Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
செப்டம்பர் 2007

போராட்ட பெருமை நிறைந்த கியூபா
எஸ்.கண்ணன்

உனது நாடு எப்படி இருக்கவேண்டும் என்று முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்த இளைஞனிடம் வினவினால், “அது கியூபாவைப்போல் இருக்க வேண்டும்” என்பான். சொல்வதைத்தான் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்று நமது நாட்டின் ஆட்சியாளர்கள் சொல்வார்கள். ஆனால், கியூபா என்ற சோசலிச நாடு உலகின் முன்னுதாரணம். எண்ணம், எழுத்து, பேச்சு என எல்லாவற்றிலும் அதிபர் தொடங்கி குடிமகன் வரை ஒரே தரத்தில் இருக்கிற நாடு. சோசலிசம் அல்லது வீரமரணம் என்றார் பிடல். ஆகவேதான் பிடல் லத்தீன் அமெரிக்க நாடுகளின் எழுச்சித் தலைவனாக காட்சியளிக்கிறார். இரண்டு முழக்கங்களும் நாட்டிற்காக முன்வைக்கப்பட்டாலும், கொள்கையில் மாறுபட்டவை. அப்படிப்பட்ட கொள்கை ரீதியாக மாறுபட்ட நாடு கியூபா.

ஹவானா நகரில் பிரமாண்டமாகக் காட்சியளிக்கும் மாளிகை. முன்பு முதலாளித்துவ அரசின் அதிபர்கள் குடியிருந்தார்கள். நமது மன்னர்களின் மாளிகைகளைப்போல் எல்லாவித ஆடம்பரங்களும், அங்கே 48 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்திருக்கின்றன. இன்று அது புரட்சியின் நினைவலைகளை ஒலிபரப்பும் அருங்காட்சியகம். அழகான ஓவியங்களுடன் காட்சி தரும் கூட்ட அரங்கில் வைக்கப்பட்டடுள்ள தொலைக்காட்சி, திரும்பத் திரும்ப ஒரே காட்சியை ஒளிபரப்பிக் கொண்டே இருக்கிறது.

அது “சே” என்கிற உலக இளைஞர்களின் நாயகனின் இறுதி ஊர்வலம் எல்லோருக்கும் இறுதி ஊர்வலம் ஒரு முறை தான் நடைபெறும். ஆனால் சே குவேராவிற்கு மட்டும் தான். இறுதி ஊர்வலம் 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடைபெற்றது. பொலிவியாவின் காடுகளில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட சேயின் எலும்புகளை, வரவேற்க கியூபாவின் மக்கள் திரள் திரண்டெழுந்த காட்சியும், ராணுவத் தலைவர்களும், பிடலும் அமைச்சர்களும வரவேற்ற விதம், “சே” என்கிற சரித்திர நாயகனுக்கு மட்டுமே கிடைக்கும். சேயின் மகள் அலெய்டா “எங்கள் அப்பா ஒரு ஹீரோவைப் போல திரும்பியிருக்கிறார்” என்றார். அத்தகைய ஹீரோ “சே” வாழ்ந்த நாடு கியூபா.

இன்றைய தற்காலிக அதிபர் ரால் காஸ்ட்ரோ, அவர் மனைவி வில்மா, காமிலோ, காந்தர் மரியா என்ற பெண்மணி உள்ளிட்ட எண்ணற்ற வீரர்கள் தலைமையில் புரட்சி நடந்தது. உண்மையான மக்களாட்சியை நடத்திக் கொண்டிருக்கிற நாடு கியூபா. 1959 இல் புரட்சி வெற்றி பெற்றது. 1961 இல் அமெரிக்கா கியூபாவின் மீது படை எடுக்கிறது. அந்த படையெடுப்பை 72 மணி நேரங்களில் மறியடித்து, முதன் முதலில் அமெரிக்காவை வென்ற நாடு அல்லது பிரட்யிடித்த நாடு கியூபா. நமது நாட்டில் எப்போதும், குண்டு துளைக்காத கூண்டில் இருந்து தான் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை நமது பிரதமர்கள் ஏற்றுகிறார்கள்.

