Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
செப்டம்பர் 2007

123 சுயசார்பு
வெங்கடேஷ்

ஒண்ணு... ரெண்டு... மூணு... நாடு?!

என்ன இது? ஒண்ணு, ரெண்டு, மூணுக்குப் பிறகு நாலுதானே வரும், நாடு என்கிறீர்களே என்ற உங்கள் கேள்வி என் காதில் விழுகிறது. மத்திய அரசு அமெரிக்காவோடு செய்து கொண்டுள்ள 123 ஒப்பந்த்திற்கு பின்னணியில் நம் நாடு அதன் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது என்பதுதான் விஷயம்.

123 ஒப்பந்தம் எதற்கு?

இந்திய அமெரிக்க நாடுகளுக்கிடையே எட்டப்பட்டிருப்பதாக சொல்லப்படும் 123 உடன்பாடு அணு ஆற்றல் பயன்பாடு சம்பந்தமானது. அமெரிக்க அணுசக்தி சட்டத்தின் 123வது பிரிவின் கீழ் அமெரிக்கா மற்ற நாடுகளுடன் அணுசக்தி தொடர்பாக ஒத்துழைப்பது சம்பந்தப்பட்டது. அதனால்தான் இந்த உடன்பாட்டிற்கு 123 என்று பெயர். பெயர் வைப்பதிலேயே அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் இந்த ஒப்பந்தம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் தரப்பிலிருந்தே இருக்கிறது என்பதுதான் உண்மை.

அணுசக்தியா? பெரிய இடத்து விவகாரம்!

அணு ஆற்றல் அணுசக்தி மேம்பாடு அணு விஞ்ஞானம் இதெல்லாம் மெத்தப் படித்த மேதாவிகள் மட்டுமே சம்பந்தப்பட்ட விவகாரம் என்று நம் நினைத்தால் அதுதான் தவறு. இந்தியா ஒரு வளரும் பொருளாதார நாடு. வளர்ச்சியை தக்க வைக்கவும் மேலும் வளரவும் மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி இந்தியாவுக்கு அவசியம் தேவை. அணு ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க நினைப்பதும், அதற்காக இதர நாடுகளுடன் ஒத்துழைப்பதிலும் எந்த தவறும் இல்லை. ஆனால் நாம் விவாதிக்கப்போகும் இந்த 123 ஒப்பந்தம் நாட்டின் தேவைகளையும், நாம் பாடுபட்டுப் பெற்ற அரசியல் சுதந்திரத்தையும் பாதுகாப்பதாக இல்லை. சொல்லப்போனால், இதை ஒப்பந்தம் என்று சொல்வதைவிடா ‘அடிமை சாசனம்’ என்றே சொல்ல வேண்டும்.

ஆகவே, அணுசக்தி ஒப்பந்தம் என்பது படித்த பெரிய மனிதர்கள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, இந்திய நாட்டின் 110கோடி மக்களின் எதிர்காலத்தோடு பின்னிப் பிணைந்தது என்பதை நாம் உணர வேண்டும்.

அமெரிக்காவில் பிறந்தது...

ஜீலை 18, 2005 அன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஜார்ஜ் புஷ் மன்மோகன் சிங் ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். “நாளைய தினத்தை மனதில் கொண்டல்ல, எதிர்கால சந்ததிகளை மனதில் கொண்டு” இந்திய அமெரிக்க உறவுகள் அமையும் என்று இந்த கூட்டறிக்கை கூறியது. அதாவது, அமெரிக்காவின் ராணுவ, பொருளாதார, அரசியல் நோக்கங்களுக்கு இந்தியா முட்டுக்கொடுக்கும் என்று அர்த்தம். அதைத் தொடர்ந்து மார்ச் 2006ல் ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தார். கடவுளையே நேரில் பார்த்ததுபோல் பக்தி பரவசத்துடன் தான் ஒரு நாட்டின் தலைவர் என்பதையும் மறந்து விமான படிக்கட்டு அருகில் ஓடோடிச் சென்று மன்மோகன் சிங் புஷ்ஷை வரவேற்றார்.

விமானத்திலிருந்தே விவாதிக்கப்பட்டு, மார்ச் 2006ல் சமூக பயன்பாடு மற்றும் ராணுவ பயன்பாடு என்ற முறையில் அணுசக்தி பயன்பாட்டை பிரிக்கும் (separation plan) கூட்டுப் பிரகடத்தை புஷ்ஷீம் சிங்கும் வெளியிட்டனர். இடதுசாரிக் கட்சிகள் இந்த இரண்டு கூட்டு அறிக்கைகளையும் மிகக்கடுமையாக விமர்ச்சித்ததோடு, அவற்றின் உள்ளடக்கத்திற்கு கடும் ஆட்சேபங்களை தெரிவித்தனர். வேறு வழியில்லாமல் இதை பாராளுமன்றத்தில் விவாதிக்க பிரதமர் ஒப்புக்கொண்டார். விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய பிரதமர், இந்த ஆட்சேபங்களை புரிந்து கொண்டிருப்பதாகவும் இறுதி ஒப்பந்த்தில் இவற்றுக்கு திர்வு காணப்படும் என்றும் உறுதி அளித்தார்.

