Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
மே 2008

திபெத் - பொய்யாகிப் போன அமெரிக்க கனவு
எஸ்.வி.சசிகுமார்

மதங்களும், மதம் சார்ந்த நிறுவனங்களும் மனித மாண்புகளைப் போற்றி “கடையனும் கடைத்தேறும்’’ வழி காட்டவே தோன்றின என்று மதவாதிகள் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. அதை நம்புகிறவர்களும் பெருமளவில் உண்டு. ஆனால், அவை ஆதிக்க சக்திகளின், ஆதிபத்ய அரசுகளின் நாடுபிடிக்கும் ஆசைகளுக்குத் தூபம் போடுவதிலும், அவற்றின் எடுபிடிகளாகி, மக்களைப் பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி, அடிமைகளாக்கும் அந்தநாடுகளின் முயற்சிகளுக்கெல்லாம் தோள்கொடுப்பதிலுமே ஈடுபாடு காட்டி வந்திருப்பது வரலாறு நெடுக நாம் காணக் கூடிய ஒன்றுதான்.

அகதியாக இந்தியா வந்து, இல்லாத ஒரு ‘நாட்டிற்கு’ ‘அரசுத் தலைவர்’ எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆடம்பர மாளிகையிலிருந்து கொண்டு ‘அரசாண்டு’ வரும் தலாய்லாமாவின் தூண்டுதலின் பேரில் ‘மக்கள் சீனக் குடியரசு’ நாட்டின் ‘சுயாட்சி கொண்ட திபெத் பகுதி’ என்ற மாநிலத்தில் மார்ச் 14இல் நிகழ்த்தப்பட்ட கலவரத்தை இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்திய _ சீன நல்லுறவு உச்ச நிலையிலிருந்த 1950களில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. நிறுவனத்தின் துணையோடு விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் திபெத்தில் சீன எதிர்ப்புக் கலவரங்களைத் தூண்டிவிட்டு இந்திய _ சீன உறவையே கெடுத்துப் பாழ்படுத்தி இங்கு வந்து தஞ்சம் புகுந்தவர் தலாய்லாமா என்பதை நாம் மறக்கமுடியாது. திபெத் மக்கள் சீனத்தின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியே என்று அன்றே சரியானதொரு நிலை எடுத்தது. இந்திய அரசு அன்று தொட்டு இன்று வரை அந்த நிலையில் மாறுதல் இல்லை. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அரசு பதவியிலிருந்த காலகட்டத்தில் கூட இந்த நிலையில் எந்த மாறுதலும் இல்லை. ஆயினும், புத்தபிக்குகள் தலைமை ஏற்று நடத்திய மார்ச் 14 கலவரத்தை திபெத் விடுதலைப் போராட்டமென்றும், அதை கட்டுப்படுத்த மக்கள் சீன அரசு எடுத்த நடவடிக்கைகளை “உரிமை மீறும் செயல்’’ என்றும் பா.ஜ.க. வர்ணித்திருப்பது ‘இந்துத்வா’ சக்திகளின் சந்தர்ப்பவாதப் போக்கையே காட்டுகிறது. அதுமட்டுமல்ல அமெரிக்காவும் அதற்குத் துணை நிற்கும் மேற்கு நாடுகள் பலவும் எடுக்கும் நிலையையே இந்தியக் காவிப்படையும் எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுக்குத் துணை போவதில் புத்த மதத் தலைவர்களுக்கு “நாங்கள் சளைத்தவர்களல்ல’’ என்பதுவே இந்துத்வா சக்திகளின் நிலை என்பதும் தெளிவாகிறது.

மார்ச் 14இல் திபெத் சுயாட்சி மாநிலத்தில் நடந்ததுதான் என்ன? மாநிலத் தலைநகர் லாசாவில் இருபது, இருபத்தைந்து புத்த பிக்குகள் தலைமையில் ஒரு சிறு கூட்டம் விடுதலைப் போராட்டம் என்ற போர்வையில் ஒரு வன்முறைச் செயலைக் கட்டவிழ்த்துவிட்டது. இந்த வெறியாட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. பலர் காயமுற்றனர், பல கடைகளும், வர்த்தக நிறுவனங்களும், பொதுச் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. லாசாவில் செய்தியாளர்களிடம் தேசிய ‘திபெத் சுயாட்சி பிரதேசம்’ அரசின் தலைவர் கியாங்யா மத்திய அரசு நிதானத்துடன் செயல்பட்டது என்று பாராட்டினார். துப்பாக்கிப் பிரயோகம் இல்லாமல் வெறும் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தியே சீன அரசு இந்தக் கலவரத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது என்று நன்றிப் பெருக்குடன் அவர் கூறினார். இந்தச் சிக்கலைத் தீர்ப்பதில் ‘பிரதேச’ அரசும் நிதானத்துடன் செயல்படவேண்டுமென்று சீன அரசு கூறியிருப்பதாகச் சொன்னார் கியாங்யா.

