தங்கம் விலை எகிறியதென தலைப்புச் செய்திகள் பதைபதைக்கின்றன. தங்கக் காசுகளை சேமித்து வையுங்களென ஆலோசனைகளை அள்ளித்தெளிப்பதோடு மட்டுமல்லாமல், ஆழமாகவும் அதன் அவசியத்தை அடுக்கடுக்காய் சொல்லிச் செல்கின்றன தொடர் செய்திகள். விலையுயர்வின் பின்னணியை விளக்கி, தங்க விற்பனையாளர் சங்கத்தின் தலையாய வியாபாரி விலாவாரியாக பேசுவதும் செய்தியுனுள் வருகிறது.

அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் வெடித்துப் பெருகுவதால் பலர் வீதிக்கு வந்துவிட்டனராம். எனவே, உலகமெங்கும் உயரும் விலையுயர்வின் ஒரு பகுதியாய் தங்கத்தின் விலையும் தாறுமாறாய் உயருகிறதாம்.

தலைப்புச் செய்தியாய் வரவேண்டிய உண்மை தங்க வியாபாரியின் வார்த்தைகளில் மின்னிய போதிலும் அமெரிக்காவைப் பற்றிய செய்தியாக எதையும் சொல்ல மனம் இல்லாமல் முடிந்துவிட்டது செய்திகள். பிளாஷ் நியூஸ், சற்று முன், நியூஸ் அப்டேட், வரிச் செய்திகள், வர்த்தக செய்திகள், பங்கு வர்த்தகம், உங்கள் சந்தேகங்களுக்கு என எதைப்பார்த்தாலும் விலை உயர்வும், பொருளாதாரச் சரிவுமே நாள் முழுக்க வருகிறது. ஆனாலும், அமெரிக்காவைப் பற்றியோ அந்த சரிவைப் பற்றியோ, அதிலிருந்து இந்தியாவைப் பாதுகாப்பது குறித்தோ எந்த செய்தியும் எப்போதும் வருவதில்லை.

வால் ஸ்ட்ரீட்டில் துவங்கி உலகமெங்கும் அடித்த பொருளாதார நெருக்கடியெனும் சூறாவளி சென்ற இடமெங்கும் போராட்டமாக மாறி சுழன்றியடித்து இன்று மீண்டும் துவங்கிய இடத்திலேயே பெரும் போராட்டமாய் வீசிக்கொண்டிருக்கிறது. நதிபோல் நகர்ந்துகொண்டேயிருக்கும் வரலாற்றின் பாதையில்தான் வால்ஸ்ட்ரீட் போராட்டமும் பயணித்துக்கொண்டிருக்கிறது. வேலையிழந்தவர்கள் புதிய வேலைக்காக தெருவெங்கும் அலையாமல், புதிய வாழ்வைத் தேடி புதியதாய் சமூகம் படைக்க புறப்பட்ட செய்தியும் இந்திய ஊடகங்களில் வருவதேயில்லை.

இந்தியாவின் பொருளாதாரக்கொள்கையும், ஊடகக்கொள்கையும் அமெரிக்கா பற்றி ஒரே கொள்கையோடுதான் இருக்கின்றன போலும். ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவோம் என அதன் தலைமை பீடத்திலேயே அதிர்வொலிகள் கிளம்பிக்கொண்டிருக்கையில் இந்தியா அமெரிக்காவின் பாதையில் வேகமாக பயணிக்க இந்தியர் தலை மீது அடித்து சத்தியமிட்டுக்கொள்கிறது. கல்வி, சுகாதாரம், விவசாயம் என அனைத்துக்கும் மானியத்தை குறைக்கவேண்டும் எனவும், பெரு நிறுவனங்களுக்கான நிதியை மேலும் அள்ளித் தரவேண்டும் எனவும், சில நாட்களுக்கு முன்னர் அடுத்த பல ஆண்டுகளுக்கான திட்டத்தில் பேசிய மாண்டேக் சிங் அலுவாலியாவின் உரையை, அமெரிக்காவின் கொள்கைகளை பின்பற்றும் தாராளமயக்கொள்கையென பொருளாதாரம் தெரியாதவர்கள் கூட எளிதில் புரிந்துகொள்ள முடியும்.ஆனால், பெரு முதலாளிகளுக்கு வரி விதியுங்கள், மக்களுக்கு மானியம் தாருங்கள் என உலகமெங்கும் நடக்கும் தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை இந்திய மக்கள் பார்த்தால், இங்கு பெருகும் வறுமைக்கும் இதுதான் காரணமென புரிந்துகொள்வார்கள் என்பதால் தானோ என்னவோ, அனைத்தையும் மறைக்கின்றன நமது ஊடகங்கள்.

உலகச் செய்திகள் என்று ஒரு தனிநேரத்தை ஏறத்தாழ அனைத்து ஊடகங்களும் ஒதுக்கியுள்ளன. மாற்றம் என ஒபாமா பேசியபோது அதை வழிமொழிந்த இந்த ஊடகங்கள் இன்று அவர் ஆட்சியைப் பற்றி ஏன் ஏதும் பேசவில்லை? பதவியேற்க அவர் தன் ஊரிலிருந்து கிளம்பியது முதல் பல மாதங்களாக செய்தி வெளியிட்டு அமெரிக்காவைப் பற்றி புளகாங்கிதப்பட்ட நமது ஊடகங்களுக்கு இன்று என்னவாகிவிட்டன? லிபிய அதிபரைப் பற்றி மூன்று வேளையும் செய்தி வெளியிடும் இவ்வூடகங்கள் அமெரிக்காவின் தெருக்களில் பிச்சை எடுப்போர் அதிகமாகி வருவதை ஏன் ஒருமுறை கூட காட்டவில்லை? வேறு வழியில்லாமல் செய்தி வெளியிடும்போது கூட, வால்ஸ்ட்ரீட்டிற்கு வரி விதியுங்கள் என்ற போராட்டத்தை வேலைவாய்ப்பிழந்தவர்களின் போராட்டமாக மட்டுமே சித்தரிக்க முயல்கின்றன. போராட்டக்காரர்களின் பேட்டி, அவர்களின் கோரிக்கை, அதன் பின்னணி, இரவும், பகலும் பாராமல் தெருவில் படுத்துப் போராடும் போராட்டம் என அலசல் செய்தி வெளியிட்டு ஒரு கலக்கு கலக்கியிருக்கலாமே, ஏன் செய்யவில்லை?

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஆளுக்கொரு ஊடகம் நடத்தி, எதிரெதிராய் திட்டிக்கொண்டாலும், ஊடக அரசியலில் ஒரே கொள்கையுடன் தான் இருக்கின்றன. ஊடக அரசியலா அது என்ன என்றும் சிலர் கேட்கலாம். பதில் ஒரு வரிதான். உலகில் அனைத்து வித விலையுயர்வுக்கும் அடிப்படையாய் அமைந்த, அமெரிக்காவே அனைத்து மக்களின் துயரத்திற்கும் காரணமென பேசுவது ஒரு அரசியல். அமெரிக்காவால் உலகமே பாதிக்கப்பட்ட போதும் அதைப் பேசாமல் அமைதி காப்பது மற்றொரு அரசியல். மக்கள் இப்போது பேசுவது தங்களுக்கான அரசியல். அதேபோன்று ஊடகங்கள் பேசுவதும் அவர்களுக்கான அரசியலைத் தான்...

-ஆசிரியர் குழு

Pin It