பகுத்தறிவுப் பகலவனின் பன்மணித் திரள்கள்!

1)  இந்து மதம் கற்பனையே!

நமது ஆத்மார்த்தத்திற்கென்றும், பரமாத்மார்த்தத்திற்கென்றும் இந்து மதம் என்பதாக ஒரு கற்பனையை இப்பார்ப்பனர்கள் நமது தலையில் சுமத்தியிருக்கிறார்கள். இந்து மதம் என்னும் வார்த்தைக்கு பொருளே காண இயலவில்லை. இந்து என்பதே தமிழ் வார்த்தை இல்லை என்பதை நீங்கள் முதலில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.இது பார்ப் பன பாஷை. பார்ப்பன பாஷை யிலாவது இந்து என்பதற்குப் பொருளுண்டா என்று பார்த்தால் மதத்திற்குப் பொருத்தமானதாக ஒரு பொருளும் இல்லை.வேறு ஏதாவது பாஷையில் இருக்கிறதா என்று பார்த்தால், பார்சி பாஷையிலோ, அரபிபாஷையிலோ இந்து என்ப தற்கு திருடன் என்கிற பொருள்தான் இருக்கிறது.சிலர் சிந்து நதிக்கரையில் இருந்ததால் சிந்து என்பது இந்து என்பதாக மருவி, அது ஒரு கூட்டத் தினருக்குப் பெயராகிப் பிறகு மதமாகிவிட்டதாகவும் சொல்லு கிறார்கள்.

சென்னிமலையில் 29-.12.-1926-இல் சொற்பொழிவு -குடிஅரசு 9-.1-1927)

2) நான் வகுப்புத் துவேஷக்காரனா?

தற்காலம் இந்நாட்டிலுள்ள ராஜீய வேசங்கொண்ட பல பார்ப்பனர்கள், என்னை வகுப்புத் துவேசக்காரன் என்றும், வகுப்புக் கலவரங்களை மூட்டி விடுகிறவன் என்றும், சொல்லியும் எழுதியும், ஆட்களை விட்டுப் பிரச்சாரம் செய்தும் வருகிறார்கள். வகுப்புத் துவேசமும் வகுப்பு வேற்றுமைகளும் என்னால் ஏற்பட்டவையா? அல்லது நம் நாட்டுப் பார்ப்பனர்களால் ஏற்பட்டவையா? என்பதை நீங்கள் சற்று யோசனை செய்துபாருங்கள்! தயவுசெய்து நீங்கள் என்னோடு எழுந்து வருவீர்களானால் இவ்வூ ருக்குள் சுற்றிப்பார்த்தால் பார்ப் பனர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு காப்பிக் கடையிலும், சாப்பாட்டுக் கடையிலும், இரயில்வேக் களில் உள்ள காபி-சாப்பாட்டுக் கடை களிலும், சத்திரம் சாவடிகளிலும், கோயில் குளங்களிலும்,; இது பிராம ணர்களுக்கு; இது சூத்திரருக்கு; பஞ்ச மர்களுக்கும், முகமதியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இங்கு சாப்பாடு, பலகாரம், தண்ணீர் வகையறா முதலியன கொடுக்கபடமாட்டாது; இந்த இடத்தில் சூத் திரர்கள் தண்ணீர் மொள்ளக்கூடாது, இந்த இடத்தில் சூத்திரர்கள் குளிக்கக்கூடாது,இந்த பள்ளிக்கூடத்தில் சூத்திரர்களைச் சேர்த்துக் கொள்ள முடியாது, இன்னின்ன விஷயங் களைச் சூத்திரர்கள் படிக்கக்கூடாது, பிராமணர்கள் மாத்திரம் இது வரையில் செல்லலாம்- சூத்திரர்கள் இந்த இடத்திற்கு மேல் போகக் கூடாது, இந்த வீதியில் சூத்திரர்கள் குடி இருக்கக்கூடாது, இன்ன தெரு வில் பஞ்சமர் நடக்கக்கூடாது,என்றும் இன்னும் பல வாறாகவும் போர்டுகள் போட்டும், நிர்ப்பந்தங்கள் ஏற்படுத்தி யும், பிரித்து வைத்தும், துவேஷத் தையும் வெறுப்பையும் இழிவையும் உண்டாக்கி வருவது நானா? அல்லது பார்ப்பனர்களா? என்பதைக் கவனி யுங்கள். அவர்களே நம் ஜாதிகளைப் பிரித்து நம்மை இழிவுபடுத்தித் தாழ்த்தி வைத்து விட்டு ஏனையா இப்படிச் செய்கிறீகள்? இது தர்மமா? நியாயமா? என்று நாம் கேட்டால் நம்மை வகுப்புத் துவேஷக்காரன் என்றும்,வகுப்புப் பிரிவினைக்காரன் என்றும் சொல்லிக் கொன்றுவிடப் பார்த்தால், அதற்கு நான் பயந்து கொள்வேனா என்று கேட்கிறேன்.

