corona drugஉலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதற்கான மருத்துவ சந்தையும் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. கொரோனா இரண்டாவது அலையில் 2 - Deoxy - D - Glucose அல்லது 2-DG என்கிற மருந்தை உயிர்காக்கும் மருந்தாக ஒன்றிய பாஜக அரசு அறிவித்ததுள்ளது.

கடந்த மே 1 ஆம் தேதி இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் (DCGI) 2-DG மருந்தை தயாரிப்பதற்கு அனுமதி அளித்தது. மே 8 அன்று பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் சார்பில் இது பத்திரிக்கை செய்தியாக வெளியிடப் பட்டுள்ளது.

DRDO (Defense Research and Development Organization) எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு மற்றும் Dr.Reddy's Laboratories (DRL) உடன் இணைந்து கூட்டு பங்களிப்போடு தயாரிக்கப்பட்ட 2-DG மருந்தானது, மே 17 அன்று ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களால் ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் ஒப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதன் பிறகு, கொரோனாவிற்க்கு எதிரான உயிர் காக்கும் மருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு விட்டது என்று பாஜக அரசு பெருமை பேசிக் கொண்டிருக்கிறது.

அதேவேளை, மோடியின் நெருங்கிய நபரான பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி நிறுவனத்தின் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் என்பவர், 2-DG மருந்து தொடர்பான ஆய்விற்கு பதஞ்சலி தான் முன்னோடி என்று மே 9 அன்று கூறுகிறார். இவர் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.

இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவியல் இதழ் ஒன்றிற்காக ஏப்ரல் 2020ல் சமர்ப்பிக்கப்பட்ட (Preprint Manuscript) ஒரு ஆய்வு கட்டுரை பதிவிட்டுள்ளார். இது வரை மருத்துவ வேதியியல் தொடர்பாகவோ அல்லது நவீன அறிவியல் மருத்துவம் சார்ந்த மருந்துகள் ஆராய்ச்சி தொடர்பாகவோ எந்த ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிடாத ஆயுர்வேத ஆய்வாளர் இந்த ஆய்வை நிகழ்த்தியுள்ளார்?.

நவீன அறிவியல் மருந்துகளுக்கு எதிராக கருத்து சொல்லும் பாபா ராம்தேவ் தனது டிவிட்டரில் பதஞ்சலி ஆச்சார்யா பாலகிருஷ்ணனின் ஆய்வுக் கட்டுரையை சுட்டி காட்டி பதஞ்சலியை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல மூத்த மற்றும் இளைய ஆய்வாளர்களிடையே பெறும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த விவாதங்களை கவனிக்கும் பொழுது மிக இயல்பாக நமக்கு ஒரு கேள்வி எழுகிறது. உண்மையில் 2-DG உயிர் காக்கும் மருந்தா?

ஏன் இந்த கேள்வி எழுகிறது என்றால் DRDO மற்றும் DRL (Dr Reddy's Laboratories) இணைந்து தான் கொரானாவிற்கு எதிரான இந்த மருந்தின் பாதுகாப்பு தன்மை மற்றும் செயல்பாட்டு திறனை ஆராய சோதனை முயற்சிகளை செய்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் வரை நடைபெற்ற முதல் கட்ட சோதனையில் (Phase 1 trail) இந்த மருந்து மனித பயன்பாட்டுக்கு பாதுகாப்பானது என்று உறுதிபடுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இரண்டாம் கட்ட சோதனையின் ஒரு பகுதி (Phase 2a) ஆறு மருத்துவ மனைகளிலும் மற்றொரு பகுதி (Phase 2b) பதினொன்று மருத்துவ மனைகளிலுமாக மொத்தம் வெறும் 110 கொரோனா நோய் தொற்றாளர்கள் மீது மட்டுமே செய்யப் பட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்ட சோதனை முடிவுகளின் அடிப்படையில் மூன்றாம் கட்ட சோதனைகளை நடத்த DCGI நவம்பர் 2020 ல் அனுமதி அளித்துள்ளது.

