Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
நவம்பர் 2008

சிவப்பு தேனீர்
எரியும் பனிக்காடு - நூல் விமர்சனம்
ஆர்.வேலுசாமி

நீங்கள் கதகதப்பாய், உறிஞ்சிக் குடிக்கும், ஒவ்வொரு துளி தேனீரிலும், கலந்து இருக்கிறது, எமது உதிரம்...
இப்படித்தான் துவங்குகிறது டாக்டர் பி.எச். டேனியல் அவர்கள் எழுதிய ரெட் டீ என்கிற சிவப்பு தேனீர். எரியும் பனிக்காடு என்கிற பெயரில் தற்போது வெளிவந்திருக்கும் புத்தகம். தமிழில் வழக்கறிஞர் இரா. முருகவேல் மொழியாக்கம் செய்திருக்கிறார். 38 ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகம் 1920 காலகட்டத்தில் நடந்த வரலாற்று பதிவுகளை நாவலாக வடிவமைத்திருக்கிறார். இது ஒரு தலித் இலக்கியம் என்றே சொல்லலாம். கோவை மாவட்ட வால்பாறை மலைகளில் தேயிலை தோட்டங்களில் பணியாற்றி உயிர் தியாகம் செய்த ஆயிரமாயிரம் தலித் மக்களின் வரலாறுகள், இம்மண்ணில் பிழைக்க வந்த தென்மாவட்ட மக்களின் வட்டார மொழியில் மொழியாக்கம் செய்திருப்பது இந்நாவலின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம்.

100 ஆண்டுகளுக்கு முன் ஆங்கில மருத்துவம் இந்தியாவுக்குள் வந்தபோது மேல்சாதிக்காரர்களாக இருந்த வசதிபடைத்தவர்கள் ஆங்கில மருத்துவம் கற்க செல்லவில்லை. காரணம் தாங்கள் மருத்துவராகி விட்டால் வைத்தியம் செய்ய செல்லும் போது தலித்துகளை தொட வேண்டியிருக்கும் அந்த தீண்டாத செயலை செய்ய மறுத்து டாக்டராகாமல் இருந்த காலத்தில் கிறித்துவ மெசினரிகளில் படித்தவர்கள் தான் மருத்துவம் படிக்க வந்தனர். அப்படி வந்தவர் தான் டேனியல். தேயிலை தோட்டங்களில் பணியாற்றிய தொழிலாளிகளின் தியாகம் பதிவு செய்யவே இந்நாவல் என்று குறிப்பிடுகின்றார்.

பிழைப்பிற்காக சொந்த மண்ணைவிட்டு வெளியேறி இடம் பெயர்ந்த, இடம் பெயர்ந்து கொண்டிருக்கிற, இடம் பெயர இருக்கிற உழைப்பாளிகளின் வாழ்க்கையை படம்பிடிப்பதாக இந்தநாவல் அமைந்துள்ளது. நான் வாழும் கிராமத்தில் மழை இல்லை. செய்வதற்கு வேலை இல்லை. இதனால் கூலி இல்லை. உணவு இல்லை கடன் கொடுப்பவர் இல்லை எனவே வறுமை, தற்காலிக நிவாரணம் வேண்டும், கடுமையாக உழைத்தாலும் சம்பாதிக்க வேண்டும், எப்படியேனும் உயிர்வாழ வேண்டும் எனவே எங்கு சென்றால் உயிர் பிழைக்க வாழ்ப்புள்ளதோ அங்கே இடம் பெயரத் துவங்கினார்கள். அன்று துவங்கிய பயணம் இன்றுவரை தொடர்கிறது.