சென்னை திருவல்லிக்கேணியில், 31.-7.-1926-ல் சொற்பொழிவு குடிஅரசு 15-.8.-1926.)

3) பட்டினி ஊர்வலத்தில் எந்த பார்ப்பான் போகிறான்?

இந்த பார்ப்பனர்கள், தங்கள் மாட்டுக்குப் புல்லைத் தேடிக் கொண்டு இங்கே வந்து,நம்மைக் கோயிலைக் கட்டச்சொல்லி சாமியைச் செய்யச் சொல்லி-அந்தச் சாமியை நாம் தொட்டால் தீட்டு,சாமி செத்துப் போய்விடும் என்று சொல்லிவிட்டானே? இதை இந்தப் பணக்காரனும் பண்டிதனும் ஒப்புகொண்டதன் விளைவாக,நாம் இப்படி நாசமாகிவிட்டோம். மிரு கங்கள் இருக்கின்றனவே! அவற்றில் பார்ப்பாரக் கழுதை, பறைக் கழுதை என்று இருக்கின்றனவா?

உலகத்திலேயே மிகவும் தாழ்வாகப் பேசப்படுகின்ற கருதப்படுகின்ற மக்கள்  நீக்ரோக்களாவர்.அவர்கள் காட்டில் திரிபவர்கள்; ஆடைகளுக்குப் பதிலாகத் தழைகளைக் கட்டிக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் உதடு தடித்திருக் கும். அவர்கள் இப்போது அமெரிக்காவிலிருக்கிறார் கள். அமெரிக்காவில் அவர்கள் ஜனத்தொகை ஒரு கோடியே முப்பது இலட்ச மாகும், அப்படிப்பட்ட மக்கள் இன்று 100க்கு90பேர் படித்திருக்கின்றார்கள். உலகத்தில் தாழ்ந்த காட்டு மிராண்டி, இன்றைக்கு எவ்வளவு முன்னேறி இருக் கிறான். இவர்கள் முன்னேறியது எல்லாம் கடந்த 150 வருடத்திற் குள்ளாகத்தான். இவர்கள் ஆட்களில் 100க்கு ஒருவன் வெள்ளைக்காரனைப் போலவே பி.ஏ. படித்திருக்கிறான். வெள்ளைக்காரனைப் போலவே அவனுக்குச் சரிசமமாக இருக்கிறான். ஆனால், இங்கு இன்று எல்லா உயர் பதவிகளும் பார்ப்பனருக்கேதானா? பிச்சை எடுக்க வந்தவன்தான் இன்று மந்திரி, பிரஸிடெண்ட், ராஷ்டிரபதி, சங்கராச்சாரி எல்லாம் அவன்தானே? அரசாங்கத்தில்  உயர்ந்த பதவி, எதை எடுத்தாலும் பார்ப்பான்தானே இருக் கிறான்? எப்படி இந்த நிலை வந்தது?

நாளைக்கு ஒரு கம்யூனிஸ்டோ, சோஷ்யலிஸ்டோ வருவார்கள்.என்ன நேற்று இந்த ராமசாமி ஏதேதோ பேசினாராமே; மக்கள் உணவுக்கு, உடைக்கு, ஏதாவது பரிகாரம் கூறினாரா? என்பார்கள். நம் மட ஜனங்களும் அதை நம்புவார்கள்! நான் கேட்பதெல்லாம் ஏன் பிச்சை எடுக்கிறான் ?என்றுதான் கேட்கிறேன். ஏன் பட்டினி? யாருக்குப் பட்டினி! என்றுதான் கேட்கிறேன்.

