Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
அக்டோபர் 2007

நினைவூட்டும் கடமைகள்
பி.வெங்கடேஷ்

சேதுசமுத்திர திட்டம் இன்று இந்திய ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. சர்ச்சைகள்... விவாதங்கள்... வெறிக்கூச்சல்கள்... சூடான பேட்டிகள்... என பத்திரிக்கைகளின் பரபரப்புப் பசிக்கு பெரும் தீனியாகவும் சேது சமுத்திர திட்டம் ஆகிவிட்டது. இந்நிலையில், இத் திட்டம் பற்றிய சரியான, அடிப்படையான புரிதலை மக்கள் மத்தியில் விரிவாக கொண்டு செல்லும் பெரும் பொறுப்பு இந்திய நாட்டின் ஜனநாயக சக்திகளின் மீது விழுந்துள்ளது.

இன்றைய நிலையில், இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் இருந்து மேற்குப் பகுதிக்கு செல்ல வேண்டுமானால் அதாவது வங்காள விரிகுடா கடல் பகுதியிலிருந்து அரபிக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டுமானால், இலங்கை நாட்டைச் சுற்றிக் கொண்டே செல்ல வேண்டும். ஆகவே, இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதிக்கும் இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கும் இடையில் உள்ள கடற்பகுதியை ஆழப்படுத்தி கால்வாய் உருவாக்கப்பட்டால், அது கப்பல் போக்குவரத்தை அதிகப்படுத்தும். இதனால் எரிபொருள் பெருமளவு மிச்சமாகும். பயண நேரம் வெகுவாக குறையும். பயணச் செலவும் இதன் விளைவாக கணிசமாக குறையும். இதை மனதில் வைத்துத்தான் 167 கிலோ மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும், 12 மீட்டர் ஆழமும் கொண்ட கால்வாயை உருவாக்கும் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இன்று நேற்றல்ல... 1860ஆம் ஆண்டே பாக் ஜலசந்திக்கும் மன்னார் வளைகுடாவுக்கும் இடையில் கால்வாய் தோண்டும் பணியை மேற்கொள்ள பிரிட்டிஷ் அரசு திட்டம் தீட்டியது. அதைத் தொடர்ந்து பல ஆண்டுகாலம் இத்திட்டம் ஏட்டளவில் விவாதிக்கப்பட்டாலும், உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் நடைபெறவில்லை. தமிழக மக்களின் 150 ஆண்டுகால கனவுத்திட்டம் சேதுக் கால்வாய் திட்டம் என்றால் அது மிகையல்ல. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்ததும், இத்திட்டம் நிறைவேற்றப்படுவது குறித்து தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின. அதன் அடிப்படையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட ஆயத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு, இப்போது பணிகள் நிறைவுறும் தருவாயில் இருக்கின்றன.

சேது சமுத்திர திட்டம் அமலானால், இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்பகுதிகளுக்கு எளிதான, வசதியான இணைப்பு உருவாகும். இதனால் கப்பல் போக்குவரத்து அதிகரிக்கும். தமிழகத்தின் தூத்துக்குடி துறைமுகம் இதன் காரணமாக அதிக முக்கியத்துவம் பெறும். தூத்துக்குடி மட்டுமல்லாது, பல சிறிய துறைமுகங்களிலும் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிக்கும். இதனால் தொழில் வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியும் வேலைவாய்ப்பு வளர்ச்சியும் அதிக அளவில் உருவாக வாய்ப்பு ஏற்படும். தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் அடைந்த அளவு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு வளர்ச்சியை தென் தமிழகமும் கடலோர மாவட்டங்களும் அடையவில்லை என்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

“வேலையின்மையும் தொழில் வளர்ச்சி இன்மையுமே தென் தமிழகத்தின் சாதி மோதல்கள் நடைபெற முக்கிய காரணம்” என்று தென் மாவட்டங்களில் ஏற்பட்ட சாதிக் கலவரங்கள் பற்றி விசாரணை மேற்கொண்ட நீதியரசர் மோகன் சுட்டிக் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆகவே, தென் இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு சேது சமுத்திர திட்டம் மிகவும் முக்கியமானது என்பதை நாம் நன்கு உணர கடமைப்பட்டுள்ளோம்.

நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் விதத்தில் எது நடந்தாலும், அதை சகித்துக்கொள்ள முடியாத சில மக்கள் விரோத சக்திகள் இப்போதும் களத்தில் வெறியோடு குதித்துள்ளன. குறிப்பாக பாஜக, இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட வகுப்புவாத அமைப்புகளும் அஇஅதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற தமிழக அரசியல் கட்சிகளும் சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முட்டுக்கட்டை போட்டு வருகின்றன. “சேதுக்கால்வாய் திட்டம் வர நான்தான் காரணம்” என்று வீரவசனம் முழங்கிய வைகோ போன்றவர்கள் இன்று சந்தர்ப்பவாத நிலையெடுத்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரான அரசியல் நடத்துவது அவமானகரமானதாகும்.

“கடலுக்கு அடியில் ராமர் கட்டிய பாலம் இருக்கிறது. அதை இடிக்கக்கூடாது. அது இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது” என்று சங்பரிவார் அமைப்புகள் கூக்குரல் எழுப்புகின்றன. இதற்கு அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் ஜெயலலிதா போன்றோரும் பக்கவாத்தியம் வாசிக்கின்றனர். பதினேழரை லட்சம் வருடங்களுக்கு முன்னால், (அதாவது, திரேதா யுகத்தில். நடப்பது கலியுகமாம்!) ராமன் இலங்கைக்குப் போக கட்டிய பாலம் இது என்கிறார்கள் பாஜக வகையறாக்கள். சரி, இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் “எங்கள் நம்பிக்கை” என்று பதில் சொல்கிறார்கள். இவர்களின் நம்பிக்கை மட்டுமே ஆதாரமாம்! இதை நாடே ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்! நம்பிக்கை என்பது தனி நபர் சம்பந்தப்பட்டது. ஆனால் வரலாற்று பூர்வமாகவோ அறிவியல் பூர்வமாகவோ நிரூபிக்க வேண்டிய விஷயத்தை நம்பிக்கையைக் கொண்டு கையாள்வதை சமூகம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

நவீன மனிதன் தோன்றி இரண்டு லட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கக்கூடும் என்பது ஆய்வாளர்களின் திட்டவட்டமான மதிப்பீடு. ராமேஸ்வரம் கடல் பகுதியில் உள்ள பவளப் பாறைகள் ஒன்றரை லட்சம் ஆண்டுகள் பழமையானது என்பதை மண்ணியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால், பதினேழரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக ராமன் இந்தப் பாலத்தை கட்டினான் என்று பாஜகவும் இதர இந்துத்துவா அமைப்புகளும் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது? இன்னும் சொல்லப்போனால் வால்மீகி எழுதிய ராமாயணத்தில் லங்கா என்று குறிப்பிடப்படுவது இன்றைய மத்தியப் பிரதேசத்தின் பகுதி என்று வரலாற்று ஆய்வாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள். சீதையை கடத்திச் சென்ற ராவணன் புஷ்பக விமானத்தில் அவளை கொண்டு சென்றான். சீதையை மீட்டு வருகையில் ராமன் விமானத்தில் வந்ததாக சொல்கிறார்கள். ராமனின் தூதனாகச் சென்ற அனுமன் கூட பறந்து சென்று ராவணனை சந்தித்தான் என்று சொல்லப்படுகிறது. ஆனால், சர்வ வல்லமை படைத்த ராமன் பாலம் கட்டி இலங்கைக்குச் சென்றது ஏன் என்ற கேள்வி சாமானிய மக்களுக்கு எழுகிறது.

