Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
செப்டம்பர் 2007

சுமங்கலித் திட்டம் நவீன கொத்தடிமை முறை
ஆர்.வேலுச்சாமி

நகரத்தில் இருந்து ஒரு வாகனம் சுமார் 20 பேர் வரை அமர்ந்து பயணம் செய்யலாம். ஒரு கிராமத்தை நோக்கி செல்கிறது. குறிப்பிட்ட அந்த கிராமத்தை அடைந்தவுடன் வெள்ளை சட்டை வேட்டி அணிந்த உள்ளூர்வாசி வாகனத்தில் ஏறிக்கொள்கிறார். வாகனம் கிராமத்திற்குள் செல்கிறது ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தபின் நகரத்து புரோக்கரும், கிராமத்து புரோக்கரும் வாகனம் இருந்து இறங்கி சில வீடுகளுக்குள் போய் பேசிவிட்டு வருகின்றனர். ஒரு மணி நேர கால இடைவெளியில் 20 பெண்களுடன் அந்த வாகனம் நகரை நோக்கி பயணிக்கிறது. சினிமாவில் வருவதுபோல் இக்காட்சிகள் தினம்தினம் நடந்து கொண்டுள்ளது.

கிராமங்களில் திருமணம் ஆகாமல் இருக்கும் 15 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட இளம்பெண்களுக்கு ‘திருமணத் திட்டம்’ ‘சுமங்கலி திட்டம்’ என்ற பெயரில் 3 வருட வேலை 30 ஆயிரம் ரூபாய் என்கிற கவர்ச்சியான திட்டத்தோடு களம் இறங்கியுள்ளது இன்றைய சுரண்டும் வர்க்கம். உங்கள் வீட்டு பெண்களுக்கு எங்களிடம் பாதுகாப்பு உள்ளது. தங்கும் வசதி, உணவு இலவசமாக தருகிறோம். எங்கள் நிறுவனத்தில் தங்கி வேலை செய்பவர்களுக்கு கலர் டி.வி. கூட இருக்கிறது.

மேற்கண்ட கவர்ச்சியான வார்த்தைகளில் மயங்கிய இளம்பெண்களும், இவர்களது பெற்றோர்களும் முன்பின் தெரியாத ஒரு நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் தங்கி பணியாற்ற தங்கள் வீட்டு பெண்களை, உள்ளூர் புரோக்கரின் நம்பிக்கையின் பேரில் வேலைக்கு இடம் பெயரும் நிலைமை அதிகரித்துள்ளது. குறிப்பாக விவசாயம் சார்ந்த மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக ஈரோடு, கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி, சேலம், நாமக்கல், கரூர், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.
வீட்டில் சும்மாதானே இருக்கிறே. 3 வருடம் சீக்கிரம் ஓடிப்போய் விடும் என்றும், 3 வருடத்திற்குபின் தங்கத் தாலியும், கல்யாண செலவுக்கு 30 ஆயிரம் ரொக்கம் கிடைக்கும் என்றும் இளம்பெண்களை, மூளை சலவை செய்து அழைத்துவரும் காட்சிகள் அரங்கேறுகின்றன.

கேம்ப் கூலி என்ற அழைக்கப்படுகிற இப்பெண்கள் தொழில் நிறுவன வளாகத்தில் எந்த வசதியுமில்லாத குடோன்களில் மாட்டு தொழுவத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். கழிப்பிடம் செல்ல, குளிக்க முறையான ஏற்பாடுகள் எதுவுமின்றி மிக சர்வசாதாரணமாய் ஆண் தொழிலாளர்களின் கண் பார்வை படும் இடங்களாய் இவ்விடங்கள் உள்ளன. சுகாதாரம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்குமளவிற்கு மோசமான தங்குமிடங்கள், பெண்களுக்கு ஏற்படும் இயற்கையான உடல் பிரச்சினைகள்வட சமாளிக்க முடியாமல் தவிக்கும் நிலை. உணவு கிடைக்கும் ஆனால் அதன் தரம் மிகமிக மோசம். இதைவிட வேலைக்கு அழைத்து வரப்பட்ட பெண்களிடம் வேலை வாங்கும் முறை.

