Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
நவம்பர் 2007

சிறப்பு பொருளாதார மண்டலம் - தேவை மாற்றுப் பாதை
பி. வெங்கடேசன்

சிறப்பு பொருளாதார மண்டலம் - நம் நாட்டில் இக்காலத்தில் பரவலாக பேசப்படுகின்ற விஷயம் இது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியத்தேவை இது என்று அரசும் பெருமுதலாளிகளும் முதலாளித்துவ ஊடகங்களும் தொடர்ந்து சொல்லி வருகின்றன. இது குறித்த முழுமையான விவாதம் நடத்தப்படுவது அவசியமாகும்.

சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற முறையை அறிமுகப்படுத்தியது சீனாதான். பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் அந்நாட்டின் கடலோரப் பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களை நிறுவனங்களுக்கு குத்தகை முறையில் அளித்து, மேலும் சில சலுகைகளை கொடுத்து வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக சீனாவில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை சீனாவில் சென்-ஜென், சான்டவ், ஜியாமென், ஜீ ஹாய், ஹைனான் மற்றும் புடோங் ஆகிய ஆறு இடங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆறு இடங்களிலும் நிலம் அரசு கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இங்கு செயல்படும் நிறுவனங்கள் குத்தகை முறையில்தான் நிலத்தை பயன்படுத்தி தொழிற்-சாலைகளை அமைத்துள்ளன. இதுதான் சீனா கடைப்பிடிக்கும் அணுகுமுறை.

சீனாவைப் போல் இந்தியாவும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர், நிதியமைச்சர் தொடங்கி பலரும், சமீபத்தில் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வரை கீறல் விழுந்த ரெக்கார்டைப்போல் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்கள். சீனாவின் சமூக பொருளாதார கட்டமைப்பையும், அதன் மீது சீன அரசு கொண்டிருக்கும் உறுதியான கட்டுப்பாட்டையும் இவர்கள் யாருமே சொல்வதில்லை. சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற கோட்பாட்டையும் இந்தியா சீனாவிடமிருந்துதான் இறக்குமதி செய்துள்ளது.

இந்தியாவில் நிலவும் நில உறவுகளைப் பற்றிய ஒரு அடிப்படையான புரிதல் இல்லாமல் சிறப்பு பொருளாதார மண்டலம் பற்றி விவாதிக்க முடியாது. இந்தியாவில் சராசரியாக ஒவ்வொருவருக்கும் இருக்கும் நிலம் கால் ஏக்கர் மட்டுமே. இதுகூட அனைவருக்கும் இல்லை. பெரிய பெரிய நிலச்சுவான்தாரர்களும் பணக்காரர்களும் இந்தியாவின் பெரும்பகுதி நிலத்துக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றனர்.

அதனால்தான் இந்தியாவின் ஆளும் வர்க்கம் என்பது ‘நிலபிரபுத்துவ - முதலாளித்துவ’ கூட்டு என்கிறோம். இப்படி துண்டு துக்காணி நிலம்கூட இல்லாத இந்தியர்கள் ஏறத்தாழ எழுபது கோடிப்பேர் இருக்கிறார்கள். இந்தியாவின் பிரதான வாழ்வாதாரத் தொழில் விவசாயமே ஆகும்.

ஆக இந்திய மக்களின் வாழ்நிலை என்பது நிலத்தோடு பின்னிப் பிணைந்ததாக இருக்கிறது. 1990களுக்குப் பிறகு அமலாகிவரும் நவீன தாராளமய கோட்பாடுகள் இந்தியாவின் விவசாயத்துறையை பெரும் நெருக்கடிக்கு ஆளாக்கி வருகிறது. விவசாயிகளின் தற்கொலை முடிவின்றி தொடரும் துயரக்கதையாகியுள்ளது. மும்பை பங்குச்சந்தைப் புள்ளிகள் 20,000ஐ தாண்டியதற்கு விழா எடுக்காத குறையாக துள்ளிக் குதிக்கும் ஊடகங்கள், விவசாயிகள் தற்கொலையை ஒரு செய்தியாக மட்டுமே வெளியிடுகின்றதை நாம் பார்க்கிறோம்.