அணுசக்தி ஒப்பந்தம், விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, பொது விநியோக முறை சீர்குலைப்பு போன்ற பல அம்சங்களில் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் எதிர்மறையான நடவடிக்கைகளை எதிர்க்காமல், நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் சீர்குலைத்து தங்கள் மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பாஜக, இன்று ராமன் பெயரைச் சொல்லி மக்களை திரட்டும் வகுப்புவாத அரசியலில் ஈடுபட முனைந்துள்ளது என்பதே உண்மை. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் சேது சமுத்திர திட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது என்ற உண்மையை திட்டமிட்டு பாஜக மறைக்கிறது. சேதுக்கால்வாய் தோண்டுவதால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் அபாயங்களும் ஆராயப்பட்டு ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டது வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்தான்.

மொத்தம் ஆறு பாதைகள் பரிசீலிக்கப்பட்டு, இப்போது பணிகள் நடை பெறும் பாதை தேர்ந்தெடுக்கப்பட்டதும் வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோதுதான். ஆனால், இன்றைக்கு பாஜக சேது சமுத்திர திட்டத்தை எதிர்ப்பது எதற்காக? மதவெறியைக் கிளப்பி அரசியல் ஆதாயம் தேடுவதைத் தவிர வேறு என்ன நோக்கம் இதில் இருக்க முடியும்? ராமரை விமர்சித்தால் தலையும் நாக்கும் துண்டிக்கப்படும் என்று ‘முற்றும் துறந்த’ சாமியார்கள்கூட வெறியை தூண்டி விடுவதை நாம் கவலையோடு பார்க்கிறோம். அறிவியலுக்கும் வரலாற்றுக்கும் எந்த மரியாதையும் கொடுக்காமல், ‘நாங்கள் சொல்வதை எல்லாரும் ஏற்க வேண்டும்’ என்று வகுப்புவாத சக்திகள் நிர்ப்பந்திப்பது பாசிச நடவடிக்கையாகும். இது இந்தியாவின் ஜனநாயக மாண்புகளுக்கு விடப்பட்டிருக்கும் நேரடியான சவாலாகும். இதை முறியடிக்க வேண்டியது ஒவ்வொரு தேசபக்த குடிமகனின் கடமையாகும்.

ஆனால், இதை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு எப்படி கையாள்கிறது? பாஜக கூக்குரல் எழுப்பியவுடன் அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அறிக்கையை திரும்பப் பெறுகிறது. இந்த அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்ட இரண்டு உயரதிகாரிகளை இடைநீக்கம் செய்தது. மத்திய அரசின் இந்த ஊசலாட்டம் வகுப்புவாத சக்திகளுக்கு மேலும் தைரியத்தையே கொடுத்துள்ளது. பாஜக பரிவாரங்கள் எழுப்பியுள்ள மோசடியான கேள்விகளை அரசியல் மட்டத்தில் உறுதியோடு எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது என்பதே ஏமாற்றம் தரும் உண்மையாகும். இதையெல்லாம்விட, சேது திட்டம் பற்றி “ஆராய” இரண்டு குழுக்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது மிக மிக துரதிருஷ்டவசமானது. வகுப்புவாதத்தை எதிர்கொள்ள தேவைப்படுவது உருக்கு போன்ற உறுதியும் வலுவான தத்துவார்த்த அடிப்படையுமே ஆகும். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கும் அது தலைமையேற்றுள்ள மத்திய அரசுக்கும் இந்த இரண்டுமே இல்லாதிருப்பது உண்மையிலேயே ஏமாற்றமளிக்கிறது.

நீதித்துறையும் சேது சமுத்திர திட்டத்திற்கு தடை விதிக்கும் ‘சேவை’யில் ஈடுபட்டுள்ளது என்பதும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். சேது சமுத்திர திட்டத்திற்கு இந்திய நாட்டின் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்த தமிழக அரசியல் கட்சிகள் தீர்மானித்தால், அதற்கும் உச்சநீதிமன்றம் தடை விதிக்கிறது. ஆனால், தமிழக மக்கள் தங்கள் உணர்வுகளை கடந்த அக்டோபர் 1 அன்று திட்டவட்டமாக வெளிப்படுத்தியுள்ளனர். இதைக் கண்டு பொறுக்காத உச்சநீதிமன்றம் “மத்திய அரசு தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர தயங்கக்கூடாது” என்று சொல்லியிருக்கிறது.

