Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
மே 2008

கணேசு என்ற பாலமுருகன்
ஆர்.நீலா

என் பேரு கணேசு என்ற பாலமுருகன். பாலமுருகன் அப்பாம்மா வச்ச பேரு. கணேசுங்கறது எனக்கு நானே வச்சிக்கிட்ட பேரு. அப்படி பேரு வச்சதாலதான் நான் போலீசில மாட்டிக்கிட்டேன்!

எப்படின்னு கேக்கிறீங்களா? அதுக்கு ஒரு ப்ளாஸ்பேக் சொல்லணும்... பொறுமையா கேக்கிறீங்களா? ஏன்னா எல்லாரு கண்ணுக்கும் இப்ப நாம் பண்ணின திருட்டுதான் கண்ணுக்குத் தெரியுது... அதுக்கு முன்னாடி நான் என்ன பண்ணினேன்? எப்படித் திருடனா மாறினேன்னு ஏதாச்சும் தெரியுங்களா?

நீங்க பகவதி படம் பாத்திருக்கீங்களா? அதில விஜய் டீ மாஸ்டரா அப்புராணியா வேல பாப்பாரு.. அது மாதிரிதான் நானும் லேத் பட்டறையில அப்புராணியா வேல பாத்துக்கிட்டிருந்தேன். எனக்கு அப்பாம்மா, ஒரு அக்கா, ஒரு தங்கச்சி... அத்தினி பேரும் இப்படித்தான் ஆளுக்கொரு கூலி வேல செஞ்சிக்கிட்டிருந்தோம். வயித்துப்பாட்டுக்குப் பிரச்சனையில்லே...

வாரம் முழுக்க வேலை செய்வேன்.. ஞாயித்துக்கிழமை வந்துட்டா படம் பார்க்கிறது தான் ஒரே பொழுது போக்கு... எனக்கு விஜய் படமுன்னா உசிரு... அவருதான் நல்லா சண்டை போடுவாரு.. அம்மாவுக்கு நான் வாரம் தவறாம படத்துக்குப் போறது பிடிக்காட்டியும் எப்படியாவது நச்சரித்து டிக்கெட்டுக்கு காசு வாங்கிருவேன். அன்னிக்குப் புதன்கிழமை. அன்னிக்குப் பாத்து திருப்பாச்சி படம் போட்டுட்டான். கடையில ஏழு மணி வரைக்கும் இருக்கனும். லேத் மொதலாளி நிச்சயமா போக விட மாட்டான். மொதலாளிகிட்டே சொல்லாம நான் பாட்டுக்குப் போயிட்டு ராத்திரி பத்து மணிக்கு கமுக்கமா வந்து வீட்டுல படுத்திட்டேன்.

மறுநாளே லேத்துப்பட்றைக்கு வந்து என்னையும் என் பிரண்டு பிரபா என்ற பிரபாகரனையும் போலீசு கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க... போலீஸ் ஸ்டேசன்லே எங்களையும் சேத்து பத்துப்பேருக்கிட்டே இருக்கும். விசயம் என்னன்னா... மொத நாளு ராத்திரில ஒரு நகைக்கடையில திருட்டுப் போயிருக்கு... அதில என் பிரண்டு பிரபாகரன் மேல சந்தேகப்பட்டுத்தான் போலீசு வந்து விசாரிச்சிருக்காங்க... (எம்பிரண்டு ஏற்கனவே ஒரு சைக்கிள் திருட்டில சம்பந்தப்பட்டவன்) மொத நாளு சாயந்திரம் அஞ்சு மணிலேயிருந்து என்னையும் காணல்ல... பேரையும் விசாரிச்சுட்டு விட்டுறுவோமுன்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டாங்க...

அப்ப பிரபாகரன் எனக்குச் சொல்லிக் கொடுத்தான், “பேரு பதியும் போது அசல் பேரச் சொன்னா திரும்பித் திரும்பி போலீசு வந்து தொல்லை கொடுக்கும். பேர மாத்திக் கொடு’’ன்னான். அதனால நான் என் முறை வரும்போது கணேசுன்னு பேர மாத்திச் சொல்லிட்டேன். விசாரணையில நாங்க திருடலேங்கறது ப்ரூவ் ஆகிருச்சு... விட்டுட்டாங்க...

