Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
செப்டம்பர் 2008

DYFI 12வது தமிழ் மாநில மாநாடு - விழுப்புரத்தில் இளைஞர்களின் எழுச்சி விழா

அம்மாவோ, அய்யாவோ, ஆசானோ, அண்ணனோ என்று அடிக்காமல் தான் இணைந்த சங்கத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட டி.ஒய்.எப்.ஐ ஊழியர்கள், உணர்வுப் பூர்வமாக நடத்துகின்ற திருவிழா, சங்கமம், புதிய எழுச்சிக்கான வழிகாட்டுதல், இப்படி எந்த வார்த்தைப் பதத்திற்கும் பொருத்தமான மாநாடு, விழுப்புரத்தில் செப் 26 முதல் 29 வரை நடைபெற இருக்கிறது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 12வது மாநில மாநாடு தனது முழக்கமாக.

‘’சமூக பாதுகாப்புடனான வேலை, கல்வி,
சுகாதாரத்தை வென்றிட, தீண்டாமை கொடுமை அகற்றிட,
இளைஞர்களே ஒன்றிணைவோம்!
தமிழக வளர்ச்சிக்கு கரம் கோர்ப்போம்"

என்ற வரிகளை முன்வைத்துள்ளது.

இன்றைய இளைஞர்களை சமூக அளவில், பாதுகாக்க வேண்டிய கடமையை அரசுக்கும், சமூகத்திற்கும் உணர்த்துகிற முழக்கம். அரசோ வேறு ஏதாவது அரசியல் இயக்கமோ, இளைய தலைமுறையின் நலனில் அக்கறை கொண்டு இந்த கோரிக்கைகையை அல்லது முழக்கத்தை முன்நிறுத்தினார்களா? என்ற வினா, விடையில்லாமல், அமைதியாகி விடுவதை பார்க்க முடியும்.

ஒரு முறை தருமன் கண்ணனுடன் ஏழு உலகத்தையும் பார்க்கச் சென்றானாம். கீழ் உலகம் என்றழைக்கப்பட்ட பகுதிக்கு போன போது, அங்கிருந்த மன்னன் யாருக்கும் பிச்சை கொடுக்கவோ தருமம் செய்யவோ இல்லை, என்பதை தெரிந்த தருமன் இந்த மன்னன் மகா கஞ்ச பிரவுவோ, என்று கண்ணனிடம் வருத்தப்பட்டானாம். அதற்கு கண்ணன் இல்லை தருமா இந்த உலகில் யாரும் யாசிக்கிற நிலையில் இல்லை, உன் நாட்டில் நீ செய்கிற தருமம் இன்னும் யாசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தான் உணர்த்துகிறது, என விடை பகர்ந்தானாம். அது போல் தான் அண்ணா பிறந்த செப் 15 முதல் ஒரு கிலோ அரிசியை, ஒரு ரூபாய் விலையில் 20 கிலோ அரிசி ரேசனில் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்து இருக்கிறார். அறிவிப்பிற்கான காரணம் அண்ணாவின் கனவு என்கிறார். அண்ணா 1967ல் தமிழக முதல்வராகி 1969ல் இறந்துவிட்டார். இந்த 41 ஆண்டுகளில் சுமார் 16 ஆண்டுகள் 5 முறை முதல்வராக இருப்பவர் தான் மாண்புமிகு கருணாநிதி இப்போது திடீரென்று அண்ணாவின் கனவு நினைவுக்கு வந்ததன் வெளிப்பாடு, இன்னும் மக்கள் பின் தங்கிய நிலையில் இருப்பதையே உணர்த்துகிறது. என் தருமத்திற்கு ஈடாகுமா? என்ற தருமனைப் போலவே , கருணாநிதி அவர்களும் தன்னைத் தானே வியந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 40 ஆண்டுகளில் இரண்டு தலைமுறை யினர் புதியதாக வெளியேறி உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர், ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை, கல்வி நிலையத்தில் காசு கொடுத்து விலை வாங்கிய படித்தோர். சமூகத்தின் பொறுப்பு என்ற கடமையை அரசின் வாயிலாக அறியாமல் போனவர்கள். இன்றைய தமிழகம் இந்தியா, அல்லது உலகம் முழுவதும் இருக்கின்ற பன்னாட்டு மற்றும் இந்நாட்டு பெரு முதலாளிகளுக்கு உழைத்துக் கொடுக்கும், வளமாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னொருபுறம் அரசு நிறுவனங்களில் கல்வி பயின்று, வேலைதேடி கிடைக்காமல், கிடைத்த வேலையை செய்து கொண்டு பிழைப்பை ஓட்டுபவர்கள். இந்த இரண்டு விதமான விளைவுகள் தனியார் நிறுவனத்தில் பணத்தைக் கொட்டி படித்தால் சம்பாதிக்கலாம் என்பதும், அரசு நிறுவனத்தில் நல்ல மதிப்பெண் பெற்று படித்தாலும், கஷ்ட ஜீவனம் என்ப தும் இலைமறை, காய்மறையாக அப்பாவித் தொழிலாளிக்கும் உணர்த்தப்படுகிறது. வசதி படைத்தோருக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் பல லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை கொடுப்பதை, பெரிய தலைப்பு செய்தி ஆக்காத ஊடகங்கள், ஒரு ரூபாய் அரிசியைப் பெரிய செய்தியாக்கி அரிசி கருனை உள்ளத்தைப் பறை சாற்றுவதாக நடிக்கிறது. இதில் தொழிலாளர்களின் மனித உரிமையும், குடிஉரிமையும் பறிக்கப்பட்டு, ஒரு யாசகனாக, பரிகசிக்கப்படுகிறான்.