இந்தக் கேள்வியை, அந்தக் கம்யூனிஸ்டைக் கேளுங்களேன். ஊரெல்லாம் பட்டினி;மக்கள் பட்டினி ஊர்வலம் போகிறார்களே, என்கிறார்கள். அப்படிப் போகிற பட்டினி ஊர்வலத்தில் எந்தப் பார்ப்பான் போகிறான்? நமக்கு கஞ்சிக்கு உப்பில்லை என்றால் அவன் சோற்றுக்கு நெய்யில்லை என்கிறான். நம்மவனுக்கு வேட்டியில்லை, கிழிந்ததையெல்லாம் ஒட்டி, வெட்டித் தைத்துக்கொண்டு கட்டி கொள் கிறான். பார்ப்பானுக்கா வேட்டி யில்லை? வேட்டி வாங்கித் தருப வனும் நம்முடைய பணக்காரன்! பார்ப்பனப் பெண்கள் 18 முழமல் லவா கட்டிக்கிறார்கள்? மொட்டைப் பார்ப்பனத்தியும் அல்லவா 18 முழம் கட்டுகிறாள்?

இராமியம்பட்டியில் 30.-05.-1954-ல் சொற்பொழிவு-விடுதலை- 06.-05.-1954 4)

4) சூத்திரப்பட்டம் ஒழிய வேண்டாமா?

நான் என்னுடைய சூத்திரப் பட்டம் போகத்தான் இவ்வளவு பாடுபடுகிறேன் என்று நீங்கள் நினைத்துவிடாதீர்கள். நான் கிழவனாகிவிட்டேன்; இனி வெகு சீக் கிரத்தில்  சாகப்போகிறவன்.ஆனால் ,உங்கள் கதி என்ன?உங்கள் சந்ததி களின் கதி என்ன? நீங்கள் பாடு பட்டு உழைப்பதெல்லாம் உங்கள் சந்ததியின்  நல்வாழ்வுக்குத் தானே? அப்படியிருக்க, அந்தச் சந்ததியின் சூத்திரத் தன்மைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாமா? உங்கள் சந்ததியார் மனிதர்களாக வாழ வழி செய்ய வேண்டாமா? இதோ எனக்கெதிரில், பிரகாசம் பொருந்திய கண்களோடு பொறுக்கி எடுத்த மனிதன் மாதிரி வீற்றிருக்கும் இவ் இளைஞர்களின் கதி என்னாவது.?

இவ் இளங் குழந்தைகள்  என்ன குற்றம் செய்தார்கள் என்பதற்காக, இவர்கள் சூத்திரர்களாக இருப்பதால் தானே உங்கள் குழந்தைகள் சூத் திரர்களாக, உங்கள் மனைவியர் சூத்திரச்சிகளாக இருந்து வரு கிறார்கள்? அதனால் தானே மிருக சீவன்களாக நடத்தப்படுகிறார்கள்? இதைக் கண்டு நீங்கள் வெட்கப்பட வேண்டாமா? துக்கப்பட வேண் டாமா? இந்த இழிவுக்குக் காரண மாயுள்ள மதத்தையோ, சர்க்கா ரையோ, சமுதாயத்தையோ, ஒழித்துக் கட்ட  நீங்கள் திட்டமிட வேண் டாமா?அதை ஒழிக்க உங்களுக்குக் கஷ்டமாயிருந்தாலும் அதை மாற்றி யமைக்கவாவது நீங்கள் முற்பட வேண்டாமா?

புலியனூரில் சொற்பொழிவு விடுதலை, 29.-02.-1948

5) ஊழல், ஊழல், ஊழல்

ஊழல், ஊழல், ஊழல் என்று பேசிக் கொள்கின்றார்கள். ஜனங்கள் பேசிக் கொள்கிறார்கள் என்பதனைப் பற்றிக் காலஞ்சென்ற என் நண்பர் திரு. ப.வே.மாணிக்க நாயக்கர் என்ற இஞ்சினியர் தொடர்புள்ள நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. அவர் முதல் முதல் இஞ்சினியர் ஆகி ஒரு ஆபீசில் வேலைக்குச் சேர்ந்தார்.ஆபீஸ் மேனேஜர் ஒரு பார்ப்பான்.அவனிடம் வேலை கற்றுக் கொண்டார் இவர்.

