2008ம் ஆண்டு ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பிறகு தற்போது மீண்டும் அமெரிக்கப் பொருளாதாரம் தகுதியிழந்து வருகிறது. வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தும் தகுதி அமெரிக்காவுக்கு மிகவும் குறைந்து விட்டதாக சர்வதேச கடன் மதிப்பீட்டுத் தரச்சான்று நிறுவனம் (எஸ் & பி) கூறியுள்ளது. அமெரிக்கா வாங்கிய கடன்களுக்கு முன்பிருந்த பாதுகாப்பு நிலை தற்போது இல்லை என்றும் கூறுகிறது.
இதைத் தொடர்ந்த பீதியில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பங்குச்சந்தையிலிருந்து சர்வதேச முதலீட்டாளர்கள் அவரை அவசரமாகத் தங்கள் பணத்தை வாபஸ் பெற்றனர். இதனால் உலகம் முழுவதும் பங்கு விற்பனை சரிந்தது. டாலர்களில் அமெரிக்கா வெளியிடும் அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் கரன்சியை விட முதலீடு செய்ய தங்கத்தை வாங்கத் தொடங்கினர். ஒரே நாளில் தங்கம் விலை 5 சதம் ஏறியது. தொடர்ந்து தங்கத்தின் விலை எகிறி பவுன் 20 ஆயிரத்தைத் தாண்டி நிற்கிறது. இது பவுன் 36 ஆயிரம் வரை கூட எகிறலாம் என்று கூறப்படுகிறது. இனி ஏழைகள் தங்கள் பெயரை மட்டுமே தங்கம் என்று வைத்துக் கொள்ளலாம்.
அமெரிக்கப் பொருளாதாரத்தில் 2008ல் அமெரிக்க அரசு பல லட்சம் கோடி டாலர்கள் வீழ்ச்சியடைந்த கம்பெனிகள், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு வாரி வழங்கியது. இப்போது அரசு திவால் நிலைமைக்குப் போகிறது. அமெரிக்காவை நம்பி வாழும் நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன.
டில்லியின் தில்லுமுல்லுகள்
குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது விஞ்ஞானம். ஆனால் மத்திய ஆட்சியாளர்கள் மனிதனைக் குரங்காக்குகிறார்கள். திகார் சிறையில் பல லட்சம் கோடி ஊழல்களைப் புரிந்த சுரேஷ் கல்மாடி, ராசா, கனிமொழி போன்றோர் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நாடே மகிழ்ச்சி கொள்கிறது. இன்னும் தயாநிதிமாறன் முதல் ப.சிதம்பரம் வரை திகார் சிறையில் அடைபடுவது எப்போது என்று பொது மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
இந்த ஊழல்பேர்வழிகளை உள்ளே அடைக்காமல், ஊழலை எதிர்த்துப் போராடும் அன்னா ஹசாரேயை மத்திய ஆட்சியாளர்கள் திகார் சிறையில் அடைத்தனர். சோனியா காந்தி புற்று நோய் சிகிச்சைல் இருப்பதால் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன் சிங் செயல்படுகிறாராம். அன்னா கைதைக் கண்டித்து அலையலையாய் இந்திய மக்கள் ஆர்ப்பரித்ததும் விடுதலை செய்துள்ளனர். மேலும் மூன்று வாரங்களுக்கு உண்ணாவிரதம் நடத்தவும் அனுமதி வழங்கியுள்ளனர். தீப் பந்தங்களோடு மக்கள் நாடு முழுவதும் எழுவதைப் பார்த்துத் திருடர்களைப் போல ஆட்சியாளர்கள் பதுங்குகிறார்கள்.
ஊழல் செய்திகள்
சோனியா குடும்பத்தின் ஊழல்கள் மறைக்கப்பட்டு வெளி வராமல் அடக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆதாரங்கள் கையிலிருப்பதாய் கூறிய சுப்பிரமணிய சாமி கூட ஆளைக் காணோம். ஆனால் சோனியா குடும்பத்தின் சொத்துக் குவிப்புச் செய்திகள் மட்டும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்தச் செய்திகளுக்கு சோனியாவோ, ராகுலோ மறுப்பு ஏதும் தெரிவிப்பதில்லை.
அண்மையில் வலைத்தளங்களில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா பல்லாயிரம் கோடிகளுக்குச் சொத்துக்கள் வாங்கியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. சோனியாவின் மகளும் ராகுலின் சகோதரியுமான பிரியங்காவின் கணவர் தான் இந்த வதேரா. மத்திய அரசின் ஊழல்கள் மூலம் சோனியா குடும்பம் மலைபோல் செல்வத்தைக் குவித்து வருகிறது. இவர்கள் மக்கள் முன் அம்பலமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் அடித்த கொள்ளைக்கு அளவே கிடையாது. அதில் டாப்லிஸ்டில் உள்ள அமைச்சர்கள் தங்கள் பாதுகாப்புக்கு கடவுளைத் தேடி ஓடுகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இருவரும் சங்கரன் கோவில் சென்று சங்கர நாராயண சாமி கோவிலில் மூன்று மணி நேரம் பரிகார பூஜைகள் செய்துள்ளனர். கலைஞரின் மகள் செல்வி தலைமையில் கருணாநிதி குடும்பத்தினர் காளஹஸ்தி கோவிலுக்குச் சென்று பரிகார பூஜைகளை நடத்தியுள்ளனர். பாவம் செய்தவர்கள் பரிகாரம் தேடுவார்கள். இவர்கள் மெகா பாவங்களைச் செய்தவர்கள்.
