Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
அக்டோபர் 2008

அணு உடன்பாடு பயன் யாருக்கு?

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அணு உடன்பாடு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கின் கையெழுத்துக்களுடன் அதிகார அந்தஸ்த்தையும் பெற்றது விரைவிலேயே செயலாக்கப்பட விருப்பது அநேகமாக உறுதியாகி விட்டது.

புஷ், மன்மோகன் சிங் இருவருமே இன்னும் சில மாதங்களிலேயே முடிவிற்கு வரவிருக்கும் தங்கள் பதவிக் காலத்திற்குள்ளேயே உடன்பாட்டைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதில் குறியாக இருந்திருக்கின்றனர். குறிப்பாக மன்மோகன் சிங் தமது பதவிக்காலமான ஐந்து ஆண்டுகளில் நான்கு ஆண்டுகளை இந்த ஒரு விஷயத்திற்கே செலவழித்திருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தேசிய பொது வேலைத்திட்டத்தைவிடவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சீர்கெட்டுப் போன கிராமப்புற, விவசாயப் பொருளாதாரத்தைச் சரி செய்தல், வேலையில்லாமல், வறுமையில் உழல்வோரின் துயர் நீக்க, வேலை வாய்ப்புக்களைப் பெருமளவில் உருவாக்குதல் போன்ற பணிகளைவிடவும் அதிக முக்கியத்துவத்தை இந்த உடன்பாட்டிற்குக் கொடுத்திருக்கிறார் என்று கூடச் சொல்லலாம்.

ஜூலை இறுதியில் மக்களவை நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்று சூட்டோடு சூடாக அணு உடன்பாட்டை அதன் இறுதிக் கட்டத்திற்கு விரைவாகவே கொண்டு வந்துவிட்டது. மன்மோகன் அரசு. புஷ்சும் ஓட்ட, ஓட்டமாக ஓடி அமெரிக்க நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டத்தின் கடைசி நாட்களில் உடன்பாடு நகலையும் அது சார்ந்த ஆவணங்களையும் தனது விளக்கங்களுடனும், தீர்க்கமான முடிவுகளுடனும் அவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்து விட்டார்.

அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்த உடன்பாடு எந்நிலையில் இருக்கும் என்று சொல்ல வேண்டிய-தில்லை. ஒரே குழப்பம், குழப்பத்திற்கு மேல் குழப்பம். இரு நாடுகளின் அமைச்சர்களும், அதிகாரிகளும் அவரவருக்குத் தோன்றும் வியாக்-கியானங்களையும், விளக்கங்களையும் சொல்லி மேலும் குழப்புகின்றனர். இரு நாடுகளும், மாறுபட்ட இரு வேறு விளக்கங்கள் தந்து உடன்-பாட்டில் அவற்றிற்கு உண்மையிலேயே உடன்பாடு, உள்ளதா என்ற ஐயத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

2005 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்த புஷ், பிரதமர் மன்மோகன்சிங்குடன் நடத்திய பேச்சு வார்த்தைகளின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையின் அடிப்படையில் உருவாகியது தான் இந்திய அமெரிக்க அணு உடன்பாடு, இந்தியா சிவில் (இராணுவம் சாராத) அணு சக்தித் துறையில் அடைந்திருக்கும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அத்துறையில் அதன் தேவைகளை, உலைக்களங்-களுக்கான எரிபொருள், உற்பத்திக்கருவிகள், உபகரணங்கள் போன்ற தேவையானவற்றையும் குறிப்பிட்ட அளவிலான தொழில் நுட்பம் போன்றவற்றை தங்கு தடையின்றி விநியோகிப்பது தான் 123 உடன்பாடு என்று அழைக்கப்படும் இந்த அணு உடன்பாட்டின் முக்கிய நோக்கம் ஆனால் இந்த வர்த்தகத்தின் பயனாகவோ அல்லது வேறு வழியிலோ அணு ஆயுதங்கள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாலோ அல்லது அணு ஆயுதப் பரிசோதனையை மேற்கொண்டாலோ வர்த்தக நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படும் என்பது முக்கியமான ஒரு நிபந்தனை. நாற்பது ஆண்டுகள் அமலில் இருக்கும் அணு உடன்பாடு மேலும் 10 ஆண்டுகள், நீட்டிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம் தான். ஒரு வருட முன்னறிவிப்புக் கொடுத்துவிட்டு உடன்பாட்டை முடித்துக் கொள்வதற்கு இதர நாடுகளுக்கும் அதிகாரம் கொடுக்கப் பட்டிருக்கிறது.