அந்தப் பார்ப்பன மேனேஜர் லஞ்சம் வாங்குகின்றவன்.அவர் சங்கதி எல்லாம் இவருக்கு நன்றாகத் தெரியும் பிறகு, இவர் அதே ஆபீசில் ஆபீசராக நியமிக்கப்பட்டார். இலஞ்சம் வாங்கும் பழக்கம் உள்ள அந்த மேனேஜர் அப்பவும் நிறுத்த வில்லை. இவன் என்ன சிறு பையன் ,நம்மிடம் வேலை கற்றுக் கொண் டவன் தானே என்ற தைரியத்தில் பைல்களில் அவரிடம் கையொப்பம் போட மறுத்து விட்டார். பிறகு, அவர் மாணிக்க நாயக்கரைப் பார்த்து, உங்கள் நடப்பு நன்றாக இல்லை உங்களைப் பற்றி கன்னா-பின்னா என்று ஊரிலே பேசிக் கொள் கின்றார்கள். நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், என்று மிரட்டு வது போலக் கூறினான்.

அவருக்குக் கோபம் வந்து விட் டது. வாலிபமான வயது; ஆமாம் அய்யா! உங்கள் வீட்டிலே அறுத்துப் போய் விதவையாக வந்து உள்ள தங்கள் மகளுக்கும் ஒரு லஸ்கருக்கும் தொடர்பு உள்ளாதாகக் கூடத்தான் பேசிக் கொள்கின்றார்கள்,என்று கூறினார். உடனே பார்ப்பானுக்குக் கோபம் வந்துவிட்டது. இப்படி எல்லாம் முட்டாள் தனமாகப் பேசாதீர்கள், என்றார்.

உடனே மாணிக்க நாயக்கர் அவன் வாய் மூடுவதற்கு முன்பாகக் காலில் கிடந்த செருப்பைக் கழற்றி அவனை அடித்து விட்டார்.பக்கத்தில் இருந்த வர்கள் வந்து விலக்கி சமாதானப் படுத்தினார்கள். எதற்காகச் சொல்ல வந்தேன் என்றால்,இப்போது ஊழல்,ஊழல் என்று கூப்பாடு போடுகின்றார்களே இவர்களுக்கும் அந்தப் பார்ப்பானுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது?

05-.04.-1972-அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை, 07.-04.-1972)

6) ஜாதிகள் அற்ற சமுதாயம் ஏற்பட

இன்றைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு,அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தரு கின்றேன் என்று கூறி ஊருக்கு வெளியே, ஒதுக்குப்புறத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கின்றார்கள். முன்பு ஊருக்கு வெளியே சேரியில் குடி இருக்கின்றதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம். தாழ்த்தப்பட்ட மக்களைப் புதிய சேரியில் தனியாகக் குடி ஏற்றுவதாகத் தானே ஆகின்றது.

அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுக்க வேண்டும். மற்ற மக்களோடு கலந்து வாழச் செய்யவேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களாகிய நீங்கள் குடிசை வீட்டில் குடி இருந் தாலும் ஊருக்கு நடுவில் இருப் பதையே பெரிதாகக் கருதவேண்டுமே ஒழிய, ஊருக்கு வெளியே கட்டிக் கொடுக்கக் கூடிய வீட்டினை ஏற்றுக் கொள்ளக்கூடாது. காரணம், இந்த முறை மேலும் உங்களை ஒதுக்கி வைக்கத்தானே உதவுகின்றது.

தோழர்களே, இன்றைக்கும் தாழ்த் தப்பட்ட மக்களுக்குத் தமிழகத்தில் கூட தீண்டாமை, தொல்லைகள் முற் றிலும் இல்லை என்று கூறமுடியாது. தொல்லைகள்,கொடுமைகள் நடந்து கொண்டு தான் வருகின்றன.

பார்ப்பான் மட்டும் அல்லவே; பார்ப்பனர் அல்லாத மக்களும் கூட முட்டாள்தனமாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சில இடங்களில் கொடுமை இழைக்கின்றார்கள். முட்டாள்தனமாக இப்படிச் செய்கின்றார்கள். பார்ப்பான் அவனைச் சூத்திரன் என்றால் நான் எப்படி சூத்திரன் என்று கேட் கின்றவன், தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் எப்படித் தாழ்த்தப்பட்டவர் களாக இருக்கவேண்டும் என்று கூறமுடியும்? தாழ்த்தப்பட்ட மக்கள் படித்துவிட்டு வெள்ளையும், சள்ளையுமாக வெளியே போவதைப் பார்த்து ஆத்திரப்படுவது முட்டாள் தனம் ஆகும்.

