Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
அக்டோபர் 2007

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்புக் கூட்டத்தின் அறைகூவல்

இந்தியநாடு விடுதலையடைந்து 60 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆயினும் இந்தியாவில் தீண்டாமைக் கொடுமைகளும், சாதிய ஓடுக்கு முறைகளும் இன்றளவும் தலைவிரித்தாடுகின்றன. மாமேதை அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டம் தீண்டாமையை ஒரு கொடும் குற்றமாகப் பிரகடனம் செய்கிறது. தீண்டாமை ஒழிப்புச் சட்டம், மக்கள் குடியுரிமைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொத்தடிமை ஒழிப்புச் சட்டம், தேவதாசி ஒழிப்புச் சட்டம் என அடுக்கடுக்கான சட்டங்கள் அமலில் இருந்தபோதிலும் தீண்டாமை ஒழியவில்லை. என்பதே உண்மைநிலை யாகும். இந்திய அரசியல் சாசனத்திற்கு சவால் விடும் வகையில் இந்தியாவின் சாதிய அமைப்பும் ஆதிக்க சக்திகளின் செயல்பாடும் உள்ளன.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 1991 ஆம் ஆண்டு அன்றைய குடியரசுத் தலைவரிடம் அளித்த அறிக்கையின் ஒரு பகுதியை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

“மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டித்தனமான முறையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் சொந்த நாட்டு மக்களாலேயே தாக்கப்படுவது ஒரு அவமானமான துன்பமாகும். சில நேரங்களில் இப்பெண்கள் தெருக்களில் நிர்வாணமாக நடத்திச் செல்லப்படுகின்றனர். அவர்களது குழந்தைகள் மிருகங்களைப்போல் வெட்டிக் கொல்லப் படுகின்றனர். அவர்களிடம் உள்ள கொஞ்ச நஞ்ச வாழ்வாதாரங்களும் தீ வைத்து கொளுத்தப்படுகின்றன. இக்கொடுமைகளையெல்லாம் அரசும் அரசு இயந்திரங்களும் மவுன சாட்சிகளாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. அல்லது கண்டு கொள்ளாமல் அலட்சியமாய் இருக்கின்றன. அல்லது இது போன்ற கொடுமை களை நிகழ்த்துவோருடன் கைகோர்த்து கூட்டாளி களாகவே இணைந்து நிற்கின்றன என்பது வேதனையான ஒன்று” என அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

தமிழகத்திலும் பரவலாக சாதிய ஒடுக்கமுறைகளும் தீண்டாமைக் கொடுமைகளும் உள்ளன. ஆதிக்க சக்திகள் மறுத்தாலும் அரசு நிர்வாகம் மறைத்தாலும் வெளிவரும் விபரங்கள் இந்த உண்மையை பறைசாற்றுகின்றன. பல்வேறு இடதுசாரி அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், தலித் அமைப்புகள் நடத்திய ஆய்வுகள் பல்வேறு தீண்டாமை வடிவங்களையும், கொடு மைகளையும் வெளிப்படுத்தியுள்ளன.

தீண்டாமைக் கொடுமைகள்

ஆலயங்களில் நுழையத் தடை, கோவில் திரு விழாக்களில் பாரபட்சம், இரட்டை டீ கிளாஸ் முறை, பெஞ்சுகளில் உட்கார முடியாமை, பொதுக்குழாய், கிணறுகளில் தண்ணீர் எடுக்க முடியாமை, குளங்களில் குளிக்க முடியாமை, பொதுப்பாதைகளில் நடக்க முடியாமை, குடை பிடிக்க முடியாமை, செருப்பு போட முடியாமை, தோளில் துண்டு போட முடியாமை, பொது மயானத்தைப் பயன்படுத்த முடியாமை, தனி மயானத்திற்கு பாதை அனுமதிக்காமை, சலூன்களில் முடிவெட்ட முடியாமை, துணிகளுக்கு இஸ்திரி போட முடியாமை, பிணக்குழி தோண்ட கட்டாயப்படுத்துவது, மலம் அள்ள கட்டாயப்படுத்துவது, சாவுச் செய்தி சொல்ல கட்டாயப்படுத்துவது, தப்படிக்க கட்டாயப்படுத்துவது, செத்த விலங்குகளை அப்புறப்படுத்த கட்டாயப்படுத்துவது, தலித் பெரியவர்களை ஒருமையில் அழைப்பது, தலித் பெயரில் மரியாதையான பகுதியை வெட்டிவிடுவது ( மாடசாமியை மாடா என்றழைப்பது) தலித் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது கொடுமைப்படுத்துவது, சாதியின் பெயரால் திட்டுவது, தலித்துகள் தரும் பணத்தைக் கையால் வாங்காதது, தலித் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உரிமை மறுப்பது, உரிமையை நிலைநாட்டினால் படுகொலை செய்வது, தலித் பகுதிகளில் தேர்தல் நடைபெறாமல் தடுப்பது, பள்ளிகளில் தலித் மாணவர்களை பாரபட்சமாக நடத்துவது, கிராம பொதுச் சொத்துக்களை தலித்துகள் பயன்படுத்துவதை தடுப்பது, தலித்துகளின் நிலங்களை அபகரித்து திருப்பித்தர மறுப்பது, பொது விநியோகம் அரசு அலுவலகங்களை தலித் குடியிருப்பு பகுதியில் அமைக்க மறுப்பது, தலித் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர மறுப்பது, அரசு நிர்வாகம் காவல்துறையின் பாரபட்சம்.. இன்னும் பலப்பல ஆய்வு விபரங்களில் வெளிப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் மேற்கண்ட தீண்டாமை கொடுமைகள் உள்ளன.

