Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
நவம்பர் 2008

தலையங்கம்
நிதி மூலதன நெருக்கடி

உலகத்தின் மிகப்பெரிய அசைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஊடகங்களால் கட்டியெழுப்பப்பட்ட மாயை அனலில் பட்ட மெழுகுபோல் உருகி வடிகிறது. கனவு தேசம் என்று வியந்து பார்த்தவர்கள் குழப்பத்தின் உச்சியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் நிலைகுத்திய கண்களோடு உறைந்துள்ளனர். அமெரிக்காவில் அடிக்கிற பொருளாத்தார நெருக்கடிப் புயலில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு நடு வீதியில் நிற்கின்றனர். தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட அமெரிக்க வாழ் இந்தியத் தொழிலதிபரின் புகைப்படம் பத்திரிக்கையில் வந்தது அதிர்ச்சியளிக்கிறது. பல வங்கிகள் திவாலாகி விட்டன. அமெரிக்க ஆட்சியாளர்கள் துவக்கத்தில் இதைப் பெரிய பிரச்சனையாக கண்டுகொள்ளவில்லை, ஆனால் நாட்கள் ஆக ஆக பிரச்சனையின் முழு விஸ்வரூபம் தெரிந்த போது ஆமாம், நாங்கள் இப்படி எதிர்பார்க்கவில்லை என்று தோளை குலுக்கிச் சொல்லுகின்றனர். ஆனால் உலகமயத்தின் முடைநாற்றம் எப்படியும் வெளியே வந்தே தீரும்.

அமெரிக்காவின் சுவட்டை தடம் மாறாமல் கடைபிடிப்பதை நமது ஆட்சியாளர்கள் பெருமையாக நினைக்கின்றனர். உலகமயக் கொள்னையை நாட்டின் முன்னேற்றத்திற்கான ஒரே தீர்வு என அமுல்படுத்துகின்றனர். ஆனாலும் அமெரிக்காவின் நெருக்கடி நமது நாட்டை பாதிக்காது என்று ப.சிதம்பரம், மன்மோகன் சிங் வகையராக்கள் உடுக்கை அடித்துக் கொண்டுள்ளனர். இப்படி பாதிப்பு இல்லை என்று ஒரு பக்கம் அறிவித்துக் கொண்டே மற்றொரு பக்கம் அரசின் பணத்தை திறந்து விடுகின்றனர்.

ஏன் இந்தியாவில் விலைவாசி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்று கேள்வி வந்தபோது, விலைவாசி உயர்வுக்கு மக்களிடம் அதிக அளவு பணம் புழங்குவதே காரணம் என்று உலகமகா கண்டுபிடிப்பை ப.சி வெளியிட்டார். ஆனால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியிலிருந்து நெருக்கடியை சமாளிக்க சந்தையில் புழங்கச் செய்துள்ளார். இந்த பணப்புழக்கம் இன்னும் விலைவாசியை அதிகப்படுத்தாதா என்பது சிதம்பரத்திற்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

இது ஒருபக்கம் நடக்க, அமெரிக்க நெருக்கடி இந்தியாவை பாதிக்காது என்று ஆட்சியாளர்கள் சொன்ன அடுத்த சில தினங்களில், அதாவது தீபாவளிக்கு முன்னதாக இந்தியாவில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யப்போவதாக அறிவித்தன. உருக்கு உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி), அயல்பணி ஒப்படைப்பு (பி.பி.ஓ), நிதித்துறை நடவடிக்கைகள், கமிஷன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சேவைத்துறை, வீடு, மனை விற்பனை, கட்டுமானத்துறை, தனியார் விமானப் போக்குவரத்து ஆகியத்துறைகளில் 25 சதம் முதல்30 சதம் வரை ஆட்குறைப்பு செய்யப்படும். என்று அறிவித்தனர்.

அப்படி ஆட்குறைப்புக்கு ஒவ்வொரு நிறுவனத்திலும் ஆட்களை தேர்ந்தெடுத்து வெளியேற்ற பட்டியலிடும் பணி துவங்கிவிட்டதாக அறிவிப்புகள் வெளிவந்தன. ஆட்குறைப்பு மட்டுமல்லாது சிக்கன நடவடிக்கையின் அடுத்த கட்டமாக கம்பெனிகள் நடத்துகிற ஆடம்பர விழாக்கள் குறைக்கப்படும் என்றும், வாகனங்களில் அழைத்துவரும் ஏற்பாடுகள் குறைக்கப்படும் என்றும், நிர்வாகிகளின் வெளிநாட்டு, உள்நாட்டு விமானப் போக்குவரத்து குறைக்கப்படும் என்றும் அந்த நிறுவனங்களின் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டன.
ஆனால் தீபாவளி முடிந்ததும் திடீரென ப.சிதம்பரம் தலையீட்டின் பேரில் அந்த நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக தனியார் கம்பெனிகள் அறிவித்துள்ளன. காரணம் ஏதோ ப.சிதம்பரம் தலையிட்டு பாதுகாத்துவிட்டார் என்று நினைத்துவிட வேண்டாம். எங்களைப் போல நாட்டையே அடகுவைப்பது கூட வெளியே சொல்லாமல் செய்யும் திறமை இல்லாத மண்டுகளே! என்று செல்லமாக கோபித்துக்கொண்டு ஆட்குறைப்பு இல்லை என்று அறிவித்துவிட்டு ஆட்குறைப்பை செய்யுங்கள் என்று ஆலோசனை கூறி உள்ளார்.

உதாரணம் வேண்டுமா அவர்கள் ஆட்குறைப்பு இல்லை என்று அறிவித்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் மோடோரோலா நிறுவனம் தன்னுடைய 3000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி உள்ளது. ஒன்னரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட போது எந்தவித பரபரப்பும் காட்டாமல் எருமை மாட்டின் மீது மழை விழுந்ததைப் போல சுரணையற்று இருந்த ஆட்சியாளர்கள்தான், இன்று இந்திய முதலாளிகளுக்கு பிரச்சனை என்றதும் ஓடோடி வந்து ஆலோசனைகளை கொடுப்பதும், நாங்கள் இருக்கிறோம் கவலை படாதீர்கள் என்று ஆறுதல் சொல்லுவதும் ஆகா என்னே இவர்களது வர்க்கப் பாசம். உலகமயத்தை எதிர்த்துப் போராடாமல் இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்காது என்ற நிதர்சனமான சூழலில் அதை நோக்கி தேச இளைஞர்களை திரட்டுவது இன்னும் வேகப்படுத்தப்பட வேண்டியப் பணியாக நம்முன் நிற்கிறது.
-ஆசிரியர் குழு


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com