நம் நாட்டில் லட்சக்கணக்கான வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவயில் உள்ளன. இவற்றை குறைக்க நீதிமன்றங்கள் எந்த விசேச முயற்சியும் எடுப்பதில்லை. ஆனால் தமிழகத்தின் கடையடைப்பு போராட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக் கிழமை செயல்பட்டது என்பது நீதித்துறையின் அதீத ஆர்வமா அல்லது பாரபட்சமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழத்தானே செய்யும்? சமாஜ்வாதி கட்சித் தலைவர் அமர்சிங் குறித்த வழக்கை நான் விசாரிக்கமாட்டேன் என்று உச்சநீதிமன்ற நீதிபதி திரு. லட்சுமணன் கூறினாரே, இது நீதிபதி மேற்கொண்ட வேலை நிறுத்தம் இல்லையா? ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்துவதை நீதிமன்றம் தடுக்க நினைப்பதை எப்படி ஏற்க இயலும்? எனவேதான் “இது நீதித்துறையின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் மிகச் சரியாக விமர்சித்துள்ளார்.

இந்திய நாட்டின் நீதித்துறையில் வகுப்புவாத நஞ்சு ஊடுருவியுள்ளது என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். சமீபத்தில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவத்சவா என்பவர் இந்திய நாட்டின் தேசிய நெறி நூலாக பகவத் கீதை இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த தீர்ப்பை அளித்த அன்றைய தினமே அவர் பணி ஓய்வு பெற்று விட்டார். “உத்தர பிரதேசத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இல்லை” என்று வேறு ஒரு தீர்ப்பில் திருவாய் மலர்ந்தவரும் இவரே. இவர் போன்றோர் அளிக்கும் தீர்ப்புக்களையும், உச்சநீதிமன்றத்தின் கருத்துக்களையும் விமர்சிக்க மக்களுக்கு உரிமை இல்லை, அப்படி விமர்சித்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில் நீதித்துறைக்கு எல்லைகள் வரையறுக்கப்பட வேண்டாமா? சேது சமுத்திர திட்ட சர்ச்சையில் இந்த பிரச்சனையும் முன்னுக்கு வந்திருக்கிறது.

ஒட்டுமொத்தமாக பார்க்கையில், சேதுசமுத்திர திட்டம் என்பது தமிழகத்தின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு அவசியமான ஒன்று. இதை நிறைவேற்றவும், வகுப்புவாத சக்திகளின் மிரட்டலுக்கு அடிபணியக்கூடாது என்றும் மத்திய அரசை நாம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். சேதுக்கால்வாய் பிரச்சனையில் ராமர் பெயரால் வீண் சர்ச்சைகளை ஏற்படுத்தி, இதை தங்கள் மதவெறி நோக்கங்களுக்கு பயன்படுத்த நினைக்கும் வகுப்புவாத சக்திகளை மக்கள் மத்தியிலிருந்து தனிமைப்படுத்தும் பொறுப்பும் நமக்கு உண்டு. குறிப்பாக, பகுத்தறிவு மண்ணாம் தமிழகத்தில் வகுப்பு வெறி நஞ்சைப் பாய்ச்ச நடைபெறும் சதிகளை களத்தில் நின்று முறியடித்தாக வேண்டும். ஜெயலலிதா போன்றோரின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதும் நம் கடமையாகிறது. நீதித்துறையின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்தும் பணியிலும் நாம் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். சேது சமுத்திர திட்டம் நமக்கு பல கடமைகளை நினைவுபடுத்தியுள்ளது. மக்களை திரட்டி இக்கடமைகளை நாம் நிறைவேற்றுவோமாக.

(28.9.2007 அன்று இந்து பத்திரிக்கையில் வரலாற்று ஆய்வாளர் திருமிகு. ரொமிலா தாப்பர் எழுதியுள்ள கட்டுரை மற்றும் 5.10.2007 தேதியிட்ட Frontline இதழின் கட்டுரைகளை தழுவியது)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com