Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
செப்டம்பர் 2008

வென்று சாதித்தது சீனா
மு.சங்கரநயினார்

ஏழு உலக சாதனைகளுடன் 8 தங்கப் பதக்கங்களை வென்று அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப், காற்றின் வேகத்தை வென்று உலகின் அதிவேக வீரர் என்ற பெருமையுடன் பெய்ஜிங்கின் பறவைக்கூடு மைதானத்தை வலம் வந்த ஜமைக்காவின் உசேன் போல்ட், மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற கென்யாவின் சாமுவல் வென்சிடு, தனிநபர்ப் பிரிவில் இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று பெருமை சேர்த்த அபினவ் பிந்த்ரா ஆகிய நட்சத்திரங்களுக்கு மத்தியில் வைரம் பதித்தது போல் ஒரு துருவ நட்சத்திரம் ஜொலித்து நின்றது. அதுதான் மக்கள் சீனம் என்ற சிவப்பு நட்சத்திரம்.

112 ஆண்டுக் கால ஒலிம்பிக் வரலாற்றில் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்குக் கிடைத்த பேரும் பெருமையும் போன்று வேறு எந்த ஒலிம்பிக் போட்டிக்கும் கிடைத்ததில்லை. இனிமேலும் கிடைக்குமா என்பதும் சந்தேகமே. உலகமே வியந்து பாராட்டும் வண்ணம் இத்தனை சிறப்பாக ஒலிம்பிக் போட்டியினை நடத்திக் காட்டி சாதனை மகுடத்தைச் சூடிக் கொண்ட சீனாவின் வெற்றிக்குப் பின்னால் ஒட்டு மொத்த சீன மக்களின் 7 ஆண்டு கால கடின உழைப்பு மறைந்திருந்ததை மறுப்பதிற்கில்லை.

மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப பொருளாதாரம் மற்றும் அனைத்துத் துறைகளிலும் வியத்தகு சாதனைகளைப் புரிந்து வரும் சீனா விளையாட்டுத் துறையிலும் உலக நாடுகளுக்குச் சவாலாக உருவெடுத்துள்ளதில் ஆச்சரியமில்லை. 1952 ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்த சீனா தங்கப்பதக்கத்திற்காக 1984 ஆம் ஆண்டு வரைக் காத்திருக்க வேண்டியிருந்தது. அதன்பின் ஒலிம்பிக் போட்டிகளில் பின்னோக்கிச் செல்வது என்ற பேச்சுக்கே இடமில்லாமல் பதக்கப்பட்டியலில் ஏறு முகத்துடன் இருந்து வந்ததுள்ளது.

சொந்த நாட்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 40 தங்கப்பதக்கங்கள் என்ற இலக்கை நிச்சயித்த சீனா, தங்கப்பதக்கத்தில் அரை சதத்தைக் கடந்து மொத்தப் பதக்க வேட்டையில் சதம் அடித்து சாதித்தது. 51 தங்கம், 21 வெள்ளி, 28 வெண்கலம் என்று பதக்கங்களை வென்று ஒட்டு மொத்தச் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. வழக்கமாக ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டுக்களில் பதக்கங்களை உறுதி செய்த சீனா புதியதாக பல விளையாட்டுக்களில் பதக்கங்களைக் குவித்தது. டேபிள் டென்னிஸ், ஜிம்னாஸ்டிக் ஆகிய போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்றது. இருந்தபோதிலும் கால்பந்து, வாலிபால் போன்ற விளையாட்டுக் களில் சாதிக்க சீனா மேலும் தூரங்களைக் கடக்க வேண்டியுதுள்ளது என்பதும் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெளிப்பட்டது. ஒலிம்பிக் போட்டி களை நடத்தும் வாய்ப்பைப் பெற்ற சீனா எதிர்கொண்ட எதிர்ப்புகள் ஏராளம். பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளை முடக்குவதற்கு மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட பொய்ப்பிரச்சாரங்களையும், சொந்த நாட்டில் இயற்கை ஏற்படுத்திய இன்னல்களையும் தாண்டி எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் போட்டிகளை நடத்திக் காட்டிய சீனா, 29வது ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை தனக்கு வழங்கியது மிகச் சரியே என்பதை உலகிற்கு உணர்த்தியது.

ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்தியதற்காக வரவேற்புக் குழுவினருக்கும், சீன அரசுக்கும், ஒலிம்பிக் வெற்றிக்காக அயராது உழைத்த ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ஷாக் ரோக் தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற மைதானங்களில் யாருக்கும், எப்பொழுதும் எந்தவிதமான உதவிகளையும் செய்வதற்கு தயார் நிலையில் நின்ற நூற்றுக்கணக்கான இளம் தொண்டர்களைக் கண்ட நான் விளையாட்டுத் துறையில் சீனாவிற்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதை உணர்ந்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

204 நாடுகள் கலந்து கொண்ட பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 87 நாடுகள் பதக்கப்பட்டியலில் இடம் பிடித்தன. ஒலிம்பிக் வரலாற்றில் இது ஒரு சாதனையாகும். மேலும் போட்டிகளில் கலந்து கொண்ட மொத்த வீரர்களில் 45 சதவீதம் பேர் பெண்கள் என்பதும், உலகில் அதிகம் பேர் தொலைக்காட்சி மூலம் போட்டிகளைக் கண்டு களித்தார்கள் என்பதும் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்குக் கிடைத்த சிறப்பம்சங்களாகும். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் பெரும் வீழ்ச்சியாக அமைந்தது. சோவியத் யூனியன் என்ற அமைப்பு இருந்த காலத்தைத் தவிர்த்து மற்ற அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் அமெரிக்காவே ஒட்டு மொத்தச் சாம்பியனாக வலம் வந்துள்ளதை நாம் அறிய முடியும். இம்முறை பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட அமெரிக்கா தான் வழக்கமாக பதக்கங்களை வாரிக் குவிக்கும் தடகளத்தில் பெரும் ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது. ஜமைக்கா என்ற கரீபியன் காற்று தடகளத்திலிருந்து அமெரிக்காவைத் தூக்கி வீசியெறிந்து விட்டது. நீச்சல் குளத்தில் சாகசங்கள் புரிந்த மைக்கேல் பெல்ப் என்ற 28 வயது இளைஞன் 8 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது அமெரிக்காவிற்கு ஆறுதலாக அமைந்தது.