மேற்கத்திய நாடுகளின் தூண்டுதலின் பேரில் தலாய்லாமா திட்டமிட்டு ஏற்படுத்திய வன்முறை வெறியாட்டம் தான் இது என்று அவர் கூறினார். மைய அரசு அதிகாரிகளும் இதையே உறுதியுடன் கூறினர். அன்பும், அஹிம்சையுமே தங்கள் தாரகமந்திரங்கள் என்று கூறிவரும் புத்த மதப் பிக்குகளே இவ்வன்முறைச் செயலுக்கு வித்திட்டவர்கள் என்பது வேதனைக்குரியது. மக்கள் சீனத்தின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக 50 வருடங்களாக ஒத்துக் கொள்ளப்பட்டு அனைத்துப் பகுதி மக்களாலும் உறுதி செய்யப்பட்ட ஒரு நிலப்பரப்பை சுதந்திர பூமியாக ஆக்கப்போவதாகக் கூறிக் கொண்டு வன்முறை வெறியாட்டத்தில் ஒரு பகுதி மக்களில் ஒரு சிலர் ஈடுபட்டதற்கும், அதை மக்கள் சீன அரசு எதிர்கொண்ட முறையை அமெரிக்காவும், பிற மேற்கத்திய நாடுகள் சிலவும் மனித உரிமை மீறல் என்று முத்திரை குத்துவதற்கும் பின்னணியில் உள்ளவை எவை?

அமெரிக்கா மட்டுமல்ல, அதன் கூட்டாளிகளான பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற இதர நாடுகளும் மக்கள் சீன அரசிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பதற்கு முதல் மூலக் காரணம் மக்கள் சீனத்தின் பிரம்மிக்கத்தக்க பொருளாதார வளர்ச்சியே. அமெரிக்கா மற்றும் பன்னாட்டு நிதிமன்றங்கள் (உலகவங்கி, சர்வதேச நிதியம் போன்றவை) இணைந்து உலக நாடுகள் பலவற்றில், குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் கடந்த 20 ஆண்டுகளாகப் புகுத்தி வந்துள்ள தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கைகள் காரணமாக அந்த ஏழை நாடுகள் மட்டுமின்றி அமெரிக்காவே இன்று எதிர்கொண்டு வரும் நெருக்கடிகள் பல. கடுமையான விலைவாசி உயர்வினாலும், வேலை இழப்புக்களினாலும், தொழிற்சாலைகள் மூடுதலினாலும் அமெரிக்க மக்கள் பெருந்துயர்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மக்கள் சீன அரசு தொல்லைகள் ஏதுமின்றி சீரான வளர்ச்சி பெற்று நாளும் முன்னேறிவருவது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், அதன் எடுபிடிகளுக்கும் எப்படி உவப்பான செய்தியாக இருக்க முடியும்?

வயிற்றெறிச்சல் தாங்காமல், சீன நாட்டில் ஏதாவது ஒரு பின்னடைவு வர வேண்டுமென்று துடியாய்த் துடிக்கின்றன ஏகாதிபத்திய நாடுகளும் அவற்றின் ஏவல்களைச் சிரம்மேலிட்டுப் போற்றி நிறைவேற்றுகின்ற துணை நாடுகளும் எங்காவது, ஏதாவது ஒரு காரணம் பற்றி மக்கள் சீனத்தின் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாய் இறங்கி உள்ளன. அமெரிக்க சி.ஐ.ஏ.யின் துணை கொண்டு இந்தியாவுக்குத் தப்பிய தலாய் லாமாவை பயன்படுத்தித் தங்கள் லட்சியத்தை அடைந்துவிடத் துடிக்கின்றன அமெரிக்க ஆதரவு நாடுகள்.

