Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
நவம்பர் 2007

சேதுக் கடலோரம் இளைஞர் படை அணிவகுப்பு
எஸ்.பி. ராஜேந்திரன்

ஆதம்பாலம் பிரச்சனையை சங்பரிவாரம் மதவெறி மயமாக்கிக்கொண்டிருக்கும் சூழலில், மன்னார் வளைகுடாவில் உள்ள ஆதம்பாலத்தை தோண்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள பின்னணியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு தென்கோடி இந்தியாவின் சின்னஞ்சிறு தீவாம் ராமேஸ்வரத்தை நோக்கி நான்கு முனைகளிலிருந்து சைக்கிள் பிரச்சாரப் பயணத்தை நடத்தியது. மத்திய அரசே, சேதுசமுத்திர திட்டத்தை எவ்வித தயக்கமுமின்றி, மதவெறிக்கு பணியாமல் உறுதியுடன் அமல்படுத்து என்பதே இப்பயணத்தின் முழக்கம்.,

மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து நூற்றுக்கணக்கான வாலிபர் சங்க ஊழியர்கள் மாநிலத்தலைவர் எஸ்.கே.மகேந்திரன் எம்.எல்.ஏ., செயலாளர் எஸ்.கண்ணன், துணைச்செயலாளர் எஸ்.ஜி.-ரமேஷ்பாபு, பொருளாளர் ஆர்.வேல்முருகன் ஆகியோர் தலைமையில் அக்.8ம் தேதி வெண்சீருடை அணிந்து, வெண்கொடி உயர்த்தி புறப்பட்டனர். 8,9,10 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்கள் முழுவதிலும் பிரச்சாரம் செய்த இப்பயணக் குழுக்களுக்கு திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, திருச்சுழி, திருப்புவனம், பார்த்திபனூர், பரமக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட நகரங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் நான்கு குழுக்களும் சங்கமித்தபோது மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

வரவேற்புகளைக் கடந்து 10ம் தேதி மாலை வரலாற்றுச் சிறப்புமிக்க பாம்பன் பாலம் வழியாக ராமேஸ்வரத்தை அடைந்தன பிரச்சாரக்குழுக்கள். பாம்பன் பாலத்தின் மீது வெண்சீருடை அணிந்த இளைஞர் பட்டாளம் சைக்கிளில் அணிவகுத்து வந்தபோது எழுப்பிய முழக்கம் சேதுக்கடலின் அலைகளோடு மோதியது. ராமேஸ்வரம் தீவில் தங்கச்சிமடம், ராமேஸ்வரம் பஸ்நிலையம் ஆகிய இடங்களில் அனைத்து சகோதர அமைப்புகளும் இணைந்து பிரமாண்டமான வரவேற்பை அளித்தன. இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் நகருக்குள் பிரவேசித்த சைக்கிள் பிரச்சாரப் பயணம் ராமநாத சுவாமி நான்கு வீதிகளிலும் பிரச்சாரத்தை நடத்தியது.

பிரச்சாரத்தின் இறுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையேற்றறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்-செயலாளர் என்.வரதராஜன், திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், வாலிபர் சங்க அகில இந்தியத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் ரவிச்சந்திர ராம வன்னி (காங்கிரஸ்), வாலிபர் சங்க மாநிலத்தலைவர்கள் எஸ்.கண்ணன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஆர்.வேல்முருகன், மாவட்டச் செயலாளர் எம்.ராஜ்குமார், மாவட்ட செயலாளர் முருகபூபதி ஆகியோர் உரை நிகழ்த்தினர். ராமேஸ்வரம் நகரச்செயலாளர் ஜி.சிவா நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வாலிபர் சங்க மாநில நிர்வாகிகள் இரா.லெனின், வேலுச்சாமி, எஸ்.முத்துக்கண்ணன், மதுரை புறநகர் எஸ்.பாலா, கண்ணன், விருதுநுகர் மாவட்ட என்.முத்துராஜ். முருகன், சிவகங்கை மாவட்டச் செயலாளர் முருகன், தூத்துக்குடி மாவட்டம் புவிராஜ், முத்து காந்தாரி, மதுரை மாநகர மாவட்ட முன்னாள் தலைவர் பா.விக்ரமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