ஆகவே, பெரும் பணக்காரர்கள் வசம் குவிந்துள்ள நிலம், விவசாயத்தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி - இந்த இரண்டு விஷயங்களையும் உள்வாங்கிக் கொண்டுதான் சிறப்பு பொருளாதார மண்டலம் பற்றி நாம் விவாதிக்க முடியும். 1894ம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு ஒரு நில அபகரிப்பு சட்டத்தை இயற்றியது. ‘நில கையகப்படுத்தும் சட்டம், 1894 என்று இந்த சட்டத்திற்கு பெயர். சுதந்திரப் போராட்டம் நடைபெற்று வந்த காலத்தில், சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை தட்டிப் பறிக்க பிரிட்டிஷார் உருவாக்கிய வஞ்சக திட்டமே இந்த சட்டம். பொது நன்மை அல்லது வளர்ச்சிக்காக என்று அரசு கருதினால், யாரிடமிருந்து வேண்டுமானாலும் நிலத்தை அரசு கையகப்படுத்தலாம் என்ற இந்த சட்டத்தை, சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கழிந்த பின்னரும், இந்திய விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க இந்த சட்டத்தையே அரசு பயன்படுத்துகிறது.

பொருளாதார வளர்ச்சிக்காக தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். அதற்கு நிலம் தேவைப்படுகிறது. இதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது. ஆனால், நிலம் எப்படி கொடுக்கப்படுகிறது என்பதில்தான் பிரச்சனை எழுகிறது. நிலம் கொடுப்பவர்களுக்கு என்ன நஷ்ட ஈடு கொடுக்கப்படுகிறது, அவர்களின் எதிர்காலத்திற்கு என்ன ஏற்பாடு செய்யபடுகிறது என்பதைப் பற்றியெல்லாம் ஆளும் வர்க்கங்கள் கவலைப்படுவதே இல்லை. இந்தியாவின் 70% மக்கள் சார்ந்திருக்கும் விவசாய நிலங்களை எடுக்கையில் நாட்டின் உணவு பாதுகாப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டாமா? நிலம் ஏதுமில்லாமல் விவசாயக் கூலித் தொழிலாளியாக பணியாற்றுபவர்கள் மிக அதிகம்.

தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் 2005ம் ஆண்டின் கள ஆய்வின் முடிவின்படி, ஒரு விவசாயக் கூலிக்கு ஆண்டுக்கு 159 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கிறது. அதற்கு அவருக்கு கிடைக்கும் தினக்கூலி சராசரியாக ரூ.51 மட்டுமே. உதாரணத்திற்கு, மும்பை நகருக்கு மிக அருகில், ஆண்டுக்கு இரண்டு போகம் விளைகின்ற 14000 ஹெக்டேர் விவசாய நிலம் முகேஷ் அம்பானிக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க தாரை வார்த்துள்ளது மகாராஷ்டிர அரசு. இதில் விவசாயம் செய்து வந்த, விவசாயக் கூலியாக தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்த லட்சக்கணக்கான குடும்பங்களின் கதி என்னவாகும்?

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு விவசாய உற்பத்தி மட்டுமே போதுமானதல்ல, தொழில் வளர்ச்சி அவசியம் தேவை என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால், இந்தியாவின் விவசாய உற்பத்தி ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறதே? இரவு உணவு கிடைக்காமல் பட்டினியாக உறங்கும் இந்தியர்கள் 26 கோடிப்பேர் என்று அரசின் புள்ளி விபரமே சொல்கிறதே! இவர்களுக்கு என்ன வழி? நிலத்தை இழப்பவர்களின் மறுவாழ்வுக்கான வழி என்ன? 2005ம் ஆண்டில் சிறப்பு பொருளாதார மண்டலம் குறித்த சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இதில் பல சரத்துக்கள் நிலக்கொள்ளைக்கு வழி செய்வதாகவே உள்ளன. ஆகவேதான் சிறப்பு பொருளாதார மண்டலம் பற்றிய தனது குறிப்பில் இடதுசாரி கட்சிகள் விரிவான, ஆக்கபூர்வமான ஆலோசனைகளை பட்டியலிட்டுள்ளன.