தாழ்த்தப்பட்ட மக்களும் ஒற்று மையாக இருக்கவேண்டும். உங்களுக்குக் கடவுள் நம்பிக் கையோ, மத நம்பிக்கையோ இருக்கக் கூடாது. உங்களை இந்தத் தாழ்ந்த நிலைக்கு ஆக்கியது இந்துக் கடவு ளும், மதமும் தான் என்பதை உணர வேண்டும். நீங்கள் உங்கள் அறிவையே பிர தானமாக நம்ப வேண்டும்.உங்களை ஈடேற்றுவது உங்கள் அறிவே தவிர, கடவுளும், மதமும் அல்ல.

உங்கள் முன்னேற்றத்திற்காக அர சாங்கம் பல நல்ல காரியங்களைச் செய்து வருகிறது.இவற்றை முழுமை யும் பயன்படுத்திக் கொண்டு முன் னுக்கு வரவேண்டும். இந்த அரசாங்க மானபடியால் இதன் ஆட்சிக் காலத்திலேயே நீங்கள் வளர்ச்சி அடைந்தால் தான் உண்டு. மற்றவர் ஆட்சியில் இந்த அளவு உங்களுக் குச் சலுகை கிடைக்காது.

மேல்சாதி என்று கருதிக் கொண்டு இருக்கின்ற பார்ப்பனர் அல்லாத மக்களுக்கும் கூறுவேன்.நீங்களும் தாழ்த்தப்பட்ட மக்களையும் மனிதர் கள் நம் இனத்தைச் சார்ந்தவர்கள் என்று கருதவேண்டும்.அவர்களிடம் அன்பாக இருக்கவேண்டும்.அவர்கள் முன்னேற உதவி செய்யவேண்டும். அப்போதுதான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருக்கிற சாதி இழிவு மட்டும் அல்ல,உங்களுக்கும் இருக் கின்ற சாதி இழிவும் ஒழியும்.சாதிகள் அற்ற சமுதாயம் ஏற்படவும் வழி பிறக்கும்.

23-.06.-1972-அன்று நொய்யலில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை, 03-.07-.1972)

7) புராண- இதிகாசங்களில் எங்காவது ஒழுக்கம் நாணயம் நேர்மை இருக்கிறதா?

மக்களைத் தருமப்படி நடத்த என்று ஏற்படுத்தப்பட்ட கடவுள் கதைகளில்,புராண-இதிகாசங்களில் எங்காவது ஒழுக்கம், நாணயம், நேர்மை இருக்கிறதா?

பாரதம்(கதை) அய்ந்தாம் வேதம்! வேத, சாஸ்திர, தருமங்களைத் திரட்டிச் சுருக்கி, மக்கள் இதன்படி நடந்து கொள்ளவேண்டும் என்கின்ற படிப்பினைக்காக ஏற்படுத்தப்பட்ட தரும சாஸ்திர நூலாகும்.அது எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்றால்,தோற்றம் தொடக்க முதல் அயோக்கியத்தனம், அசிங்கம், விபச்சாரம், மிருகப் புணர்ச்சி, இயற்கைக்கு விரோதமான புணர்ச்சி முதலிய ஆபாசங்களையும்,கடவுள் பெயரால் பொய் பித்தலாட்டம், அயோக்கியத்தனம் சூது,திருட்டு, சூழ்ச்சி, தந்திரம் முதலிய கூடா ஒழுக்கங்களையும் கொண்ட ஆபாசக் களஞ்சியமாக ஆக்கப்பட்டி ருக்கிறது.

கதாநாயகர்களான பாண்டவர் களின் தாயார் பக்குவமடையாததற்கு முன்பே விபச்சாரித்தனம் செய்த படுவிபச்சாரி என்பதோடு, அவளு டைய ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு தனித்தனி கணவனைத் தேடிக் கொண்டதாகவும், இந்தக் கதா நாயகர்களான அய்வரும் ஒழுக்கமற்ற வர்களாகவும், கூட்டுறவு மனைவியை உடையவர்களாகவும், தனித்தனியே பெண்டாட்டி, வைப்பாட்டி என்பதோடு, பெண் வேட்டை ஆடியவர் களாகவும், கற்பிக்கப்பட்டிருக்கிறார் கள்! அதில் வரும் கடவுள் அநேக அயோக் கியத்தனம், விபச்சாரம், கொலை, களவு, பொய், குடி, கூத்து, சூது முதலிய பஞ்சமா பாதகங்களைச் செய்து பேர் பெற்றதாகவும் கற்பிக் கப்பட்டிருக்கிறது! இதைக் காப்பி யடித்த மாதிரி பல கடவுள் கதைகள், கடவுளின் பெயரால் கற்பிக்கப் பட்டிருக்கின்றன. எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும், மகாதவ சிரேஷ்டர்களும், மகா வரப் பிர சாதிகளுமான அரசர்களை, வீரர் களை நாணயக் குறைவான, யோக் கியக் குறைவான காரியங்களால் கொன்று குவித்த கடவுள்களாகவே அமைத்துக் கற்பனை செய்யப் பட்டிருக்கின்றன. அவற்றுள் வரும் குட்டிக் கதைகளும் அது போலவே ஆபாசமாக, அயோக்கியத் தனங்களை நிரப்பியே அமைக்கப்பட்டிருக் கின்றன.

