நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், ஒரு கதையை கூறினார். அது சமூக நீதித் தொடர்பானது. “ஒரு புல்லாங்குழல் தரையில் கிடக்கிறது, அதற்கு மூன்று சிறுவர்கள் உரிமை கோருகிறார்கள். ஒரு குழந்தை, இந்தப் புல்லாங்குழலை எனக்கு மட்டுமே வாசிக்கத் தெரியும், எனக்குத் தருவது தான் சரி என்று கேட்கிறது. மற்றொரு குழந்தை, என்னிடம் விளையாடுவதற்கு எந்தப் பொருளும் கிடையாது. வாங்கித் தரும் நிலையில் எனது பெற்றோர்களும் இல்லை. எனக்குத் தாருங்கள் என்று கேட்கிறது. மூன்றாவது குழந்தை, இந்தப் புல்லாங்குழலை நானே எனது உழைப்பில் உருவாக்கி தவற விட்டுவிட்டேன், எனக்குத் தான் தர வேண்டும் என்று கேட்கிறது. இந்த மூன்று குழந்தைகளும் தங்களுக்கான நீதியை பேசுகின்றன. மூன்றிலும் நியாயம் இருக்கிறது. ஆனால், இதை யாருக்கு வழங்குவது என்பதை எப்படி முடிவெடுப்பது?” என்ற கேள்வியோடு அமர்த்தியா சென் முடித்துக் கொள்கிறார். திராவிடர் இயக்கம் இதை எப்படித் தீர்மானிக்கும் ?
மூன்று குழந்தைகளின் சமூகப் பின்னணியை ஆராயும், காலம் காலமாக புல்லாங்குழலை வாசிக்கத் தெரிந்த குழந்தையைவிட அதை வாசிக்கத் தடை போட்டிருந்த சமூகப் பின்னணியில் எந்த குழந்தை வந்தது ? அந்தக் குழந்தைக்கே முன்னுரிமை என்பதே திராவிடர் இயக்கத்தின் பார்வையாக இருக்கும்.
நீதி மறுக்கப்பட்ட சமூகங்கள், உலகம் முழுவதும் இருக்கின்றன. ஆனால், பிறப்பின் அடிப்படையில் ஜாதிய ஏற்றத்தாழ்வு கட்டமைப்போடு, நீதியை வழங்க மறுத்த சமூகம் இது. இதை எதிர்த்துப் பிறந்தது தான் “திராவிடர் இயக்கம்”. நீதிக் கட்சி தனது ஆட்சிக் காலத்தில், வகுப்புவாரி பிரதி நிதித்துவம், பெண்களுக்கு ஓட்டுரிமை, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இலவசக் கல்வி என்று தனது பயணத்தைத் தொடங்கியது. ஆனால், இந்தத் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளும் வலிமை, பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு இருந்தால் மட்டுமே அதன் பயன்களை அவர்களால் எட்டிப் பிடிக்க முடியும், என்று சமூகநீதிப் பார்வை அடுத்தக் கட்டம் நோக்கி நகர்ந்தது. பகல் உணவு, சத்துணவு, இலவசக் கல்வி, இலவசச் சீருடை, இலவச பாடநூல், படிப்பு உதவித் தொகை என்று விளிம்பு நிலை சமூகத்தை வலிமைப் படுத்தும் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. வகுப்புவாரி பிரதிநிதித்துவம், நீதிமன்றத்தால் முடக்கப்பட்டபோது, வீதிமன்றத் தில் போராடி, முதன் முதலாகச் சட்டத்தை திருத்த வைத்தது பெரியாரும், அண்ணாவும். இன்று அனைத்து மாநிலங்களும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டு உரிமைகளைப் பெரும் வாய்ப்புக் கதவுகளை திறந்து விட்டது திராவிடர் இயக்கம்.
நாடாளுமன்றத்தில் சட்டம் வருவதற்கு முன்பே, தமிழ்நாட்டில் பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் கலைஞர். இட ஒதுக்கீடுகளை மேலும் ஜனநாயகப்படுத்த, உள் ஒதுக்கீடுகளைக் கொண்டு வந்ததும் திராவிடர் இயக்கம் தான். தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு, சமூகநீதியில் முப்பெரும் சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். சட்டப் போராட்டம் நடத்தி, மருத்துவக் கல்லூரிக்கான அகில இந்திய கோட்டாவில், 27% பிற்படுத்தப்பட் டோர் இடஒதுக்கீட்டை, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்கும் பெற்றுத் தந்துள்ளார். இது முதல் சாதனை.