தீண்டாமைக் கொடுமை :

கல்வியும், வேலையும் பறிக்கப்பட்டு பரிகாசம், செய்யப்படுவன் யார்? என்ற கேள்விக்குள் ஒரு தனி நபர் மட்டும் இருக்கவில்லை. சமூகமே இருக்கிறது. தலித் என்கிற ஒடுக்கப்பட்ட சமூகமும், அதில் அதிகம் பெண்களாகவும் இருக்கிறார்கள் என்ற விவரத்தையும் அரசே வெளியிட்டு உள்ளது. 42 சதமான தலித் குடும்பங்கள் வேலையின்றி, கிராமத்தில் இருந்து நகரத்தை நோக்கி வெளியேற்றப்பட்டு இருக்கிறது. சுமங்கலித்திட்டம் என்ற பெயரில் சுமார் 4 லட்சம் இளம் பெண்கள் ஈடுபட்டுள்ள பஞ்சாலைத் தொழிலில் 60 சதத்திற்கும் அதிகம் தலித் பெண்கள். காமப் பார்வை, எழுத்தில் வடிக்க முடியாத வார்த்தை அர்ச்சனை வாய்ப்பு கிடைத்தால் மொத்தமாக சதை வெறியை தனித்துக் கொள்ளுதல் என்ற கொடும் சுரண்டலுக்கு ஆளாகும் பெண்களும் இவர்களே.

மறுபுறம் நேரடியாக பல ஆயிரம் கிராமங்களில் தொடரும் தீண்டாமைப் பேய். எண்ணிலடங்கா வடிவத்தில் தீண்டாமை பின்பற்றப்படுகிறது. சமீபத்தில் வெளிவந்த உத்தப்புரம் சுவர் 19 ஆண்டுகளாக கோட்டை மதிலாக காக்கப்பட்டு வருகிறது. 600 மீட்டர் நீளத்தில் 16 அடியை இடித்ததற்காக ஊடகம், ஆட்சியர், சாதியம், அனைத்தும் வரிந்துகட்டி ஆட்சேபித்ததைப் பார்க்க முடிந்தது. இவை அனைத்தையும் மீறித்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் டி.ஒய்.எப்.ஐ உள்ளிட்ட அமைப்புகள் இணைந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் போராடிக் கொண்டிருக்கின்றன.

