Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
மே 2008

உடைக்கப்பட வேண்டிய தடுப்புச் சுவர்
கே. சுவாமிநாதன்

மகாத்மா காந்தி ஒருமுறை அண்ணல் அம்பேத்கரிடம் கேட்டார்.

எனக்கு ஐந்து ஆண்டு அவகாசம் தாருங்கள்! தீண்டாமையை ஒழித்து விடுகிறேன்.

அதற்கு அம்பேத்கர் நிதானமாக ‘‘காந்திஜி அவர்களே! பத்தாண்டுகள் கூட எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அப்பணி அவ்வளவு எளிதானதல்ல’’ என்றாராம். இந்தச் சொற்போர் நிகழ்ந்து 65 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் இன்றைக்கும் சாதியம் இச்சமூக வாழ்க்கையை மலைப்பாம்பு சுற்றிக் கொள்வதைப் போல இறுகச் சுற்றிக் கொண்டிருக்கிறது.

மதுரை கிராமங்களுக்கு வாருங்கள்! மநு சாவகாசமாக உலா வருவதைப் பார்க்கலாம். மேலவளவு, பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி போன்றவையெல்லாம் நோயின் தீவிரம் வெளிப்பட்ட நிகழ்வுகள். இன்னும் ஆழமாய் புரையோடிப் போய் மானுடத்தையே அரித்துக் கொண்டும், அழித்துக் கொண்டுமிருக்கிற கொடூரங்கள் ஏராளம்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் பிப்ரவரி 9 அன்று மதுரை மாவட்டத்தில் 47 கிராமங்களில் கள ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில் பங்கேற்ற 107 பேரில் 38 கள ஆய்வாளர்கள் நமது சங்கத்தைச் சார்ந்தவர்கள். மதுரை கிராமங்களில் தீண்டாமை நிலவுவதை நிரூபிக்க ஆய்வேதும் அவசியமற்றது தான். ஆம்! கிராமங்களில் நுழைந்தவுடன் நமது முகத்தில் ஓங்கி அறைகிற உண்மை அது. அனேகமாக தலித் மக்களும், இதர பகுதி மக்களும் சேர்ந்து வாழ்கிற தெருக்களையே பார்க்க முடியாது. எல்லா கிராமங்களிலும் தனி காலனி... தனித் தெருக்கள்...

டீக்கடைகளில் இரட்டை கிளாஸ். பல கிராமங்கள் மனித நாகரிகத்தை எள்ளி நகையாடிக் கொண்டிருக்கிறது. சாதியம் மிக லாவகமானது. குரூரமானது. எதிர்ப்புகள் வந்தால் பின்வாங்குவதில்லை. வடிவத்தை சற்று மாற்றிக் கொண்டு திருப்பித் தாக்குகிறது. நமது கள ஆய்வாளர்கள் 7 வடிவங்களில் இரட்டை கிளாஸ் அமலாவதைக் கண்டு அதிர்ந்து போய் விட்டார்கள். டிஸ்போசபிள் கப் மூலம் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்கிற நவீன தீண்டாமை பல கிராமங்களில் உள்ளது. அப்பட்டமாக பாரபட்சத்தை அரங்கேற்றுகிற கிராமங்களும் உண்டு.

தலித் மக்களுக்கு டிஸ்போசபிள் கப், மற்றவர்களுக்கு கண்ணாடி/ பீங்கான்/ எவர்சில்வர் தம்ளர்கள்.
தலித் மக்களுக்கு டிஸ்போசபிள் கப் தருவதால் அவர்களுக்கு டீயின் விலை ரூ. 2, மற்றவர்களுக்கு ரூ. 1.50.
தலித் மக்களுக்கு குறிப்பிட்ட தம்ளர்.
தலித் மக்கள் மட்டும் தம்ளர்களைக் கழுவி வைத்துச் செல்ல வேண்டும்.
தலித் மக்கள் மட்டும் பெஞ்சுகளில் அமர்ந்து டீ அருந்த முடியாது.
இன்னமும் கொட்டாங்கச்சியில் டீ தருகிற ஏற்பாடும் உண்டு.