இது நடந்து மூணாம் மாசம் மறுபடி ஒரு திருட்டு... ஒரு பணக்கார வீட்டுல புகுந்து நகை பணமுன்னு யாரோ கொள்ளையடிச்சுக்கிட்டுப் போயிட்டாங்க... இப்பவும் வந்து என்னையும் என் பிரண்டையும் விசாரணைன்னு சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்தாங்க. போன முறை மாதிரி இல்லாம இந்த முறை அடி பின்னிட்டாங்க... எம்மேல சந்தேகம் வலுவா இருந்தது. அதுக்குக் காரணம் போனமுறை நான் பேர மாத்திக் கொடுத்ததை கண்டு பிடிச்சிருந்தாங்க... அதனால குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி அடிச்சாங்க...

அந்தச் சமயத்தில் அசல் திருடர்கள் மாட்டிக்கிட்டாங்க. அப்புறம் ஏகப்பட்ட அட்வைஸ் பண்ணி எங்களை விட்டுட்டாங்க. எங்களை எங்க முதலாளி வேணாணுட்டார். திருட்டுப் பசங்களை வச்சிக்க முடியாதுன்னு தொரத்தி விட்டுட்டார். அவரு மட்டுமில்லே...என் குடும்பத்திலேயே என் அம்மா உட்பட யாருமே நல்லாப் பேச மாட்டேன்னுட்டாங்க... எதுவுமே செய்யாம போலீசு திரும்பத் திரும்ப வருமாங்கறது அவங்களோட வாதம்.

அப்புறம் தான் நானும் என் பிரண்டும் ஒரு முடிவு பண்ணோம். நெஜமாலே திருடினா என்ன? உள்ளூர்லே வேணான்னு முடிவு பண்ணி பக்கத்து டவுணுக்குப் போயிட்டோம். மொதநாளு ஒரு வீட்டுக் கொல்லைப்புறத்தில் கெடந்த வெண்கல அண்டாவையும் இரும்பு ராடுகளையும் திருடினோம். யாரும் கண்டுபிடிக்கலே...

அடுத்த வாரத்திலே பெருசா திட்டமிட்டுப் போய் பீரோவை உடைக்கயிலே கையும் களவுமா மாட்டிக்கிட்டோம். போலீசில புடிச்சுக் கொடுத்திட்டாங்க... ஸ்டேஷன் கிட்டே வரும்போது ரெண்டு பேரும் தப்பிச்சு ஓடிட்டோம். ஊருக்குத் கிழக்கா கொல்லைக்காவலுக்குப் போட்டிருந்த கொட்டாயிலே தங்கியிருந்தோம். போலீசு துப்புத் துலக்கி நாலே நாள்லே கண்டுபிடிச்சிருச்சு.

இந்த முறை நெறையப் போலீசு வந்தாங்க... தளபதி படத்தில் வர்ற ரஜினி மம்முட்டி மாதிரி நாங்க வர்றோம். எங்களுக்கு முன்னே மூணு போலீசு பின்னே துப்பாக்கியோட மூணு போலீசு... ரெண்டு வருசம் குடுத்தாங்க... இங்க வந்திட்டோம்...

எனக்கு வீட்டு ஞாபகமெல்லாம் ரொம்ப வரலேக்கா... என்ன பொம்பள அது... ஊரே வந்து உன் மகன் திருடன்னு சொன்னாலும் ஒரு தாய்க்கு உண்மை தெரிய வேணாம்? எனக்கு அம்மாவப் புடிக்கலே... அப்பாவப் புடிக்கலே... லேத்துப் பட்டறை மொதலாளியப் புடிக்கலே ஒருத்தரையும் புடிக்கலே... பாரு... அடுத்த வருசம் நான் வெளில வந்திருவேன். அடுத்த முறை மாட்டிக்கிற மாதிரியா திருடுவேன்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com