Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
மே 2008

வேலைவாய்ப்பும் மாற்றுப்பாதையும்
மேற்கு வங்க நிதியமைச்சர் அசிம்தாஸ் குப்தா

எந்த ஒரு அரசும் வேலைவாய்ப்பு பெருக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால், நாட்டில் இன்று வேலையின்மை பூதாகரமான பிரச்சனையாக மாறியுள்ளது. இந்நிலையில் மாற்றுப்பாதை குறித்த விவாதம் பொருத்தமானதும், தேவையானதும் ஆகும். இப்பிரச்சனை குறித்த இடது முன்னணி அரசின் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இன்றைய உலகப் பொருளாதாரத்தை அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பணக்கார நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உள்ளது. ஆனால், அந்நாடுகளின் பொருளாதாரங்களில் நெருக்கடி ஏற்பட்டது. அவற்றின் சந்தை சுருங்கியதே இதற்கு மூலகாரணம். எனவே, பன்னாட்டு நிறுவனங்களுக்கு புதிய சந்தைக்கான தேவை ஏற்பட்டது. இதை எப்படி சாத்தியமாக்குவது? மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளை தாராளமயமாக்க நிர்ப்பந்திக்கப்பட்டன. அவற்றின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவும், வரி குறைக்கப்படவும் வலியுறுத்தப்பட்டன.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், நன்கு முதிர்ச்சி அடைந்த பின்னரும் பணக்கார நாடுகள் மானியங்கள் அளிக்கின்றன. ஆனால் நம்மைப் போன்ற நாடுகள் மானியம் அளிக்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது. இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த கொடுக்கப்பட்ட கால அவகாசம் மிக மிக குறைவு. இதனால், இறக்குமதி அதிகரித்து, ஏற்றுமதி குறைந்தது. இதனால், வர்த்தக பற்றாக்குறை அதிகரித்தது. 1991ம் ஆண்டில் மொத்த இறக்குமதி ரூ.3800 கோடியாக இருந்தது. 2007ல் இது பன்மடங்கு அதிகரித்து, இன்றைய இறக்குமதியின் மொத்த மதிப்பு மூன்று லட்சம் கோடி ரூபாய்களை தாண்டியுள்ளது. அதாவது, 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உள்நாட்டு சந்தையை நம் நாடு பன்னாட்டு கம்பெனிகளிடம் இழந்துள்ளது. இதன் விளைவாக தொழில் நசிவும், வேலையின்மையும் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் கேந்திர தொழிலான விவசாயத் துறையில் ஏற்பட்ட தேக்கநிலையும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இந்திய அரசாங்கத்தின் புள்ளிவிபரப்படியே 1991-2007 காலகட்டத்தில் மொத்த விவசாய உற்பத்தி 1.2% மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் இதே கால அளவில் இந்தியாவின் மக்கள் தொகை 1.9% அதிகரித்துள்ளது. ஆகவே, விவசாயம் மற்றும் வர்த்தக துறைகளில் ஏராளமான வேலையிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் வழங்கும் விபரத்தின்படி 2000-2005 ஐந்தாண்டு காலத்தில் சுமார் 87 லட்சம் பேர் வேலையில்லாதவர்களாக புதிதாக பதிவு செய்யப்படிருக்கிறார்கள். ஏற்கனவே அப்படியே இருக்கும் சுமார் மூன்றரை கோடியுடன் இந்த 87 லட்சமும் கூடியுள்ளது. ஆகவே, வேலையின்மை என்பது இன்றைய பிரதான பிரச்சனையாக மாறியுள்ளது.

வேலையில்லாத இளைஞர்களை பிரிவினைவாத சக்திகளும், வகுப்புவாத சக்திகளும் பயன்படுத்த முனைந்துள்ளன. அசாம், மகாராஷ்டிரம் போன்ற இடங்களில் தலைதூக்கும் அருவருப்பான பிராந்தியவாதமும் இதன் வெளிப்பாடே. ஆக, பிரச்சனை என்ன என்பதை ஓரளவு பார்த்தோம்... இதை சமாளிக்க என்ன வழி?

தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் இடது முன்னணி அரசுகள் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசைப் பார்த்து “மொத்த உள்நாட்டு வளர்ச்சி அதிகரித்துள்ளது என்கிறீர்களே? இதன் பிரதிபலிப்பு வேலைவாய்ப்பில் ஏற்பட்டிருக்கிறதா?” என்று ஆணித்தரமாக கேட்டன. ஏற்றுமதிக்கெல்லாம் இலக்கு நிர்ணயிக்கிறீர்களே, வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு என ஒரு இலக்கை நிர்ணயிங்கள் என்று மத்திய அரசிடம் வாதிட்டோம். இடது முன்னணியின் வாதம் கற்பனையின் பாற்பட்டதல்ல. வேலை வாய்ப்பு பெருக்கத்திற்கான இடது முன்னணி அரசின் அக்கறையும் அனுபவமும் முக்கியமானதாகும்.

