Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
நவம்பர் 2008

உலக நிதித்துறை வீழ்ச்சி இன்சூரன்சும் காயப்படுமா?

கண்மாய் உடைந்து ஊர் அழிவது போல உலக நிதி நெருக்கடி ஒவ்வொரு நாட்டையும் தாக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் வணிக, முதலீட்டு வங்கிகள் மட்டுமின்றி இன்சூரன்ஸ் நிறுவனங்களும் கரை புரண்டோடும் காட்டாற்று வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. ஏ.ஐ.ஜியும் (AIG) ஃபோர்டிசும் (Forts) திவாலின் விளிம்பு வரை சென்றிருக்கின்றன.

இந்திய நாட்டில் ஏ.ஐ.ஜி, டாட்டாவோடு கைகோர்த்துக் கொண்டு ஏற்கனவே வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. அதுபோல ஃபோர்ட்டில் இந்தியாவின் ஐ.டி.பி.ஐ (IDBI) வங்கியோடு இன்சூரன்ஸ் வணிகத்திற்காகக் கூட்டு சேர்நதுள்ளது. இதனால் இந்திய இன்சூரன்ஸ் துறையிலும் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

உலக நிதி நெருக்கடியிலிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன? 1991லிருந்து நிதித்துறை சீர்திருத்தங்களுக்காக என்னென்ன வாதங்கள் முன் வைக்கப்பட்டதோ, எந்தெந்த மாற்றங்கள் முன்மொழியப்பட்டதோ, அவையெல்லாம் முனை மழுங்கிய அம்புகளாக முறிந்து கீழே கிடப்பதைப் பார்க்கிறோம். ஆனாலும் பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதயமைச்சர் சிதம்பரமும் விடுவதாக இல்லை.

விலகலாமா அரசு

1994 ஐ நோக்கி நமது நினைவுகளை அழைத்துச் செல்வோம். அன்று மல்ஹோத்ரா குழு அறிக்கை வெளிவந்திருந்தது. அதன் முக்கிய பரிந்துரை என்ன தெரியுமா? 50 சதவீத எல்.ஐ.சி பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகளை விற்றுவிட வேண்டுமென்பதுதான். இப்பரிந்துரைகளை ஏற்பதாக அன்றைய நிதியமைச்சர் மன்மோகன் கசிங்கும் அறிவித்தார். 51% வரையிலான பங்குள் அரசு கைகளில் இருப்பது வரை தனியார் மயமாகி விட்டதாகக் கூறவியலாது: அது வரை அதன் பெயர் பங்கு விற்பனை தான் (Disinvestment) என்பது சிதம்பரம் இன்று தருகிற விளக்கம்.

ஆனால் அந்த கூடுதல் 1% ஐ கூட விட்டு வைக்க அன்று மல்ஹோத்ரா தயாராக இல்லை. நினைவுகளை கலைத்து விட்டு நடப்பிற்கு வருவோம். இன்று அமெரிக்க அரசாங்கம் 80 பில்லியன் டாலர்களை ஏ.ஐ.ஜிக்குள் “இன்ஜெக்ட்” செய்துள்ளது. ஏ.ஐ.ஜியின் மொத்த மூலதனத்தில் இது 70%க்கும் மேல். அப்படியெனில் என்ன பொருள்! கிட்டத்தட்ட தேசியமயமாக்கப்பட்டுள்ளது என்பது தானே. பிரிட்டனினுள்ள இராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்தில் அந்நாட்டு அரசாங்கம் தான் பெரிய பங்குதாரராக மாறியுள்ளது.

அரசு பொருளாதாரத்திலிருந்து விலகுகிறது என்ற உலகமயக் கோட்பாடு பின்தள்ளப்பட்டு மீண்டும் அரசின் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு பன்னாட்டு மூலதனத்தைக் காப்பாற்றுவதற்கு தலையிடுகிறது என்பது தான் உண்மையெனினும் அதன் உலகமய பிரம்மாஸ்திரத்தின் கூர்முனை சிதைவுற்றிருப்பதே இன்றைய நிலைமை. ஆனால் இந்திய அரசோ பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனை நோக்கி நகர முனைவதே இல்லை.

யார் கியாரண்டி?