அதன்படி டிசம்பர் 2020 முதல் மார்ச் 2021 வரை இந்தியாவின் ஒன்பது மாநிலங்களில் 27 மருத்துவமனைகளில் சோதனை நிகழ்த்தப் பட்டுள்ளது. இதில் வியப்பளிக்கும் செய்தி உயிர் காக்கும் மருந்தின் மூன்றாம் கட்ட ஆய்வு வெறும் 220 நோய் தொற்றாளர்கள் மீது மட்டுமே நிகழ்த்தப்பட்டு அதை மருந்தாக பயன்படுத்த அனுமதியும் அளிக்கப் பட்டுள்ளது. இந்த தகவல்கள் எல்லாம் அரசு வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டிலேயே காணக் கிடைக்கிறது.

இதை பற்றிய எந்த தரவுகளும் இது வரை DRDO-வோ அல்லது DRL-வோ பொதுவெளியில் வெளியிடவில்லை. DRDO இந்திய அரசின் ஆய்வு நிறுவனம். DRL என்பது ஒரு தனியார் ஆய்வு நிறுவனம்.

வழக்கமாக ஒரு ஆய்வு நிறுவனம் தன்னுடைய ஆய்வு முடிவுகளை புகழ்பெற்ற அறிவியல் இதழ்களில் வெளியிடுவார்கள். ஆனால் கொரோனா போன்ற கொள்ளை நோய்க்கு எதிராக பரிசோதிக்கப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டிற்கே வரப்போகும் 2-DG மருந்தை பற்றிய தன் ஆய்வு முடிவுகளை பொது வெளியில் வெளியிடாமல் இருப்பது நமக்கு இந்த கேள்வியை எழுப்புகிறது.

DRL நடத்திய மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு DRDO மூலம் மக்களின் வரிபணத்தை நிதியுதவியாக அளித்துள்ளது பாஜக அரசு. மூன்றாம் கட்ட ஆய்வு எதன் அடிப்படையில் எந்தெந்த காரணிகளை முன்னிருத்தி நடத்தப்பட்டது என்றும், SEC (Subject Expert Committee) எழுப்பிய மருந்தின் திறன் கண்டறியும் காரணிகள் பற்றிய தரவுகளை வெளியிடாமல் இருப்பதென்பதும் DRDO போன்ற பொது நிறுவனங்களின் மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்கும் என்று Science The Wire என்ற பத்திரிகை பகிரங்கமாக பல குற்றச் சாட்டுகளை வைத்துள்ளது.

LinkedIn போன்ற வலைத்தளங்களில் ஆய்வாளர்கள் 2-DG என்பது 1956 முதலே ஆராய்ச்சியில் இருக்கும் ஒன்று என்றும், பாஜக நபர்கள் கூறுவது போல் அது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது உண்மை அல்ல என்றும் விவாதங்களை நடத்தி வருகிறார்கள்.

Defense Research and Development Establishment (DRDE) - இல் மூத்த ஆராய்ச்சியாளராக இருந்தவர் டாக்டர் கருணா சங்கர் பாண்டே. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் 2-DG-யானது உண்மையில் DRDE - ஆல் 25 ஆண்டுகளுக்கு முன்பே தயாரிக்கப்பட்டது என்று கூறுகிறார்.

மேலும் 1995க்கு முன்பு வரை 2-DG-யானது INMAS (Institute of Nuclear Medicine & Allied Science)-ன் மூலம் அமெரிக்காவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டது. சில காரணங்களால் அதை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்படவே அப்போதைய INMAS - ன் இயக்குநர், பேராசிரியர் டாக்டர் வினே ஜெயின் (Dr. VINEY JAIN) அதை சரி செய்யும் வேலைகளை முன்னெடுத்துள்ளார்.