கருப்பன் வள்ளி என்ற இரண்டு கதாபாத்திரத்துடன் பயணிக்கும் நாவல் நமக்கு அலெக்ஸ் ஹேலி அவர்கள் எழுதிய ஏழுதலைமுறைகள் என்கிற அடிமைகள் பற்றிய வாழ்க்கையை நினைவூட்டுகிறது. தனது கிராமத்தில் பிழைக்க முடியாது. தொலைதூரத்தில் உள்ள மலைகளில் வருடம் முழுவதும் வேலை கிடைக்கிறது. மழை பெய்கிறது. வாழ்க்கை அங்கே இருக்கிறது. கைநிறைய சம்பாதிக்கலாம் என்று இடைத்தரகர்கள் கங்கானிகள் ஆசை வார்த்தைகள் சொல்லி ஏமாற்றி அழைத்து வருவது இந்த நூற்றாண்டிலும் நடைபெற்று வருகிறது.

கடந்த பல நூற்றாண்டு அனுபவங்கள் என்பது ஆட்களை துப்பாக்கி முனையில் கடத்தி வருவது அது அடிமை முறை, தற்போது நவீன அடிமை முறை, அதாவது கிராமத்தில் இருந்து புறப்படும் போதே கடனாக முன்பணம் தருவது, பயண செலவு களை ஏற்பது. பணியிடங்களில் தங்க வைப்பது. உணவு தானியங்கள் ரேசனில் வழங்குவது. வருடக் கடைசியில் சம்பளம் வாங்குவது என ஏற்பாடுகள் இருக்குமா என்றால் இருக்கும். உள்ளே நுழைந்து ஒவ்வொரு விசயத்தில் உள்ள மோசடிகளும், ஏமாற்றங்களும், கொடுமைகளும் என்ன என்பதை பட்டியலிடுகிறது இந்நாவல்.

இன்றைக்கும் தொடர்கிற சுமங்கலித்திட்டம், கேம்ப் கூலி உள்ளிட்ட பணி முறைகளில் உள்ள கொடுமைகளை நமக்கு நினைவூட்டுகிறது இந்நாவல். பல மணிநேரம் வேலை வாங்குவது, பணியிடத்தில் பாலியல் வன்முறை. இணங்க மறுப்பவர்கள் கூடுதல் நேரம் வேலை வாங்குவது. கணக்கை தவறாக எழுதுவது, எல்லா வகையிலும் உழைப்பை பெற்றுக் கொண்டு அப்பட்டமாக ஏமாற்றுவது என கொடுமைகள் ஏராளம். வால்பாறை மலையில் வருடத்தில் பாதிநாள் மழை பெய்யும் கடும் குளிர், பனிப்பொழிவு, அட்டை பூச்சிகள், சுகாதாரமின்மை, விதவிதமான நோய்கள், நோய்களுக்கான மருத்துவமின்றி செத்துப் போகும் மனித உயிர்கள் இது ஒருபுறம்.

உடல் நிலை சரியில்லையென்றாலும் வேலைக்கு செல்ல வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் கணவனோ, மனைவியோ உடனிருக்கக் கூடாது. வேலைக்கு செல்ல வேண்டும். குடும்பத்தில் யாரேனும் மரணமடைந்தால் அடக்கம் செய்து விட்டு அடுத்த நாளே வேலைக்கு செல்ல வேண்டும். தன்னோடு வாழ்ந்து மறைந்தவர்கள் குறித்து துக்கம் மறையுமுன்னே பணிக்கு செல்ல வேண்டும். வாங்காத கடனை வாங்கியதாக கணக்கு எழுதி மிரட்டி பணம் பறிப்பது. எழுத படிக்க தெரிந்த இந்திய குமாஸ்தாக்கள், எவ்வித தகுதியுமற்ற எழுதப் படிக்கத் தெரியாத பிரிட்டிஷ்காரனுக்கு கீழே வேலை செய்வது, உரிமைகள் மறுப்பது, இவைகளோடு. முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புகள் தங்கள் நலன் காக்க, அப்பாவி மக்களை மூட நம்பிக்கை கருத்துகளின் பின்னால் செல்ல தூண்டுவதையும் காணலாம்.