இதுதவிர, இன்னொரு காரணமும் உண்டு. இன்னும் மூன்றே மாதங்களில் மக்கள் சீனாவில் நடைபெவிருக்கும் ஒலிம்பிக் போட்டியை உலக மக்கள் அனைவருமே வியக்கும் வண்ணம் நடத்திக் காட்டுவதில் முனைப்போடு ஈடுபட்டிருக்கும் சீன அரசுக்கு எப்படியாவது ஒரு நெருக்கடியைக் கொடுத்து அதன் முயற்சிகளை முறியடிக்கும் கேடுகெட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகவே அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் கண்டனம் முற்போக்கு சக்திகளால் பார்க்கப்படுகிறது.

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக் போட்டியை நடத்தவிருக்கும் பிரிட்டிஷ் அரசு மிகவும் அதிகமாகவே வயிற்றெறிச்சலில் உள்ளது. லாசா கலவரத்தை விடுதலைப் போராகக் கொண்டு அதைக் கட்டுப்படுத்த சீன அரசு எடுத்த நடவடிக்கைகளை மனித உரிமை மீறலாக உலகிற்குக் காட்டி சீனத் தலைநகர் பெய்ஜிங் நகரில் ஆகஸ்ட் 8இல் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் விழாவைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்று அமெரிக்க ஆதரவு நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன. இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய சோவியத் யூனியன் தலைநகரில் 1980இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை இதுபோன்றே ஒரு சப்பைக் காரணம் காட்டி அந்நாடுகள் பகிஷ்கரித்தன என்பதை மறக்க முடியாது. அந்த பகிஷ்பரிப்பையும் மீறி மாஸ்கோ ஒலிம்பிக் பெரும் வெற்றி கண்டதை மறக்க முடியாது. அதுபோலவே இப்பொழுதும் அமெரிக்க முயற்சிகளை முறியடித்து ‘பெய்ஜிங் ஒலிம்பிக்’கும் மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.

அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் கூறுவது போல, மக்கள் சீன அரசின் லாசா நடவடிக்கை ‘மனித உரிமை மீறல்’ செயல்தானா? இதைச் சொல்வதற்கு அமெரிக்காவின் அதன் எடுபிடிகளுக்கும் என்ன அருகதை இருக்கிறது? வியட்நாம் முதல் பாக்தாத் வரை அமெரிக்கா நிகழ்த்திய மனித உரிமை மீறல்களுக்குச் சமமாக வேறு எதையாவது சொல்லமுடியுமா? சரியாகச் சொன்னால் இராக் மீது எந்தவிதக் காரணமும் இன்றிப் படையெடுத்து, எந்த முகாந்திரமுமின்றி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து குழந்தைகள், பெண்கள், முதியோர் என்று அனைத்துப் பகுதி மக்களையும் துன்புறுத்தி உலகிலேயே மிகப் பெரிய மனித உரிமை மீறல்களை நிகழ்த்திய நாடு அமெரிக்கா தான் என்று பதிலடி கொடுத்தது மக்கள் சீன அரசு.

அது மட்டுமா? உலகிலேயே அதிகமானவர்களைச் சிறையில் பல்லாண்டுகளாக வைத்திருக்கும் அரசும் அமெரிக்கா அரசு தான். சிறைக்கைதிகளைத் துன்புறுத்துவதில் அமெரிக்காவிற்கு நிகரான நாடு வேறெதுவுமில்லை என்று சீன அரசின் வெளி உறவு அலுவலகம் அறுதிபடக் கூறியது. தொழிற்சங்க உரிமைகளை மறுப்பதிலும் அமெரிக்காவிற்கே முதல் இடம் என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனை, எத்தனை, அத்துமீறல்கள்? தனது மோசமான உரிமை மீறல்களை எல்லாம் மறைத்து விட்டு மக்கள் சீன அரசின் நியாயமான நடவடிக்கைகளைக் குறை கூறுவது எடுபடப் போவதில்லை.

