Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
அக்டோபர் 2007

காலனிகளை முறியடிக்கும் புரட்சி நாயகர்கள்
-எஸ்.கண்ணன்

ஆம். கியூபர்கள் நம்மைப் போலவே, அதாவது ஆசியர்களைப் போலவே இருக்கிறார்கள். மானுடவி-யல் அறிஞர்கள் இத்தகைய மனிதர்களை காகஸாய்ட் என்று அழைப்பார்கள். உடை மற்றும் இதர பழக்க வழக்கங்கள் மேற்கத்திய நாடுகளில் உள்ள மனிதர்களைப் போல் இருந்தாலும், முகபாவம் முழுவதும், இந்தியர்களுடன் ஒத்துப் போகிற வகையிலேயே உள்ளனர். இதற்கு காரணமாக கியூபர்கள் கலப்புத் திருமணத்தை சொல்கின்றனர். நாம் சொல்கிற சாதி ரீதியான கலப்பு அல்ல. அவர்கள் சொல்வது நிறத்தை அடிப்படையாகக் கொண்டது. கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு வண்ணங்களும் சமமாக கலந்து உருவானதே பழுப்பு வண்ணம். கருப்பு, வெள்ளை மனிதர்களின் திருமணத்தால் பிறந்தது, என்று குறிப்பிடுகின்றனர்.

பொதுவாக, கியூப மக்கள் வண்ண வேற்றுமைகளை பொருட்படுத்தாமல் இருப்பதற்கான பின்னணி, வித்தியாசமானது. கியூப நாட்டிற்கு என்று சொந்தமான மானுட உருவமோ, மனித இனமோ இல்லாத அளவிற்கு கலப்பு மணம் செய்து வாழ்ந்திருக்கின்றனர். இது வெகு நீண்ட நாட்களாக இருந்து வரும் பழக்கம் என்றும் சொல்கின்றனர். கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கிளிண்டன் அட்லும், கியூபப் புரட்சியின் வரலாற்றை, அமெரிக்கா, கனடா, கிரீஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து சென்று இருந்த பிரதிநிதிகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது கியூபாவில் புரட்சிக்கு முன்பு கூட நிற வேற்றுமை இல்லை என்பதை குறிப்பிட்டார். ஜூலை 26, 1953 அன்று மான்கடா படைத்தளத்தின் மீது ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சிப் படை தாக்குதல் தொடுத்தபோது, இரண்டு நாட்களிலேயே தோல்வியுற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது புரட்சியில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஃபிடலும் கைது செய்யப்பட்டார். ஃபிடலை கைது செய்த ராணுவ அதிகாரி கருப்பு இனத்தை சார்ந்த மனிதர். பாடிஸ்டா என்றழைக்கப்பட்ட கியூபாவின் சர்வாதிகாரிக்கு கீழே ராணுவ பொறுப்பு வகித்தாலும், வெள்ளை நிற மனிதனான ஃபிடல் மீது மரியாதை செலுத்தினார்.

புரட்சிப் படையினர் கைது செய்யப்பட்டால் தனிச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே கொல்லப்பட வேண்டும் என்பது உத்தரவு. உத்தரவை மீறி ஃபிடல் பொதுச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன் காரணமாக ஃபிடல் சாவிலிருந்து தப்பித்தார். அது மட்டுமல்ல வழக்கு விசாரணையைப் பயன்படுத்தி, புரட்சிக்கான பிரச்சாரத்தை பயன்படுத்தினார். நீதிமன்றத்தில் ஃபிடல் ஆற்றிய உரையே பின்னர் “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்ற நூலாக வெளிவந்தது, என்று கிளிண்டன் அட்லும் குறிப்பிட்டார். அந்த அளவிற்கு அதிகாரத்தினால் முரண்பட்ட மனிதர்களானாலும், நிற வேற்றுமை பார்க்காதவர்களாக இருந்தனர்.

மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் பழங்குடி மனிதர்கள் மிக அதிகமாக வாழ்கின்றனர். ஆனால் கியூபாவில் பழங்குடி இனம் பெயருக்கு கூட இல்லை. ஸ்பானிய ஆதிக்கத்தில் அனைவரும் அழிக்கப் பட்டதாகவும், இன்றைய கியூபர்கள் அனைவரும் கலப்பினம் மட்டுமே என்றும் அழுத்தமாக சொல்கின்றனர். அப்படியானால் நீங்களும் ஸ்பானியர்கள் தானே, என்றால் இல்லவே இல்லை நாங்கள், ஜோஸே மார்த்தியின் பிரகடனத்தின் படி, ஸ்பானிய காலணியை எதிர்த்தவர்கள் என்கின்றனர். ஆம். கியூப தேசம் காலணி எதிர்ப்பிற்கு முன்னுதாரணமாக இருக்கிறது. மார்த்திக்கு வழிகாட்டியாக, வெனிசூலாவில் பிறந்து, போராளியாக உருமாறி பின்னர், வெனிசூலாவை மட்டும் அல்லாமல், லத்தீன் அமெரிக்க கண்டத்தின் 5 நாடுகளை ஸ்பானிய காலணியில் இருந்து விடுதலை பெறச் செய்த பொலிவார் காலத்தில் இருந்து, காலணிய ஆதிக்க எதிர்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வெனிசூலா, கொலம்பியா, ஈகுவடார், பெரு, பொலிவியா ஆகிய ஐந்து நாடுகளைப் புரட்சிகரப் போரினால் விடுதலை செய்வித்த பெருமை சைமன் பொலிவாருக்கு உண்டு.

இவையன்றி சிலி, அர்ஜெண்டைனா ஆகிய நாடுகளின் விடுதலைப் போரிலும் பொலிவார் பங்கேற்றுள்ளார். 1783 ல் பிறந்த பொலிவார், ஸ்பெயின் நாட்டில் தங்கி இருந்த போது, அரண்மனை ஆதிக்கத்தையும், அதிகாரத் திமிரையும் நேரடியாக பார்த்தும், அனுபவித்தும் இருக்கிறார். இதன் விளைவாக எதிர்க்க வேண்டும் என்ற உணர்வுக்கு ஆளாகி, உந்தப்பட்டு 23 வயதிலேயே புரட்சிக்காரனாக மாறியுள்ளார். சுமார் 26 ஆண்டுகள் விடுதலைக்கான போர்களில் பங்கேற்று மாவீரனாக திகழ்ந்தது மட்டுமன்றி மார்த்தி, ஃபிடல், சே போன்ற உலகம் போற்றும் வீரர்கள் உருவாவதற்கான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தவராக சைமன் பொலிவார் விளங்குகிறார்.

இன்று பொரிவாரின் செயலை மேற் கொள்ளும் ஆட்சியாளர்களாக கியூபா, வெனிசூலா, பொலிவியா, பிரேசில், அர்ஜெண்டைனா, உருகுவே, சிலி, நிகரகுவா, ஈகுவேடார் ஆகிய ஒன்பது நாடுகள் கம்யூனிஸ்ட ஆதரவு மற்றும் சோசலிச கொள்கைகளைக் கொண்ட நாடுகளாக மாறியுள்ளன. “லத்தீன் அமெரிக்காவின் தாராள சந்தைக்களம்” (Free Trade Area of the Americas) என்ற பெயரில், “லத்தீன் அமெரிக்காவிற்கான பொலிவாரின் மாற்று” ( Bolivarian Alternative for latin America - AIBA) என்று அறிமுகப்படுத்த துவங்கி உள்ளனர். மனிதாபிமானமும், நாடுகளிடையேயான ஒருமைப்பாடும் இணைந்த பொலிவாரின் அடிப்படை அரசியலைக் கொண்ட அமைப்பாக இது வளர்ந்து வருகிறது. பொலிவார் தொடர்ந்து நினைக்கப்படுகிறார்.