இராமாயணக் கதையும் அது போன்றதே! அதில் வரும் கடவுள் பிறவியில் இழிவையும், நடத்தையில் அயோக்கியத்தனங்களையும் பொருத்தியே கற்பிக்கப்பட்டிருக் கிறது. இராமன் பொய் பேசி இருக்கிறான்.பெண்களின் மூக்கு, காது, முலைகளை அறுக்கச் செய்திருக் கிறான். பேடித்தனமாக (மறைந் திருந்து) முதுகுப்புறம் இருந்து வீரனைக் கொன்றிருக்கிறான். மனைவியை இவன் வேண்டும் என்றே விபச்சாரத் தனத்திற்கு ஆட்படுத்தி, அக்கிரமமாக ஒரு மாபெரும் வீரனை, தவசிரேஷ் டனான ஒழுக்கமுள்ளவனை மாசு படுத்திக் கொன்று தன் இனத்தைக் காப்பாற்றினான் என்பதைக் கட வுளின் பெருமைக்குக் காரணமாகக் கற்பித்து, உண்மை, ஒழுக்கம், நாண யம் அற்ற தன்மையில் கற்பனைக் கதை எழுதி அதை மக்களின் நீதி நூலாகப் பரப்பப்பட்டிருக்கிறது. பெரும் பெரும் தவ சிரேஷ்டர் களையும், வரப் பிரசாதிகளையும், வீரப் பிரதாபர்களை,சூது செய்து கொன்றதாகவே கருத்து வைத்து, மக்களை அயோக்கியர்களாக்கும் தன்மையிலேயே புனையப்பட்டி ருக்கிறது. இப்படி எதை எடுத்துக் கொண்டாலூம் பார்ப்பனர் ஏகபோகத்திற்கே பாதை வகுத்து விடப்பட்டிருக்கிறதே! அதை இன்ன மும் பின்பற்றிக் கொண்டிருக்கிற நம் மக்களுக்கும் மானம்,ரோஷம் வேண்டாமா?

04-.08.-1972, விடுதலை தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்

8) பெண்கள் தங்களுக்கேற்ற துணைவர்களை ஏற்றுக் கொள்ள அனுமதிக்கவேண்டும்

இனி நம் நாட்டுப் பெண்கள் பிடரியோடு முடியைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும். சட்டை போட்டுக் கொள்ள வேண்டும். லுங்கி கட்டிக் கொள்ள வேண்டும். நம் பெண்கள் அலங்காரத்திலேயே பகுதி நேரத்தைச் செலவிடுகின்றனர். மற்றவர்கள் தங்களைப் பார்க்க வேண்டுமென்பதற்காகவே தவிர, வேறு  எதற்காக அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்? நம் பெண்கள் செய்து கொள்கிற அலங்காரம் மற்றவர்களின் உணர்ச்சியைத் தூண்டக் கூடிய வகையில் அமைந்துள்ளது. தங்களுடைய அவயவங்களைப் படம் பிடித்துக் காட்டுவது போன்று உடை உடுத்திக் கொள்கின்றார்கள். இது எப்படி மற்றவர்களின் உணர்ச்சியைத் தூண்டாமலிருக்கும்? இப்படிப்பட்ட பெண்கள் தான் கற்பைப் பற்றிப் பேசுகின்றார்கள்.

அலங்காரத்திற்காகப் பெண்கள் அணிந்து கொள்ளும் நகையின் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு முடங்கிக் கிடக்கிறது என்பதை எவரும் எண்ணிப் பார்ப்பதே கிடையாது. ஆண், பெண் இருவருக்கும் எந்தவித வித்தியாசமும் தெரியாத வகையில் உடை இருக்க வேண்டும்.