தேவையான உதவிகள் தேவையான நேரத்தில் தங்குதடையின்றிக் கிடைக்குமானால் அணு சத்தியை ஆக்கப்பூர்வமான வகையில் பயன்படுத்தி இந்தியப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதில் சந்தேகமில்லை மின் உற்பத்தியைப் பெருக்கி தொழில் வளர்ச்சியை உறுதி செய்து கொள்ள முடியும் என்பதிலும் உண்மை இல்லாமலில்லை. எனினும் கொடுப்போருக்கும், கொள்வோருக்கும் இடையிலான இது போன்ற உடன்பாடுகளின் வெற்றி கொடுப்போரின் நம்பகத்தன்மையையும் அவர்களின் முற்கால நடவடிக்கைகளையும் பொறுத்துத்தான் இருக்க முடியும். அமெரிக்க உதவி பற்றிய முன் அனுபவம் நம் நாட்டிற்கு உண்டு. தாராபூர் அணு நிறுவனத்துடன் தான் செய்து கொண்ட இது போன்ற ஒரு 123 உடன்பாட்டை தடாலடியாக முறித்துக் கொண்டு 10,15 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நிறுவனத்தை நட்டாற்றில் விட்டுச் சென்ற அமெரிக்கக் கொடுமையை இன்னமும் இந்நாட்டு மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியாவிற்கு மட்டுமின்றி, பிற நாடுகளுக்கும் இது போன்ற அமெரிக்க அனுபவங்கள் உண்டு.

அமெரிக்காவுடனான இந்த உடன்பாட்டின் முக்கியப் பங்களிப்பு மின் உற்பத்தித்துறையிலிருக்கும் என்பது வல்லுனர் சிலரின் கணிப்பு. தற்பொழுது இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் வெறும் மூன்று விழுக்காடுகள் தான் அணு மின்சக்தி மூலம் கிடைக்கிறது. ஆனால் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவழித்தாலும் அடுத்த 20 ஆண்டுகளில் இதை 6 அல்லது 7 விழுக்காடுக்களுக்கு மேல் உயர்த்த வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், பிற வழிகளில் மின் உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவை விட அணு மின்சார உற்பத்திச் செலவு பன்மடங்கு அதிகம் என்றும், அதன் விளைவாக அதன் விநியோக விலையும் மிக அதிகமாகவே இருக்கும் என்பதும் நிபுணர்கள் கருத்து.

உடன்பாட்டின் வேறுசில பயன்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன. அணு சக்தித்துறையில் இந்தியா சாதனைகள் பல புரிந்திருந்தாலும் பிற உலக நாடுகளால் கடந்த 30 ஆண்டுகளாகத் தனிமைப்படுத்தப்பட்டே இருந்து வந்திருக்கிறது என்றும், அந்நிலையை அமெரிக்காவுடனான உடன்பாடு மாற்றிவிடும் என்பது சிலரது எதிர்பார்ப்பு. அமெரிக்காவுடன் உறவை பலப்படுத்திய இந்தியா “சூப்பர் பவர்’’ அந்தஸ்த்தைப் பெற்று விடும் என்பது வேறு சிலரின் கனவு. ஆனால் இதற்கெல்லாம் இந்நாடு கொடுக்க வேண்டிய விலை என்ன என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்காது.