DRDO-வின் இயக்குநராக இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் உதவியுடன் DRDE-யின் இயக்குனர் ஆர்.பி.சாமியிடம் பேசப்பட்டு 2-DG-யை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான திட்டப்பணி, இந்த பேட்டியை கொடுத்த டாக்டர் கருணா சங்கர் பாண்டேவை தலைவராக கொண்ட குழுவிடம் தான் ஒப்படைக்கப்பட்டது. 

இந்த பேட்டியில் குறிப்பிட்ட INMAS-ன் முன்னாள் இயக்குநர் டாக்டர் வினே ஜெயின் என்பவர் பதஞ்சலி ஆச்சார்யா பாலகிருஷ்ணனை முதன்மை ஆய்வாளராக (First Author) கொண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரையில் ஒரு இணை ஆய்வாளராக (Co-author) உள்ளார் என்பது இங்கு முக்கியமானது.

ஆயுர்வேத ஆய்வாளர் ஒரு நவீன அறிவியல் மருந்து தொடர்பான ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டதற்கு பின்னணியில் 1975 முதல் இந்த துறையில் இருக்கும் டாக்டர் வினே ஜெயின் தான் காரணமா?

அப்படி என்றால் பாபா ராம்தேவ் பெருமைப்பட்டுக் கொள்ளும் பதஞ்சலி ஆச்சார்யா பாலகிருஷ்ணனின் ஆய்வு முடிவுகள்படி தான் பாஜக அரசு DRDO-வை பயன்படுத்தி இந்த மருந்தை தயாரித்துள்ளதா?

பதஞ்சலி ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆய்வு முடிவுகள் முழுவதும் தத்துவார்த்த ஆய்வுகள் (Theoretical Studies) என்று சொல்லப்படும் Computational (Silica Docking) முறையை அடிப்படையாகக் கொண்டது. இதற்கும் மனிதர்கள் மருந்தை பயன்படுத்துவதற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

In Vitro என்று சொல்லப்படும் ஆய்வகத்தில் செய்யப்படும் ஆய்வு முறை மற்றும் in Vivo என்று சொல்லப்படும் விலங்குகள் அல்லது மனிதர்கள் மீது செய்யப்படும் ஆய்வு முறைகள் தான் சரியான ஆய்வு முறைகள். 

ஒருவேளை DRDO மற்றும் DRL சுயமாகவே இதற்கான ஆய்வுகளை நடத்தியிருந்தால் அதை ஏன் பொதுவெளியில் வெளியிடவில்லை? எந்த அறிவியல் இதழ்களுக்கும் சமர்ப்பிக்கப்படாமல் வைத்திருப்பது ஏன்? ஏனென்றால் 2-DG மருந்து குறித்த மருத்துவ பரிசோதனைகள் (Clinical Trials) முழுமையாக இதுவரை நடத்தப்படவில்லை.

ரூபாய் 990/- என்று விலையும் நிர்ணயிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள நிலையில் தற்பொழுது ஐதராபாத், சானத்நகர் ESIC மருத்துவமனையில் Clinical Trails நடந்து வருகிறது. இந்த சோதனை முடிவுகளை அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

மனிதர்கள் மீது பரிசோதனை செய்ய முன்கூட்டியே Clinical Trials Registry of India (CTRI)-ல் பதிவு செய்யப்பட்டதற்கு எந்த தரவுகளும் இல்லை என்று Science The Wire பத்திரிக்கை குற்றம் சாட்டுகிறது. இது வரை இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு ஏதும் வரவில்லை என்றும் அந்த பத்திரிகை சொல்லுகிறது.

2009 முதல் மனிதர்கள் மீது நிகழ்த்தப்படும் எல்லா பரிசோதனைகளுக்கும் CTRI-ல் முன் கூட்டியே பதிவு செய்வது கட்டாயம் என்று DCGI கூறியுள்ளது. அப்படியென்றால் INMAS-DRDO மற்றும் DRL ஆகியவை இந்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலின் சட்ட விதிகளை மீறியுள்ளதா.?