விழிப்புணர்வு:

சமீப காலங்களில் தலித் மக்களிடையே விழிப்புணர்வு பலப்பட்டு வருவது வரவேற்கத்தக்க அம்சமாகும். ஆயினும் தலித்துகள் எங்கெல்லாம் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முயல்கிறார்களோ அங்கெல்லாம் ஆதிக்க சக்திகள் கொலை வெறித் தாக்குதல் நடத்துவதைக் கண்கூடாகக் காண்கிறோம். மேலவளவு முருகேசன், நக்கல முத்தன்பட்டி ஜக்கன், மருதன்கிணறு சேர்வாரன் படுகொலைகள் சமீபகால உதாரணங்களாகும்.

அரசு நிர்வாகம் - காவல் துறை பாரபட்சம்

அரசு நிர்வாகமும் காவல்துறையும் தலித்துகளுக்கு பாரபட்சமாகவே பல சமயங்களில் செயல்பட்டு வந்துள்ளன. மக்கள் குடியுரிமைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் சரிவர அமல்படுத்தப்படவில்லை. பல கொடுமைகளில் வழக்குகளே பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பல முறையாக காவல்துறையால் புலன் விசாரணை செய்யப்படவோ, நீதிமன்றங்களில் நடத்தப்படவோ இல்லை. குடியுரிமைச் சட்டத்தின் கீழ் 1971க்கு பிறகு பதிவு செய்ப்பட்ட 9949 வழக்குகளில் 271 வழக்குகளில் மட்டுமே ( 2.79 சதம்) குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும் இதர வழக்குகள் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் அல்லது விசாரணையிலேயே நீண்டகாலம் இருப்பதாக மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரப்படுத்துதல் துறை 2000 ல் வெளியிட்ட அறிக்கையில் கூறுகிறது.

இதே போல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 10 சதம் மட்டுமே தண்டனை பெற்றுள்ளன. 90 சதம் வழக்ககளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.

அப்பாவி தலித் மக்கள் மீது காவல் துறை நடத்திய வெறித் தாக்குதல்களுக்கு தாமிரபரணி படுகொலை, நாலூமுலைக்கிணறு, கொடியன் குளம், சங்கரலிங்கபுரம் ஆகிய சம்பவங்கள் தமிழக உதாரணங்களாகும். ஆதிக்க சக்திகளின் வெறித் தாக்குதல் காரணமாகவும் அரசு காவல் துறையின் அலட்சியப் போக்கின் விளைவாகவும் நாள்தோறும் சராசரியாக 508 தலித்துகள் படுகொலை செய்யப்படுவதாகவும் 759 தலித் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்படுவதாகவும், பல்லாயிரம் பேர் தாக்குதல்களுக்கு ஆளாவதாக வும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இடஒதுக்கீடு உட்கூறு திட்டங்கள்

தலித் மக்களுக்கு அரசியல் சட்டப்படியான இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்பட வில்லை டி பிரிவு மற்றும் கீழ்மட்டப் பதவிகள் பரவலாக நிரப்பப்பட்டுள்ள போதிலும் மேல் மட்டப் பதவிகள் முறையாக நிரப்பப்படாததையே விபரங்கள் பறைசாற்றுகின்றன. சமீபத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் தேர்வில் பொதுப் பட்டியலில் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப் பட வேண்டிய தலித் மற்றும் ஆதிவாசி மாணவர்களை இடஒதுக்கீடு தேர்வுப் பட்டியலில் மத்திய தேர்வாணையம் தேர்வு செய்த மோசடி வெளி வந்துள்ளது. இதனால் தலித் மற்றும் ஆதிவாசி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இடஒதுக்கீட்டை தலித் மற்றும் ஆதிவாசி மக்கள் தொகைப்படி 18+1 என்பதை 19+1 ஆக உயர்த்துவது இன்னும் அமலாகவில்லை.

