Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
அக்டோபர் 2007

இன்றைய தமிழகம் - மக்களும் அரசியலும்
-உ.ரா. வரதராஜன்

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கூட நிறைவுறாத நிலையில், இன்று “ஆட்சியைக்கலை” என்ற கோரிக்கையை பிரதான எதிர்க்கட்சியான அஇஅதிமுக எழுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சியான பாஜக வும் இதே கோரிக்கையை குடியரசுத் தலைவர் முன்பாக வைத்துள்ளது. நாட்டின் உச்சநீதிமன்றமே தமிழ்நாட்டில் அரசி-யலமைப்புச் சட்டமே சீர்குலைந்துள்ளது என்று போகிற போக்கில் ஒரு கருத்தை உதிர்த்து, மாநில திமுக அரசை மத்திய அரசு ஏன் டிஸ்மிஸ் செய்யக்கூடாது என்ற கேள்வியையே நிறுத்தியுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அஇஅதிமுக வின் மக்கள் விரோத கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. எனினும், மாநிலத் தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக 1952 ம் ஆண்டு சென்னை சட்டசபைத் தேர்தலுக்கு பின்னர் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இடங்களை பெறாத நிலையில்தான் திமுக ஆட்சி அமைக்க நேரிட்டது. தேர்தலை சந்திப்பதற்காக ஒரு பரந்துபட்ட அணியை உருவாக்கிய திமுக போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கிற போது, அந்தக் கட்சிக்கு சட்டமன்றத்தில் அறுதிபெரும்பான்மை பெறுவதற்-கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்திருக்கவில்லை.

எனினும், திமுகவுடன் உடன்பாடு கண்டிருந்த கட்சிகளின் ஆதரவோடு இன்றைய அரசு பொறுப்பேற்று, கடந்த ஓராண்டுக்கும் மேலாக செயல்பட்டு வந்துள்ளது.

இன்று, சேது சமுத்திரத் திட்டம் அது தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கற்பனையான ராமர் பாலம் போன்ற பிரச்சனைகள் எழுவதற்கு மிக நீண்ட காலத்திற்கு முன்பாகவே, திமுக ஆட்சியை மைனாரிட்டி அரசு என்று ஏகடியம் பேசிவந்த அஇஅதிமுக, விரைவிலேயே சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்தல் வரும் என்று ஆருடம் படித்து வந்தது.

ஆனால் தமிழக மக்களோ, புதிதாக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த திமுக அரசு, தனது தேர்தல் வாக்குறுதிகளை உறுதியாகவும், விரைவாகவும் நிறைவேற்ற வேண்டும் என்றே எதிர்பார்த்தனர். இன்னும் அந்த எதிர்பார்ப்பு தொடருகிறது. மாநில அரசும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் திசையில் பயணித்து வருகின்றது. இதன் நிறை குறைகளைப் பற்றிய விவாதம் அரசியல் அரங்கில் நடைபெறுவது, ஆரோக்கியமானதாகவே அமையும். ஆனால், மக்கள் தீர்ப்பை ஜீரணித்துக்கொள்ள முடியாமல், ஆட்சியைப் பறிகொடுத்து, எதிர்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள அஇஅதிமுக நடத்தி வரும் அடாவடி அரசியலும், ஆட்சியைக் கவிழ்ப்பதே நோக்கம் என்ற முயற்சியில் இறங்கியிருப்பதும், அதன் அணிகளுக்கு வேண்டுமானால் பரவசம் ஊட்டலாம், பிரச்சனைகளையும், எதிர்பார்ப்புகளையும் சுமந்து நிற்கின்ற தமிழகத்து மக்களுக்கு எந்தவித பயனையும் தராது.