ஆனால்...

2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் ‘ஹைடு சட்டம்’ என்று ஒரு சட்டத்தை இயற்றியது. ஹென்றி ஜே. ஹைடு என்பவர் தாக்கல் செய்ததால் அதற்கு ‘ஹைடு’ சட்டம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது அணு ஆற்றல் தொடர்பான சட்டம் மட்டுமல்ல, அமெரிக்காவின் கேந்திரமான நலன்களை முன்னிருத்தியே ஹைடு சட்டத்தின் உள்ளடக்கம் இருக்கிறது. ஜீலை 2006 கூட்டறிக்கை, மார்ச் 2006 ‘பிரிக்கும் திட்டம் (separation plan), ஆகஸ்ட் 2006ல் பிரதமரின் பாராளுமன்ற வாக்குறுதிகள் இம்மூன்றுமே ஹைடு சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு அர்த்தமற்றதாகிவிட்டன. இந்திய அமெரிக்க உடன்பாடு அமெரிக்க சட்டத்தின் வரம்புக்குள் அடைக்கப்பட்டுவிட்டது இதுதான் இப்போது மையமான பிரச்சனை. இன்னும் எளிதாக சொல்வதானால், 123 உடன்பாட்டின் அனைத்து அம்சங்களும் ஹைடு சட்டம் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கும். 123 உடன்பாட்டின் 2.1 பத்தி இதை ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பது நாம் கவனிக்க வேண்டியதாகும்.

123 உடன்பாட்டின் முக்கியமான அம்சங்களையும் ஹைடு சட்டம் சொல்வதையும் இப்போது ஒவ்வொன்றாக பார்ப்போம்.

எரிபொருள் மறுபயன்பாடு (recycling):

எந்த அணு உலைக்குமே எரிபொருள் அவசியம். யுரேனியம் எனப்படும் தாது இந்தியாவில் அதிகம் கிடைப்பதில்லை. இந்த யுரேனிய எரிபொருளை பயன்படுத்தினால் புளுட்டோனியம் எனும் உபபொருள் கிடைக்கும். இதையும் மறுபயன்பாட்டின் (recycling) மூலம் அணு மின்சாரம் தயாரிக்க பயன்படுத்த முடியும். இப்படி மறுசுழற்சி செய்ய தடையில்லை என்கிறார் பிரதமர். 123 உடன்பாட்டின் பிரிவு 6(iii) ‘அமெரிக்கா அனுமதிக்கும்’ என்று சொல்கிறது. ஆனால் மறுசுழற்சி குறித்த ஹைடு சட்டத்தின் நிபந்தனைகள் 123 உடன்பாட்டிற்கு பொருந்தும் என்று அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் நிக்கலஸ் பர்ன்ஸ் அடித்துச் சொல்கிறார். ஆக, கிடைத்திருப்பது மறுசுழற்சிக்கான ‘அனுமதி’ இல்லை மறுசுழற்சி செய்ய அனுமதி கொடுங்கள் என்று அமெரிக்காவிடம் மடிப்பிச்சை கேட்கும் ‘சலுகை’ மட்டுமே!

1965ம் ஆண்டே இந்தியாவில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் மறுசுழற்சிக்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. “நாற்பதாண்டு காலம் நாம் திறம்பட கையாண்டு வரும் மறுசுழற்சிக்கான நடவடிக்கைகள் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர்” என்று பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர். ஏ.என். பிரசாத் மனம்நொந்து வேதனைப்பட்டுள்ளார். (பிரண்ட்லைன், 24.8.2007)

பாதுகாப்பு நடவடிக்கைகள் (failback safeguards)