தமிழக வளர்ச்சி:

வளர்ச்சி என்பது பிரம்மாண்டங்களையும், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிடுகிற 9 சத பொருளாதார வளர்ச்சியையும் மட்டுமே குறிப்பிடுவதாகிவிட்டது. நாணயத்திற்கு மறுபக்கம் இருப்பதைப் போல், வளர்ச்சி என்ற வார்த்தைப் பதத்திற்கும் இருக்கிறது. 6 வழி எக்ஸ்பிரஸ் சாலைகளாக தேசிய நெடுஞ்சாலைகள் மாற்றப்படும் தமிழகத்தில் தான் பள்ளமும், குழிகளும், மண்மேடுகளும் நிறைந்த கிராமச்சாலைகள் உள்ளன. நகரங்களில் பிரமாண்ட கட்டிடங்களுக்கு வரிச்சலுகை கொடுக்கப்படும் தமிழகத்தில் தான் கழிவறை வசதியின்றி, கொக்கிப் புழுக்களாதாக் கப்பட்ட நோயாளிகள் நிறைந்த கிராமம் இருக்கிறது. கின்லேவும், அக்வாஃபினாவும் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தமிழகத்தில்தான், சுத்தமான குடிநீர் இல்லாமல், அவதிப்படும் தமிழர்கள் இருக்கிறார்கள். உள்ளாட்சி நிர்வாகங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் சுமார் 25 சதமானம் உள்ளாட்சித் துறை அமைச்சர் பங்கேற்கும் விழாக்களுக்கு செலவிடப்படுகிறதோ என்ற சந்தேகம் வருகிறது எல்லாத் திட்டத்திலும் ஊழல், லஞ்சம் தலை விரித்தாடுகிறது. வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் சாதாரண மக்களுக்கு செலவிடப்படுவது சிறு தொகை மாத்திரமே.

ஆகவே தான் டி.ஒய்.எப்.ஐ'ன் மாநாடுகள் கிளை துவங்கி மாநிலம் வரை மேற்படி முழக்கத்தை முன் வைத்து நடைபெற்று வருகிறது. 5000க்கும் அதிகமான கிளைகளைக் கொண்ட டி.ஒய்.எப்.ஐ 'ல் 8,45,199 உறுப்பினர்கள் 2007ல் சேர்ந்துள்ளனர். 2008ல் மாநாட்டிற்குள் 10 லட்சம் இளைஞர்களை இணைக்கத் தீவிரமாக ஊழியர்கள் இயங்கி வருகிறார்கள்.

300 கிளைகளில் மாநாடு மூலம் ஐம்பதாயிரம் இளைஞர்களை சந்தித்துள்ளோம், 360 பகுதி அளவிலான மாநாட்டில் 20 ஆயிரம் இளைஞர்களையும், 34 மாவட்ட மாநாட்டில் 6 ஆயிரம் இளைஞர்களையும் சந்தித்து, தமிழகத்தில் வேலை, கல்வி, சுகாதாரம், வளர்ச்சி தீண்டாமை குறித்து பேசியுள்ளோம்.

12 வது மாநில மாநாட்டில் 510 பிரதிநிதிகளும் கலந்து கொள்கிற பிரதிநிதி மாநாடும் லட்சம் இளைஞர்கள் பங்கேற்கிற பேரணியும் நடைபெற உள்ளது. இலவச வாகனம் இன்றி, கூலி இன்றி.

சொந்தப் பணத்தில், மாநாட்டிற்காக உழைத்தது மட்டுமின்றி உடமையையும் வாரி வழங்கும் தியாகச் சுடர்களாக டி.ஒய்.எப்.ஐ இளைஞர்கள் அணிவகுக்க இருக்கின்றனர்.

அரசு எல்லாவற்றையும் வணிகமயமாக்கிவரும் கொள்கையைப் பின்பற்றினாலும், அரசுக்கு இணையாக நீதி, நேர்மை, தியாகம், அர்ப்பணிப்பு என்ற நற்குணங்ககளை ஒரு பல்கலைக்கழகத்தை போல் கற்றுக் கொடுக்கும் பேரியக்கமாக டி.ஒய்.எப்.ஐ இருக்கிறது. பாரதி கண்ட அக்கினி குஞ்சுகளாக, மெல்ல, மெல்ல எரிந்து, அநீதியையும் தீண்டாமைக் கொடுமைகளையும், அரசின் பாரபட்சத்தை எரித்து சாம்பலாக்கும் போர்ப்படையின் அணிவகுப்பு, இன்று விழுப்புரத்தில் என்றாலும், நாளைய இளைஞர்களுக்கான அஸ்திவாரம் என்பதில் மாறுபாடில்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com