ஒரு ஷிப்ட் என்பது 8 மணி நேரம். ஆனால் இவர்களுக்கு ஒரு ஷிப்ட் என்பது 12 மணி நேரம். சில நாட்களில் 16 மணி நேரம் கட்டாயப்படுத்தப்படும். ஆலைகளில் 8 மணி நேர வேலையே உடலை தளர்வு ஏற்படுத்திவிடும். பல நாட்கள் 16 மணி நேரம் வேலை வாங்கப்பட்டாலும் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட அதே 3 வருடம் 30 ஆயிரம் தான் சம்பளம். கடுமையாக உழைத்த பெண்களுக்கு ஓய்வுக்கான தங்குமிடம் என்று கொசுக்கடிகள் நிறைந்ததாய் இருக்கும். (அடிமைகளுக்கு கொடுக்கப்பட்ட சவுக்கடிகளைவிட மோசமாய் இருக்கும்).

மூன்று ஆண்டு முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இப்பெண்கள் மீது ‘ஒழுங்கு இல்லை’ எனக் கூறி நடவடிக்கை எடுத்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். ஒரு பைசா கூட தரமாட்டார்கள். இல்லையெனில் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவார்கள். 15 வயது முதுல் 20 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் தங்கள் பெற்றோரை பார்க்க அனுமதியில்லை. ஊர் திருவிழா உள்ளிட்ட மிக முக்கிய பண்டிகைகளுக்கு கூட சொந்த ஊருக்கு போய்வர அனுமதியில்லை என பட்டியல் நீளும்.

கோவை மாவட்டத்தில் 798 பஞ்சாலைகள் இருப்பதாக அரசும், 1046 பஞ்சாலைகள் இருப்பதாக தொழிற்சங்கங்களும் கூறுகின்றன. தமிழகத்தில் சுமார் 2000 பஞ்சாலைகள் உள்ளன. 90%த்திற்கும் மேற்பட்ட ஆலைகளில் மேற்கண்ட கேம்ப் கூலிமுறைகள்தான் உள்ளன. மேற்கண்ட ஆலைகளுக்கு சுமார் 3.5 லட்சம் தொழிலாளர்கள் தேவை. நிரந்தரப்பணி முற்றிலும் ஒழிக்கப்பட்ட நிலையில் தினக்கூலி முறையும், கேம்ப் கூலியுமாகத்தான் இன்றைய நிலை உள்ளது. இவர்கள் இங்குதான் வேலை செய்கிறார்கள் என்பதற்கு எவ்விதமான ஆதாரமும் யாரிடமும் கிடையாது.

அரசும், அரசின் சட்டங்களும் இவர்களுக்கு என்ன செய்யும்? கடந்த 22.6.2007 வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறையின் அரசாணை எண் 137ன்ப தொழிலாளர் ஆணையர் மற்றும் தொழிற்சாலைகளின் தலைமை ஆய்வர் ஆகியோர் பரிந்துரைத்தபடி, பஞ்சாலை நிர்வாகங்கள் திருமணமாகாத இளம்பெண் தொழிலாளர்களை கேம்ப் கூலி முறையில் அப்ரண்டீஸ் என்ற பெயரில் பணியமர்த்தி அவர்களிடம் முழு உற்பத்தியையும் வாங்கி அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அனைத்து சட்ட சலுகைகளையும் அளிக்காமல் இருப்பதை தவிர்க்கவும், அதற்கு தேவையான நடவடிக்கையினை எடுக்கவும், ஈரோடு, கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி, சேலம், நாமக்கல், கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க அரசு ஆணையிட்டது.