“இந்திய அணு உலைகளில் அமெரிக்க அதிகாரிகள் சோதனை நடத்துவது நடக்காத காரியம்” என்று பிரதமர் மன்மோகன் சிங் நீட்டி முழக்கி பாராளுமன்றத்தில் வீரவசனம் பேசினார். “சர்வதேச அணு ஆற்றல் கழகத்துடன் இந்தியா பிரத்யேகமான, நிரந்தர உடன்பாட்டை செய்து கொண்டுள்ளதை அமெரிக்க அதிபர் உறுதி செய்து கொள்வார்” என்கிறது ஹைடு சட்டம். எரிபொருள் வழங்குவது குறித்தும் இதர அம்சங்கள் குறித்தும் அமெரிக்க அதிபர் ஆண்டுக்கொரு முறை இந்தியாவிற்கு ‘நல்ல சர்டிபிகேட்’ வழங்க வேண்டும். அப்போதுதான் இந்த ஒப்பந்தப்படி எரிபொருள் இந்தியாவிற்கு வரும். ஆனால், அணு உலைகள் கண்காணிப்புக்கு மட்டும் இந்தியா ‘நிரந்தர ஒப்பந்தம்’ செய்து கொள்ள வேண்டுமாம்! கூட்டிக்கழித்துப் பார்த்தால், இந்திய அணு உலைகளை சர்வதேச கண்காணிப்பு என்ற பெயரில் அமெரிக்கா கண்காணிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன என்பது புரியும்.

இன்னொரு விஷயமும் இங்கே கவனிக்கத்தக்கது. சர்வதேச அணுசக்தி கழகம் எப்படிப்பட்டது? ஈராக் நாட்டில் பேரழிவு ஆயுதங்கள் ஏதுமில்லை என்று ஹான்ஸ் பிளிக்ஸ் எனும் சர்வத்தேச கழகத்தின் தலைவர் அறிக்கை கொடுத்தாரே? ஆனாலும் அமெரிக்கா ஈராக்கை தாக்கியதே! சர்வதேச அணுசக்தி கழகம் என்ன செய்தது? ஆக, அமெரிக்காவை கட்டுப்படுத்தும் இடத்தில் சர்வதேச அணுசக்தி கழகம் இல்லை. எனவே, சர்வதேச அணுசக்தி கழகத்துடனான பிரத்யேக, நிரந்தர உடன்பாடு என்பது இந்தியாவை புதைகுழியில் தள்ளும் ஏற்பாடே.

அணு ஆயுத சோதனை

“அணு ஆயுதங்களை சோதிக்க நமக்கிருக்கும் உரிமையை விட்டுத்தரவில்லை” என்று பிரதமரும் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அடித்துச் சொல்கிறார்கள். இதில் அடிப்படையான புரிதல் நமக்கு அவசியம் என்று கருதுகிறேன். அணு ஆயுதங்கள் மனிதகுலத்துக்கு பேராபத்தை விளைவிக்கும். உலக நாடுகள் அனைத்தும் அணு ஆயுதங்களை படிப்படியாக அழித்தொழிக்க வேண்டும். இதில் நாம் உறுதியாக இருக்கிறோம். ஆனால், சோதனை நடத்த அமெரிக்கா அனுமதிக்காது என்பது நம் இறையாண்மையை பாதிக்கின்ற அம்சம் என்பதையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும். இந்த இடத்தில்தான் பாஜகவின் எதிர்ப்புக்கும் இடதுசாரிகளின் எதிர்ப்புக்கும் அடிப்படையான வித்தியாசம் இருக்கிறது. பாஜக அணுகுண்டு சோதிக்க முடியாது என்று சொல்கிறது இது நம் சுதந்திரமான செயல்பாட்டை பாதிக்கும் என்று இடதுசாரிகள் சொல்கின்றன.

இது ஒரு புறமிருக்க, அணுசோதனை நடத்தினால் 123 உடன்பாடு முறியும் என்று ஹைடு சட்டம் திட்டவட்டமாக அறிவிக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அணு எரிபொருள் வழங்குவதற்கான நிபந்தனையே இந்தியா அணுசோதனை நடத்தக்கூடாது என்பதுதான் என்று ‘ஹைடு’ சட்டம் தெள்ளத்தெளிவாக குறிப்பிடுகிறது. இந்த சட்டம் மீதான அமெரிக்க நாடாளுமன்ற விவாதங்களில் திட்டவட்டமாக இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. (தி இந்து, 25.8.2007). ஆக இந்தியாவின் சுயேச்சையான, சுதந்திரமான, இறையாண்மை மிக்க செயல்பாட்டிற்கு இந்த உடன்பாடு வேட்டு வைக்கிறது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

ஒப்பந்த முறிவு குறித்தும்...

123 உடன்பாட்டின் 14வது பிரிவும் அதன் உட்பிரிவுகளும் ‘ஒப்பந்த முறிவு’ (termination clause) குறித்து பேசுகின்றன. 14.1 மற்றும் 14.2 ஆகிய பிரிவுகள் ‘இந்தியா நினைத்ததும் உடன்பாட்டிலிருந்து வெளியேற முடியாது’ என்று திட்டவட்டமாக கூறுகின்றன. இதைவிட ஒரு படி மேலே போய், ‘அமெரிக்கா உடன்பாட்டை மீறுவிட்டது என்று காரணம் சொல்லி இந்தியா உடன்பாட்டிலிருந்து விலக முடியாது’ என்று விதி 14.3 கூறுகிறது. ஆனால், உடன்பாட்டை இந்தியா மீறியதாக கருதினால் ஏற்கனவே வழங்கப்பட்ட எரிபொருள் போன்றவற்றை திரும்பப்பெரும் அதிகாரம் அமெரிக்காவுக்கு விதி 14.4 வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.