மருத்துவ உயர் பட்டப் படிப்பில் (Super speciality) 50% இட ஒதுக்கீட்டை மீட்டெடுத்தது இரண்டா வது சாதனை. நீட் தேர்வில் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு சட்டம், அ.இ.அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வழக்கம் போல் ஆளுநர் கிடப்பில் போட்டார். எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகையை நோக்கிய மிகப்பெரிய போராட்டம் நடந்த பின்னர் தான் ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தது. அதிமுக ஆட்சியில் மருத்துவப் படிப்பில் மட்டுமே கொண்டுவரப்பட்ட இந்த இட ஒதுக்கீட்டை, திமுக ஆட்சிக்கு வந்தப் பிறகு பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் ஆகிய தொழிற்ப் படிப்புகளுக்கும் விரிவாக்கியது. இது குறித்து ஆராய, முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும், மருத்துவக் கல்லூரியில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட தரவுகள் திரட்டப் பட்டன. நீதிபதி முருகேசன் குழுவின் பரிந்துரையை ஏற்று, தமிழ்நாடு அரசு, சட்டமன்றத்தில் தனிச் சட்டம் கொண்டு வந்தது, நீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்கு வந்த போது, சட்ட நிபுணர்களைக் கொண்டு வாதாடி வெற்றி பெற்று, மூன்றாவது சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
7.5% இட ஒதுக்கீடு மட்டுமல்லாமல் இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் பயனடையும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வு மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களை அரசே ஏற்கும் என்று ஆணைப் பிறப்பித்து அதற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடும் செய்தது. இப்போது, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதாவை ஆளுநர் முடக்கிவைத்துள்ளதை எதிர்த்து தொடர்ச்சியான அழுத்தங்களைத் தந்து வருகிறது. சமூக நீதிக்கான கூட்டமைப்பு ஒன்றை நாடு தழுவிய அளவில் உருவாக்கிட 37 தலைவர்களுக்குக் கடிதங்களை எழுதியுள்ளார் தமிழ்நாடு முதல்வர்.
‘திராவிட மாடல்’ கோட்பாட்டை பிற மாநிலங் களுக்கும் கொண்டு செல்லும் முயற்சி என்று அவர் இதைக் கூறியுள்ளார். பெரியார் பிறந்தநாள், அம்பேத்கர் பிறந்தநாள் முறையே சமூக நீதி நாளாக, சமத்துவ நாளாக அரசு அறிவித்து சமூக நீதி, ஜாதி எதிர்ப்பு உறுதிமொழிகளை அரசு அலுவலகங்களில் எடுக்கச் செய்திருக்கிறார் முதலமைச்சர்.
இட ஒதுக்கீடுகள் முறையாகப் பின்பற்றப்படு கிறதா என்பதைக் கண்காணிக்க குழு அமைக்கப் பட்டுள்ளது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலிமைப் படுத்திட பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப் படும் இழப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்பட் டுள்ளது. சமூக நீதி என்ற கோட்பாடு, இட ஒதுக்கீடு என்றத் திட்டத்தோடு நிறைவடைந்துவிடாமல், அதன் உள்ளடக்கம், மேலும் விரிவாக்கப்பட்டு வருகிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். பெண்கள் சமத்துவம், தமிழ் வளர்ச்சி, சமத்துவப் பண்பாடு, தொழில் கட்டமைப்பு வளர்ச்சி, மாநில சுயாட்சி என்று அதன் எல்லையை தமிழ்நாடு முதல்வர் விரிவாக்கி வருகிறார்.
சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டது தான் திராவிட மாடல். இது பண்டைக்கால மன்னராட்சியின் பழைமைவாதக் கோட்பாடு அல்ல. சமகால மானுட விழுமியங்களை உள்ளடக்கிய நவீனத்துவ சிந்தனை.
மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய கோட்டாவில் 27% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அதை நியாயப்படுத்தி உச்சிநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். சமூக நீதிக்கு நவீன சொல்லாடல்களை அத்தீர்ப்பு வழங்கி இருக்கிறது. திராவிட மாடலுக்கு வலிமை சேர்க்கின்ற தீர்ப்பு என்றே இதை சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு சிலவற்றைச் சுட்டிக் காட்டுவோம்.
1) சமூகப் பன்மைத்துவம் (Social Diversity)
சமூகப் பன்மைத்துவம் சமூகப் பாகுபாடுகளுக்கு (Social discrimination) முற்றிலும் எதிரானது. பாகுபாடுகளைத் தகர்த்து, சம தளத்தில் மானுடத்தை நிறுத்தச் செய்வது. ஒற்றைப் பண்பாடு, ஒற்றை மதம், ஒற்றை உணவு முறை என்ற பாசிச சிந்தனைகளை மறுப்பது.
2) கட்டமைப்புத் தடைகள் (Structural Barriers )
ஜாதியக் கட்டமைப்பு, சமூகப் பின்னணி, வறுமைச் சூழல் ஆகிய பின்னணி கொண்ட சமூகத்தை, கல்வி, சுயமரியாதை உரிமைகளைத் தடுத்து காலம் காலமாக தடுக்கப்பட்டு வந்த அநீதிகளைத் தகர்ப்பதே இந்தக் கட்டமைப்புத் தடை. சமூக கட்டமைப்புத் தடைகளை நியாயப் படுத்தினார்கள். அவர்கள் தங்களுக்கான சொல்லாடல்களாக, தகுதி, திறமை, மதிப்பெண், நிர்வாகத்திறன் என்று பேசினார்கள். இந்த எதிர்ச் சொல்லாடல்கள் அனைத்தும் நேர்மையற்றவை என்று உச்சநீதிமன்றம் தெளிவு படுத்தியிருக்கிறது.
