Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
நவம்பர் 2007

மக்கள் இயக்கமாக புரட்சி பாதுகாப்புக் குழு
எஸ்.கண்ணன்

லத்தீன் அமெரிக்கர்கள் மொத்தமாக கியூப ஆதரவு மற்றும் அமெரிக்க எதிர்ப்பு முழக்கத்துடன் வலம் வந்தனர். அவர்களும் கியூபாவிற்கு நம்மைப்போல, சகோதர ஆதரவுக்கான இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் இருந்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆகிய மூன்று அமைப்புகளில் இருந்து, 10 பேர் கொண்ட இளைஞர் - மாணவர் படை ஜூலை 22 முதல் ஆக-6 வரை கியூபாவில் தங்கி இருந்து, பல்வேறு விதமான நிகழ்ச்சிகளில் பங்கேற்றது. கியூபாவில் பல்கலைக்கழக மாணவர் இயக்கத்தை தோற்றுவித்த தோழர். ஜூலியோ அந்தோணியா மேளா என்ற தியாகியின் பெயரிலான சர்வதேச முகாமில் தங்கியிருந்தோம். 365 நாட்களும் இயங்குகிற முகாம் அது.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து “ பிரிகேட்” என்ற பெயரில் குறைந்தது 15 தினங்கள் தங்கியிருந்து கருத்துப் பரிமாற்றத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். நமது ஊரில் “ஐயப்பன் கோயிலுக்கு 20 வருடமாக செல்கிறேன்”, என்று சொல்பவர்-களைப் போல் “ நான் கியூபாவிற்கு 25 வருடமாக வந்து கொண்டிருக்கிறேன்”, என்று சொன்ன அமெரிக்கர் “பெனிட்டா” என்பவரைப் பார்க்க முடிந்தது. 1969 ம் ஆண்டு முதன் முதலாக “நாம் வெல்லுவோம்” என்ற பெயரில் அமெரிக்காவில் உள்ள இளைஞர்கள் “பிரிகேட்” என்ற வீரமிக்க வார்த்தையைத் தாங்கி, கியூபாவிற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றர். இன்று வரை 38 வருடங்களாக தொடர்ந்து கியூபாவிற்கும் - அமெரிக்க மக்களுக்கும் இடையே நட்புப் பாலத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். கனடாவில் இருந்து “சேகுவேரா பிரிகேட்” பதினான்காவது ஆண்டாக வந்திருந்தனர். கிரீஸ், கொலம்பியா, மெக்சிகோ, பெரு, வெனிசூலா ஈகுவடார், குவாண்டாலூப், ஹைதி, ரிப்ளிகன் டெமினிக், ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் வேறு வேறு பெயரில் “பிரிகேட்” வந்திருந்தன. இந்தியாவில் இருந்து சென்ற குழு “பகத்சிங் பிரிகேட்” என்று அழைக்கப்பட்டது.

உலகம் முழுவதும் அமெரிக்காவும், அமெரிக்க ஆதரவு ஊடகங்களும் கட்டவிழ்த்து விட்டுள்ள, பொய் மூட்டைகளை, கியூப நாட்டின் தலைவர்களிடமும், மக்களிடமும் கேள்விகளாக்குகிற போது, உணர்ச்சி வசப்படாமல், நிதானமாக பதிலளிக்கின்றனர். பதினைந்து தினங்களில் கியூபப் புரட்சியின் பின்னணி, கியூபாவில் ஜனநாயகம், கியூபாவில் மனித உரிமைகள், கியூபாவின் நீதித்துறை, கியூப - அமெரிக்க முரண்பாடு, கியூபா மீதான பொருளாதாரத் தடைகளும் - தீர்வும், என்ற தலைப்பின் மீதான கருத்துப் பரிமாற்றங்களும், கேள்விகளுக்கான விளக்கங்களும் தரப்பட்டன. கியூபா கம்யூனிசக் கட்சியின், சர்வதேசத் துறையின் தலைவர்களான, ரானே ஹெர்னான்டால், அபிலெய்தோ ஆகியோருடன் தனித்தனியான விவாதங்கள் நடைபெற்றது.இளைஞர் இயக்கத் தலைவர் எர்னெ°டோ, மாணவர் இயக்கத்தலைவர் ஆல்பர்ட்டோ ஆகியோருடன் நடந்த விவாதங்களும் அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் கியூபாவிற்கு எதிரான தீவிரவாத சதியை முறியடித்த காரணத்திற்காக சுமார் 10 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ள, கியூபாவின் ஐந்து நாயகர்கள் என்று வர்ணிக்கப்படுகிற அந்தோணியா கொரோ(48),ஃபெர்னான்டோ கோன்சலா°(43), ஜெரார்டோ ஹெர்னான்ட°-(41), ராமோன் லெபானினோ (43), ரானே கோன்சலா°(46) ஆகியோரின் குடும்பத்தாருடன் நடந்த சந்திப்பும், கலந்துரையாடலும் நம்பிக்கை தருவதாக, கியூபாவின் அசைக்க முடியாத உறுதியை அறிந்து கொள்ள வாய்ப்பாக இருந்தது.

