்கின்ஸ் நிரல்பட விளக்கு கிறார். (விரிவிற்குக் காண்க: ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், பக்கம்: 128 -135).

இதன் தொடர் விளைவுதான், இன்று ஏமனில் நடக்கிறது.

தெற்காசியாவிலேயே மிகவும் வறுமைப்பட்ட நாடுகளின் வரி சையில் வருவது, ஏமன்.

ஏமனில் 1978 முதல் அதிபராக இருந்த அலி அப்துல்லா சாலே, அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி ஆவார். ஏமனில் ஏறத்தாழ 60 விழுக்காட்டினர் சன்னி முஸ் லிம்கள். சன்னி ஆட்சியான அப் துல்லா சாலே ஆட்சி, சவுதி அரேபியாவின் கண்காணிப்பிலும் ஆதரவிலும் இயங்கிய ஆட்சியா கும். அமெரிக்க வல்லரசு சவுதி அரேபியாவின் வழியாகவே ஏம னைக் கையாண்டது.

சாலேயின் சர்வாதிகார ஆட்சி யை எதிர்த்த மக்களின் முணு முணுப்புகளுக்கு வடிவம் கொடுத்த ஹவ்த்தி இயக்கம், ஏமன் நாட்டின் வடபகுதியில் 1990களிலேயே நிலைபெற்றது.

பெரிதும் ஷியா முஸ்லிம்களைக் கொண்ட அமைப்பாக இருந்தா லும், ஹவ்த்தி அமைப்பு தொடக் கத்தில் மதச்சார்பற்ற இயக்கமா கவே தொடங்கியது. கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளில் ஈடுபட்ட இளைஞர்களின் இயக்க மாக தொடங்கிய ஹவ்த்தி அமைப்பு, சாலேயின் அடக்கு முறைகளை தொடக்கத்திலிருந்தே எதிர் கொள்ள வேண்டியிருந்ததால் நெருக்கடியின் காரணமாக, அர சியல் இயக்கமாக வடிவம் கொண் டது.

எவ்வளவு அடக்குமுறைகளை எதிர் கொண்ட போதிலும், தன் னலமற்ற இளைஞர்களின் அமைப்பாக இருந்ததால் ஹவ்த்தி இயக்கம், விரைவில் மக்கள் ஆதரவு பெற்ற பேரியக்கமாக வளர்ந்தது.

அப்துல்லா சாலேயின் சர்வாதி கார ஆட்சிக்கு எதிராக, ஷியாக் களை மட்டுமின்றி பிற சமூகத் தினரையும் இணைத்துக் கொண்டு 2004இல் ஹவ்த்தி நடத்தியப் போராட்டம் குருதி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. பல நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

ஆயினும், 2011 இல் ஹவ்த்தி மாபெரும் மக்கள் இயக்கமாக வலுப்பெற்றது. இவ்வியக்கத்தின் தற்காப்புக்காகத் தொடங்கப்பட்ட ஆயுதக்குழுக்கள், பிறகு ஆயுதப் படையாகவே மாறின.

ஹவ்த்தி இயக்கத்தின் தலைமை யில் நடைபெற்ற இடைவிடாத மக்கள் போராட்டத்தின் விளை வாக, சர்வாதிகாரி அப்துல்லா சாலே பதவி விலக முன்வந்தார். 2012 பிப்ரவரியில், அமெரிக்கப் பின்னணியோடு சவுதி அரேபியா வின் முன் முயற்சியில் நடைபெற்ற சமரச ஒப்பந்தத்தின் வழியாக ஏமனின் துணைக் குடியரசுத் தலைவராக இருந்த மன்சூர் ஹத்தி அந்நாட்டின் குடியரசுத் தலை வராக நியமிக்கப்பட்டார். ஷியாக் கள் உள்ளிட்ட அனைத்து சமூகத் தினரையும் இணைத்துக் கொண்ட தேசிய அரசாங்கம் நிறுவ அவ் ஒப்பந்தத்தில் மன்சூர் ஹத்தி ஒத்துக் கொண்டார்.