3) கலாச்சார மூலதனம் (Cultural Capital)
இது இந்தியாவின் ஜாதிய சமூகத்திற்கு மட்டுமே உள்ள தனித்துவமான சுரண்டல். பொருள் மூலதனம் இதற்குத் தேவையில்லை. உயர் குடிப் பிறப்பு மட்டுமே போதும். கலாச்சார மூலதனவாதிகள் சமூகத்தோடு உரிமைகளைப் பகிர்ந்து கொள்ள மறுத்தனர். பிறவியில் உயர்ந்தவர்களாக உரிமை கொண்டா டினார்கள். சமூக ஒடுக்குமுறைக்கு ஆன்மிகத்தை, பக்தியை, மதத்தை கருவிகளாக்கினர். உயர் ஜாதி சமூகப் பின்னணியில் இருந்து வந்த பிரிவுக்கு சமூகவியலாளர்கள் பயன்படுத்திய சொல் ‘சமூக மூலதனம்’ (Social Capital) என்பதாகும். உச்சநீதிமன்றம், சமூக மூலதனம் என்ற சொல்லுக்கு மாற்றாக ‘கலாச்சார மூலதனம்’ என்று துல்லியமாக வரையறை செய்திருக்கிறது. ஜாதி ஆணவப் படுகொலைகள், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக எதிர்ப்பு, தமிழ் வழிபாட்டு உரிமை மறுப்பு, ஊர் சேரி பிரிப்பு, மாட்டுக்கறிக்குத் தடை, சமஸ்கிருதப் பெருமை, வேதங்களின் மந்திர சக்திகள் போன்றவை கலாச்சார மூலதனத்தின் முக்கியக் கூறுகள்.
4) அர்த்தமுள்ள சமத்துவம் (Substantial Equality)
சமத்துவத்துக்கான முன் நிபந்தனை சம உரிமை. சம உரிமைகளைப் பகிர்ந்து அளிக்காமல் சட்டத்தில் எழுதப்பட்டுள்ள சமத்துவம், உயிர் பெற்றுவிடாது. தேர்தலில் அனைவருக்கும் ஒரே ஓட்டு என்பது சமத்துவம் தான். ஆனால், ஒவ்வொரு ஓட்டையும் செலுத்துகிற குடிமகன் - குடிமகள் சம உரிமைக்குரியவராக இருக்கிறார்களா ? என்றக் கேள்விக்கான விடை தான் அர்த்தமுள்ள சமத்துவம்.
இந்தக் கருத்தியல்களை மேலும் விரிவாக்கி திராவிட மாடலை செழுமைப்படுத்த வேண்டிய கடமை, திராவிட இயக்க ஆய்வாளர்கள், சிந்தனை யாளர்களுக்கு இருக்கிறது. ‘சமூகப் பிற்படுத்தப் பட்டத் தன்மை’ (Social Backwardness) என்பதை நிர்ணயிப்பதற்குப் பிறந்த ஜாதி முதன்மையான அளவுகோல் என்றாலும், ஜாதியுடன் தொடர்புடைய 20 க்கும் மேற்பட்ட பொருளியல், வாழ்வாதார நடைமுறைகளைப் பொருத்தித் தான், மண்டல் ஆணையம் சமூகப் பிற்ப்படுத்தப்பட்டத் தன்மையை ஆராய்ந்தது. அதேபோல், தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூகநீதிக்கான அளவுகோலாக தமிழ்வழிக் கல்வி, அரசுப் பள்ளி மாணவர்கள் என்ற இரண்டு காரணிகளையும் இணைத்திருக்கிறார். மொழி பண்பாட்டு அடையாளம் என்றாலும், பிற மாநிலத்தவர் தமிழர் வேலை வாய்ப்புகளை அபகரிப்பதை தடுக்கும் சமூக நீதிக் கருவியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
திராவிட மாடல் பேசும் சமூக நீதி, விளிம்பு நிலை மக்களை அதிகாரப்படுத்துதல், மாநில உரிமைகளை மீட்டெடுத்தல், சுயமரியாதை பண்பாட்டை வாழ்வியலாக்குதல், தமிழ்நாட்டை சுயசார்பு பொருளாதாரம் நோக்கி வளர்த்தெடுத்தல் என்ற நான்கு முக்கிய உள்ளடக்கங்களோடு தமிழ்நாடு முதலமைச்சர் முன்னெடுத்து வருகிறார். கட்சி அரசியலைக் கடந்த ‘திராவிட மாடல்’ என்ற தமிழ்நாட்டின் தனித்துவத்திற்கு நாம் வலிமை சேர்ப்போம். இது காலத்தின் தேவை.
- விடுதலை இராசேந்திரன்
(தமிழ்நாடு அரசு செய்தி விளம்பரத் துறை வெளியிட்ட ஓராண்டு ஆட்சி சாதனை மலரில் எழுதிய கட்டுரை.)