நமக்கு முன் வாழ்ந்தவன் எவனாக இருந்தாலும், குருவாக இருந்தாலும், மதத் தலைவனாக இருந்தாலும், மற்றவனாக இருந்தாலும் அவன் கருத்துகளை அப்படியே ஏற்கக் கூடாது. அவன் கருத்துகள் எவ்வளவு உயர்ந்தனவாக இருந்தாலும் அதனை நம் அறிவைக் கொண்டு சிந்தித்து அவை தற்காலத்திற்கு ஏற்றதா என்று பார்த்து ஏற்கவேண்டும்.

நம் பெண்கள் குறைந்த பட்சம் 20 வயது வரை படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்குக் கல்வியளிக்க வேண்டும். வாழ்விற்கு ஏற்ற வருவாயுள்ள தொழிலை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். அதன்பின் அவர்களாகத் தங்களுக்கேற்ற துணைவர்களை ஏற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும். வாழ்க்கையில் கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும். மனிதன் என்றால்-பகுத்தறிவுள்ளவன் என்றால், அதற்குப் பொருள் கவலையற்று வாழ்வதேயாகும்!

28.-03.-1971 -அன்று மதுரை மாவட்டம் டி.வாடிப்பட்டியில் நிகழ்ந்த திருமண விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை, 08.-04.-1971)

9) மூடநம்பிக்கைகள் நிறைந்ததுதான் இஸ்லாம் மதமும்

மதங்கள் என்று சொல்லப்படுபவை எதுவானாலும் அது மூடநம்பிக்கையின் பெயரால் அமைக்கப்பட்டதே  தவிர, அறிவின் பெயரால் ஏற்பட்டது கிடையாது. அறிவின் பெயரால் இந்த மதங்கள் ஏற்பட்டிருந்தால் எல்லா மக்களும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாக அல்லவா இருப்பார்கள்? முட்டாள் தனத்தின் பெயரில் உற்பத்தியாகி மக்களின் மூடநம்பிக்கையால் அது பரவி நிலைத்து நிற்கின்றது. எப்படி இந்துமதம் மூடநம்பிக்கையின் பேரில் கட்டப்பட்டிருக்கிறதோ அப்படித் தான் கிறிஸ்தவ மதமும் கட்டப்பட்டிருக்கிறது.

ஒருவன் கிறிஸ்தவ மதத்தை ஒத்துக் கொள்ள வேண்டுமானால் முதலில் ஏசு இருந்தார் என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும், ஏசுவை ஒப்புக் கொண்டால் அவர் (தகப்பனில்லாமல்) ஆண் சம்பந்தமில்லாமல் பிறந்தார் என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும். அதனை ஒப்புக் கொண்டால் பின் அவர் செய்த அதிசய அற்புதங்களை ஒப்புக்கொண்டாக வேண்டும். இப்படி அறிவிற்குப் பொருந்தாததையும், ஆராய்ச்சிக்குப் நிற்காததையும், அனுபவத்திற்கு பொருந்தாததையும் ஏற்றுக்கொள்வது மூட நம்பிக்கையேயாகும். இறந்துபோன கிறிஸ்து உயிர் பெற்று வந்தார் என்பதையும் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

இதையெல்லாம் ஒப்புக் கொண்டால் தான் ஒருவன் கிறிஸ்தவனாக முடியும் இவையெல்லாம் நிறைந்தது தான் கிறிஸ்தவ மதம். இதைப் பரப்பத்தான் இந்த பாதிரி மார்கள் இருக்கிறார்கள். மக்கள் மடமையிலிருந்து விடுபடாமலிருப்பதற்காக மதத்தைப் பரப்பிக்கொண்டு, பிரச்சாரம் செய்து கொண்டு மக்களை நம்பும்படியாகச் செய்கின்றனர்.