ஷியாக்களைப் பெரும்பான் மையாகக் கொண்ட ஹவ்த்தி அமைப்பின் செல்வாக்கு, இவ்வா றான தேசிய அரசாங்கத்தில் மேலோங்கும் என சவுதி அரசு அஞ்சியது. ஹவ்த்தி அமைப்புக்கு தொடக்கத்திலிருந்தே ஈரானின் ஆதரவு இருந்தது, சவுதியின் அச்சத்தை அதிகப்படுத்தியது.

அரபு மண்டலத்தில் எழுச்சி பெறும் ஷியாக்களின் அரசுகள், ஈரானின் தலைமையில் தனது வல்லாட்சிக்கு எதிராகத் திரும்பி விடுமோ என்ற அச்சம் அமெரிக் காவுக்கும் உள்ளது.

இந்த நிலையில், ஏமனின் மன்சூர் ஹத்தி ஆட்சி ஒப்பந்தத்தில் தான் ஏற்றுக் கொண்ட அனைத் திலிருந்தும் பின்வாங்கி யது. சாலேயைப் போலவே ஹத்தியும் கடும் அடக்குமுறைகளை ஏவினார்.

இதற்கு எதிராக ஹவ்த்தி அமைப்பின் தலைமையில் நடை பெற்ற போராட்டம் மக்கள் ஆதரவு பெற்ற ஆயுதப் போராட் டமாக வளர்ந்தது. 2015 சனவரியில், ஹவ்த்தி அமைப்பினர் ஏமன் நாடாளுமன்றக் கட்டடத்தைக் கைப்பற்றினார்கள். தொலைக் காட்சி நிலையங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் கள். ஏமனின் அதிபர் மன்சூர் ஹத்தி, சவுதி அரேபியாவுக்குத் தப்பி ஓடினார்.

ஏமனின் ஆட்சியைக் கைப் பற்றியதாக அறிவித்த ஹவ்த்தி அமைப்பினர், பல்வேறு பிரிவி னரையும் உள்ளடக்கிய தேசிய அரசை நிறுவி, ஐந்து உறுப்பினர் ஆட்சிக்குழுவை அறிவித்தனர். ஈரானின் பின்னணி ஆதரவு இன்னும் வலுப்பெற்றது.

இது அமெரிக்க வல்லரசுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், ஏமன் வறுமைப்பட்ட நாடாக இருந்த போதிலும், அந் நாட்டின் ஏடன் துறைமுகம் மிக நடுவமானது. ஏடனை ஒட்டி அமைந்துள்ள பாப் எல் மாந்தப் நீரிணை மத்தியத் தரைக்கடலையும் இந்தியப்பெருங்கடலையும் இணைக்கிற, குறுகலான கடல் வழி இணைப்பாகும்.

அமெரிக்காவின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள், ஏறத்தாழ பாதி அளவுக்குமேல் இந்தப் பாதையில்தான் இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடு களுக் கும் - ஆப்பிரிக்க நாடுகளுக்கும் செல்ல வேண்டும். இந்த நிலையில், ஹவ்த்தி ஆட்சியின் மூலமாக ஈரானின் செல்வாக்கு இம்மண்டலத்தில் ஓங்குமானால், அராபிய மண்ணில் தனது ஆதிக்கத்திற்கு ஆபத்து என அமெரிக்கா கணக்கிட்டது.

அப்துல்லா ஹத்தியின் ஆட்சி யை - அதன் மூலம் ஏமன் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப் பதாகச் சொல்லிக் கொண்டு, அமெரிக்க ஆயுதங்களைப் பயன் படுத்தி சவுதி அரேபியப் படைகள், எகிப்து, சூடான் (வடக்கு), ஐக்கிய அமீரகம், மொராக்கோ ஆகிய நாடுகளின் ஒத்துழைப்போடு, ஏம னின் மீது குண்டுமழைப் பொழிந்தன. ஒரே மாதத்தில் அந்நாடு தரைமட்டமானது. உணவுக்கும், குடிநீருக்கும், மருந்துக்கும் வழி யின்றி ஏமன் மக்கள் அவர்களது சொந்த நாட்டிலேயே அகதி களானார்கள்.