முதலில் பதக்கப்பட்டியலில் பின்தங்கியிருந்த ரஷ்யா கடைசி நேர எழுச்சியால் 23 தங்கப்பதக்கங்கள் உள்பட மொத்தம் 72 பதக்கங்களுடன் 3வது இடத்தைப் பிடித்தது.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவைப் பொறுத்தவரையில் இனிய நினைவுகளாக அமைந்து விட்டது என்பதில் நாம் பெருமிதம் கொள்ளலாம். தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் என்ற நமது நீண்ட கனவு அபினவ் பிந்த்ரா என்ற எம்.பி.ஏ பட்டதாரியின் மூலமாக நனவானது. மேலும் மல்யுத்தத்தில் சுசில் குமார் வென்ற வெண்கலப் பதக்கமும், குத்துச் சண்டையில் விஜேந்தர் குமார் வென்ற வெண்கலப் பதக்கமும் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 3 பதக்கங்கள் என்ற இந்தியாவின் உச்சபட்ச சாதனைக்கு துணை நின்றவையாகும். பெய்ஜிங்கில் 3 பதக்கங்கள் என்பதை நாம் சுயபரிசோதனை செய்து பார்த்தால் நாம் செல்ல வேண்டிய தூரம் எங்கோ ஒரு புள்ளி வடிவத்தில் இருப்பதை உணர முடியும். அதை நோக்கிய பயணத்திற்கு இந்த 3 பதக்கங்கள் உந்து சக்தியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

பெய்ஜிங்கில் சாதனையும் வேதனையும்

7 உலக சாதனையுடன் 8 தங்கப்பதக்கங்களை வென்று சரித்திரம் படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப், தடகளத்தில் 3 உலக சாதனையுடன் 3 தங்கப்பதக்கங்களை வென்று உலக அதிசயமாக மாறிய ஜமைக்காவின் உசேன் போல்ட் ஆகிய இருவரும்தான் பெய்ஜிங்கில் மின்னியவர்கள் என்றால் அது மிகையல்ல.

பெண்களில் ரஷ்யாவின் எலேனா இஸின்பயேவா போல்வால்ட்டில் 5.05 மீ உயரம் தாண்டி உலக சாதனை படைத்தார். நீண்ட தூர ஓட்டத்தில் எத்தியோப்பியாவின் கெனனி பெகாலே, திர்னேஷ் திபாபா ஆகியோர் அனைத்துப் பெருமையையும் அள்ளிச் சென்றவர்களாவர். ஆண்கள் பிரிவில் 1980க்குப் பிறகு 5000 மற்றும் 10,000 மீ ஓட்டப்பந்தயங்களில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர் என்ற பெருமையை பெகாலே தட்டிச் சென்றார். 100 மீ ஓட்டப்பந்தயத்தில் உலகச் சாம்பியனான அமெரிக்க வீரர் டைசன் கே பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறாமல் போனது பெரும் சோகமாகும். அதே போல் 1500 மீ மற்றும் 5000 மீ ஓட்டப்பந்தயங்களில் உலகச் சாம்பியனான பெர்னாண்ட் லெகத் 1500 மீ. இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. மேலும் 5000 மீ பந்தயத்தில் நான்காவது இடத்தையே பிடிக்க முடிந்தது.

400 மீ ஓட்டப்பந்தயத்தில் ஜெரமி வோரினர், போல் வால்ட்டில் பிராட் வாக்கர், 200 மீ ஓட்டத்தில் பெண்கள் பிரிவின் அலிசன் பெலிக் ஆகிய அமெரிக்க வீரர், வீராங்கனைகள் தத்தம் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறாமல் போனதும் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியப் பொறுத்தவரையில் வேதனைகளின் பட்டியலில் சேரும்.

110 மீ தடை தாண்டும் போட்டியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனாகவும், உலகச் சாம்பியனாகவும் இருந்த லியூ ஜியாங்கின் கடைசி நேர விலகல் சீனாவை மட்டுமல்ல உலக தடகள ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் உலகச் சாம்பியனான குரோசிய வீராங்கனை பிலாங் விளாசிச்சின் தோல்வியும் எதிர்பாராத ஒன்றாகும்.


காற்றின் வேகத்தை வென்ற உசேன் போல்ட்டைப் பற்றி இப்படிக் கூறுகிறார்கள்.

‘சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. ஒரு காலகட்டத்தில் ஒரு முறை மட்டுமே தோன்றும் அதிசயம். 100 மீ ஓட்டப்பந்தயத்தைக் காண வந்தது எனது வாழ்க்கையின் இனிய தருணமாகக் கருதுகிறேன்.’
ஆதிரேலியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்

5 அல்லது 6 தலைமுறைகளுக்கு ஒருமுறை தோன்றும் அற்புதம்.
முன்னாள் தடை தாண்டுதல் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான எட்வின் மோசஸ்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com