123 உடன்பாட்டில் ஏற்படக்கூடிய முரண்பாடுகளுக்கு ‘பேச்சுவார்த்தை மூலம்’ தீர்த்துக் கொள்ளலாம் என்று மட்டுமே உடன்பாட்டின் 15வது பகுதி தெரிவிக்கிறது. விதிமீறல் குறித்த எந்த சர்வதேச நீதிமன்றங்களையும் அல்லது தீர்ப்பாயங்களையும் அணுக இந்தியாவிற்கு எந்த வாய்ப்புமே வழங்கப்படவில்லை.

அணுசக்தியையும் தாண்டி...

அணுசக்தி பயன்பாட்டையும் தாண்டி பல நிர்ப்பந்தங்களை இந்தியா மீது அமெரிக்கா சுமத்தியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரங்களுக்கான குழு கடந்த 2.5.2007 அன்று இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் “ஈரான் நாட்டுடன் குழாய் வழி எரிவாயு ஒப்பந்தம் செய்து கொள்ளக்கூடாது; ஈரானுடன் அரசு முறை உறவு கூடாது; பொருளாதார ஒத்துழைப்பு கூடாது” என்றெல்லாம் கட்டளையிட்டு, அப்படி நடந்து கொண்டால் மட்டுமே 123 உடன்பாட்டிற்கு அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் அப்பட்டமாக ஊடுறுவும் வேலை இல்லையா இது? ‘சுயேச்சையான அயல்துறை கொள்கையை பின்பற்றுவோம்’ என்று மத்திய அரசின் குறைந்தபட்ச பொது திட்டத்தில் கூறப்பட்ட வாக்குறுதி என்ன ஆயிற்று? இஸ்ரேல் நாட்டைப்போல் இந்தியாவையும் தன் இளைய பங்காளியாக மாற்றும் அமெரிக்காவின் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த முயற்சிகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது. மேலும், பொருளாதார அம்சங்களிலும் அமெரிக்க நலன்களை ஒட்டியே இந்தியா நடக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. அதற்காகத்தான் அமெரிக்க அதிபர் ஆண்டுக்கு ஒரு முறை இந்தியாவிற்கு ‘நல்ல சர்டிபிகேட்’ கொடுக்கும் ஏற்பாடு ஹைடு சட்டம் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாம் என்ன செய்வது?

நாம் ஏற்கனவே பார்த்ததுபோல், 123 உடன்பாட்டிற்கு தெரிவிக்கப்படும் எல்லா எதிர்ப்புகளும் ஒன்றல்ல. பாஜக இன்று எதிர்ப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதம். ஏனெனில், பாஜக ஆட்சியில் இருந்தபோது வெளியுறவு அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங், அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஸ்ட்ரோப் டால்போட்டுடன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தைகள் இந்த உடன்பாட்டிற்கான அச்சாரத்தை இட்டுவிட்டன. ஆகவே தேச நலன் குறித்து பேச பாஜகவுக்கு எந்த அருகதையும் கிடையாது. ஆனால், இடதுசாரி கட்சிகள் தெரிவித்துவரும் எதிர்ப்புகள் தேசபக்தியின் அடிப்படையிலானது.

இந்தியாவின் அரசியல் சுதந்திரமும் இறையாண்மையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறையோடு இடதுசாரி கட்சிகள் 123 உடன்பாட்டிற்கு ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். இந்த எதிர்ப்பின் வித்தியாசத்தையும், நோக்கங்களையும் மக்கள் மத்தியில் விரிவாக, விரைவாக, எளிதாக கொண்டு செல்வது நம் கடமையாகிறது. 1857ல் நடைபெற்ற மகத்தான சுதந்திர எழுச்சியின் 150வது ஆண்டையும், இந்திய விடுதலையின் 60வது ஆண்டையும் தேசம் கொண்டாடுகிற இத்தருணத்தில், அந்த மகத்தான ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்ட உணர்வை நாம் முன்னெடுத்துச்செல்ல வேண்டியுள்ளது. “தேசம் காப்போம்! தேச சுதந்திரம் காப்போம்! நாட்டின் இறையாண்மை காப்போம்! இந்தியாவை அமெரிக்க ஏவல் நாடாக மாற்ற அனுமதியோம்” என்று இந்திய மக்கள் அனைவரையும் அணிதிரட்டி ஒரே குரலில் போர்க்குரல் எழுப்பச் செய்ய களம் புகுவோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com