Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruHistoryWorld
ஹிரோஷிமா - நாகசாகி

ஜப்பான் நாட்டிலுள்ள ‘ஹிரோஷிமா’ நகரத்தின் மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி அமெரிக்கா அணுகுண்டு போட்டது. அந்த அணுகுண்டிற்கு அமெரிக்கா விளையாட்டாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ (little boy) என்பதாகும் மூன்று நாட்கள் கழித்து ‘நாகசாகி’ நகரத்தின் மீது அணுகுண்டைப் போட்டனர். அதற்கு ‘குண்டு மனிதன்’ (fat man) என்று பெயர் சூட்டினர். இந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.

Hiroshima சுமாராகக் கணக்கிட்டதில் ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள் என்றும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்தனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. குண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக்கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர். ‘இறந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏதுமறியாத அப்பாவிப் பொதுமக்கள்’ என்று ஆய்வறிக்கை கூறியது.

அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகயுத்தம் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் செத்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது. நெஞ்சுபதறும் இப்படுபாதகப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கிறது.

“ அணுகுண்டு வீச்சினால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்து கொண்டுதான் அமெரிக்கா இச்செயலைச் செய்தது. அமெரிக்காவுக்கு அணுகுண்டைப் போட எந்தத் தேவையும் அப்போது இருக்கவில்லை” என்று ஜப்பான் தன் நிலையை முன்வத்தது. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜப்பான் சரணடைவதாக அறிவித்து செப்டம்பர் 2 ஆம் தேதி சரணடைவுப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னர் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்கு வந்தது.

‘எனோலாகே’ என்ற விமானம் ‘லிட்டில் பாய்’ என்ற அணுகுண்டை காலை 8.15 மணீக்கு ஹிரோஷிமா நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் போட்டது .அணுகுண்டைத் தாங்கி வந்த விமாமனத்தை ஓட்டிய விமானியும் படைத் தளபதியுமான ‘பால்டிப்பெட்ஸ்’ என்பவரின் தாயார் பெயர்தான் ‘எனோலாகே’ என்பதாகும். அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து நகரத்திற்கு 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. 90,000 மக்கள் செத்து மடிந்தனர். மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தது. கட்டங்கள் தரைமட்டமாயின. தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் ஜப்பானில் வேறு பகுதிகளில் வசித்தவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூட அழிவின் வீச்சு என்ன என்பதை தொடக்கத்தில் தெரிந்து கொள்ள இயலவில்லை.

ஜப்பான் இராணுவத்தின் தலைமையகம் ஹிரோஷிமா நகரத்திலுள்ள இராணுவப் பிரிவை திரும்பத் திரும்ப அழைக்க முயன்றது. மறுபக்கத்தில் எந்தப் பதிலும் கிடைக்காமல் முழு அமைதி நிலவியதால் ஜப்பான் நாட்டின் இராணுவத் தலைமையகம் குழப்பம் மேலிட்டு பதற்றமடைந்தது. ஏற்பட்ட பயங்கர பாதிப்பை ஜப்பான் தலைமை முழுமையாக உணர முடியாத காரணத்தினால் தலைமையிலிருந்து ஓர் இளம் அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா சென்று அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்துவரப் பணிக்கப்பட்டார். அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா விரைந்தார். மூன்று மணி நேரம் பறந்ததற்குப் பிறகு இன்னும் ஹிரோஷிமா சென்றடைய நூறு கிலோ மீட்டர் தூரமே இருந்த போது அவரும் அந்த விமானத்தின் பைலட்டும் வானமண்டலமே புகை கக்கும் மேக மண்டலங்களாக உருவெடுத்திருப்பதைப் பார்த்தனர். மிகுந்த சிரமப்பட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விமானத்தை வேறு ஒரு பகுதிக்குச் செலுத்தி பத்திரமாக இறக்கினர். அந்த இளம் அதிகாரி, ஏற்பட்ட பேரழிவைப் பற்றித் திரும்பி வந்து சொன்ன பிறகுதான் உலகமே இக்கொடுமை குறித்துத் தெரிந்தது.

ஹிரோஷிமா மீது குண்டு போடப்பட்டு பதினாறு மணிநேரம் கழித்து அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம்தான் ஜப்பானின் தலைமையகத்திற்கு குண்டு வெடிப்பின் விபரீதம் விளங்கியது. 1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டுக் கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளீப்பட்டது. பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை,கால், கண்,மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன.

நாகசாகி மீது போடப்பட்ட ‘ஃபேட்மேன்’ அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் தேரிந்தது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சாமதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது.

மூன்று குண்டுகள் செப்டம்பரிலும், முன்று குண்டுகளை அக்டோபரிலும் போட அமெரிக்கா திட்டமிட்டது. இந்தக் குண்டுகள் அனைத்தையும் அன்றைய குடியரசுத் தலைவரின் எழுத்துப்பூர்வமான உத்தரவில்லாமல் போட இயலாது என உயர்மட்ட இராணுவ அதிகாரிகளே தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததால் படிப்படியாக சூழல் மாற்றம் ஏற்பட்டு இத்திட்டங்களைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த வரலாற்றுச் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com