என். வரதராஜன்

நீண்டகால ஆய்வுக்குப் பின் பல அரசுகள் மாறிய பின், விஞ்ஞான ஆராய்ச்சியின் அடிப்படையில் சேதுக்கால்வாய் திட்டம் நிறைவேறத் துவங்கியது. பாதி வேலைகள் நடந்துள்ள நிலையில் தடை போடப்பட்டுள்ளது. இப்படி முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போடுவது மக்களிடையே நல்லிணக்கத்தை நாசமாக்கும்; தேசத்தை மோசமாக்கும். மதவெறி எத்தனை கொடூரங்களை நிகழ்த்தும் என்பதை நாடு அனுபவப் பூர்வமாக கண்டிருக்கிறது. அத்தகைய மதவெறி இன்றைக்கு சேதுக்கால்வாய் திட் டத்தை மோசமாக்க, நமது இளைஞர்களின் வாழ்வை நாசமாக்க முயற்சிக்கிறது.

வேலையின்மை நமது இளைஞர்களின் வாழ்வை சிதைத்துக் கொண்டிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் உட்பட தென்மாவட்டங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளது. பல இடங்களில் மனித நடமாட்டமே இல்லை. அங்குள்ள மக்கள் எங்கு வேலைக்கு சென்றார்களோ, குடும்பத்தை எங்கே பிழைப்புக்காக அழைத்துச் சென்றார்களோ? சேது திட்டம் நிறைவேறினால் பல சிறு துறைமுகங்கள் உருவாகும். இப்படிப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ‘ராமர் பாலத்தை’ தோண்டுவது இந்துமத மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது என்று பாஜக, ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் கூறுகிறார்கள். யார் இந்து? எங்கே இருக்கிறான் இந்து? சேரியில் அழிந்து கொண்டிருக்கிறானே, ஒரு பஞ்சாயத்து தலைவராக கூட தலித் குடிமகன் சிம்மாசனம் ஏற முடியாத நிலைமை இருக்கிறதே? அவர்களுக்கெல்லாம் இந்த மதவெறியர்கள் என்ன பதில் கூறப்பபோகிறார்கள்?

தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்ற பின் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முயற்சித்தார். அதற்கு அனைவரும் உறுதியாக துணைநின்றோம். அங்கே தேர்தலில் நின்று வெற்றிபெறும் தலித், அடுத்த நிமிடமே ராஜினாமா செய்வது ஏன் என்று கேட்டபோது, எழுத்தறிவு இல்லை; வறுமை, அதற்குமேலே தலித் என்ற தீண்டாமை. இந்த மக்களுடைய அரைவயிற்று கஞ்சியும் ஆதிக்க சாதியினரிடம்தான் இருக்கிறது. எனவே வேறு வழியில்லை என்று கதறினார்கள். சேது திட்டம் வந்தால், இளைஞர்களுக்கு வேலை கிடைத்தால், அதிலே தென்மாவட்ட தலித் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தால் தீண்டாமை தீ கூட வேகும் என்று கருதுகிறோம்.

ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்ற விடாமல் மத வெறி கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு ஜெயலலிதா- வைகோ கூட்டம் எதிராக நின்று சதிராடுகிறது. சேது திட்டம் நிறைவேறினால் மீனவர்களுக்கு ஆபத்து என்றார்கள்; பவளப்பாறைகளுக்கு ஆபத்து என்றார்கள்; அவற்றை அறிவியலின் துணைகொண்டு விளக்கினோம். மீனவர்களிடம் எடுத்துக் கூறினோம். இப்போது மத வெறியின் துணையோடு எதிர்ப்பு வருகிறது. இதற்கு உச்சநீதிமன்றமே துணை போகிறது. நீதிமன்றம் வந்தால் மத்திய அரசே இந்தப் பிரச்சனையில் தள்ளாடுகிறது. புதிய பாதையை கண்டுபிடிக்கிறோம் என்று மத்திய அரசிடமிருந்து வார்த்தைகள் வருகின்றன. இதுகூடாது. தாமதத்தை கைவிட்டு தடையை தகர்த்து சேது திட்டத்தை திட்டமிட்டபடி நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

டி.கே.எஸ்.இளங்கோவன்
(திமுக அமைப்புச் செயலாளர்)

குஜராத்தில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் மதவெறி உணர்வுகளை கிளப்பிவிடுவதற்காகவே “இராமர் பாலம்” பிரச்சனையை பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பல் கையில் எடுத்திருக்கிறது என்று குற்றம் சாட்டினார். மேலும், ஒருவேளை கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை அரசு தங்களது கடல் எல்லைக்குள் அமைந்துள்ள ஆதம்பாலத்தை தோண்டுவது என்று முடிவுசெய்தால் இந்த சங்பரிவாரம் என்ன செய்யும்? அத்வானி என்ன செய்வார் என்று கேள்விக்கணை தொடுத்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணன்
(அகில இந்தியத் தலைவர்)