கிலோ அரிசி 2ரூபாய், இலவசத் தொலை-காட்சிப்பெட்டிகள், நிலமற்ற குடும்பங்களுக்கு 2 ஏக்கர் நிலம், குடிமனைப்பட்டா, அரசு ஊழியர், சாலைப்பணியாளர் உள்ளிட்ட கடந்தகால ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்கும் நடவடிக்கைகள் போன்ற இன்றைய தமிழக அரசின் நடவடிக்கைகள், ஒரு நல்ல துவக்கமாக அமைந்தன. இந்த ஆட்சியை அணுகலாம், கோரிக்கைகளை வலியுறுத்தலாம் என்ற ஒரு நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

என்பது கடந்த கால அணுகமுடியாத அஇஅதிமுக ஆட்சியிலிருந்து ஒரு மாறுபட்ட நிலை முற்றிலும் முடக்கப்பட்டிருந்த அரசுத்துறைப் பணி நியமனங்கள் என்பது மேற்கொள்ளப்பட்டு வருவதும் ஆறுதலளிக்கக்கூடியது. சிறுபான்மையினருக்கு இட ஓதுக்கீட்டுக்கான அவசரச் சட்டமும் பாராட்டுக்குரிய செய்கையாகும்.

ஆனால், தேர்தல் காலத்தில் சூடாகப் பேசப்பட்ட 50 லட்சம் ஏக்கர் நிலம் மக்களுக்கு விநியோகிப்பட வாய்ப்புள்ளது என்ற நிலைமையில் ஒரு சுருதி மாற்றம் நேரிட்டுள்ளதும், குடிமனைப்பட்டா 3 லட்சம் என்ற இலக்கோடு சுருக்கி நிறுத்தப்பட்டுள்ளதும், நிலமற்ற சொந்தக்குடியிருப்புயில்லாத குடும்பங்களுக்கு ஏக்கப் பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது. ஆதிக்க சக்திகளின் ஆக்கிரமிப்பிலுள்ள புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து அவற்றைக் கையகப் படுத்துவதும், வீட்டுமனைப்பட்டா வழங்கலை விரிவுபடுத்துவதற்கு உள்ள வாய்ப்புக்களைக் கண்டறிந்து பரிசீலிப்பதும், இவை தொடர்பாக உள்ள நிபந்தனைகளைத் தளர்த்துவதும், மக்களின் விருப்பங்களை ஈடேற்றுவதற்குரிய பெரிதும் உதவிகரமாகும். மாநில அரசு இந்த வகையில் தன் செயல்பாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசர அவசியமாகும்.

ஒரு நீண்ட காலகட்டத்தில் தமிழ்நாட்டில் கல்வி தொடர்ந்து வியாபாரமாக்கப்பட்டதும், சுயநிதி கல்வி நிறுவனங்கள் பல்கிப் பெருகியதும், வசதிபடைத்த குடும்பங்களின் குழந்தைகளுக்கு மட்டுமே உயர்கல்வி சாத்தியம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது ஒரு கசப்பான உண்மையாகும். இதில் மாற்றம் காண்பதும், கல்வியின் பெயரால் நடைபெறும் கொள்ளையைத் தடுத்து நிறுத்துவதும், வளரும் தலைமுறையின் கல்வி தாகத்தைத் தணிக்க உதவும்.

தொழில் வளர்ச்சி குறித்த அக்கறை, மாநிலத்தில் புதிய முதலீடுகளைக் கொணர் வதற்கான சில முன் முயற்சிகள் என்று இன்றைய அரசு ஆக்கப்பூர்வமான சில அடிகளை எடுத்து வைத்துள்ளது. எனினும், இவற்றால் உருவாக்கப் படக்கூடிய வேலை வாய்ப்பிடங்களின் எண்ணிக்கை எவ்வளவுதான் கூட்டிக் கணக்கிட்டுப் பார்த்தாலும், வேலை தேடி நிற்கும் தமிழக இளைஞர்களின் “யானைப்பசிக்கு சோளப் பொறிதான்” கடந்த இருபதாண்டுகளாக மத்தியஅரசு ஆட்சிகள் மாறி மாறி அமர்ந்த போதிலும் பின்பற்றி வருகின்ற தாராளமயப் பொருளாதார கொள்கைகள் வேலை வாய்ப்பை காயடிக்கும் வளர்ச்சியையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. இதே திசையில் தொடர்ந்து பயணம் மேற்கொள்வது என்ற நிலைமையில் ஓர் அடிப்படை மாற்றத்தை மாநில அரசு கைக்கொண்டு, புதிய திசை வழியில் நடைபோடுவது மிகமிக இன்றியமையாதது.