640 முறை கொலை முயற்சிக்கு ஆளான பிடல் காஸ்ட்ரோ அல்லது தற்போதைய அதிபர் ரால் காஸ்ட்ரோ என யாராக இருந்தாலும் குண்டு துளைக்காத கூண்டுகளைத் தேடிக்கொண்டிருக்கவில்லை. திறந்த வெளியில் இருந்தே உரை நிகழ்த்துகிறார்கள். உலகில் 640 முறை கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட ஒரே நபர் பிடலாகத்தான் இருப்பார். அத்தனை முறையும் அந்தச் சதியை முறியடித்த பெருமை கியூபாவிற்கு மட்டுமே உண்டு.

“நாங்கள் யதார்த்த வாதிகள், ஆனால் அசாத்தியங்களைக் கனவு காண்கிறோம்” என்றார் சே. அமெரிக்காவிற்கு ஒவ்வொரு சதியையும் கண்டறிந்து அதை முறியடித்த இளைஞர்களுக்கு சே வின் வார்த்தைகள் ஆதர்ஷ சக்தியாக இருந்திருக்க வேண்டும். ஆம் அசாத்தியங்களை, முடியாது என்று சொல்லப்பட்டவைகளை கனவு காணும் மக்களாக கியூப மக்கள் இருக்கிறார்கள்.

1991 ஆம் ஆண்டு சோசலிச நாடாக இருந்த சோவியத் யூனியன் அரசியல் மாற்றத்திற்குப் பின், பல நாடுகளாகச் சிதறியது. கியூபாவுடன் இருந்த வர்த்தக உறவும் முறிந்தது. அது வரை வளமாக இருந்த கியூபா மிகக் கொடிய வறுமையை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. பெட்ரோல் பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறை, மின்சாரப்பற்றாக்குறை, போக்குவரத்து முடக்கம் என கடும் நெருக்கடிக்குள் சிக்கியது. இருந்த போதிலும், நெருக்கடியை, வறுமையை மக்களுடன் இணைந்து காத்தல், காரணத்தினால் படிப்படியாக முன்னேறி, நாட்டின் மொத்த உற்பத்தியில் 12.5 சதவீத வளர்ச்சியை அடைந்த மகத்தான நாடாக கியூபா விளங்குகிறது.

புரட்சி நடந்த காலத்தில் இருந்து, கியூபாவுடனான உலக நாடுகளின் வர்த்தகத்தை அமெரிக்கா முடக்கி வைத்துள்ளது. பொருளாதார தடையை விளக்கிக் கொள்ள முடியாது என மூர்க்கத்தனமாக அமெரிக்கா நடந்து கொள்கிறது. கியூபாவில் இருந்து மக்களை சட்டவிரோதமாக வெளியேறி அமெரிக்காவில் அடைக்கலம் புக ஏற்பாடு செய்து வருகிறது. அவர்களை கியூபாவிற்கு எதிரான தீவிரவாதிகளாக மாற்றி, அமெரிக்க மாகாணமான மியாமியைத் தலைமையிடமாகக் கொண்டு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அப்படிப்பட்ட தீவிரவாதச் செயல்களை முறியடித்த குற்றத்திற்காக கியூபாவைச் சேர்ந்த அந்தோணியோ கெராரோ, பெர்ணாண்டோ கோன்சலாஸ், ஜெரார்டோ ஹெரனடஸ், ராமோன் லெபானினோ, ராளே கேன்சலாஸ் ஆகிய 5 பேரும் கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

