Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
அக்டோபர் 2007

பாறையைப் பிளந்த பாதை
- ப.குமார்

சமுதாய வளர்ச்சியில் கலையும், இலக்கியமும் ஆணிவேர்கள். அவை வளர்ந்து வரும் சமூக நாகரிகத்தில் எப்போதும் எதிரொலித்துக் கொண்டேயிருக்கும். தொடரும் இந்த எதிரொலிப்புகளும் பிரதிபலிப்புகளும் வெறும் லாப நோக்கை மட்டுமே தாங்கும் போது. பண்பாடுகளின் மீது அதுவே தாக்குதலுக்கான ஆயுதமாக மாறுகிறது. அவையே மோசமான கலாச்சாரங்களையும் திணிக்க முனைகின்றன, இன்றைய நம் சினிமாக்களைப் போல.

அப்படிப்பட்ட தாக்குதல்களை எதிர் கொள்வதும், மனிதகுலம் அனைத்திற்கும் பொதுவான ஒரு மாற்றுக் கலாச்சாரத்தை முன் வைப்பதும் அதைத் தாங்கிப் பிடிப்பதும்தான் சமூக வளர்ச்சிக்கான உந்துதலாக அமையும்.

அந்த வகையில் இன்றைய ஆடம்பர, பிரமிப்பான யதார்த்தமற்ற, பிற்போக்குச் சிந்தனை கொண்ட திரைப்படங்களுக்கு மாற்றாக, மக்களுக்கான மாற்றுக் கலாச்சாரத்தை முன் வைத்து சமூகப் புரட்சிக்கு அடித்தளமிட்டு வருகிறது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் குறும்ப இயக்கம்.

சமீபத்தில் அப்படி வெளியிட்டதுதான் “மாநகர் சித்தன் மரண கானா விஜி” இது இராமு அவர்களின் முதல் முயற்சியாகும்.

மாநகர் சிந்தன் மரண காணா விஜி:

இந்த விதை விளை நிலத்தில் விழுந்ததல்ல. தரிசு நிலத்திலும் விழுந்ததல்ல, பாறையின் மீது விழுந்த விதை. இந்த விதை பாறையை முட்டி மோதி, பாறைப் பிளந்து தன் நம்பிக்கைக் கீற்றை உலகிற்கு அறிவித்த விதை.

இந்த விதை உழவனின் கையினில் தன் வளர்ச்சியை ஒப்படைத்து. சாவகாசமாய் கால த்தை எதிர்நோக்கும் சராசரி விதையல்ல. எவராலும் கவனிக்கப் படாத, கேட்பாரற்றுக் கிடந்து, தன்மேல் நடந்து நடந்து அழுத்திய கால்களால் தன்னைத் தானே பதப்படுத்திக் கொண்ட வீரிய விதை. சுழற்றி அடிக்கும் கடற்கரைக் காற்றினில் தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட சிற்பம்.

“சென்னையை ஆங்கிலேயர்கள் வாங்கி, அங்கு வாணிப மையங்களை உருவாக்கிய பின் அதைச் சுற்றியிருந்த பகுதிகளைச் சார்ந்த மக்கள் வேலைத் தேடி சென்னையை நோக்கி குடி பெயரத் தொடங்கினர். அத்தகைய குடி பெயர்வுகளின் நோக்கம் நிறைவடைந்ததோ இல்லையோ. காலப் போக்கில் சென்னைப் பரப்பளவு மக்கள் தொகையில் முழுமையடைந்தது. பின்னாளில் அது முழுமையடைந்து வழியவும் செய்தது. அவைகள்தான இன்றைய பிரம்மாண்ட சிங்காரச் சென்னையின் குடிசைப் பகுதிகளாகும். அப்படிப்பட்ட குடிசை பகுதிகளில் உருவான துதான் கானா. இது அப்பகுதி மக்களின் இன்பத் துன்பத்தின் இசை வெளிப்பாடு மட்டுமல்ல அடித்தட்டு மக்களின் உழைக்கும் வர்க்கத்தின் பண்பாட்டின் சின்னமும்தான்”