ஆட்சியில் இருந்த போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர்கள், அப்பாவி மக்களின் சொத்துக்களை அபகரித்து ஆட்டி வைத்தவர்கள் இப்போது கடவுளைச் சரணடைகிறார்கள். பகுத்தறிவுப் பகலவன் பெரியார் இவர்களை மன்னிப்பாராக!
இடதுசாரிகளின் ஊழல் எதிர்ப்பு இயக்கம்
இன்றைய மத்திய ஆட்சியாளர்களால் இந்தியாவில் பிரம்மாண்டமான இமாலய ஊழல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஊழல்கள் புற்றுநோய் போல நாட்டை அழித்துக் கொண்டிருக்கிறது. இடதுசாரிகள் இந்த ஊழல்களுக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியிலும் இந்தப் போராட்டம் தொடர்கிறது. அரசியல் வேறுபாடுகளை மறந்து உழைப்பாளிகள், விவசாயிகள், வியாபாரிகள், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடினால்தான் ஊழலை ஒழிக்க முடியும்.
மக்களின் ஊழலுக்கு எதிரான உணர்வுகளை சில சக்திகள் திசை திருப்ப முயற்சிக்கின்றன. அவர்களுடைய அரசியலுக்கு நாட்டு மக்கள் பலியாகக் கூடாது. ஊழலை ஒழிக்கும் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டா, இல்லையா என்ற சர்ச்சை எழுப்பப்படுகிறது. 121 கோடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றம் தான் சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் கொண்டதாகும். எனவே நாடாளுமன்றம் ஊழலை ஒழிக்க சரியானதொரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இதில் பிரதமர் உள்ளிட்ட அனைவரையும் ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். சட்டத்தில் எவரும் விதி விலக்கானவர்கள் கூடாது. ஆட்சியிலுள்ள தலைவர்களையும், அதிகாரிகளையும் இச்சட்டத்தில் கொண்டுவந்தால் தான் அச்சம் இருக்கும். கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளுக்காகப் பணம் கொடுக்கப்பட்டது. இது குறித்து தில்லி காவல்துறை அரை மனதோடு விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
2 ஜி ஊழல், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் போன்றவை பிரதமருக்கும், அன்றைய நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் தெரிந்தே நடைபெற்றுள்ளன. அதனால் தான் லோக்பால் சட்டத்தில் பிரதமரைச் சேர்க்கக் கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதி காட்டி வருகிறது.
இடதுசாரிக் கட்சிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், தெலுங்கு தேசம் போன்ற ஒன்பது கட்சிகள் இணைந்து ஆகஸ்ட் 23ல் நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன. ஊழலை எதிர்த்து தொடர்ந்து போராடுவதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் முடிவெடுத்துள்ளன.
மத்திய அரசின் வஞ்சகம்
மத்தியஅரசு, விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் வழங்கப்படும் மானியங்களை ரத்து செய்ய பெரும் சதி செய்கிறது. இது நாள் வரை உரம், பூச்சி மருந்து முதல் ரேசன் பொருட்கள் வரை மானிய விலையில் வழங்கி வந்ததை நிறுத்துவதற்கு முயற்சிக்கிறது. மானியத்தை அரசு பணமாகத் தரும் என்றும் அதை வைத்து மக்கள் தங்கள் தேவைப் பொருட்களை சந்தையில் வாங்கிக் கொள்ள வேண்டுமென்றும் கூறப்படுகிறது. இது மக்களின் வயிற்றிலடிக்கும் மாபெரும் சதித் திட்டமாகும். இதற்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கடந்த மூன்றாண்டுகளில் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு எட்டு லட்சம் கோடி ரூபாய்களை இலவசமாக வாரி வழங்கிய மத்திய ஆட்சியாளர்கள், ஏழை, நடுத்தர மக்களின் தலையில் கை வைக்கிறார்கள். இது போன்ற பிரச்சனைகளில் பாரதிய ஜனதா மத்திய அரசுடன் முழுமையாக ஒத்துழைக்கிறது. மேலும் ஊழல்கள் புரிவதிலும் காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் சளைத்தவர்களல்ல என்பதையும் பிஜேபி நிரூபித்து வருகிறது. கர்நாடக மாநில பிஜேபி ஆட்சியின் ஊழல்கள் ஊர் சிரித்து, நாடு சிரித்துக் கிடக்கிறது. அவர்களும் ஊழலை எதிர்ப்பதாய் ஆர்ப்பரிக்கிறார்கள். நேர்மையாளர்கள் போல் நடிக்கிறார்கள்.
சில்லறை வர்த்தகம் அழிப்பு
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலையிழப்பார்கள். இதைக் கண்டித்து தமிழக வணிகர்கள் ஒருநாள் கடையடைப்புச் செய்து தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.