பொய்யான காரியத்தை நிலை நிறுத்த இவ்வளவு காரியமும் செய்ய வேண்டி இருக்கிறது. கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவோ அவ்வளவு மூடநம்பிக்கைகள் நிறைந்ததுதான் இஸ்லாம் மதமும் ஆகும். என்றாலும் அதில் பேத உணர்ச்சிக்குக் கொஞ்சமும் இடமில்லை. முஸ்லிம் என்றால் யாவரும் ஒன்றுதான் அதில் மேல்குல முஸ்லிம், கீழ்குல முஸ்லிம் என்கின்ற தன்மைக்கே இடமில்லை இந்த மதங்கள் இரண்டையும் விட இந்து மதம் ஏராளமான மூடநம்பிக்கையுடையதாகும். மக்களை ஒன்றாக்குவதற்காக என்று ஏற்பட்டதுதான் மதங்களாகும் என்கிறார்கள். ஆனால், இதன் பலன் என்னவாயிற்றென்றால் மனிதன் ஒற்றுமையாக வாழ முடியவில்லை. பிரிந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

04-.06.-1970  அன்று தொட்டியத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து விடுதலை, 29.-07.-1970)

10. பாதிரிகள் கொலை பாதகர்கள்

பாதிரிகள் பார்ப்பதற்குத்தான் பாதிரிகளே தவிர கொலைகூடச் செய்வார்கள். கொலை பாதகர்கள். இதை நான் எதைக் கொண்டு சொல்கின்றேன் என்றால் சமீபத்தில் வேளாங்கண்ணியில் நம் கழகக் கட்டிடத் திறப்பு விழாவிற்கு சென்றிருந்தேன். என்னைப் பேச விடாதபடி என் பேச்சை மக்கள் கேட்காதபடி ஒலி பெருக்கியை  வைத்து கத்திக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு சொல்லியும் நிறுத்தவில்லை. போலீஸ் அதிகாரிகள் சொன்னதையும் லட்சியம் செய்யவில்லை. அரஸ்ட் செய்வேன் என்று போலீஸ் அதிகாரி சொன்னபின்தான் அவர்கள் கூச்சலை நிறுத்தினார்கள்.

பாதிரிகள் என்பது வேஷமே தவிர உள்ளுக்குள் மகாகாலிகள். இங்கு மட்டுமல்ல வெளிநாடுகளிலுள்ள பாதிரிகளும் இப் படிப்பட்டவர்கள் தான்!எல்லாவிதமான அயோக்கியத்தனங்களாலும் உருவான வர்கள் அவர்கள். ஏமாற்றி,பொய் சொல்லி,கொலை செய்து மதத்தைக் காப்பாற்ற வேண்டும்; மதத்தைக் காப்பாற்ற எல்லா விதமான அயோக்கியத்தன மும் செய்யலாம் என்பதுதான் அவர்கள் கொள்கையாகும்.

09-.09.-1970-அன்று தொட்டியத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை (விடுதலை, 17.-09.-1970)

11. நம்நாட்டு அரசியல் கழுதை புரண்ட களம்

நம் நாட்டு அரசியல், கழுதை புரண்ட களமாகி விட்டது.என்ன செய்தாவது பதவிக்கு வர வேண்டும், பணம் கொடுத்து பதவிக்கு வர வேண்டுமென்று பாடுபடுகிறான். இன்னும் கொஞ்சம் நாள் போனால் தனது மனைவியை விட்டுக் கூட ஓட்டுப் பெறுவான் அவ்வளவு கேவலமாகப் போய் விட்டது.15 ஆயிரம், 20ஆயிரம், 50ஆயிரம் ரூபாய் என்று சாதாரண பஞ்சாயத்து எலக்ஷ னுக்குச் செலவு செய்கிறான். ஏண்டா இவ்வளவு செலவு செய்கிறாயே என்றால் இதைப் போல பல மடங்கு சம்பாதிக் கலாம் என்கின்றான்.

எந்தக் கட்சிக்காரனும் தனது கொள்கையைச் சொல்லி ஓட்டுக் கேட்பதில்லை. பணத்தைக் கொடுத்துத் தான் ஓட்டு வாங்குகிறான் இப்படி பணம் கொடுத்து ஓட்டு வாங்குகிறவன் எப்படி லஞ்சம் வாங்காம லிருப்பான். இந்த முறை ஒழி யாதவரை இந்தக் கோளாறுகளெல்லாம் இருந்து கொண்டு தானிருக்கும். இதை ஒழிக்க முடியாது.

09-.09.-1970 அன்று தொட்டியத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை (விடுதலை, 17.-09.-1970)

தொகுப்பு:- வ. மாரிமுத்து, பழனி -624601 -”விடுதலை” ஞாயிறுமலர் 14-9-2013
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It