ஒரு ஜனநாயக ஆட்சி அமைப்பில், அரசு மேற்கொள்ளுகிற திட்டங்களின் பயன்கள் மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கு, மாநிலத்தின் அனைத்து மட்டங்களிலும் தலைமைச் செயலகம் முதல் உள்ளாட்சியின் கடைசித் தட்டு வரை ஊழலுக்கு இடமளிக்காத ஒளிவு மறைவற்ற செயல்பாடு தேவை. இன்று இதுவே மக்களின் முன்னால் மிகப்பெரிய கேள்விக்குறியாக எழுந்து நிற்கிறது. ஊழலை முற்றாகக் களைவதற்கான அரசியல் உறுதியும், அதைச் செயலளவில் காட்ட முனைவதும், மாநில அரசின் முன்னுள்ள மிகப்பெரும் சவாலாகும். இந்த சவாலை இந்த அரசு எதிர் கொள்ளுமா? பூனைக்கு மணிக் கட்டுமா? இவற்றுக்கான பதிலைத் தமிழகம் எதிர்நோக்கி நிற்கிறது.

கூடவே, மாநில மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்களை மத்திய அரசிடம் கோரிப்பெறுவதற்கான அரசியல் நடவடிக்கைகளில் இன்றைய தமிழக அரசு இறங்க வேண்டுவது அவசியம். நிதி ஆதாரங்கள் பெருமளவில் மத்திய அரசிடமே குவிந்துள்ள நிலை நீடிப்பதும், மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய பகுதியை உயர்த்துவதற்கு மத்திய அரசு மறுத்து வருவதும், நிதிப்பகிர்வு ஏற்பாட்டில் நிலவுகின்ற பாரபட்சமான அளவுகோல்களும், மத்திய - மாநில உறவுகளை நிதி ஆதாரங்களைப் பொறுத்த வரையில் ஜனநாயகப்படுத்த வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டி நிற்கின்றன.

மத்திய - மாநில உறவுகளை மறு ஆய்வு செய்வதற்கான ஆணையம் ஒன்று நிறுவப்படும் என்ற குறைந்தபட்ச பொதுத் திட்ட வாக்குறுதியை, மத்திய அரசு மூன்றரையாண்டுக் காலம் கடந்த நிலையில் தான் நிறைவேற்றியுள்ளது.

அந்த ஆணையத்தில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர்களையும், அதன் பரிசீலனைக்குரிய விஷயங்களாக பட்டியலிடப்பட்டுள்ளதையும் பார்க்கிறபோது, இதன் செயல்பாடு மாநில அரசுகளும், மக்களும் விரும்பி நிற்கின்ற மாற்றங்களைக் கொண்டு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், கூடுதல் நிதியை மத்திய அரசிடம் கோரிப்பெறுவதற்கான முயற்சியை இன்றைய மாநில அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் ஆட்சியின் செயல்பாட்டுக்கும் இடையே இன்று நிலவுகிற இடைவெளி காரணமாக ஒரு நம்பிக்கை வறட்சி சமுதாயத்தில் குறிப்பாக இளைய தலைமுறையினரிடத்தில் ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் அண்மைக்காலத்தில் சில புதுத் தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள். கட்சிகளைத் துவக்கியிருக்கிறார்கள். அவர்கள் முன்வைக்கிற ஆசை வார்த்தைகளும், கொள்கைத் தளம் எதுவுமின்றித் தனிநபர்களாகவே சாதித்து காட்டுவோம் என்று மாயையை உருவாக்கும் பகட்டு அரசியலும், ஜனநாயக ரீதியில் இயக்கங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய மக்களை திசைதிருப்புவனவாகவே அமைந்துள்ளன. இவற்றையும் அடையாளங்கண்டு, தமிழக மக்கள் ஓர் அறிவார்ந்த அரசியல் திசையில் தடம் பதிக்க வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com