வேட்டைக்காரன் அமெரிக்கா
இருக்க இடம் கொடுத்தா கூடாரத்தையே காலி செய்து விடுவார்கள் என்று கூறுவதுண்டு. அப்படித்தான் ஜப்பானில் நடக்கும் போலிருக்கிறது. அங்குள்ள கனகவா மாகாணத்தில் யோகோசுகா என்ற நகர் உள்ளது. இது கடலுக்கு அருகில் உள்ள குட்டித்தீவாகும். அமெரிக்கா தனது கடற்படைத் தளத்தை இங்கு அமைத்துள்ளது.
எத்தனை முறை அமெரிக்க போர்க்கப்பல்கள் வந்து போகலாம் என்றெல்லாம் ஒப்பந்தத்தில் போடத்தான் செய்திருந்தார்கள். ஆனால் அதெல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக நீர்த்துப் போய்விட்டது. முதலில் சாதாரண போர்க்கப்பல்கள்தான் வந்தன. அதன்பிறகு அவற்றின் அளவு அதிகரித்தது. அணுகுண்டு என்றாலே ஜப்பானியர்களின் முகம் கடுகடுத்துப் போய்விடும். அப்படிப்பட்ட மக்கள் வாழும் மண்ணில் அணு ஆயுதங்கள் பொருட்தப்பட்ட போர்க்கப்பல்கள் வலம் வரத் துவங்கின.
2009 ஆம் ஆண்டில் யோகோசுகா கடற்படைத்தளத்திற்கு மட்டும் 23 முறை அணுஆயுதங்கள் தாங்கிய கப்பல்கள் வந்து சென்றன. 2008 ஆம் ஆண்டை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும். அதேபோல், இவ்வாறு வந்த கப்பல்கள் மொத்தம் 324 நாட்கள் அந்தத் துறைமுகத்தில் தங்கிச் சென்றுள்ளன. 2008 ஆம் ஆண்டில் இந்தக் கப்பல்கள் தங்கிய நாட்களின் எண்ணிக்கை 204தான். நண்பன் என்ற போர்வையில் வேட்டைக்காரன் நுழைந்துள்ளான் என்று சுட்டிக்காட்டிய கட்சிதான் தற்போது ஆட்சிக்கு வந்துள்ளது.
ஆகஸ்டு 2008ல் இருந்தே போர்க்கப்பல்களின் வருகை அதிகரித்துவிட்டது என்கிறார் அந்த நகரின் அதிகாரி ஒருவர். இதே காலகட்டத்தில்தான் அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியும் துவங்கியது. அதற்கும் இந்த ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்ததற்கும் தொடர்பு இருக்கலாம் என்பதுதான் ஜப்பானிய அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.
நாணயம் இல்லாத கோக்
உலகக்கோப்பைக் கால்பந்து போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவிருக்கிறது. அதற்கான தயாரிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அது தங்கள் நாட்டில் நடப்பது கவுரவமான விஷயம்தான் என்று ஒப்புக்கொண்டாலும், அது கோக் போன்ற பன்னாட்டு பகாசுர நிறுவனங்களின் தயவில் நடப்பதாக இருந்தால் விளையாட்டுக்கே கேவலம் என்கிறார்கள் தென் ஆப்பிரிக்க தொழிலாளர்கள்.
கோசாட்டு என்று அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்க தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கோக் நிறுவனத்தின் பொருட்களைப் புறக்கணிக்குமாறு அறைகூவல் விடுத்துள்ளது. அதேவேளையில் உலகக்கோப்பைப் போட்டிகளை நடத்துவதற்கான ஸ்பான்சர் என்ற அந்தஸ்திலிருந்து விலகி நிற்குமாறும் அந்த நிறுவனத்தை கோசாட்டு அறிவுறுத்தியுள்ளது.
இந்த விஷயத்தில் நாங்கள் உறுதியான நிலையை எடுக்குகிறோம் என்கிறார் கோசாட்டு பொதுச்செயலாளர் வெலின்சிமா வாவி. உலகக்கோப்பை போன்ற போட்டிகளை இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதற்கு எதிராக, உலகக்கோப்பைப் போட்டிகள் நடக்கும் இடத்தில் கோக் விளம்பரங்கள் வைக்கப்பட்டிருந்தால் அவற்றை பலவந்தமாக எடுக்கும் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்துள்ளார் வாவி.
தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய தொழிற்சங்கம் கோசாட்டு. கோக் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு ஊதியம் தரப்படாதது மற்றும் வேலைப்பாதுகாப்பு ஆகியவை குறித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல வாரங்களாகியும் அந்தப்பிரச்சனையில் தீர்வு வரவில்லை. அதை நிறைவேற்றாமல் இருக்கும் நாணயமற்ற கோக்கிற்கு கடுமையான எதிர்ப்பை தொழிலாளர்கள் காட்டுவார்கள் என்கிறார் வாவி உறுதியாக.
குட்டி நாடுகளும் தப்பவில்லை
உழைக்கக்கூடிய மக்களில் 8.2 விழுக்காடு ஜெர்மானியர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் லேட்டஸ்ட் செய்தியாகும். நெருக்கடி காலம் வேலையின்மையை அதிகரித்துவிட்டது. வேலையில்லாமல் இருந்தவர்கள் ஒரு பக்கம். மறுபக்கத்தில் வேலையிழந்தவர்களும் அணி வகுத்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, ஐரோப்பிய நாடுகளின் நிலையே மோசமாகியுள்ளது.2010 ஆண்டில் மட்டும் மேலும் 30 லட்சம் பேர் தங்கள் வேலைகளைப் பறிகொடுப்பார்கள் என்பது ஐரோப்பிய பொருளாதார நிபுணர்களின் கணிப்பாகும். அமெரிக்காவில் துவங்கி, சர்வதேச அளவிலானதாக மாறிய பொருளாதார நெருக்கடி ஐரோப்பிய நாடுகளைப் புரட்டி எடுத்துவிட்டது. ஜெர்மானியர்களைப் பொறுத்தவரை, அண்டை வீட்டாரின் பொறாமை தங்கள் நாடுதான் என்று சொல்லிக் கொள்கிறார்கள். வேலையிழப்பு இருந்தாலும் பக்கத்து மற்றும் சுற்றி முற்றும் இருக்கும் நாடுகளை விட தாங்கள் எவ்வளவோ பரவாயில்லை என்று காலரை உயர்த்தி விட்டுக் கொள்கிறார்கள். ஐரோப்பாவில் நல்ல நிலையில் இருந்த குட்டி, குட்டி நாடுகளும் தப்பவில்லை.
உலகம் முழுவதும் 21 கோடிப்பேர் வேலையில்லாதவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள். அதோடு, வேலையில் இருப்பர்கள் மத்தியிலும் சுமார் 63 கோடிப்பேர் குறைந்தபட்ச தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில்தான் உள்ளார்கள். மேலும் 21 கோடிப்பேர் நெருக்கடியின் விளைவால் அந்த நிலைக்கு தள்ளப்படும் அபாயத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
புதுச்சேரியில் மாணவர் சங்கமும் வாலிபர் சங்கமும் இணைந்து சமூக மாற்றத்திற்கான மாணவர், இளைஞர் கலைவிழாவைநடத்தின.
- கணேஷ்