பி.டி.ரக விதை என்பது தனியுடைமை அடிமைச் சொத்து. மான்சாண்டோ தனது விதைகளுக்குக் காப்புரிமை வாங்கியுள்ளது. ஒவ்வொரு முறை விதை வாங்கும்போதும், நாம் அமெரிக்க கம்பெனிக்காரனுக்குக் கப்பம் கட்ட வேண்டும். இந்த விதையை ஒருமுறை பயன்படுத்தினால் மறுமுறை பயன்படுத்த முடியாது. நம்மூரில் விஞ்ஞானிகளாக உள்ள தரகர்கள், மான்சாண்டோ கம்பெனிக்கு விசுவாசிகளாக இருக்கின்றனர். இவர்களிடம் ஆராய்ச்சிகளுக்காக கோடிக்கணக்கில் பணம் வாங்கும் விஞ்ஞானிகள் பேசுவதை, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அப்படியே ஒப்புவிப்பது எப்படிச் சரியாகும்?

விதைக்குக் காப்புரிமை வாங்கியவர்கள் எப்படி வேண்டுமானாலும் விற்பார்கள் என அமைச்சர் சொல்கிறார். அவருக்கு ஒன்றைச் சொல்கிறோம். நமது நாட்டில் விவசாயம் என்பது மாநிலப் பட்டியலில் வருகிறது. மான்சாண்டோ வேண்டுமா? வேண்டாமா? என்பதை மாநில அரசுகள்தான் தீர்மானிக்க வேண்டும். உத்தராஞ்சல், மத்தியப்பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்கள், பி.டி. ரகமே வரக்கூடாது எனத் தடை போட்டுவிட்டனர். ஐரோப்பிய நாடுகளிலும் இதற்குத் தடை. ஆனால், இந்த விதையை தமிழ்நாட்டில் சந்தைப்படுத்த முயற்சிக்கின்றனர். இதற்கு வீரபாண்டி போன்றவர்கள் தூபம் போடுகின்றனர். கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது.

இப்போது உருவாக்கப்பட்டுள்ள கத்தரிக்காயை, எந்தப் பண்ணையில் விளைவித்தார்கள்? யார் சாப்பிட்டார்கள் ? அவர்களது உடல் குறித்த சான்று என்ன? அதன் ருசி எப்படி இருந்தது? எந்த மரபணு ஜீனிலிருந்து இதைப் பிரித்தெடுத்தார்கள்? என்பது போன்ற விவரங்களை முதலில் தெரிவிக்கட்டுமே? வேலூர் முள் கத்தரிக்காயை விட இவர்கள் கத்தரி ருசியானதா? இல்லை திருச்செங்கோடு பூனைத் தலை கத்தரி, திருச்சி ஐயம்பாளையம் கத்தரி, தஞ்சை தூக்கனாம்பாளையம் கத்தரி, நாகப்பட்டினம் பொய்யூர் கத்தரி, நெல்லை வெள்ளை கத்தரி என நூறு வகையான கத்தரிக்காய்கள் தமிழ்நாட்டில் மட்டுமே விளைகின்றன. இப்படி பாரம்பரியமாக நம் நாட்டில் விளையும் கத்தரிக்காய்களின் மரபணுவைத் தொலைத்துவிடத்தான் இவர்கள் பி.டி. கத்தரியை அனுமதிக்கிறார்கள். இதைவிட பெரிய அவமானம் வேறு எதுவும் இல்லை. மான்சாண்டோ மட்டுமல்ல, அமெரிக்காவின் பல கம்பெனிகள் இப்படித் திருட்டுத்தனமாக பின்கதவு வழியாக வருவதற்கு இவர்கள் துணை போகின்றனர். அதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். செடிகளுக்கு பூச்சி மருந்து தெளித்தால் அது அந்தச் செடியை பாதிக்கும். அதுவே பி.டி. ரக விதை என்றால் தொடர்ந்து அடுத்தடுத்த செடிகளுக்கும் பரவும். இதை உணர்ந்ததால்தான் உலக நாடுகள் எதிர்க்கின்றன.

நன்றி : குமுதம் ரிப்போர்ட்ட ர்

- நம்மாழ்வார்

Pin It