இதுபோக, பல மத்திய மற்றும் மாநில பொதுத் துறைகள் தனியார்மயப்படுத்தும் நிலையில் தலித் ஆதிவாசிகளுக்கான இடஒதுக்கீடு உரிமையே பறிபோகும் நிலை உள்ளது.

தலித் மற்றும் ஆதிவாசி மக்களுக்கான மத்திய அரசின் சிறப்பு உட்கூறு நிதி ஒதுக்கீடுகள் அதற்கான திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படாத காரணத்தால் கணிசமான தொகை செலவு செய்யப்படாமலும் மாநில அரசுகளால் திருப்பி அனுப்பப்படும் நிலையிலுமே இருந்துள்ளன. மத்திய மாநில அரசுகள் இம்மக்கள் பால் எவ்வளவு அலட்சியத்துடன் இருந்துள்ளனர் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

பொருளாதார நிலை:

தலித் மக்கள் மிகக் கணிசமானோர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் ஏழைகளிலும் ஏழையாக உள்ளனர். தலித் மக்களில் 60 சதம் பேர் விவசாயத் தொழிலாளர்களாகவும், 10 சதம் பேர் அணி திரட்டப்படாத தொழில்களில் பணி புரிபவர்களாகவும் 24 சதம் பேர் உதிரித் தொழிலாளர்களாகவும் இதர சிறு பகுதியினரே சிறு உடைமையாளர்கள் அல்லது ஒரளவு பொருளாதார வலிமை பெற்றவர்களாகவும் உள்ளனர். இது சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரமாகும். தலித் மக்களில் மிகக் கணிசமானவர்களுக்கு சொந்தமாக நிலமோ குடிமனைப்பட்டாவோ கிடையாது.

இத்தகைய வறுமை நிறைந்த பொருளாதார நிலையே இவர்கள் மீது தீண்டாமைக் கொடுமைகளும் கடுமையான சுரண்டலும் நடந்த அஸ்திவாரமாக அமைந்துள்ளது. இவர்களுக்கு இலவச நிலம், வீட்டுமனைப்பட்டா முன்னுரிமை அடிப்படையில் தாமதமின்றி வழங்குவது நிலைமையில் மாற்றம் காண உதவும்.

பஞ்சமி நிலம்:

தலித் மக்களுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலம் சட்ட விரோதமாகவும் ஏமாற்றியும் தலித் மக்களிடமிருந்து தலித் அல்லாத ஆதிக்க சக்திகளாலும் சுயநலவாதிகளாலும் பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலங்களை மீட்டு தலித் மக்களிடையே திரும்ப ஒப்படைப்பது அரசின் கடமையாகும். இதற்கு ஜனநாயக இயக்கங்கள் வலுவான நிர்பந்தத்தை கொடுக்க வேண்டும்.

அறைகூவல்:

தலித் மற்றும் ஆதிவாசி மக்களின் அவலங்களுக்கு முடிவுகான கீழ்க்கண்ட கோரிக்கைகளை இக்கூட்டம் முன்வைக்கிறது.

அனைத்து தீண்டாமைக் கொடுமைகளுக்கும் முடிவு கட்டு இழி தொழில்களை ஒழித்துக்கட்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டங்களை கறாராக அமல்படுத்து.

அரசு நிர்வாகம் காவல் துறையின் பரபட்சப் போக்கை கைவிடு
இடஒதுக்கீடு, சிறப்பு உட்கூறு திட்டங்களை முறையாக அமல்படுத்து
பொதுத்துறைகளை தனியார்மயமாக்காதே தலித் ஆதிவாசி மக்களுக்கு இலவச நிலம், குடிமனைப்பட்டா உடனே வழங்கு
அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களிடையே ஒப்படை.
நிலச்சீர்திருத்த சட்டம், குறைந்தபட்சக் கூலிச் சட்டங்களை முறையாக அமல்படுத்து.

தீண்டாமை ஒழிக்க முழு மூச்சுடன் பணியாற்றுவதென இக்கூட்டம் சபதம் ஏற்கிறது. இதற்காக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற அமைப்பை உருவாக்குவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீண்டாமை, சாதி ஒடுக்குமுறைகளை கை விட்டு சகோதரத்துவத்தையும் மனித உரிமைகளை நிலைநாட்ட முன்வருமாறு அனைத்து பகுதி மக்களையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரம், இயக்கங்களை முன்னெடுத்துச் செல்ல தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் இணைந்து செயலாற்ற முன்வருமாறு வர்க்க வெகுஜன அமைப்புகள், ஜனநாயக இயக்கங்கள், தலித் அமைப்புகள் மனித உரிமை அமைப்புகள், தனி நபர்களை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com