“பாதைகளில் பனிப்பூக்கள்

 நமது நோக்கமல்ல

பாறைகளைப் பிளந்தேனும்

 பாதை அமைப்போம்.”

என்றொரு கவிதையை எப்போதோ படித்ததாக ஞாபகம். பாறைகளை என்பதற்குப் பதிலாக சுவர்களை என்று எழுத வேண்டும் போலிருக்கிறது. அவ்வளவு சுவர்கள். 21 ஆண்டு களுக்கு முன்பு... 18 ஆண்டுகளுக்கு முன்பு... 6 ஆண்டுகளுக்கு முன்பு... என்று பல வயதுகளை உடைய சுவர்கள். அட்டவணை சாதியினரைத் தங்கள் பகுதிக்குள் வரவிடாமல் தடுக்க சாதி வெறியர்கள் எழுப்பிய சுவர்கள்தான் இவை. உத்தப்புரம், பெரியார் நகர்(கோவை), எடமலைப் பட்டிபுதூர் (திருச்சி), சிதம்பரம் நடராசர் கோவில் தெற்கு வாயில் என்பவை இதுவரை தெரிந்த சுவர்கள். இன்னும் தெரியாத சுவர்கள் எத்தனை எத்தனையோ...?

ஒவ்வொரு கிராமத்தின் “கீழ்”ப்பகுதியில் வாழ்ந்து வந்த அட்டவணை சாதியினர் காலச் சக்கர சுழற்சியில் - மக்கள் தொகைப் பெருக்கத்தால் “மேற்”பகுதிக்கருகில் வந்தனர். இந்த மாற்றங் கள் இல்லாத கிராமங்களும் ஏராளம், ஏராளம். நகரங்களில் ஒரே பகுதிக்குள் வந்துள்ளனர். மாற்றங்கள் பல என்றாலும், அட்டவணை சாதியினர் தங்களோடு வாழ்கிறார்கள் என்ற நிலையை மட்டும் சகித்துக் கொள்ள சாதி வெறியர்களால் முடியவில்லை. எப்படிப் பிரித்துக்காட்டுவது? அதற்காகத் தான் சுவரை எழுப்பினர். உத்தரப்புரத்தில் ஒன்றல்ல... ரெண்டல்ல... 600 மீட்டர் நீளத்திற்கு எழுப்பி னார்கள். ஒப்புதல் என்ற பெயரில் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினார்கள். கோவை பெரியார் நகரில் சாதி வெறிக்கு, மதவெறியும் துணை சேர்ந்தது.. சுவரை எழுப்பி பிள்ளையார் சிலையை வைத்தனர் இந்துத்துவவாதிகள். எடமலைப்பட்டி புதூரில் ஒருபடி மேலே சென்று ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்கு பட்டா வாங்கி விட்டார்கள். இந்த அனைத்து இடங்களிலும், தங்கள் பகுதிகளுக்குள் அட்டவணை சாதியினர் வராமல் இருக்க வேண்டும் என்பதுதான் பிரதான நோக்கம்.

நவீன தாராளமய உலகத்தில், நவீன வடிவங் களில் தீண்டாமைகள் எழுகின்றன. தங்கள் பகுதிக்குள் அட்டவணை சாதியினர் வரக்கூடாது என்பதற்கான சுவர்கள் ஒருபுறம். அருகில் இவர்கள் இருப்பது தெரிந்தால் தங்கள் இடம் விலை போகாது என்று ரியல் எஸ்டேட்காரர்கள் எழுப்பும் சுவர்கள் தீண்டாமையின் நவீன வடிவங்கள். திருப்பூரில் எழும்பியிருந்த இத்தகைய சுவர் தகர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய சுவர்கள் ஒருபுறம். வருங்கால சுவருக்கான திட்டங்களோடு ஏராளமான வேலிகள். பெரும்பாலான ஆக்கிரமிப்புகளில் அரசு நிர்வாகம் உடந்தையாகவே உள்ளது. கிருஷ்ணகிரியில் கிராம நிர்வாக அலுவலரே ஆக்கிரமிப் பாளர் என்பது அதைவிடக் கொடுமை. மதுரை அம்பேத்கர் நகரில் வேலி போட்டனர். கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி யொன்றில் பொதுப்பாதையை மறிக்க சுவர் எழுப்பும் முயற்சி பட்டப்பகலில் நடந்தது. இவை யெல்லாம் வெளியில் தெரிந்தவை. தெரியாதவை ஸ்விஸ் வங்கிகளில் உள்ள இந்தியப்பணத்தின் அளவு இருக்கலாம்.

உலகை ஈர்த்த உத்தப்புரம்

உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் மற்றும் அதற்கெதிரான போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. கிட்டத்தட்ட அனைத்து தீண்டாமைக்கெதிரான போராட்டங்களிலும் இதை அடையாளப்படுத்தி சொல்லுமளவுக்கு அதன் வீச்சு இருந்திருக்கிறது. “மற்றொரு உத்தப்புரம்”, “மேலும் ஒரு தீண்டாமைச்சுவர்” என்ற தலைப்புகள் ஊடகங்களில் அடிக்கடி தென்படுகின்றன. மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருந்துகொண்டே, தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்துகிறார்கள் உத்தப்புரத்து மக்கள். பெரியார் நகர் சுவரைப் பார்க்க தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் சென்றபோது, உத்தப்புர செய்தியைக் கேட்டபிறகுதான் இந்த சுவர் தகர்ந்துவிடும் என்கிற நம்பிக்கை வந்தது என்று அப்பகுதி மக்கள் சொன்னார்கள்.

உத்தப்புரம், பெரியார் நகர் சுவர்கள் பற்றிய விமர்சனங்களில், பொருளாதார ரீதியாக அட்டவணை சாதியினர் நன்றாக இருந்தாலும் தீண்டாமைக் கொடுமையிலிருந்து தப்ப முடியவில்லையே என்பதும் ஒன்றாகும். சமூக விடுதலைக்கான போராட்டத்தையே முதலில் நடத்த வேண்டும் என்று சில அறிவுஜீவிகளும் கண்களைக் கசக்கினார்கள். முதலில் சொல்லப்பட்ட அம்சம் பெரிய உண்மைதான். ஆனால் ஒரு அம்சத்தைக் காண இவர்கள் மறக்கிறார் கள் அல்லது மறுக்கிறார்கள். சுவர்களுக்குப் பின்னால் இருந்த மக்களின் வாழ்நிலை, சமூகப் போராட்டத் திற்கான அடித்தளமாக இருந்தது என்பதுதான் அது. உத்தப்புரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், சாதி ஆதிக்க சக்தியினரைவிட எண்ணிக்கையில் அதிகம். சொந்தமாக நிலங்கள். பெரியார் நகரோ தென்னிந்திய மான்செஸ்டர் கோவையின் மையப்பகுதியில் உள்ளது. சுவருக்கு (பிள்ளையாருக்கு?) பின்னால் பல அரசு ஊழியர்கள். வழக்கறிஞர் ஒருவர். காவல்துறையைச் சேர்ந்தவர் ஒருவர். சொந்தக்காலில் நிற்பவர்கள் ஏராளம். அதனால்தான் சுவரை அகற்ற வேண்டும் என்று உறுதியாக நிற்க முடிந்தது.

கண்ணுக்குத் தெரியாத சுவர்கள்

இந்தப்பகுதிகளில் கண்ணுக்குத் தெரிந்து கருங்கல்லாலும், செங்கற்களாலும் எழுப்பப்பட்ட சுவர்கள். ஆனால், தமிழகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஏராளமான தடுப்புச் சுவர்கள் கண்களுக்குத் தெரியாமல் எழும்பி பெரிய அளவில் நிற்கின்றன. கோவை மாவட்டம் அன்னூர் அருகில் உள்ள கிராமமொன்றில் செல்போனில் பேசிக் கொண்டே செல்லும் ஒரு அட்டவணை சாதியைச் சேர்ந்தவர், சாதி ஆதிக்க சக்தியைச் சேர்ந்த ஒருவரைக் கண்டால் பேசுவதை நிறுத்திவிட வேண்டும். செல் போனை அணைத்துவிட்டு நகர்ந்து விடுவார் அல்லது அவர் போனபிறகு தனது பேச்சைத் தொடருவார். கிட்டத்தட்ட மாநிலத்தின் பெரும்பாலான கிராமங் களில் அட்டவணை சாதியினருக்கு மயானம் இல்லை. இருந்தாலும் போவதற்குப் பாதை இருக்காது. திண்டுக் கல் பாலசமுத்திரத்தில் ஆற்றைக் கடந்து பிணங் களைத் தூக்கிச் சென்ற அவலம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. கோவை அத்தப்பகவுண்டன்புதூரில் சாலை யோரத்தில் பிணங்களை எரித்துக்கொண்டிருக் கிறார்கள்.

வாடகைக்கு வீடு தேடும் அட்டவணை சாதி யினர் படும்பாடு சொல்லி மாளாது. நகர்ப்பகுதிகளில் நாசூக்காக கத்தியை செருகுகிறார்கள். வீட்டு புரோக் கரே என்ன சாதி அல்லது என்ன மதம் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்வார். அட்டவணை சாதியினர் என்று சொன்னால், இப்போதைக்கு வீடு இல்லை. வரும்போது சொல்கிறேன் என்பார் புரோக்கர். உண்மையிலேயே வீடு காலியாக இருந்தாலும் இதேகதிதான். வீட்டு உரிமையாளர் கமுக்கமாக இருந்து கொள்வார். புரோக்கரைப் பொறுத்தவரை, உரிமையாளர்களின் தேவையைத்தான் முன்னிறுத்து வார்கள். மாநிலத்தின் முக்கியமான, பெரிய நகரங் களிலும் இதே நிலைமைதான். இவையெல்லாம் கண்ணுக்குத் தெரியாத, செங்கல், மணல் மற்றும் சிமிண்ட் இல்லாமல் எழுப்பப்பட்ட மனச்சுவர்கள். பாறைகளைவிட உறுதியாக இருப்பதாகக் கருதப்பட்ட உத்தப்புரம், பெரியார் நகர் மற்றும் எடமலைப் பட்டிபுதூர் சுவர்கள் தகர்த்து எறியப்பட்டுள்ளன. ஆனால் காலத்திற்கேற்ப நவீன வடிவங்களில் தீண்டாமை தொடர்கிறது.

பார்ப்பனியம் என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட சாதியினரைக் குறிப்பிடுவதாக தவறாக அடையாளம் காணப்படுகிறது. ஆனால் தத்துவார்த்த ரீதியில் அது உண்மையல்ல. சாதி ரீதியாக ஒருவர் மேலே அல்லது ஒருவர் கீழே என்று சொல்வதைத் தான் பார்ப்பனியம் என்கிறோம். ஒரு பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அட்டவணை சாதியினர் மீது பாரபட்சம் காட்டினாலும் அது பார்ப்பனியம் தான். ஏன்... அட்டவணை சாதியினர் மற்றொரு அட்டவணை சாதிப்பிரிவினர் மீது பாரபட்சம் காட்டினால் அதுவும் பார்ப்பனியம்தான். இப்படித் தான் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக கண்ணுக்குத் தெரியாமல் கட்டப்பட்டுள்ள சுவரைத் தகர்க்க குறிப்பான முயற்சிகள் நடக்கின்றன. அதில் அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடு பிரதானம். அட்டவணை சாதியினரின் இடஒதுக் கீட்டுக்கு எதிராக எந்தெந்த வாதங்களை சாதி ஆதிக்க சக்திகள் வைத்தனவோ, அதே வாதங்களை அப்படியே அருந்ததியருக்கு எதிராக முன்வைக்கிறார்கள் அட்டவணை சாதியினரில் ஒரு சிறு பிரிவினர். அட்டவணை சாதியினரின் இட ஒதுக் கீட்டுக்கு என்ன நியாயங்கள் உள்ளனவோ, அனைத்து நியாயங்களும் அருந்ததியர் உள்ஒதுக்கீட்டுக்கு பொருத்தமானதேயாகும். இருந்தாலும் வாக்கு வங்கி அரசியல், அட்டவணை சாதியினருக்குள்ளும் பாரபட்சம் உள்ளிட்ட காரணங்களால் புதிய சுவர்களை எழுப்ப முயற்சிகள் நடக்கின்றன.

தீர்வை நோக்கி...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் வெகுமக்கள் அமைப்புகளின் முயற்சிகளால் கடந்த நான்கு ஆண்டுகளில் ஏராளமான ஆலய நுழைவுகள், மயானப்பாதை உருவாக்கம், வேலிகள் அகற்றம் என்று அட்டவணை சாதியினரின் சமூகப்பிரச்சனை களுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன. முன்னிற்கும் சவால்களை எண்ணுவது என்பது நட்சத்திரங்களை எண்ணுவதற்கு சமமாகும். தமிழக இடதுசாரிகள் மிக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தி யுள்ளார்கள். அட்டவணை சாதியினரின் பிரச்சனையை பொதுப்பிரச்சனையாக, ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனையாக மாற்றியதுதான் அது. அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்காக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங் கள், கோட்டை நோக்கி பேரணி நடந்தன. அதில் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமான அளவில் கலந்து கொண்டனர்.

உத்தப்புரப் போராட்டத்தில் பேரையூர் ஆர்ப்பாட்டம் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இரண்டாயிரம் பேர் கலந்து கொண்ட அந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிப்பேர் பிற சமூகத்தைச் சேர்ந்த வர்கள் என்கிற செய்தி அரசை உலுக்கியது. வெகு மக்கள் அமைப்புகளின் விவாதக்குறிப்புகளில் தீண்டாமை ஒழிப்பு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. “அவங்க தரப்பு”, “இவங்க தரப்பு” என்று பேசிக் கொண்டிருந்த உதடுகள், பாதிக்கப்பட்ட மக்களோடு இணைந்து “நம்ம தரப்பு” என்று பேசிக் கொண்டிருக்கின்றன.

புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், களப் போராளிகளுக்கு தத்துவார்த்த பாதையை விளக்கிக் கூறினார். மார்க்சின் வார்த்தைகளிலிருந்து தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்திற்கு உத்வேகமூட்டினார்.

“புரட்சி பற்றி மார்க்ஸ் பேசுகையில் அவர் அரசியல் புரட்சி என்றோ அல்லது பொருளாதாரப் புரட்சி என்றோ பேசவில்லை. சமூகப் புரட்சி என்றே பேசினார்...”. இதுதான் தோழர் பிரகாஷ் காரத்தின் வரிகள். சமூகப்புரட்சியில் அனைத்தும் அடக்கம். நாம் எதை நோக்கிப் போக வேண்டும் என்பதை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிச் சென்றார். செம்பதாகையோடு போராளிகள் அந்தப்பாதையில் நடைபோடத் துவங்கி விட்டார்கள் என்பதை பல நிகழ்வுகள் காட்டுகின்றன. சமூகப்புரட்சியின் வரலாறு தொடர்கிறது.

Pin It