சலூன்கள், சலவையகங்களும் பாரபட்சங்கள் நிலவுகிற இடங்களாகும். தலித் மக்களுக்குப் பெரும்பாலும் அனுமதியில்லை. சலூன்களில் அனுமதிக்கப்படுகிற கிராமமொன்றில் இரட்டைச் சேர் முறை உள்ளது. இன்னொரு கிராமத்தில் இரட்டை ஆள் சிகை திருத்தம் செய்கிறார்கள். சலவையகம் ஒன்றில் தலித் துணிகளும், பிறரின் துணிகளும் தனித்தனி அடுக்குகளில் பிரித்து வைக்கப்படுகின்றன. சொந்த ஊரில் சலூன், சலவையக அனுமதி இல்லாததால் அருகிலுள்ள சிறுநகரம், பெருநகரங்களுக்கு அலைந்து இச்சேவைகளைப் பெற வேண்டியுள்ளது. குளம், கிணறு, தெருக்கள், கோவில்கள் எங்கும் மநு (அ) தர்மத்தின் ஆட்சி கோலோச்சுவதைக் காண முடிகிறது. தனித்தனி படித்துறை உள்ள குளங்கள் உள்ளன. பொதுக் குளங்களில் தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதும் உள்ளது. கோயில்களில் நுழைய முடியாது. சில கிராமங்களில் கோயில் பிரகாரம் வரை செல்லலாம். நந்தனை எரித்த சக்திகள் இன்றைக்கும் கொள்ளிக் கட்டையோடு கூடு விட்டு கூடு பாய்ந்து கிராமங்களைச் சுற்றி வருகிறார்கள்.

மதுரை கிராமத்தின் இந்த அவலத்தைக் காணும்போது ஒரு வரலாற்றுப் பதிவு நினைவுக்கு வருகிறது. சிவகாசி அருகிலுள்ள திருத்தங்கலில் ஒரு மலைக்கோயில் உள்ளது. அதற்குள் பிற்பட்டோரும், தலித்துகளும் 80 ஆண்டுகளுக்கு முன்பு நுழைய முடியாது. பிரிட்டிஷ் நீதிபதியிடம் வழக்கு சென்றது. அவரின் தீர்ப்பு என்ன தெரியுமா? கோயிலில் நுழைய முடியாது. ஆனால், மலையைச் சுற்றி ஊர்வலமாக வந்து வழிபட்டுக் கொள்ளலாம். ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை சாதியம் ஒரு கவசம். அது கேடயம். ஏற்றத்தாழ்வுள்ள சமூகத்தை நிலை நிறுத்துகிற ஆயுதம். எனவேதான் பிரிட்டிஷாரில் துவங்கி இன்றைய ஆட்சியாளர்கள் வரை சாதியத்தின் நுனியைக் கூட வெட்டுவதில்லை. பிறகு எங்கே வேலைத் தரப் போகிறார்கள்!

ஆண்டார் கொட்டாரம், தனியா மங்கலம் என்ற இரண்டு கிராமங்களில் தபால்காரர்கள் தலித் வீடுகளுக்குச் சென்று டெலிவரி செய்வதில்லை. தகவல் தரப்பட்டால் வந்து வாங்கிக் கொள்ள வேண்டும் அரசாங்க டவுண் பஸ் தலித் பகுதியில் நிற்க மறுக்கிறது. அந்தக் கிராமத்தில் ஊரிலிருந்து முக்கால் கிலோ மீட்டர் தூரத்தில் தலித் பகுதி உள்ளது என்று ஒருவர் சொன்னார். இதன் பொருள் என்ன தெரியுமா? ஊர் என்ற வரையறைக்குள்ளேயே தலித் பகுதி வராது. முக்கால் கிலோ மீட்டர் தலைச்சுமையோடு நடந்துதான் வீட்டிற்கு வந்து சேர முடியும்.

ஒரு பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் தலித் மாணவர்களைத் தொட்டு அடிப்பதில்லையாம். எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதால் இறைவனைத் தொட முடியாதவர்கள் தன்னை எப்படித் தொடலாமென அவர் மூளை யோசித்திருக்கிறது. உருப்படுமா கல்வி?