முதலாளித்துவப் பத்திரிகைகளும் பிற ஊடகங்களும் மட்டுமின்றி சில ஹாலிவுட் நடிகர்கள் கூட மக்கள் சீன அரசிற்கு எதிரான அமெரிக்கா குற்றச்சாட்டுகளை எந்த வித தர்மமும் நியாயமுமின்றி மீண்டும் மீண்டும் உலக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தாலும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மனித உரிமைத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அமெரிக்கக் குற்றச் சாட்டை நிராகரித்துள்ளனர். எப்படி அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் உண்மையை அறிய எந்த முயற்சியும் எடுக்காமல் பொய்யான செய்திகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி வந்தன என்பதைத் தோலுரித்துக் காட்டியுள்ளனர் அவர்கள். உதாரணமாக, “ஊர்ஜிதம்’’ செய்யபட்ட செய்தி என்று அந்த ஊடகங்கள் குறிப்பிட்ட தகவலான 40 பேர் கொல்லப்பட்டனர் என்பது எப்படித் தவறானது என்று அவர்கள் விளக்கிக் கூறியிருக்கிறார்கள். அந்தக் குறிப்பில் இடம் பெற்றவர்களில் சிலர் உயிரோடு இருப்பதையும் பல பெயர்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்பதையும் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி உள்ளனர்.

நடந்தது “ஒரு கலாச்சாரப் இனப் படுகொலை’’ என்று தலாய்லாமா சொல்வதில் எந்த நியாயமுமில்லை என்ற செல்வாக்கு மிக்க ஊடகப் பிரதிநிதிகள் வெளிப்படுத்தியிருக்கின்றனர். திபெத் மக்கள் சீனத்தின் பிரிக்க முடியாத பகுதி என்பதை கடந்த 50 ஆண்டு காலமாக வாழும் திபெத்தியர்கள் உணர்ந்துள்ளனர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில இடங்களில் காணப்பட்ட பிரிவினைவாத முயற்சிகள் கூட இன்று எங்கும் காணமுடியவில்லை என்று அப்பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்திருக்கும் வெளிநாட்டு ஊடகப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

இந்த மாறுதலுக்கெல்லாம் அடிப்படை மக்கள் சீனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் “திபெத் சுயாட்சிப் பிரதேசம்’’ அடைந்திருக்கும் மகத்தான தொழில் வளர்ச்சிதான். விவசாயத்துறையிலும் தொழில்துறையிலும் கடந்த 50 ஆண்டுகளில், குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் சீனா அடைந்திருக்கும் பெருமைக்குரிய வளர்ச்சி தான் என்று பார்வையாளர்கள் பலர் பெருமிதத்துடன் கூறியுள்ளனர். எல்லாப் பகுதிகளையும் போலவே திபெத் பிரதேசத்திலும் செல்வச் செழிப்பு மிக வெளிப்படையாகவே தெரிகிறது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மக்களின் வாழ்க்கை தரம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளிலும் பிரமிக்கத் தக்க சாதனை படைத்துள்ளது. வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

இளைஞர்களின் வளர்ச்சி மகத்தானது. நவீனத் தொழில் முயற்சிகளும் வளர்ச்சியும் அவர்கள் வாழ்வில் வியக்கத்தகும் மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளனர். திறமை ஆற்றலும் பெற்றவர்களாக மட்டுமின்றி தெளிந்த மனமுடையவர்களாகவும் அவர்கள் வளர்ந்து வருவது பற்றிப் பல பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்று சீன மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இளைஞர்களே என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த வளர்ச்சி சீராகப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. என்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போலன்றி இப்பொழுது திபெத் மக்கள் அனைத்து சீனமக்களின் பொது நீரோட்டத்தில் கலந்து விட்டது தெளிவாகப் புலப்படுகிறது. என்று பார்வையாளர்கள் கூறியருக்கின்றனர். ஆண்டுக்கு 12 சதவிகித வளர்ச்சி அவர்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் மிகை ஆகாது.

சுமார் 2000 கிலோ மீட்டர் நீளமுள்ள க்யூங்கா _திபெத் ரயில் பாதை திபெத் பகுதி மக்களை சீனாவின் பிறபகுதிகளோடு இணைத்து அவர்கள் வாழ்க்கையில் பெருமளவிற்கு மாறுதலை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம், இப்பொழுது அவர்கள் உண்மையான, வளர்ச்சி பெற்ற திபெத்தைக் காண முடிகிறது. போலியான, சுதந்திர திபெத் பற்றிய கனவுகள் எதுவும் அவர்களுக்கு இனி இருக்க வாய்ப்பில்லை என்று பெருமிதத்துடன் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com