123 ஒப்பந்தத்தில் இறுதியாகக் கையெழுத்திடுவதற்கு முன்னராக, அமெரிக்க நாடாளுமன்றம் 2006 ல் இயற்றியிருக்கும் ஹைட் சட்டத்தின் அடிப்படையில் இந்தியா தனது நீண்டகால நிலைப்பாடுகள் சிலவற்றை மாற்றிக் கொண்டு இரண்டு அமெரிக்கச் சார்பு அமைப்புகளில் சில உறுதி மொழிகளைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1952இல் இயற்றப்பட்ட அமெரிக்க அணு சக்தி சட்டத்தின் 123 வது பிரிவின்படி அந்நாடு தனது அணு சக்தித் தொழில் நுட்பத்தை வேறு நாடுகளுக்குக் கொடுக்க முடியாது. இந்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் ஏற்படுத்-தினால்தான் இந்தியாவுடன் சிவில் அணு வர்த்தக உடன்பாடு செய்து கொள்ள முடியும். அந்த திருத்தங்களைத் தாங்கி வந்த புதிய சட்டம் தான் ஹைட் சட்டம் இச்சட்டம் பல கடுமையான நிபந்தனைகளைக் கொண்டது. இந்தச் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் எந்த ஒரு நாட்டுடனும் அமெரிக்கா உடன்பாடு காண முடியும். இதை புஷ் மிக உறுதியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்தச் சட்டமும் புஷ்சின் உறுதிப்பாடும் எரிபொருள் சம்பந்தமான இந்திய எதிர்ப்புகளைத் தகர்த்தெறிந்து விட்டன. மேலும், இச்சட்டத்தின் படி உடன்பாட்டில் கையெழுத்திடும் எந்த நாடும் அமெரிக்க வெளி உறவுக் கொள்கைக்கு மாறான நிலைபாட்டை எடுத்தால் உடன்பாடு மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும். எடுத்துக்காட்டாக, அமெரிக்கா இரானின் அணு சக்தி முயற்சிகளைத் தடுக்க முற்படும் பொழுது இந்தியா அந்த நடவடிக்கையை விமர்சிக்கவோ, எதிர்க்கவோ கூடாது. அணுசக்தி பரவலாக்கத்திற்கு எதிரான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்துப் போடாமல் இருப்பதற்கு தனக்குள்ள உரிமையை வலியுறுத்துவது போலவே இரானும் செய்து வருகிறது. இதற்கு இந்தியா ஆதரவாகவும் இருந்து வந்திருக்கு. ஆனால் இந்நிலை தொடர முடியாது. மீறினால் இந்திய அமெரிக்க அணு உடன்பாடு ஆட்டம் கண்டுவிடும். எனவே ஹைட் சட்டத்தின் கடுமையான அம்சங்கள் இந்தியாவின் சுயேட்சையான வெளி உறவுக் கொள்கைக்கு வேட்டு வைப்பனவாக இருக்கின்றன.

மேலும் அமெரிக்க உடன்பாட்டிற்கு வழி வகுக்கும் வகையில் சர்வதேச அணு சக்தி முகமையின் பாதுகாப்பு வளையத்திற்குள் தனது எல்லா அணு சிவில் உலைக்களங்களையும், கொண்டு வர வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு ஏற்பட்டது. இது தவிர, அணு விநியோகிப்பாளர் குழுமம்
என்ற பன்னாட்டு அமைப்புடன் இந்தியா ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருள் (யுரேனியம்) எந்த நாடும் இன்னொரு நாட்டிற்கு வர்த்தக ரீதியாக விநியோகிக்க வேண்டுமானல் இந்த ஒப்பந்தம் அவசியம் இதிலும் இந்தியா கையெழுத்திட நேரிட்டது தான் அணு ஆயுதப் பரவலாக்க எதிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும் தனது கொள்கை அணு ஆயுதப் பரவலாக்கத்திற்கு எதிரானது தான் என்னும் அக் கொள்கையை தன்னிச்சையாக ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் குழுமத்திற்கு உத்தரவாதம் கொடுத்தது இந்தியா.

கடந்த 30 ஆண்டுகளாக அணு ஆயுதத் தயாரிப்பை தங்களுடைய ஏகபோக உடைமையாக வைத்துக் கொண்டு பிற நாடுகளின் முயற்சிகளையெல்லாம் தடுத்து வந்த குழும உறுப்பு நாடுகளின் செயலுக்கு அங்கீகாரம் கொடுக்கும் நிலையும் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வளவையும் கடந்து, நிபந்தனையற்ற, தடையில்லா அணு வர்த்தக ஏற்பாடு உத்தரவாதம் செய்யப்படும் என்ற நம்பிக்கையையும் இந்தியா இப்பொழுது இழந்து நிற்கிறது. புஷ் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கும் விளக்கங்கள் இந்த நம்பிக்கையை அடியோடு தகர்த்தெறிந்து விட்டன. தொடர்ந்த, தடையற்ற எரிபொருள் விநியோகம் இருக்கும் என்று உடன்பாடு குறிப்பிட் டாலும் அதற்குச் சட்டப்பூர்வமான உத்தரவாம் கிடையாது என்று புஷ் கூறிவிட்டார்.