எல்லாம் முடிந்தபிறகு, கடந்த 22.04.2015 அன்று தனது படை நடவடிக்கையை நிறுத்திக் கொள் வதாக சவுதி அரேபியா அறிவித் தது. ஆயினும், “ஏமனின் கடல் பரப்பு முழுவதும் எங்கள் கண்காணிப்பிலேயே இருக்கும்” என அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமா அறிவித்தார். அணு ஆயு தங்கள் தாங்கிய அமெரிக்கப் போர்க் கப்பல்கள் ஏடன் வளை குடாவில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. ஈரானிலிருந்து அந்த வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களும் கண்காணிக்கப் படுவதாக அமெரிக்கா வெளிப் படையா கவே தெரிவித்துள்ளது.

சிரியா, ஈராக், லிபியா, சோமா லியா, ஆப்கானிஸ்தான், உக்ரைன், தெற்கு சூடான், காங்கோ ஆகிய நாடுகளின் வரிசையில் இப்போது ஏமனும் சேர்ந்துள்ளது. நடை முறையில், அரசு என்ற ஒன்றே இல்லாத அனைத்துக்கும் ஐ.நா.வின் உதவிப் பொருள்களை சார்ந்திருக்க வேண்டியவர்களாக இந்நாட்டு மக்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

“ஒரு நாடா இரு நாடா ஒரே நேரத்தில் பற்றியெரியும் பத்து மண்டலங்களை ஐ.நா.வால் எப்படி பாதுகாக்க முடியும்? இடர் நீக்கப் பணிகளுக்கு நிதி எங்கே இருக்கிறது?’’ என்று ஐ.நா. பொதுச் செய லாளர் பான் கீ மூன் புலம்புகிறார். நாடுகளுக்கிடையே நடை பெற் றுள்ள இவ்வகை மோதல்கள் கார ணமாக, இடம் பெயர்ந்துள்ள அகதிகள் எண்ணிக்கை மட்டும் ஐந்தரை கோடி என ஐ.நா. அறிவிக் கிறது. தமிழீழம், சூடான் போன்ற நாடுகளில் குவிந்துள்ள உள்நாட்டு ஏதிலிகள் இந்தக் கணக்கில் வரவில்லை.

ஒன்றன்பின் ஒன்றாக, வரலாற் றுப் புகழ் பெற்ற நாகரிக நாடுகள் ஒட்டுமொத்தமாக அகதிகள் முகாம்களாக மாற்றப்படுகின்றன. அந்நாடுகளில் புதைந்துள்ள எண் ணெய் வளங்களுக்காகவும், கனிம -- வன வளங்களுக்காகவும் வல்லரசு நலன்களுக்காகவும், வெள்ளை நிறவெறியோடு அமெரிக்க வல்லரசு இந்நாடுகளை அரசற்ற நாடுகளாக மாற்றி, கிழித்தெறிந்து கொண்டிருக் கிறது.

ஐக்கிய நாடுகள் மன்றம், இந்த அநீதிகளுக்கு சாட்சியாக நிற்கிறதே தவிர, தட்டிக் கேட்கத் திராணி யற்றதாக இருக்கிறது. ஒடுக்குண்ட தேசிய இனங்கள் தங்களுக்குள் இணைப்பைஏற்படுத்திக் கொண்டு, நான்காவது உலகமாக மாறுவது தான் இதற்கு இறுதித் தீர்வு! ஒத்த மரபுள்ள தேசிய இனங்கள், தங்க ளுக்குள் ஒன்றுபட்டு வல்லரசு களுக்கு எதிராக முகாம்கள் அமைத் துக் கொண்டு, பன்மை உலகைக் கட்டுவது இதற்கு முதற்படி.

அதுவரை, எரியும் ஏமன்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட முடியாது! 

Pin It