இப்போது உலகநிதி அரங்கில் அடிபடுகிற இன்னொரு வார்த்தை சாவரினி கியாரண்டி எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதல்லவா எல்.ஐ.-சிக்கு உள்ள அரசு உத்தரவாதத்தை - அதுதான் சாவரின் கியாரண்டி பறிப்பதற்கு எவ்வளவு தடவை முயற்சித்தார்கள் 1956க்குப் பின்னர் ஒரு பைசாவுக்கு கூட அரசாங்கத்திடம் கையேந்தாக எல்.ஐ.சிக்கு இருந்து வரும் அரசு உத்தரவாதத்தைப் பறிக்க முனைந்ததேன். பொதுத்துறையை சிதைப்பதைத் தவிர வேறென்ன? ஆனால் இன்று உலகநிதி நெருக்கடியை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் எல்லா வங்கி சேமிப்புகளுக்கும் அரசு உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. இந்தோனேஷியா அரசு உத்தரவாதத்திற்கான வரம்பினை இரண்டு பில்லியன் ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. ஐப்பானின் நிதியமைச்சர் சொய்ச்சி, நகாகுவா, எல்லா வங்கி சேமிப்புகளுக்கும் அரசு உத்தரவாதம் தருவது குறித்துப் பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவதாக அந்நிய முதலீடு பிரச்சினை 49 சதவீதத்திற்கு உயர்த்துவதற்கு நான்கைந்து ஆண்டுகளாக சிதம்பரம் படுத்திய பாடுதான் என்ன? இன்று ஏ.ஐ.ஜியின் பங்குள் 26% க்குப்பட்டு இருந்ததாலேயே டாட்டா ஏ.ஐ.ஜிக்கு ஆபத்தில்லை எனக் கூறப்படுகிறது. ஆனாலும் அந்நிய நேரடி முதலீட்டு உயர்வை கைவிட சிதம்பரத்துக்கு மனமில்லை. கொதிக்கிற பாலில் சூடுபட்ட பிறகும் சீர்த்திருத்த பூனையைத் திரும்ப திரும்ப அனுப்பி வைக்கிற மர்மம் என்ன இந்த நாடாளுமன்றத் தொடரிலும் இன்சூரன்ஸ் மசோதா இதுவரை தாக்கலாகாதற்கு காரணம், சிதம்பரம் கேபினட் கூட்டம் நடந்த அன்றைக்கு ஊரில் இல்லாததது தான் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது கைவிடு-வதாக அறிவிக்க மனமில்லை. தற்போதைக்கு தள்ளிப்போட சால்ஜாப்பு கூறுகிறார்கள். (இது குறித்து ஏற்கனவே நிறையப் பகிர்ந்து கொண்டுள்ளோம்)

நான்காவது, இந்திய பொருளாதாரத்திற்கு பாதுகாப்புவளையங்கள் இருப்பதால் அச்சப்படத் தேவையில்லை என்கிறாரர்கள் ஆட்சியாளர்கள் எது எது பாதுகாப்பு வளையங்கள்? இந்திய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முடியாது (ஆனால் எல்.ஐ.சி நிதியினை வெளிநாடுகளில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமென்று ஒரு கட்டத்தில் கூறப்பட்டது)

பென்சன் நிதியை வெளிநாடுகளில் முதலீடு செய்ய முடியாது. வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே பென்சன் நிதியத்தை நடத்தவியலாது. இவ்வளையங்களை உருவாக்கியது யார்? உடைக்க முயற்சித்தது யார்? இப்படி நாள் பூராவும் மான்களையும், முயல்களையும் தேடியலைந்த புலி எதுவும் கிடைக்காததால் உருத்திராட்சக் கொட்டை போட்டுக் கொண்டு சைவமாக மாறிய கதை தான் உடைக்க முனைந்து முடியாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளையே தங்களுடையதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.

சூதாட்டத்திற்கு இரையா

ஐந்தாவது, எல்.ஐ.சியின் வணிகத்தில் பங்குச் சந்தையோடு இணைக்கப்பட்ட திட்டங்கள் பெரும்பங்கை வகிக்கின்றன. முதல் பிரிமிய வருவாயில் 2007-08ல் இது 86 சதவீதமாக இருந்தது. இவ்விதழிலேயே தோழர். இ.எம்.ஜோசப் சூதாட்ட மூலதனத்தின் பிரம்மாண்டத்தை விவரித்துள்ளார். அதன் பாதிப்பிற்கு உள்ளாகாமல் இருக்க முடியுமா? இதோ ஒரு உதாரணம் 2005 டிசம்பரில் ரூ. 10000க்கு எடுக்கப்பட்ட ப்யூச்சர் பிளான்ஸிற்கு 2008 ஆகஸ்டில் ரூ. 16000 ஆக இருந்த மதிப்பு இம்மாத்தில் ரூ. 12000 ஆகச் சரிந்துவிட்டது.

புதிய இன்சூரன்ஸ் மசோதா தயாராகி விட்டதாம். 60 பக்கங்கள் 120 திருத்தங்கள் இருப்பதாகச் செய்தியேடுகள் தெரிவித்துள்ளன. அம்மசோதாவில் அந்நிய நேரடி முதலீட்டு உயர்வு மட்டுமின்றி மறு காப்பீட்டுத் துறையில் பன்னாட்டுக் கம்பெனிகளை அனுமதிப்பதற்கான முன்மொழிவுகள் உள்ளனவாம்.ஸ்விஸ் ரே, லாயிட்ஸ் மூனிச் ரே உள்ளிட்ட பன்னாட்டு முதலைகள் புகுந்து கலக்கவுள்ளனவாம்.

இவ்வளவு சரிவுகளுக்குப் பின்னரும் மைய அரசின் பாதை மாறாதது ஏன்? இதை நாம் அனுமதிக்கலாமா? எனவே படிப்பினைகள் கற்கப்பட வேண்டும். மன்மோகன் சிங், சிதம்பரம் கம்பெனிகளை உலகமய மோகத்தை எதிர்த்து மக்கள் திரட்டப்பட வேண்டும். உலக நிதி நெருக்கடி குறித்த உண்மைகள் ஒவ்வொரு தெருவிலும், வீட்டிலும் நம்மால் சொல்லப்பட வேண்டும்.
நன்றி : சங்கமுரசு


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com