சமரசம் உலாவும் இடமே! என்று பழைய திரைப்படப் பாடல் உண்டு. ஆனால், சுடுகாடுகள் கூட சாதிய பாரபட்சத்திற்கு விதிவிலக்குகள் அல்ல. சுடுகாட்டுப் பாதைக்காக பிணத்தை வைத்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் கெஞ்சிக் கூத்தாடுகிற நிலை உள்ளது. இக்கிராமத்திற்குச் சென்ற கள ஆய்வாளர் மிகவும் கொதித்துப் போய் திரும்பி வந்தார். தலித்துகளுக்கு சுடுகாடேயில்லாத கிராமங்கள் உண்டு. சுடுகாடு இருந்தால் பாதை கிடையாது. கூரை கிடையாது.

சாதிய பாரபட்சங்களின் உச்சக்கட்டமே உத்தபுரம் என்ற கிராமம். மதுரை மாவட்டத்தின் எல்லையோர கிராமம். தலித் பகுதியைத் தனியாகப் பிரித்து அரை கிலோ மீட்டருக்கு சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. மதுரை கள ஆய்வை பிப்ரவரி 21 அன்று மதுரையில் பத்திரிக்கையாளர்களுக்குத் தெரிவித்தோம். இந்து, டெக்கான் கிரானிகள், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இதழ்கள் இச்செய்திகளை வெளியிட்டன. ப்ரன்ட்லைன் இதழும் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் ஆங்கில இதழான சென்டினல் இச்செய்தியை வெளியிட்ட அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு விளக்கம் கோரும் நோட்டீசை அனுப்பியிருப்பதாக தினமலர் செய்தி கூறுகிறது.

மார்ச் மாதம் மதுரை மாநகர், புறநகர் பகுதிகளில் 10,000 தலித் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. மார்ச் 25இல் மதுரையில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பெரும்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் தோழர் ப.மோகன் எம்.பி அவர்களும் இணைந்து கொள்ள மகஜர் அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் 1361 கிராமங்கள் உள்ளன. நாம் கள ஆய்வு செய்தவை 47 மட்டுமே. ஆனால் எல்லாத் தாலூகாக்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட கிராமங்கள் என்பதால் இதுவே மதுரை மாவட்டத்தின் பொது நிலைமை என்பது தெளிவு. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பணி தமிழகம் முழுமையும் மனச்சாட்சியுள்ள, ஜனநாயக உள்ளம் கொண்டோரைத் தட்டியெழுப்பி வருகிறது. விருதுநகர் மாவட்டம் இருஞ்சிறை, தெற்கு ஆனைக்குட்டம் கிராமங்களில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் களத்தில் நேரடியாக இறங்கியிருக்கிறது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் சலூன் அனுமதிக்காக தலித் அல்லாத மக்களையும் திரட்டிப் போராடியுள்ளது. இப்பிரச்சினையில் அக்கிராமத்திலிருந்து தலித் அல்லாத மக்களும் ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பது அனைத்து உழைப்பாளி மக்களின் ஒன்றிணைந்த இயக்கத்திற்கு சீரிய சாட்சியமாகும்.

ஈரோடு நம்பியூரில் தலித் ஒருவருக்கு பதிவு செய்யப்பட்ட திருமண மண்டபம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அப்பிரச்சினையில் தொடர்ந்து போராடியதன் விளைவு அம்மண்டபத்தில் தலித் குடும்ப நிகழ்ச்சிகளுக்கான அனுமதி தர வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. இப்பிரச்சினையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலையீடும் குறிப்பிடத்தக்கதாகும்.

உடுமலை சாளரப்பட்டி பிரச்சினையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் பெருமளவு திரட்டலைச் செய்துள்ளது. கோவை, பொள்ளாச்சி, உடுமலை கிளைகளைச் சார்ந்த இன்சூரன்ஸ் தோழர்கள் 50க்கும் மேற்பட்டோர் உடுமலை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com