இப்படி பல சந்தேகங்கள் உள்ள, அரைகுறை பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனாவுக்கு எதிராக அதன் உண்மையான திறன் என்ன என்பதை ஆதாரப்பூர்வமாக பொது வெளியில் வெளியிடாமல் இது ஒரு உயிர் காக்கும் மருந்து என்று பாஜக அரசு பத்திரிகை செய்தி கொடுப்பதும், அதை விளம்பரப்படுத்துவதும் மக்களிடையே மீண்டும் தேவையற்ற பதற்றத்தையே உருவாக்கும்.

வெளிப்படைத் தன்மையில்லாத அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி என்கிற பெயரில் கொரோனா தடுப்பூசி வியாபார சந்தையில் பொடி வடிவ கொரோனா எதிர்ப்பு மருந்து என்ற வடிவத்தில் எளிய மனிதர்களின் பயன்பாட்டை குறி வைத்தே இது முடுக்கிவிடப் படுகிறது.

தொற்று அதிகமாக உள்ளவர்களுக்கு இதை ஒரு இணை மருந்தாக பயன்படுத்தலாம் என்று சொல்லும் அரசு தான், அதை உயிர் காக்கும் மருந்து என்றும் சொல்கிறது.

2-DG-யின் கொரோனாவிற்கு எதிரான அறுதியிட்ட செயல் திறன் பற்றி அறிவியளார்களும், உயர் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்களும், பத்திரிகைகளும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் இந்த மருந்திற்காக மீண்டும் மக்கள் வரிசையில் காத்திருக்கும் அவலம் தான் நிகழப்போகிறது.

உண்மையில் கொரோனா முதல் அலையில் இருந்து எந்த பாடங்களையும் கற்றுக் கொள்ளாத ஒரே நாடு இந்தியா தான். இரண்டாவது அலை வரும் என்று முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டும் இந்தியாவை ஆளும் இந்துத்துவ பிஜேபி அரசு அதற்கேற்ப எந்த மருத்துவ சுகாதார கட்டமைப்புகளையும் மேம்படுத்தவில்லை.

தன்னுடைய இந்துத்துவ அரசியலுக்கு எந்த பங்கமும் வரக்கூடாது என்று இந்த நெருக்கடி நேரத்திலும் கும்பமேளா நடத்தி இலட்சக் கணக்கானோர் ஒன்று கூடி பெருந்தொற்று பரவுவதற்கு அடித்தளமிட்டது.

பாஜகவின் அறிவியலுக்கு புறம்பான அரசியலில் சிக்கிய வட இந்திய அப்பாவி மக்கள் கொரோனாவில் இருந்து தங்களை காத்துக் கொள்ள சாணக் குளியல், மாட்டு மூத்திரம் குடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தடுப்பூசி தான் ஒரே வழி என்று சொல்லும் மோடி அரசு, அது எல்லா மக்களுக்கும் கிடைக்கும் வகையில் என்ன செய்துள்ளது இதுவரை? பெருந்தொற்று காலத்தில் மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து மிகப்பெரிய குழப்ப நிலையை உருவாக்கியுள்ளது.

இப்படி தனக்கிருந்த பொன்னான எல்லா வாய்ப்புகளையும் தவற விட்டுவிட்டு, தன்னுடைய செயலற்ற தன்மையை மறைக்க நாங்கள் புதிதாக உயிர் காக்கும் மருந்தை தயாரித்து விட்டோம் என்று போலி விளம்பரங்களை செய்கிறது மோடி அரசு. 

மக்கள் மீது அக்கறை இல்லாத, அறிவியலுக்கு புறம்பான புராண மனநிலை கொண்ட இவர்கள் மக்களைக் காக்கும் மருந்துகளை தயாரிக்கும் தகுதியும் திறமையும் அற்றவர்கள். கொரோனா வைரஸோ மோடியின் ஊதி பெருக்கப்பட்ட பிம்பத்தையும், அரசின் செயலற்ற தன்மையையும் தினந்தினம் அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

- மே பதினேழு இயக்கம்

Pin It