மத்திய பிரதேசம் போன்ற பாஜக ஆளும் வட மாநிலங்களில் சங்பரிவாரம் தமிழ் மக்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. தமிழர்கள் இராவணனின் வாரிசுகள்; ராமனின் எதிரிகள் என்று இன துவேஷத்தில் பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஈடுபட்டு வருகிறது என்று குறிப்பிட்ட அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதிரான இத்தகைய வெறுப்புச்பிரச்சாரம் நமது தேசிய ஒருமைப்பாட்டிற்கே ஆபத்தானது என்றும் எச்சரித்தார். சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை பாஜகதான் பதவியில் இருக்கும்போது துவக்கிவைத்தது. இப்போது பதவியில் இல்லாதபோது அத்திட்டத்தை ராமரின் பெயரால் அவர்கள் இருக்கிறார்கள் எனக்குறிப்பிட்ட ஸ்ரீராமகிருஷ்ணன் ராமர் தற்போது உயிரோடு இருந்தால் பாஜகவின் இந்த இரட்டை வேடத்தை கடுமையாக விமர்சித்திருப்பார் என்று கூறினார்.

எஸ்.ஜி.ரமேஷ்பாபு
(மாநில இணைச்செயலாளர்)

கூட்டத்தில் பேசிய ரமேஷ்பாபு, ராமர் பாலத்தை இடிப்பதால் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக பாஜக தலைவர் இல.கணேசன் சொல்கிறார். யார் இந்து என்று கேள்வியெழுப்ப விரும்புகிறோம். தமிழகத்தின் சேரிகளிலேயே தீண்டாமைக் கொடுமையால் அழிந்து கிடக்கிறானே அந்த தலித் குடிமகனை இந்து பட்டியலில் சேர்க்க இல.கணேசன் தயாரா? கையால் மலம் அள்ளி தினம், தினம் நொந்து சாகிறானே அருந்ததியக் குடிமகன், அவனை இந்து பட்டியலில் சேர்க்க இல.கணேசன் தயாரா என்று கேள்வியெழுப்பினார்.

எஸ்.கண்ணன்

விருதுநகரில் துவங்கிய பிரச்சார பயணத்தில், அருப்புக்கோட்டையை தாண்டிய பின்னர் திருச்சுழி, நரிக்குடி, பார்த்திபனூர் பகுதிகளில் கடந்து வந்தபோது கிராமங்களில் மனித நடமாட்டத்தையே காணமுடியவில்லை. அவர்கள் எங்கே பிழைக்கப் போனார்களோ, கடல்போல பரவிக்கிடக்கும் கருவேலங்காட்டில் வேலைக்கு வாய்ப்பின்றி, சோற்றுக்கு வழியின்றி அவரவர் ஊரைவிட்டு வெறியேறிய இளைஞர்கள் ஏராளம். இந்த நிலையில் சற்றேனும் மாற்றத்தை கொண்டு வரும் திட்டம்தான் ‘சேதுகால்வாய் திட்டம்’ ஆனால், இதில் ஒரு மண்மேட்டை காரணமாக வைத்து மண் அள்ளிப் போடுகிறார்கள் மதவெறியர்கள்.

இவர்கள் சொல்லுகிற இராமர் பாலம் என்பது மன்னார் வளைகுடாவும், பாக்ஜலசந்தியும் ஒன்று சேரும் இடத்தில் அலைகள் மோதி, மோதி ஏற்பட்ட மணல் மேடேயன்றி வேறல்ல. 1996-1997களில் தென்மாவட்டங்களில் ஜாதிக்கலவரம் தலைதூக்கியது. இதுகுறித்து விசாரிக்க நீதிபதிகள் மோகன் தலைமையிலும், கோகுலகிருஷ்ணன் தலைமையிலும் அமைக்கப்பட்டக் குழுக்கள் தெளிவாக எடுத்துக்கூறின... தென் தமிழகத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை; வாழ வழி இல்லை அதனால் குறுகிய, சாதிய உணர்ச்சிகளுக்கு இறையாகி மோதிக் கொள்ளுகிறார்கள். இன்னும் குறிப்பாக தலித் இளைஞர்களை பொறுத்தவரை வாழவும் உருப்படியான வழியில்லை; செத்தால் எரிப்பதற்கு சுடுகாடும் இல்லை. ஆனால் இதெல்லாம் காவிக்கூட்டத்திற்கு பிரச்சனையுமில்லை.

சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து ஜெயலலிதா சமீபத்தில் விடுத்த ஓர் அறிக்கையில் ஒரு உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். மேற்படி மணல் மேட்டை முந்நூறு மீட்டர் நீளத்தில் பன்னிரெண்டு மீட்டர் ஆழத்திற்குத் தோண்டினால் அந்த வழியாக ஓர் ஆண்டுக்கு 3 ஆயிரம் கப்பல்கள் போய் வரும் என்று கூறியிருக்கிறார். மூவாயிரம் கப்பல்கள் போய் வந்தால் சென்னை முதல் குமரி வரை இருக்கிற பதின்மூன்று கடலோர மாவட்டங்கள் எந்த அளவிற்கு வளம் பெறும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம்.

தூத்துக்குடியில் துறைமுகம் உருவான காலத்தில் அங்கே வேலை செய்கிற ஊழியர்களுக்கு என்று ஒரே ஒரு குடியிருப்பு வந்தது. சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் அங்கே குடியேறின. இரண்டாயிரம் குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய குடியிருப்பைச் சுற்றி சிறு, குறு வியாபாரங்கள் முளைத்தன. தனியார், ஷிப்பிங் ஏஜென்சிகள் உருவாகின. ஒவ்வொன்றிலும் குறைந்தது 50-60 பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைத்தது. பணம் புழங்க புழங்க அந்நகரின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது.

சென்னை முதல் குமரி வரை பதிமூன்று துறைமுகங்கள் உருவாகும்.

மூக்கையூரில், தேங்காய்பட்டினத்தில், முத்துப்பேட்டையில், நாகப்பட்டினத்தில், கடலூரில் என மீன்பிடி துறைமுகங்கள் உருவாகும்.

இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்றுமதி - இறக்குமதி சரக்கு போக்குவரத்து, அது சார்ந்த ஒர்க் ஷாப்புகள் உருவாகும்.

மீன்பிடி தொழிலில் துவங்கி உணவு பதப்படுத்துதல் வரை; கடல் சுற்றுலா முதல் கடலியல் கல்வி வரை பல்வேறு விதமான தொழில்கள், துணைத் தொழில்கள், சேவைத் தொழில்கள் உருவாகும்.

கப்பல் கட்டும் தொழிலும் வரும்; கப்பல் உடைக்கும் தொழிலும் வரும்

இவ்வளவு தொழில்களும் வந்தால் இராமநாதபுரத்து இளைஞனும் சிவகங்கை இளைஞனும், விருதுநகர் இளைஞனும் திருப்பூருக்கும், கோவைக்கும் ; மும்பைக்கும், அகமதாபாத்திற்கும்; துபாய்க்கும், சிங்கப்பூர் - மலேசியாவிற்கும் வேலைதேடி படையெடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

இராவணன் சீதையை கவர்ந்துய சென்றதால், மனைவியின் பிரிவைத் தாளாமல் காவிக் கூட்டம் சொல்லும் இராமர் பாலத்தின் வழியாக இலங்கைக்குச் சென்று போரிட்டானாம் இராமன். கடவுளாலேயே மனைவியை பிரிந்து இருக்க முடியாத போது இங்குள்ள இளைஞன் மட்டும் ஏன் மனைவி மக்களை, உற்றார், உறவினர்களை பிரிந்து பிழைப்புக்காக வெளியூரில் - வெளிநாடுகளில் வாழவேண்டும்?

இந்த கூட்டத்தின் தலைவர் வாஜ்பாய் ஆட்சி நடந்தபோது தங்க நாற்கர சாலை திட்டத்தை அமலாக்கத் துவங்கினார்கள். அப்போது சாலைகளின் ஒரங்களில் எல்லாம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சாமிகள் அகற்றப்பட்டன. கருப்பசாமி, சுடலைமாடன், முண்டகக்கன்னி, மாரியம்மாள், வீரகாளியம்மாள் என சின்னஞ்சிறு தெய்வங்களின் கோவில்களெல்லாம் தகர்த்து எறியப்பட்டன அப்போதெல்லாம் பேசாத ஆர்.எஸ்.எஸ்- பாஜக மதவெறிக் கூட்டம் இல்லாதபாலத்தை காப்பதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் செய்வது ஏன்?

நீதி சொல்கிறது?