பொருளாதார வளர்ச்சி என்பது சமூக முன்னேற்றத்தின் உள்ளடக்கமாக இருக்க வேண்டும் என்று மேற்கு வங்க இடது முன்னணி அரசு உறுதிபட நம்புகிறது. மேற்கு வங்க பட்ஜெட்டும் கொள்கைகளும் இதை மையப்படுத்தியே இருக்கின்றன. மேற்கு வங்கத்தில் ஆண்டுதோறும் சுமார் 4.5 லட்சம் பேர் புதிதாக வேலை தேடி புதிதாக உழைப்புச் சந்தைக்கு வருகிறார்கள். ஆகவே, அதைவிட அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டிய பொறுப்பு இடது முன்னணி அரசுக்கு உள்ளது. அப்படியெனில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்! எப்படி இதைச் செய்வது? சந்தையில் ஏகபோகத்தை குறைத்து, பன்முகப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். மூலதனமும் கடனும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு கிடைக்கச் செய்கிறோம். மக்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்றவை கிட்டச்செய்து அவர்களை அதிகாரம் படைத்தவர்களாக மாற்றுகிறோம். மக்களின் தேவைகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பஞ்சாயத்து மட்டத்தில் கொண்டு சேர்த்திருக்கிறோம். திட்டங்களை நிறைவேற்றுவதில் சாமனிய மக்களை ஈடுபடுத்துகிறோம். மாற்றுக் கொள்கையின் ஒரு முக்கிய பகுதி இது.

அடுத்தது விவசாயம். மேற்குவங்கத்தில் நிலச்சீர்திருத்தத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. நாட்டில் மறுவிநியோகம் செய்யப்பட்ட நிலங்களில் பாதிக்கும் மேல் மேற்குவங்கத்தில்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறு குறு விவ்சாயிகளுக்கு 90% நிலங்கள் பிரித்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. 11.3 லட்சம் ஏக்கர் நிலம் இவ்வாறு மறுவிநியோகம் செய்து 29 லட்சம் பயனாளிகளுக்கு தரப்பட்டிருக்கின்றன. இவர்களில் 56% தலித் மற்றும் பழங்குடியின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு நிலம் வழங்குகையில் கணவன் மனைவி ஆகிய இருவர் பெயரிலும் நிலத்திற்கு கூட்டு பட்டாவாக வழங்குகிறோம். 1.6 லட்சம் பெண்கள் பெயரில் பிரத்யேக பட்டாக்களையும் வழங்கியுள்ளோம்.

ஏழை மக்கள் வீடு கட்டிக்கொள்ள 5 லட்சம் பேருக்கு நிலப்பட்டாவை இடது முன்னணி அரசு வழங்கியுள்ளது. சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் குடிமனைப்பட்டா கேட்டு வந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை நாம் மறக்க முடியாது. அத்தகு நிலை மேற்கு வங்கத்தில் இல்லை. ஆண்டுதோறும் 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விநியோகிப்பது என்று இடது முன்னணி அரசு தீர்மானித்துள்ளது. அரசிடம் நிலம் இல்லாவிட்டாலும், சந்தை விலைக்கு வாங்கியாவது நிலவிநியோகம் செய்வதென இடது முன்னணி அரசு முடிவு செய்து செயலாற்றி வருகிறது. நிலமற்ற விவசாய கூலிகளுக்கும், குத்தகை விவசாயிகளுக்கும் நிலவிநியோகத்தின் பலன் கிடைக்கச் செய்கிறோம். இன்று விவசாயிகள் தற்கொலை நாட்டில் பரவலாக நிகழ்ந்து வருகின்றன. ஆனால், மேற்கு வங்கத்தில் ஒரு விவசாயைக்கூட தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குச் செல்ல மேற்கு வங்க அரசு அனுமதிக்கவில்லை என்பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

மேற்கு வங்க அரசின் இத்தகு முயற்சிகளின் காரணமாக, விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது. மத்திய புள்ளிவிபர ஆணையத்தின் புள்ளிவிபரப்படி 1993-94 முதல் 2003-04 வரையிலான பத்தாண்டு காலத்தில் நாட்டின் மொத்த விவசாய உற்பத்தி 1.5% மட்டுமே அதிகரித்துள்ளது, ஆனால் மேற்கு வங்கம் 3.5% வளர்ச்சியை சாதித்துள்ளது. அரிசி, உருளைக்கிழங்கு, சணல் மற்று மீன் உற்பத்தியில் நாட்டிலேயே அதிக வளர்ச்சியை மேற்கு வங்கம் ஈட்டிவருகிறது. அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது. கோதுமை மற்றும் எண்ணை வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இதிலும் முன்னேற்றம் வரும் என்று நம்புகிறோம். ஆக மக்களின் உணவு பாதுகாப்பை மேற்கு வங்கம் உறுதி செய்துள்ளது.