பொலிவாரை போலவே சே குவேராவும் தனது பயணத்தைத் துவக்கினார். பொலிவார் 19 ஆம் நூற்றாண்டில் நிகழ்த்திய போர்கள் லத்தீன் அமெரிக்காவில் ஏற்படுத்திய தாக்கத்தைப் போலவே, ‘சே’ 20 ஆம் நூற்றாண்டில் துவக்கிய புரட்சிப் பணிகள் முதலில் லத்தீன் அமெரிக்காவிலும், பின்னர் உலகம் முழுவதும் இளைஞர்களை ஈர்க்கும் ஆயுதமாக மாறியது. பொலிவாருக்குப் பின் வந்த புரட்சி வீரர்களான மார்த்தியும், பின்னர் ஃபிடல் போன்றவர்கள் புரட்சியின் வெற்றியை, அமெரிக்க கழுகுகளிடம் இருந்து காப்பற்றுவதிலேயே முழு நேரத்தையும் செலவிட வேண்டியிருந்தது. பொலிவார் காலத்தை விடவும், அமெரிக்கா தனது செல்வாக்கையும், ஆதிக்கத்-தையும் நவீனப்படுத்தி வளர்த்துக் கொண்டிருந்தது.

எனவே, பொலிவாரைப் போல் ஒரு நாட்டை விடுதலை செய்தவுடன் மற்றொரு நாட்டை விடுதலை செய்வதற்கு புறப்படுவது என்பது, எல்லோருக்கும் எளிதான ஒன்றல்ல. ஆனால் ‘சே’ வித்தியாசமானவராக இருந்தார். 1927 ஜூன் 14 ல் பிறந்த ‘சே’ தனது மாணவப் பருவத்திலேயே தென் அமெரிக்க கண்டம் முழுவதையும் சுற்றி வந்தவர். தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டவர். எனவே உலகம் முழுவதிலும் இருந்த வறுமையை, நோய்களை, அறியாமையை அகற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

எனவே தான் ஃபிடலிடம் கூட சொல்லாமல், கடிதம் எழுதி வைத்து விட்டு பொலிவியக் காடுகளுக்குள் தலைமறைவானார். அங்கே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த புரட்சிக்கு இந்த கொரில்லா வீரன் மாபெரும் உந்து சக்தியாய் போய் சேர்ந்தான். புரட்சியை உலகமய மாக்குவோம் என பிரகடனப்படுத்தினான். 1967ஆம் ஆண்டு தலைமறைவான ‘சே’ பொலிவிய அரசுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் பெரும் சவாலாக விளங்கினார். பொலிவிய காடுகளுக்குள் ‘சே’ ஆற்றிய பணி அமெரிக்காவின் அடி வயிற்றை கலக்கியது. C.I.A உளவாளிகளையும், போராளிகளையும் மட்டுமல்லாமல், ஆயுதங்களையும், பணத்தையும் கொண்டு போய் பொலிவியாவில் கொட்டியது. ஆனாலும் இரண்டரை ஆண்டு காலம், அதாவது ‘சே’ வை காட்டிக் கொடுக்கும் கைக்கூலி கிடைக்கும் வரை அமெரிக்கா மூச்சுத் திணறியது. இறுதியில் ‘சே’ 1969 அக்டோபர் 8ஆம் தேதி பிடிக்கப்பட்டு, 9ஆம் தேதி கொல்லப்பட்டார். ஆனால் இன்றைக்கு திரும்பும் திசையெல்லாம் ‘சே’ வாக இருக்கிறது, லத்தீன் அமெரிக்கா.

லத்தீன் அமெரிக்காவில் இருந்து, எங்களைப் போலவே 180 பேர் கொண்ட பெரும் இளைஞர் படை கியூபாவிற்கு வந்திருந்தது. ஆண், பெண் வித்தியாசமின்றி ‘சே’ உருவம் பொறித்த பனியனுடன், நாங்கள் தங்கியிருந்த சர்வதேச முகாமிற்கு வந்து சேர்ந்தனர், கொலம்பியா, பெரு, வெனிசூலா, மெக்ஸிகோ, குவாண்டாலூப், டொமினிக் ரிபப்ளிக் ஆகிய நாடுகளில் இருந்து வந்தனர். அனைவரும் தங்கள் நாடுகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்தும் சோசலிசம் குறித்தும் உற்சாகமாக பேசுகின்றனர். முகாமிற்குள் ‘சே’ பனியன் தரித்து “கியூபா சி, யாங்கி நோ” என்ற முழக்கத்துடன் அணிவகுத்தனர். ஆம் அமெரிக்காவை லத்தீன் அமெரிக்கர்கள் யாங்கி என்றே அழைக்கின்றனர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com