சுப்பிரமணிய சாமி தொடுத்த வழக்கில் அவசர அவசரமாய் ஞாயிற்றுக்கிழமையில் போராட்டத்திற்கு தடை வழங்கினார்கள். தமிழக வளர்ச்சிப்பணிக்கு தடை வழங்கினர். பல்லாயிரம் ஆண்டுகளாய் பிற்ப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் தேசத்தின் ஆளுமையில், பொருளாதாரத்தில் தங்களுக்கு மறுப்பங்கீடு செய்யவேண்டும் என கேட்டால் “இத்துணை ஆண்டுகள் பொறுத்தீர்களே இன்னும் கொஞ்சம் பொறுங்கள்” என இடஒதுக்கீடு தீர்ப்பு கொடுத்தால் யாரும் கேள்வி கேட்கக்கூடாது, கொலைவழக்கில் காஞ்சி சங்கரன் வாய்தா வந்தால் “அவா லோககுரு” என்று நீதிபதி பாலகிருஷ்ணன் ஒதுங்கினால் தவறு அல்ல. லஞ்சம் வாங்கிக்கொண்டு ஜனாதிபதிமீது கூட கைது வாரண்ட் பிறப்பிக்கலாம் அது அவர்கள் உரிமை. குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்களை மதவெறியர்கள் படுகொலை செய்தபோது நமது நீதிமான்கள் கண்மூடித் தூங்கலாம் அது அவர்களின் நேர்மை. இதைப்பற்றியெல்லாம் பேசினால் நீதிமன்ற அவமதிப்பாகும். மக்கள் மன்றத்தைவிட நீதிமன்றம் வானளாவ அதிகாரம் கொண்டதாய் காட்சியளிக்கிறது.

ஆனால் உலக அளவில் லஞ்சம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கைமாறும் தொகை 30 லட்சம் கோடி டாலர் ஆகும். இந்தியாவில் நீதித்துறையில் மட்டும் ஊழல் காரணமாய் ஒரு ஆண்டில் கைமாறும் தொகை 2,360 கோடி. நீதித்துறையில் ஊழல் மலிந்து போக காரணம் தாமதப்படுத்தப்படும் நீதி. 2007 பிப்ரவரி மாத நிலவரப்படி உச்ச நீதிமன்றத்தில் 33,635 வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 33,41,040 வழக்குகளும், மாவட்ட அளவிலான நீதிமன்றங்களில் 2,53,06,458 வழக்குகளும் தேங்கி நிற்கின்றன. அன்றைய தினத்திலிருந்து புதிதாக ஒரு வழக்குக்கூட பதியாமல் விசாரித்தால் கூட இவைகள் முடிய இன்னும் 350 ஆண்டுகள் ஆகும். இதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல் தீர்ப்புகள் தொடர்ந்து வழங்கட்டும். ஏனெனில் நாட்டில் நீதியை காப்பாற்ற வேண்டாமா!

இது நூறுகோடி இந்துமக்களின் உணர்வு என பிரச்சாரம் சரியா?

இந்துக்கள் யார்? மதவாதிகள் யாரை இந்து என்று கூறுகின்றனர். இந்து மதத்தின் மாண்புகளை உயர்த்திப்பிடித்த காந்தியை சுட்டுக்கொன்றவர்கள், காமராஜரை கொலைசெய்ய முயன்றவர்கள். காலகாலமாய் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை வர்ணாஸ்ரம கொள்கையின் பெயரால் ஒதுக்கி வைத்தவர்கள். ஆலயத்திற்குள் தமிழ் பாடினால் தீட்டு என்றவர்கள். தாழ்த்தப்பட்டவர்களை ஆலயத்திற்க்குள் அனுமதிக்காதவர்கள். இடஒதுக்கீட்டை எதிர்த்து கலவரம் செய்பவர்கள். இப்போது இந்து என்ற வார்த்தையில் மக்களை ஒன்றுபடுத்த துடிக்கின்றனர். இவர்கள் இந்துக்கள் பட்டியலில் காலகாலமாய் மலம் சுமக்கும் மக்கள் உண்டா? ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள உழைப்பாளி மக்கள் உண்டா? இழி குலத்தில் பிறந்தவர்கள் என கேவலமாய் குறிப்பிடும் சூத்திரர்கள் உண்டா?