அதனடிப்படையில் கீழ்க்கண்ட அதிகாரிகளை குழுவின் உறுப்பினர்களாக மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகவும், மாவட்டத்திற்கான தொழிலாளர் துறை ஆணையர், மாவட்டத்திற்கான தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக கொண்ட ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழு ஆய்வுக்கு செல்லும்போது மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை அலுவலர்களையும் மற்றும் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலரையும் உடன் அழைத்து செல்ல மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இளம்பெண்களை பயிற்சித் தொழிலாளர்களாக பணியமர்த்தியுள்ளதாக கருதக்கூடிய ஆலைகளைக் கண்டுபிடித்தும், அவ்வாலைகளில் பயிற்சியாளர்களாக பணிபுரியும் இளம்பெண் தொழிலாளர்களின் பணிநிலைமைகளை ஆய்வு செய்தும், பயிற்சியாளர் என்ற பெயரில் இளம்பெண்களை மேற்கண்ட ஆலைகளில் பணிசுரண்டல் செய்வதை தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கியும், ஆய்வுக்குழுவானது ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இக்குழுவானது முன்அறிவிப்பு இல்லாமல் எந்த ஆலையையும் ஆய்வு செய்யலாம். ஆலைகள் மற்றும் இளம்பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் இடம், தங்க வைக்கப்பட்டுள்ள இடம் ஆகியவற்றை பார்வையிடவும், ஆய்வு செய்யவும், புகைப்படம் எடுக்கவும் இக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இக்குழு வேண்டுகோள் விடுத்தால் காவல்துறை கண்காணிப்பாளர் தேவையான அளவு காவல்துறை அலுவலர் மற்றும் காவலர்களை பாதுகாப்புக்காக அனுப்பி உதவ வேண்டும். இக்குழுவானது தனது அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அரசாணை எண் 137 அமுலாக்கப்பட்டுள்ளதா? அமுலாக்கப்படுமா? தொடர்ந்து பத்திரிகைகளில் வரும் செய்திகள் அரசை ஏதாவது வகையில் நிர்ப்பந்தப்படுத்தியுள்ளதா? புகார் தரப்பட்ட இடங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

இதுவரை நமது அனுபவம் தொழிலார் நலத்துறை, அரசு ஆணை, காவல்துறை, அதிகாரிகள் யாவரும் நிர்வாகத்திற்கு சாதகமாகவே உள்ளனர். புகார் வந்தால் அதிர்ச்சியடைய வேண்டிய அதிகாரிகள் மகிழ்ச்சியடைகின்றனர். காரணம் புகாரின்மீது ஆய்வுக்கு சென்றால் நிர்வாகத்தை கூடுதலாக நிர்பந்தப்படுத்தி கையூட்டு பெறலாம். மறுபுறம் தொழிலாளிக்கு சாதகமாக எதுவும் இல்லாமல் உள்ளது.

உழைக்கின்ற மக்கள் சமூக அவலங்களுக்கு எதிராக கூட்டம் கூட்டமாய் ஒன்றுகூடி போராமல், அரசும், அரசின் சட்டங்களும் நமக்காக பேசாது. சுரண்டல் பேர்வழிகளின் கொள்ளை லாபத்திற்கு துணைபோகும் அரசை நமக்கு சாதகமாக பேசவைக்க சமூகத்தின் சகல பகுதியினரும் தெருவுக்கு வருவது அவசியம்.

வறுமையை காரணம் காட்டி இளம்பெண்களின் உழைப்பை சுரண்டுவதை தடுத்திட, திருமணத்திட்டம், சுமங்கலி திட்டம் தடை செய்திட, எந்த தொழிலாளியாக இருந்தாலும் 8 மணி நேர வேலையை உறுதி செய்ய, சம வேலைக்கு சம ஊதியம் பெற்றிட சட்டப் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு பெற்றிட உழைப்புக்கு ஏற்ற கூலி, வாழ்க்கை தேவைக்கான கூலியை உறுதி செய்திட கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை முழுமையாக அமுலாக்கிட கேம்ப் கூலி என்ற நவீன கொத்தடிமை முறையை ஒழித்திட அணிதிரள்வோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com