நிலத்தின் உரிமை அரசிடமே இருக்க வேண்டும் - கையகப்படுத்தும் நிலத்துக்கு உச்சவரம்பை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும் - விவசாய நிலத்தை கையகப்படுத்துவது இயன்றவரை தவிர்க்கப்பட வேண்டும் - நிலத்தை இழக்கும் விவசாயிகள் மற்றும் வேலை இழக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேறு இடத்தில் நிலம் உள்ளிட்ட உரிய மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும் - நிலத்தை இழப்பவர்களுக்கு அங்கு அமையும் நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட அளவு பங்குகள் கொடுக்கப்பட வேண்டும் - இந்த மாற்று ஏற்பாட்டை மத்திய அரசு வகுக்க வேண்டும் - சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் 50% தொழிற்சாலைக்கும், மீதம் குடியிருப்பு, பள்ளி, மருத்துவமனை, பூங்கா போன்ற சமூகப் பயன்பாடுகளுக்காக ஒதுக்கப்பட வேன்டும் - இதை ரியல் எஸ்டேட் கொள்ளைக்காடாக நிறுவனங்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் - என்பன இடதுசாரி கட்சிகளின் ஆலோசனைகளில் சில.

அதுமட்டுமல்ல, சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு “ஊக்கம்” என்ற பெயரில் வரிச்சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. மத்திய நிதியமைச்சகத்தின் மதிப்பீட்டின்படியே, இப்படி சலுகையாக இழக்கப்படும் வரி ஆண்டுக்கு சுமார் 1,75,487 கோடியாக இருக்கும். நம் நாட்டின் பெரு முதலாளிகள் ஏற்கனவே வரி ஏய்ப்பில் தேர்ச்சி பெற்றவர்கள். இதில் இன்னமும் சலுகை காட்டப்படுவது பற்றி ஒரு விரிவான பரிசீலனை செய்யப்பட்டு, அதில் பொருத்தமான திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இடதுசாரி கட்சிகள் மத்திய அரசுக்கு ஆலோசனை கொடுத்துள்ளன. வருவாய் பற்றாக்குறை என்ற காரணம் சொல்லி பொதுவிநியோகம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை மத்திய அரசு கைகழுவி வரும் நிலையில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அரசுக்கு மேலும் அதிக வருவாய் இழப்பை ஏற்படுத்திடக்கூடாது என்பதே இடதுசாரி கட்சிகளின் நியாயமான வலியுறுத்தல்.

சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது என்ற நிலை மாற்றப்பட வேண்டும் என்பதும் முக்கியமாகும். நம் நாட்டின் சட்டங்கள் நம் நாட்டிலேயே செல்லாது என்பதை எப்படி ஏற்க முடியும்? சிறப்பு பொருளாதார மண்டலங்கள் நாட்டுக்குள்ளேயே ஒரு நாடாக இருக்க முடியுமா? எனவே இதிலும் உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென இடதுசாரிகள் வலியுறுத்துகிறார்கள். சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அந்நிய முதலீடு கட்டுப்படுத்தப்படுவதும் அவசியமாகும்.

கடந்த அக்டோபர் 10ம் தேதி கூடிய மத்திய அமைச்சரவை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் குறித்து ஒரு சில திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. மாற்று நிலம், நிலம் இழப்பவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, நிறுவனத்தின் பங்குகளைப் பெற வாய்ப்பு, 70% நிலத்தை மட்டுமே நிறுவனம் கையகப்படுத்த முடியும் மீதம் 30% அரசுவசமே இருக்கும் என்பன இம்முடிவுகளில் முக்கியமானவை. ஆனால், இவை முழுமையானவை இல்லை என்பதே உண்மை. சிறப்பு பொருளாதார மண்டலம் பற்றிய மேலும் அழுத்தமான விவாதங்கள் சமூகத்தின் பல தளங்களிலும் நடத்தப்பட வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலம், நடைமுறையில் சூப்பர் சுரண்டல் மண்டலமாக ஆகிவிட அனுமதிக்க முடியாது. விவசாயிகள், குத்தகைதாரர்கள், விவசாயக்கூலிகள், வேலையற்ற இளைஞர்கள், விளிம்பு நிலையில் வாடும் மக்கள் ஆகியோரின் நலன்கள் முழுமையாக பாதுகாக்-கப்படும் விதமாக சிறப்பு பொருளாதார மண்டல விதிகளில் உரிய மாற்றங்களைக் கொணர பரந்து விரிந்த மக்கள் சக்தியை திரட்டுவது காலம் நமக்கிட்டுள்ள கட்டளையாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com