இது போலவே, உபயோகிக்கப்பட்ட எரிபொருளை மறு பயன்பாட்டிற்குப் பயன்படுத்துதல், எரிபொருளைச் செழுமைப்படுத்துதல், போன்றவற்றிலும் உடன்பாட்டின் அடிப்படையில் தொழில்நுட்ப உதவி தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் இந்தியா இழந்து நிற்கிறது என்பது வேதனைக்குரியது. இவ்வளவிற்குப் பின்னரும் இந்தியா உடன்பாட்டினால் பயன் பெறும் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியாயின், இந்த உடன்பாட்டினால் யாருக்கு பயன்? சந்தேகமில்லாமல் அமெரிக்காவிற்குத்தான். உலகின் பெரிய, சிறப்பு வாய்ந்த நாடுகளில் ஒன்றான இந்தியாவைப் பன்னாட்டு அணு வர்த்தகத்திற்காகத் தனது கதவுகளைத் திறந்து விடச் செய்ததன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அமெரிக்க மற்றும் பன்னாட்டு அணு வர்த்தகர்களின் பணப்பெட்டிகளை நிரப்பும் நிலை ஏற்பட்டிருக்காது.

அணு மின்சாரம் அதிகச் செலவை ஏற்படுத்துவது என்பதைப் புரிந்து கொண்ட நாடுகளெல்லாம் அணு உலைகள் வர்த்தகத்தில் ஆர்வம் காட்டாது இருக்கும் சூழலில், தனது நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு விலையாகாமல் தேங்கி நிற்கும் அணு உலைகள் மற்றும் அவை சார்பான பொருட்களுக்கு ஒரு புதிய சந்தையை அமெரிக்கா பெற்று விட்டது அவர்கள் பெருமைப்-பட்டுக் கொள்ளலாம். அமெரிக்க அமைச்சர் ஒருவர் நாலரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அணு வர்த்தகத்தை இந்தியாவில் பெறுவதற்கான வாய்ப்பை உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று பெருமிதத்துடன் கூறி இருக்கிறார்.

அமெரிக்க வர்த்தகர்கள் மட்டுமின்றி, இந்தியத் தொழில் முதலைகளும் குட்டையில் மீன் பிடிக்கக் கிளம்பி விட்டன. அணு சக்தி சார்ந்த தொழில்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் போட்டி போட்டு கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்ய அவர்கள் தயாராகி விட்டார்கள். இது வரை பொதுத்துறையிலிருந்த அணு சக்தித் தொழில் தனியார் மயமாக்கப்படுவதற்கான வழி திறக்கப்பட்டிருக்கிறது. அதற்கான சட்ட மாறுதல்கள் செய்வதற்கு உடன்பாடு இன்னமும் கையெழுத்திடாத நிலையிலும் நமது சட்ட அமைச்சர் தயாராகி விட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசிற்குப் பேருதவி செய்த பெரும் பணக்காரர்களுக்கு நன்றிக்கடனைச் செலுத்த அரசு ஆயத்தமாகி விட்டது.

உடன்பாட்டின் பலன் யாருக்கு என்பது இப்பொழுது தெளிவாகிறது ஆனால் அறுபது ஆண்டுக்கால சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கை உறுதியான அணு சக்திக் கோட்பாடு அணிசேரா நாடு என்ற பெருமை இறையாண்மை எல்லாவற்றையும் இழந்து இந்தியா தலை குனிந்து நிற்கிறது. இரு நூற்றாண்டுகளுக்கும் மேலான ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பரியத்தை கட்டபொம்மன் முதல் பகத்சிங் வரை உயர்த்திப் பிடித்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் பதாகையை மாசுபடுத்தி விட்டது மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. வீரம் செறிந்த இந்திய இளைஞர்களும், இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகளும், இந்நிலை தொடர அனுமதிக்க மாட்டார்கள். முனை மழுங்கிக் கிடக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆயுதத்தை மீண்டும் கையிலெடுத்துக் கூர்படுத்தி, சீர்படுத்தி மாற்றம் காண, அடிமை சாசனங்களை விரைவிலேயே தூக்கி எறிவார்கள் என்று நம்பலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com