பாசத்துடன் மதவெறியினர் அழைக்கும் ஒற்றுமை எப்படி இருக்கிறது? ஒவ்வொரு நாளும் 508 தலித்துகள் கொல்லப்படுகின்றனர், 759 தலித் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்படுகின்றனர், பல்லாயிரம் மக்கள் தாக்கப்படுகின்றனர். ஆனால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களில் 10 சதம் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர், 90 சதம் தப்பிவிடுகின்றனர். ஆலயங்களில் நுழையத் தடை, கோயில் விழாக்களில் பாரபட்சம், இரட்டை டீ கிளாஸ் முறை, பெஞ்சுகளில் உட்கார முடியாமல், இவர்கள் இந்துக்கள் இல்லையா? நால்வருண பேதத்தை அமல் படுத்துகின்ற சங் பரிவார் கூட்டத்தின் பசு வேசம் தான் இந்த இந்து ஒற்றுமை.

ராமாயணம் ஒன்றா?

வால்மிகி ராமாயணம், சம்பூர்ண ராமாயணம், கம்பராமாயணம் என 68 வகையான ராமாயணம் உள்ளது. முதல் ராமாயணம் என்று அழைக்கப்படும் வால்மிகி ராமாயணத்திற்கும் கம்பராமாயணத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் ஏராளம் உதாரணத்திற்கு சில.

வால்மிகியின் ராவணனுக்கு ஒரு தலை. கம்பனின் ராவணனுக்கு பத்து தலை. வால்மிகியின் லங்கா வடநாட்டில் உள்ளது. கம்பனின் லங்கா என்பது இலங்கை. வால்மிகியின் சூர்ப்பனகை அரக்கி. கம்பரின் சூர்ப்பனகை அழகியாகவும் வடிவம் எடுப்பாள். வால்மிகியின் ராமன் அசைவம். கம்பரின் ராமன் சைவம். வால்மிகியின் இராவணன் சீதையை கழுதைகள் பூட்டப்பட்ட தேரில் கடத்துவான். கம்பரின் ராவணன் பர்னசாலையை பெயர்த்து எடுத்து பறந்துச் செல்வான். வால்மிகியின் ராமன் சோமபானம் அருந்துவான். கம்பனின் ராமன் குடிக்கமாட்டான். இரண்டிலும் இத்துனை குழப்பம் உள்ளது. இந்தியாவில் உள்ள நூறு கோடிமக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினை ராமரும் ராமர் பாலமும் என மதவெறியர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.

புராணங்களை காரணம் காட்டி மதவாத சக்திகள் எதிர்ப்பது சரியா?

17 லட்சம் ஆண்டுக்கு முன்னால் ராமன் கட்டிய பாலம் என்கின்றனர். உண்மையா? மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான். குரங்கு, மனிதகுரங்கு, நாகரீக மனிதன் என மாற்றம் அடைந்து ஒரு லட்சம் ஆண்டுகள் தான் ஆகிறது. ஆனால் இராமர் பாலம் கட்டியது 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு என்று கூறுகின்றனர். பாலங்களின் வரலாறு என்ன? மெனிஸ் மன்னரால் நைல் நதியின் குறுக்கே கட்டப்பட்ட வளைவுப் பாலம் தான் பாலம் பற்றிய ஆவணங்களில் முதல் பாலம். இது கி.மு 2650ல் கட்டப்பட்டது. இரண்டாவது பழமையானது சீனாவில் கி.பி 600ல் பெய்ஜிங்குக்கு தெற்கே கற்களால் கட்டப்பட்ட பாலம். 16ம் நூற்றாண்டில் ஐதராபாத் முசி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புராணாபுல் பாலம்தான் இந்தியாவின் மிகப்பழமையான பாலம்.

சரித்திரம் சான்று சார்ந்தது, புராணம் ஆதாரம் இல்லாத நம்பிக்கை சார்ந்தது. ராமர் பாலம் நம்பிக்கை என்கின்றனர். நம்பிக்கையை கேள்வி கேட்கக் கூடாது என்கின்றனர். மத நம்பிக்கைகள் எப்போதும் விஞ்ஞானத்திற்க்கு எதிராகத்தான் இருந்துள்ளது. பூமி தட்டைவடிவமானது, சூரியன்தான் பூமியை சுற்றிவருகிறது என்று சொன்ன பைபிள் பழைய ஏற்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய புருனேயும், கலிலியோ, கெப்லர் போன்றோறும் அடைந்த தண்டனை நாம் அறியாதது அல்ல, ஏன் என வினா எழுப்பச்சொன்ன சாக்ரடீஸ் நிலைமை என்ன? விஞ்ஞானத்துக்கு எதிராக இன்றும் மதவாதிகளின் அடக்கு முறை புராணங்களில் பெயரால் தொடர்கிறது..


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com