மலைகளில் மழை பெய்யவில்லையென்றால் மழைபெய்யச் சொல்லி பூஜைகளும், கிடாய் வெட்டுவதும் நடக்கும். ஒருபுறம் மூட நம்பிக்கை. மறுபுறம் ஒரு வேளை அசைவ உணவு. முன்னதை விட பின்னதுதான் ஈர்ப்பு. அதே போல் மழை நிற்காமல் பெய்தால் நிற்கச் சொல்லி பூஜை ஏற்பாடும் விருந்தும். இது ஒருபுறம். மறுபுறம் தனது குடும்பத்தில் உடல்நிலை சரியில்லாதவர்களை குணப்படுத்த மூடநம்பிக்கையுடன் உச்ச கட்டமாய் அதிக விலை கொடுத்து வாங்கப்படும் மந்திரித்த தாயத்தும் பூஜைகளும். இது தேவையற்ற செலவு மற்றும் ஏமாற்று வேலை என்பதை உணராத அப்பாவிகள். இப்படியாக அன்றும் இன்றும் மாறாமல் இருக்கம் சமூகச் சூழலை மிகசிறப்பாய் படம் பிடிக்கம் இந்த நாவலை படிக்க வாய்ப்புள்ள ஒவ்வொருவரும் இப்புத்தகத்தை வாசிக்க வேண்டும்.

ஏதோ அடிமை இந்தியாவில் நடைபெற்ற சம்பவமாக ஒதுக்கி விட முடியாது. இன்றைக்கும் பொருந்தக் கூடியதாக எல்லா அம்சங்களும் உள்ளன. இடம் பெயர்தலுக்கான காரணம் வறுமை என்று செல்லப்படுகிறது. வறுமையோடு இணைந்திருக்கிற காரணங்கள் மறைக்கப்படுகிறது. கிராமங்களில் தலித் மக்கள் மீது திணிக்கப்படுகிற தீண்டாமைக் கொடுமைகள் அதிலிருந்து விடுபடவும் அம்மக்களுக்கு தோன்றிய மாற்று வழிகளில் ஒன்று இடம் பெயர்தல். இதுவும் இந்நாவலில் சுட்டிக் காண்பிக்கப்படுகிறது.
பிழைப்பிற்காக தனது கிராமத்தை விட்டு வந்தவர்கள் மீண்டும் தனது குடும்பத்தாரை பார்க்க திரும்ப முடியாமல் மடிந்து போன மக்கள் தேயிலை செடிக்கு கீழே, செடிக்கு ஒருவராக இருப்பார்கள் அப்படி ஆயிரமாயிரம் மக்களின் உயிர் தியாகத்தால் வளர்ந்துள்ள பச்சைப் பட்டு போர்த்தியதைப் போன்று இயற்கை எழில் கொஞ்சும் மலை.

ஒரு நாள் வால்பாறை சென்று இயற்கை எழிலை ரசித்து விட்டு வருவது சுற்றுலா. ஆனால் அங்கேயே வாழ்ந்து கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை. அனைத்தும் மாறுதலுக்குட்பட்டது என்ற மகத்தான மனிதத் தத்துவம் கூட வால்பாறை மலையில் தேயிலைத் தோட்ட தொழிலாளிகளின் வாழ்வில் பொய்த்துவிடும். இன்றைக்கும் குறைந்தபட்ச கூலி சட்டம் அமலாகாமல் இருப்பது, தங்களின் குடியிருப்புகள் அடிப்படை வசதிகளின்றி இருப்பது, சம்பள உயர்வின்றி இருப்பது இன்னும் பல கொடுமைகள் தொடர்கின்றன. எல்லா வகையிலும் போராடி வருகிற சூழலில் மலை மக்களின் கோரிக்கைக்காக அவர்கள் போராடும் போது அவர்களுக்காக நமது குரலும் ஒலிக்க வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com