19 வருடம், 18 வருடம். 15 வருடம், 12 வருடம், 16 வருடம் என சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். இது முறைப்படியான போர் அல்ல. அவர்கள் 5 பேரும் போர்க் கைதிகள் அல்ல. தாய்நாட்டை தீவிரவாதிகளிடம் இருந்து தடுத்ததிற்காக நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள். இதை எதிர்த்து வலுவான பிரச்சாரத்தை உலகமெங்கும் மேற் கொண்ட நாடாக கியூபா விளங்குகிறது. அதேபோல் மியாமிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தபோது எலியன் என்ற 6 வயதுக் குழந்தையை பிரித்து சுமார் 11 மாத காலம் குழந்தை பெற்றோரை சேர அனுமதி மறுத்தது அமெரிக்கா.

அந்த 11 மாத காலமும் கியூபாவில் உள்ள அமெரிக்கத் தூரத்திற்கு முன்பு தொடர் போராட்டங்களை நடத்தியும், உலக மக்களின் சகோதரத்துவ இயக்கங்களினாலும் வெற்றி பெற்றது கியூபா. இறுதியில் குழந்தை எலியன் தனது பெற்றோரைச் சென்றடைந்தான். இப்படி ஒவ்வொரு நொடியும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுகிற ஒரு நாட்டிற்கு செல்வதற்கு வாய்ப்பு என்பதே மிகப் பெரிய உற்சாகம் தருகிற செய்தி.

மேலே குறிப்பிட்ட அனைத்தையும் பத்திரிக்கையில் செய்தியாக படிக்கிற போது கியூபா மீதுள்ள சகோதரத்துவம் இயற்கையாக உள்ளதை விடவும் அதிகரிக்கிற ஒன்றாக மாறும. ஆனால், அத்தகைய போராளிகளை அத்தகைய வீரமிக்க மனிதர்களைச் சந்திக்கப் போகிறோம் என்றால், நமது உற்சாகத்திற்னு அளவு கோல் இருக்க வாய்ப்பில்லை. தோழர்களும, அதே உற்சாகத்தோடு வழியனுப்பி வைத்தனர். ஹவானா நகரின் ஜோஸே மார்த்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஜூலியோ அந்தோணியோ மேளா சர்வதேச முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

போய்ச்சேரும் போது மணி இரவு 8.30. ஆனால் மாலை 6 மணி போல் அவ்வளவு வெளிச்சம். விசாரிக்கிற போது, செப்டம்பர் மாதம் வரையிலும் இரவு 9 மணிக்குத்தான் இருள் வரத் துவங்கும் என்றார்கள். உலக வரைபடத்தில் இந்தியாவிற்கு மேற்கே வெகு தொலைவில் உள்ள நாடு கியூபா. இந்தியாவிற்கும், கியூபாவிற்கும் இடையே 9.30 மணி நேரம் வித்தியாசம். அதாவது இந்தியாவில் சூரியோதயம் துவங்கி 9.30 மணி நேரம் கழித்தே கியூபாவில் சூரியோதயம் துவங்கும்.

புவியியலாளர்கள் சொல்கிற பூ மத்திய ரேகைக்கு கீழ் வருகிற நாடாக கியூபா இருக்கிறது. அதனால் இந்தியாவின் தட்பவெட்பம் தான் அங்கேயும் நிலவுகிறது. நம் நாட்டில் விளைகிற பெரும்பாலான உணவுப் பொருட்கள் அங்கேயும் விளைகிறது. மா, வாழை, கரும்பு, தென்னை, உருளை, மரவள்ளி, சர்க்கரை வள்ளி, நெல், பயிறு வகைகள், வெள்ளரி, வெண்டைக்காய் என அனைத்தும் கிடைக்கிறது. பயிர் வகைகள் மட்டுமல்ல, மனிதர்களும் ஓரளவு நம்மைப் போலவே இருக்கிறார்கள்.

(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
poonkodi
2007-11-19 09:19:00
poo_kodi3000@yahoo.co.in

This report is too nice about Cuba.



கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

http://semmalar.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP