Sea Snakeகடல் பாம்புகள் உப்பு நீரில் வசித்தாலும், நன்னீரைத் தேடிக் குடிக்கின்றன என்கிறார் ஃபிளாரிடாவைச் சேர்ந்த ஹார்வி லில்லிஒயிட் என்னும் விலங்கியல் வல்லுநர்.

உலகம் முழுவதும் ஏறத்தாழ 60 வகையான நச்சுப்பாம்புகள் கடல்நீரைக் குடித்து வாழ்கின்றன. இந்தப் பாம்புகளின் உடலில் உள்ள இயற்கையான சுரப்பிகள் உப்பை வடிகட்டி கழிவுகளாக வெளியேற்றும் இயல்புடையவை.

ஆனால் தைவானுக்கு அருகில் பிடிக்கப்பட்ட மூன்றுவகையான கடல்பாம்புகள் மட்டும் தாகமெடுத்தாலும்கூட உப்புநீரைக் குடிக்க மறுத்துவிடுகின்றன. நன்னீர் அல்லது ஓரளவு உப்புள்ள நீரை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றன என்கிறார் இந்த விலங்கியல் வல்லுநர்.

கடல்நீரில் உள்ள உப்பால் இந்த பாம்புகளின் உடலில் உள்ள நீர் வெளியேறிவிடுவதாகவும், இதை ஈடு செய்வதற்காக நன்னீரைத் தேடி இந்த பாம்புகள் கடல் முகத்துவாரத்திற்கு வருவதாகவும் ஆய்வாளர் தெரிவிக்கிறார். 10 முதல் 20 சதவீதம் அடர்த்தி உடைய உப்பு நீரைக்கூட இந்த பாம்புகள் குடிக்கின்றனவாம்.

உலகம் முழுவதும் கடல்பாம்புகளின் பரவல் ஏன் சீராக இல்லை என்பதை அறிய இந்த ஆய்வு பெரிதும் உதவுவதாக விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மேலும் கடல்பாம்புகள் அதிக மழைபெய்யும் பகுதிகளின் கடல்களில் மட்டுமே ஏன் காணப்படுகின்றன என்ற கேள்விக்கும் விடை கிடைத்திருக்கிறது.

உலகை அச்சுறுத்திவரும் காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை பிரதேசங்களில் வறட்சி அதிகரிக்கிறது. மழை அளவு குறையும்போது இத்தகைய கடல்பாம்புகளின் இனமும் அழியக்கூடிய அபாயம் இருப்பதாக லில்லிஒயிட் கூறுகிறார்.

கடல் பாம்புகள் elapid குடும்பத்தைச் சேர்ந்தவை. நல்ல பாம்புகள், மாம்பாக்கள், பவளப்பாறை பாம்புகள் ஆகியவையும் elapid குடும்பத்தைச் சேர்ந்தவைதான். நிலத்தில் வாழ்ந்த இந்த வகை பாம்புகள் பின்னர் கடல் நீரில் வாழத்தொடங்கி, கடல்நீரிலேயே இனப்பெருக்கம் செய்து வாழ்க்கையைக் கழிக்கின்றன. பேராசிரியர் லில்லிஒயிட் ஆராய்ச்சி செய்த krait வகை பாம்புகள் மட்டுமே வாழ்க்கையின் மிகச்சிறிய பகுதியை நிலத்தில் முட்டையிட்டுக் கழிக்கின்றன.

தைவானுக்கு அருகில் உள்ள ஆர்ச்சிட் தீவிற்கு அருகில் பிடிக்கப்பட்ட krait வகை கடல் பாம்புகளை பேராசிரியர் ஒயிட் இரண்டு வாரங்கள் கடலின் உப்பு நீரில் வைத்திருந்தார். உடலில் உள்ள நீரை இழந்ததற்கு அறிகுறியாக பாம்புகளின் செதில்களில் குழிகள் தோன்றின. ஆய்வாளர்கள் பாம்புகளை எடையிட்டனர். மீண்டும் பாம்புகளை 20 மணிநேரத்திற்கு கடல் நீரில் வைத்திருந்தனர். பாம்புகள் தாகமாயிருந்தபோதும் உப்பு நீரைக் குடிக்கவில்லை. பாம்புகளின் எடை அதிகரிக்கவில்லை என்பதில் இருந்து இது தெரியவந்தது.

ஆனால் இந்த பாம்புகளை நன்னீரில் விட்டபோது உடனடியாக நன்னீரைக் குடிக்கத் தொடங்கின. ஓரளவு உப்பு அடர்த்தி கொண்ட நன்னீரையும் இந்த பாம்புகள் ஏற்றுக்கொண்டன.

கடலின் மீது மழை பெய்யும்போது அடர்த்தி குறைவான மழைநீர் அடர்த்தி அதிகமான கடல் நீரின் மீது மிதந்துகொண்டிருக்கும். அலைகளின் வேகத்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகே, மழைநீர் கடல் நீருடன் இரண்டறக் கலக்கும். பவளப்பாறைகளின் உதவியால் அலைகள் இல்லாத 'லகூன்'களில் மட்டும் கடல்நீருக்கு மேல் நீண்டகாலம் மழைநீர் மிதந்து கொண்டிருக்கும். இதன் காரணமாகத்தான் இந்த வகை கடல் பாம்புகள் லகூன்களில் அதிகமாக காணப்படுகின்றன.

உலகின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பெய்யும் மழை அளவு கடல்பாம்புகளின் எண்ணிக்கையைக்கூட நிர்ணயிக்கிறது என்பது அதிசயம்தான். கடல் பாம்புகளில் தொடங்கிய இந்த ஆய்வுகள் கடல் ஆமைகள் போன்ற உயிரினங்களிலும் செய்யப்பட்டு வருகின்றன. காலப்போக்கில் இன்னும் அதிசயமான உண்மைகள் வெளிவரலாம். உலகம் வெப்பமயமாகிக் கொண்டிருக்கிறது. மனிதர்களின் அழிவது மட்டுமல்ல, கடல்வாழ் விலங்குகளும் அழிந்து கொண்டிருக்கின்றன என்பது மட்டுமே இன்றைய உண்மை.

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி

Pin It