கல்வி நிலையங்கள், மருத்துவமனை, சி.டி.ஆர். என்றழைக்கப்படுகிற புரட்சிப் பாதுகாப்பு குழுவினரை சந்தித்தல் போன்றவை, புதிய உலகினை காணும் வாய்ப்பைத் தந்தது. மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, தகவல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் கலந்து கொண்டது, நாமே நேரடியாக பட்டம் பெற்ற பூரிப்பை ஏற்படுத்தியது. எல்லாவற்றிற்கும் மேல் அமெரிக்க நாட்டு இளைஞர்களுடனும், பேராசிரியர்-களுடனும் இதர துறைகளைச் சார்ந்தவர்-களுடனும் புல்வெட்டியதும், லத்தீன் அமெரிக்காவின் நண்பர்களுடன் இணைந்து, பட்டுப்போன ஆரஞ்சு மரங்களை வெட்டியதும், மரவள்ளி கிழங்கு பயிர்களுக்கு களையெடுத்ததும், சிறப்பு மிக்க அனுபவங்கள்.

ஒரு பிரிகேட் கியூபாவிற்கு வருகிறது என்றால், மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளில் கட்டாயம் இடம் பெறுவர். இந்தியாவில் இருந்து சென்ற நாம் வலியுறுத்தியதின் பேரில் பட்டமளிப்பு விழா, புரட்சிப் பாதுகாப்பு குழு, இளைஞர்- மாணவர் தலைவர்களுடன் சந்திப்பு, கல்வி நிலையங்கள், மருத்துவமனை ஆகியவற்றை பார்வையிடுதல் போன்றவை கூடுதல் நிகழ்ச்சியாக அமைந்தன. இத்தகைய நிகழ்ச்சிகள் முழுமை பெற பதினைந்து தினங்கள் ஆனது. சோசலிச கியூபாவை பாதுகாப்பதில் உலக மக்களின் பேராதரவு இருக்கிறது என்பதை மேற்படி சம்பவங்களின் மூலம், கியூப மக்கள் உணருகிறார்கள். கியூப மக்களின் போர்குணத்தை, உறுதியினை மேலும் வலுப்படுத்துவதாக இச்செயல்கள் அமைகின்றன. மேலே குறிப்பிட்டதைப் போல் வயல்களில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வேலை செய்வது ஆச்சரியம் மட்டுமல்ல, அதிசயமும் கூட, பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், பொறியியல் வல்லுனர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பல பிரிவினைச் சார்ந்தோர், வயலில் பணியாற்று-வது கியூபாவிற்கான ஆதரவு கரத்தை வலுப்படுத்துவதன் அடையாளமாகப் பார்க்கிறார்கள்.