அதேசமயம், விவசாய உற்பத்தியால் கிடைக்கும் வருமானம் விவசாயிகளின் சொந்த வருமானமாக மாறி இருக்கிறது என்பது மிகவும் முக்கியமான அம்சம். இதனால் மேற்கு வங்கத்தில் ஆண்டுதோறும் ரூ21 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்களுக்கு தேவை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் உற்பத்திக்கான தேவை ஆண்டுதோறும் சராசரியாக 8% அதிகரித்து வருகிறது. மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்திருப்பதே இதற்கு காரணம். உற்பத்திக்கான தேவை அதிகரிப்பதன் காரணமாக, தொழில்மய நடவடிக்கைகளில் மேற்கு வங்க அரசு ஈடுபட்டு வருகிறது.

1994 முதலே மேற்கு வங்கத்தின் தொழில்மய முயற்சிகள் தொடங்கின. அன்று தொடங்கி இன்று வரை 1730 நடுத்தர மற்றும் கனரக தொழிற்சாலைகள் ரூ.37750 கோடி முதலீட்டுடன் மேற்கு வங்கத்தில் தொடங்கப்பட்டிருக்கின்றன. இது நாட்டிலேயே மூன்றாவது இடமாகும். இரும்பு உற்பத்தியில் முதலிடம், ரசாயன பொருள் உற்பத்தியில் மூன்றாம் இடம், ஜவுளித் தொழிலில் நான்காவது இடம், தகவல் தொழில் நுட்பத்தில் நான்காவது இடம் என மேற்கு வங்கம் கம்பீரமாக முன்னேறி வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், 70% நடுத்தர உற்பத்தி மையங்கள் ஸ்தல மட்டத்திலியேயே இருக்கின்றன என்பதுதான். இத்தகு தொழில்களில் ஆண்டுக்கு சராசரியாக 41000 புதிய பணியிடங்கள் நேரடியாக உருவாகின்றன. இதன் தொடர் விளைவாக, சுமார் 1.23 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புக்கள் உருவாகின்றன.

தகவல் தொழில்நுட்ப துறையில் சராசரியாக 20000 புதிய பணியிடங்கள் உருவாகின்றன. இந்த ஆண்டு இதை 35 ஆயிரமாக அதிகரிக்க உள்ளோம். “அதிகம் பேருக்கு வேலை கொடுத்தால் அதிக சலுகை தருவோம்” என்று தொழில் முனைவோரிடம் மேற்கு வங்க அரசு சொல்லி வருகிறது.

அப்படி தொழில் தொடங்க வருவோருக்கு நிலம் கொடுத்தாக வேண்டுமல்லவா? மேற்கு வங்கம் அளவில் சிறிய மாநிலம். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8% பேர் இருக்கும் மாநிலம். ஆனால், நாட்டின் நிலப்பரப்பில் 3% மட்டுமே மேற்கு வங்க மாநிலம்! ஒரு சதுர கிலோ மீட்டரில் 903 மக்கள் வசிக்கிறார்கள். இது இந்தியாவிலேயே மிகவும் குறைவானதாகும். இந்நிலையில், தொழில்மய பயன்பாட்டிற்கு நிலம் கிடைக்கச் செய்வது ஒரு சவாலாக மாறியுள்ளது. சிங்கூர், நந்திகிராம நிகழ்வுகள் உங்களுக்கு தெரியும். இதில் கவனமாக செயல்பட வேண்டும் என்று இடது முன்னணி அரசு தீர்மானித்துள்ளது. தொழில்மய நடவடிக்கைகளால் நிலம் இழக்கும் விவசாயிகளுக்கு அரசே நிவாரணம் வழங்குவது என்று மேற்கு வங்க அரசு முடிவெடுத்து, அதற்காக ரூ.100 கோடியை பட்ஜெட்டிலேயே ஒதுக்கியுள்ளது.