என்று பேராசிரியர் வீ.அரசு (இலக்கியத்துறை. சென்னைப் பல்கலைக்கழகம்.) அவர்களின் முன்னறிவிப்போடு துவங்குகிறது இந்த 56 நிமிட குறும்படம்.
கானா மட்டுமே தன் சொந்தமாய், வாழ்க்கையாய் இன்னும் இன்னுமாய்... தன்னோடு கலந்துபோன இளைஞனின் வாழ்க்கைச் சித்திரம்தான் மரண கானா விஜி.
அது ஒரு தனிமனிதனின் வாழ்க்கைச் சித்திரம் மட்டுமல்ல. இந்த சமுதாயம் இன்னும் தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ளாமல், துடைத் தெரியாமல் தன்னுடன் அரவணைத்துக் கொண்டு வரும் வார்த்தைகளாய் அடக்க முடியாத அசிங்கங்களோடும் கழிவுகளோடும் தனக்குள்ள கள்ளத்தன உறவை வெளிச்சமிட்டுக் காட்டும் சரித்திரச் சித்திரமிது. இந்த சித்திரம் கானா பாடல்களுமாய்.. விஜி யின் வாழ்க்கை அனுபவங்களுமாய்.... தொடர்கிறது.

“கரைகள் போட்டுக் கொண்டு நதி பிறப்பதில்லை” இவனும் அப்படித்தான். தன் வாழ்க்கையின் அன்றாடப் பிரச்சனைகளை வீரத்துடன் எதிர்கொண்டு முன்னோக்கிப் பாயும் ஒரு ஜீவ நதி...

இரத்தம் என்றாலே சிவப்பாகத்தான் இருக்குமென்று பொதுவாய் நினைத்திருக்கும் நமக்கு
“காயம்பட்டு ஊத்தும் ரத்தம் கருப்பாத்தான் இருக்குது” என்பன போன்ற அனுபவ வரிகள் ஆயிரமாயிரம் உண்மைகளை நமக்கு புரிய வைக்கிறது.

“எனக்கு பிறந்த தேதியே தெரியாது
கடற்கரை மணல்தான் என் வீடு,
தினமும் பசியோடு பேராடுவதுதான் என் வேலை,
காலப்போக்குல அது
என்னை பிக்பாக்கெட் அடிக்க வச்சது,
கஞ்சா விக்க வச்சது,
மத்தவங்க வழக்குல ஜெயிலுக்கு போக வச்சது
சென்ட்ரல் ஜெயிலு கானா விஜினு
பேரெடுக்க காரணமாச்சி!
மரணங்களுக்கு மட்டும்தான் பாடுவேன்னு
முடிவு செஞ்சதால மரண கானா விஜியானேன்”

என தான் கடந்து வந்த மரணவலியின் ஒவ்வொரு நிமிடங்களையும் பேட்டிக்காக நினைவு கூர்வது. நம் அனைவருக்கும் மரண வலியை தருவதுதான்.

அறிவியல் கண்டுபிடிப்புகளின் முழுப் பலனையும் தனதாக்கிக் கொண்டு சொகுசு வாழ்க்கைக்கு மத்தியில் அடுத்தக் கட்ட திட்டங்களோடு சமுதாயத்தில் பவனி வருபவனாலும், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு புறப்படும் நேரத்தில் கன்பார்ம் ஆச்சா இல்லையான்னு பிரசவ அவஸ்தையோடு அலைபவனாலும் இத்தகைய வலியை உணர்வது கொஞ்சம் சிரமம்தான்.

அவர்கள் சுருதி மாதா லயப்பிதா என்றார்கள்
நான் அஜல மாதா குஜல பிதா என்றேன்.
அவர்கள் தவள கல்யாணி என்றார்கள்
நான் சட்டி முனிமா ராகம் என்றேன்.

என்று கம்பீரத்துடன் முழங்கும் மாற்றுக் கலாச்சாரத்தின் குரலை உயர்த்திப் பிடிப்போம்! உரக்க சொல்லுவோம்!!

இயக்கம் : வி. இராமு
வெளியீடு : தமுஎச, தென்சென்னை
தொடர்புக்கு : 9444140344
நன்கொடை ரூ. 100


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com