இவர்கள் கம்யூனிஸ்ட்கள் அல்ல, அதே நேரத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள். கியூபாவின் உறுதியை, வளர்ச்சியை, பொருளாதாரத் தடையை எதிர்த்த போராட்டத்தின் வெற்றியைக் கண்டு வியக்கிறார்கள், அங்கீகரிக்கிறார்கள். நமது ஊர் மக்கள் “புரட்சி” என்ற வார்த்-தையை கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிற போது, கியூப மக்கள் “புரட்சி” என்கிற வார்த்-தையை உயிர் மூச்சாகக் கொண்டிருக்கிறார்கள். ஃபிடல் துவங்கி சாதாரண குடிமகன் வரையிலும், கல்விப் புரட்சி, மின்சாரப் புரட்சி, தகவல் தொழில்நுட்பப் புரட்சி, தொழில் நுட்பப் புரட்சி, என முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சகங்களின் வாசலில் தேசியக் கொடிக்கு சமமாக முழக்கங்களை முன்வைக்கிறார்கள். அந்நாட்டில் தொலைக்காட்சி, பத்திரிக்கை என எல்லோரும் ஒரே வார்த்தைகளைப் பயன்படுத்துவது, ஒன்றுபட்ட செயல்திறனின் அடையாளமாகக் காட்சி அளிக்கிறது. ஒரு மித்த சிந்தனையையும், செயலையும் உருவாக்குவதில் புரட்சிப் பாதுகாப்பு குழுவினரின் உழைப்பு அபரிமிதமானது.

ஜூலை 25 நள்ளிரவில் “பகத்சிங் பிரிகேட்” என்றழைக்கப்பட்ட நாங்கள், நாங்கள் தங்கியிருந்த முகாமிற்கு அருகில் இருந்த, கனமிட்டா நகராட்சியின் குடியிருப்புகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். 50 வீடுகள் கொண்ட தொகுப்பு ஒரு அருகாண்மைப் பகுதி என்று அழைக்கப்படுகிறது. இது போன்று ஒவ்வொரு அருகாண்மைப் பகுதியிலும் ஒரு குழு செயல்படுகிறது. இதில் 15 வயது முதல் 75 வயது வரையிலான மக்கள் இடம் பெறுகிறார்கள். சுமார் 15 பேர் கொண்ட குழு இதற்கு தலைமை தாங்குகிறது. “அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்த பாடி°டாவை விரட்டி, சமுக அடித்தளத்தை மாற்றுவதற்கு புரட்சி பயன்பட்டது. கல்வி, வேலை, சுகாதாரம், சமுகப் பாதுகாப்பு, உழைப்பிற்கு ஏற்ற ஊதியம், போன்றவற்றை கியூபா அடைவதற்கு காரணம் புரட்சி.

அந்த புரட்சியைப் பாதுகாப்பதில் ஒவ்வொரு கியூப குடிமகனுக்கும் பங்கு இருப்பதை பிரச்சாரம் செய்கின்றனர். அதே போல், மக்களின் தேவைகளை, மக்களின் குறைகளை உள்ளூர் நிர்வாகமான நகராட்சிக்கும், மாகாண நிர்வாகத்திற்கும், தேசிய மக்கள் சபைக்கும் கொண்டு செல்கிற பணியும் புரட்சிப் பாதுகாப்புக் குழுவினுடைய வேலையாக இருக்கிறது. கியூபாவின் மிகப் பெரிய வெகுஜன இயக்கமாக புரட்சிப் பாதுகாப்புக் குழு என்கிற ( உனச) தான் செயல்படுகிறது. அங்கே புரட்சியை பாதுகாப்பது என்பது கம்யூனிசக் கட்சியின் கடமையாக மட்டும் இருக்கவில்லை. மக்களின் கடமையாக மாற்றப்பட்டு இருக்கிறது.

இருந்தாலும், மக்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை நிறுத்தவில்லை. எலியன் என்ற 8 வயது குழந்தையை மியாமியில் வைத்துக் கொண்டு, பெற்றோர்களிடம் ஒப்படைக்க அமெரிக்க அரசு மறுத்தபோது, உள்ளூர் துவங்கி உலக மக்களின் ஆதரவைப் பெறுவதில் பெரும் வெற்றி பெற்றனர். இப்போது 10 ஆண்டுகளாக அமெரிக்கச் சிறையில் இருக்கும் 5 கியூப நாயகர்களை விடுதலை செய்வதிலும் அந்தப் போராட்டத்தை நடத்துகிறார்கள். அவர்கள் புரட்சியின் வெற்றியை, அவரவர் வீட்டளவில் கொண்டாடாமல், உலகத்தின் வெற்றிக்காக ஏங்குகிறார்கள். “புரட்சி இன்னும் முடியவில்லை” என்று ஜோஸே மார்த்தி சொன்னதை, கியூபாவின் குடிமகன் மிகச் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கிறான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com