வேலைவாய்ப்பு பெருக்கத்திற்கு சிறுதொழில்துறை மிக முக்கியமானதாகும். 2004-05 தேசிய மாதிரி ஆய்வு நிறுவன ஆய்வின்படி சிறுதொழில் துறையில் மேற்கு வங்கம் நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கிறது. 27 லட்சம் சிறுதொழிற்சாலைகள் இருக்கின்றன. இவற்றில் 55 லட்சம் பணியிடங்கள் உருவக்கப்பட்டுள்ளன. ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் சுய உதவிக் குழுக்களே இல்லாமல் இருந்த மேற்கு வங்கத்தில், இன்று 7.34 லட்சம் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன. இவற்றில் 70 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். எல்லா பஞ்சாயத்துக்களிலும் சுய உதவிக் குழுக்கள் இருக்கின்றன என்ற நிலையை உருவாக்கியுள்ளோம்.

சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு வருவதற்கு உதவி செய்யும் நோக்கில் மேற்கு வங்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உழைப்புப்படையின் முக்கிய பகுதியான முறைசாரா தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்துகிறோம். நாட்டிலேயே முதன்முறையாக முறைசாரா தொழிலாளர்களுக்கேன சேமநலநிதி வழங்கும் ஏற்பாட்டை மேற்கு வங்க அரசு செய்துள்ளது. அதுமட்டுமல்ல, மேற்கு வங்கத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகளின் தொழிலாளர்களுக்கு மாதாமாதம் ரூ.750 உதவித் தொகை வழங்கி வருகிறோம். தொழிலாளி வர்க்கத்தின் பாதுகாவலனாக மேற்கு வங்க இடது முன்னணி அரசு செயல்பட்டு வருகிறது.

கல்வி வளர்ச்சியிலும் பிரத்யேக கவனம் செலுத்தி வருகிறோம். கல்வி பயிலும் ஏழை மாணவிகளுக்கு 12ம் வகுப்பு வரை உதவித் தொகை வழங்கி வருகிறோம். மதிய உணவு திட்டத்தை தொடர்ந்து அமலாக்கி வருகிறோம்.

விவசாயத் துறையில் 2.5 லட்சம் பணியிடங்களையும் உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் 5.5 லட்சம் பணியிடங்களையும் கடந்த ஆண்டில் மேற்கு வங்கத்தில் உருவாக்கியுள்ளோம். கடந்த ஐந்தாண்டு காலத்தில் 87 லட்சம் பேர் புதிதாக வேலை தேடும் பட்டாளத்தில் இணைந்திருப்பதாக தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் சொல்லியிருப்பதை ஏற்கனவே குறிப்பிட்டேன். ஆனால் மேற்கு வங்கத்தில் 6 லட்சம் அளவுக்கு இது குறைந்துள்ளது. இது அடுத்த ஆண்டில் மேலும் குறையும். இப்போது மத்திய அரசின் வரி வருவாயில் மாநில அரசின் பங்காக 35% மட்டுமே வழங்கப்படுகிறது. இதை 50% ஆக அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அப்படி கொடுக்கப்பட்டால், ஊரக வளர்ச்சிக்காவும் வேலை வாய்ப்பு பெருக்கத்திற்காகவும் இன்னமும் கூடுதலாக செலவிட முடியும்.

உற்பத்தி என்பது சந்தையை மட்டும் குறி வைத்து இருக்கலாகாது, அது வேலை வாய்ப்பு பெருக்கத்தை மையப்படுத்தி இருக்க வேண்டும் என்ற கொள்கையுடன் மேற்கு வங்க இடது முன்னணி அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அணுகுமுறையால், மேற்கு வங்கத்தில் ஆண்டுதோறும் உழைப்புப்படையில் புதிதாக இணைவோருக்கும் வேலைவாய்ப்பை கொடுக்க முடிந்திருக்கிறது என்பதை நான் விவரித்தேன். இதுதான் நாடு முழுமைக்குமான மாற்றாக இருக்க முடியும்.

நாட்டில் இப்படிப்பட்ட மாற்று கொள்கைகளின்பால் திரட்டப்பட்ட மூன்றாவது அரசியல் மாற்றை உருவாக்குவது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு விவாதிக்கிறது. இந்த மாற்றை சாத்தியமாக்கிட வேண்டும். ஏகாதிபத்திய ஏவல் கருவிகளான உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் உலக வர்த்தக ஸ்தாபனத்தின் நிர்ப்பந்தங்களை எதிர்கொள்ள இந்த மூன்றாவது மாற்று மிகவும் அவசியம். லத்தீன் அமெரிக்க கண்டத்தில் கேட்கும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்கம் நமக்கு மிகுந்த நம்பிக்கையை ஊட்டுகிறது. “மக்களுக்கான மாற்று சாத்தியமே. மாற்று உலகம் சாத்தியமே” என்ற முழக்கத்துடன் மக்களை திரட்டுவோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com