Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
மே 2008

மருந்தீடு என்னும் மாயை
சமூக மருத்துவன்

கண்மணியின் குடலில் ஏற்படும் அசுத்த காற்றும், நீரும் வெளியேற்றப்படாததால் வயிறு வீங்க ஆரம்பிப்பதோடு, நச்சு பொருளால் காய்ச்சலும் வர ஆரம்பிக்கிறது. நன்றாக தூங்கி கொண்டிருக்கும் கண்மணி திடீரென எழுந்து வயிறு வலிக்கிறது என கத்துகிறாள். பதறியடித்து எழும் லட்சுமி கண்மணியை அணைத்து கொண்டபோது அவளது உடல் கொதிக்கிறது. என்பதை அறிந்துகொண்டு என்ன செய்வது என தெரியாமல் வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் அழைந்து கொண்டிருக்கிறாள்.

வெளியூருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேலுசாமி அந்த வழியாக வருகிறான். வேலுசாமி பி.எஸ்.ஸி. வரை படித்து முடித்துவிட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக மேல்படிப்புக்கு போக முடியாமல், தனியார் கூரியரில் வேலை செய்துவரும் பகுத்தறிவு சிந்தனையுடன் மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட வாலிபர். என்ன நடந்தது என்பதை உடனடியாகப் புரிந்துகொண்டு, குடிபோதையில் எழ முடியாமல் தூங்கிக் கொண்டிருக்கும் முனியப்பனின் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு கண்மணி, லட்சுமியை பக்கத்து கிராமத்திலுள்ள கிராம சுகாதார செவிலியர் நாகராணியிடம் வேலுசாமி அழைத்துச் சென்றான்.

துணை சுகாதார நிலையத்திலேயே தங்கியிருக்கும் நாகராணி கண்மணியைப் பரிசோதித்துவிட்டு என்ன உணவு எப்பொழுது கொடுத்தீர்கள் என லட்சுமியிடம் கேட்டார். உணவோ, நீரோ அதிகமாக கொடுத்தால் வயிற்றுபோக்கு தொடர்ந்து ஏற்படும், ஆகையால் வயிறைக் காய வைத்தால் வயிற்றுபோக்கு நின்றுவிடும் என பச்சியம்மாள் சொன்னதால் இரவு பால் மட்டும் கடையில் வாங்கி தந்ததாக லட்சுமி கூறினாள். லட்சுமியின் பதிலைக் கேட்டவுடன் கொதிப்படைந்த நாகராணி அவளின் அறியாமையை எண்ணி வருத்தப்பட்டாள். பிறகு தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டு லட்சுமிக்கு சரியான அறிவியல் காரணத்தை கூறி புரிய வைக்க முடிவு செய்தார். வயிற்றுபோக்கு ஏற்படும்போது உடலில் நீர் வறட்சி ஏற்படும், அதை சரிசெய்ய உணவு, நீரை தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றும், உப்பு, சர்க்கரை கரைசலையும் சேர்த்து கொடுத்தால் குழந்தை பலவீனமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்றும் விளக்கமளித்த நாகராணி, கொதிக்க வைத்து ஆறவைத்த ஒரு சொம்பு நீரில் ஒரு பாக்கெட் உப்பு சர்க்கரை பவுடரை கலந்து அந்த கரைச்சலை கண்மணிக்கு குடிக்க கொடுக்கிறார்.

வீட்டில் இதுபோல் கரைசல் பவுடர் இல்லாதபோது என்ன செய்யலாம் என வேலுசாமி நாகராணியிடம் கேட்டபோது வீட்டிலுள்ள சர்க்கரை அல்லது வெல்லத்தை, ஒரு கைபிடி அளவிற்கும் ஒரு சிட்டிகை அளவிற்கு உப்பையும், ஒரு சொம்பு கொதிக்கவத்து ஆற வைத்த நீரில் கலந்து கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டுமென்றும், அதைவிட நொய் அரிசியையும், உப்பையும் கலந்து தயாரிக்கப்படும் கஞ்சி சிறந்தது என்றும் நாகராணி கூறினார். காலை விடியும்வரை அங்கேயே அவர்கள் தங்கி இருந்தார்கள். காலை 6.30 மணியளவில் திடீரென கண்மணி வாந்தி எடுக்க நாகராணி அவளை மீண்டும் பரிசோதித்துவிட்டு உடல்நிலை மோசமாக இருப்பதால் மருத்துவரிடம் எடுத்து செல்ல வேண்டுமென கூறி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிந்துரைத்து அனுப்பி வைக்கிறார்.

தங்களுடைய கிராமத்திலிருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏழு மைல் தொலைவில் இருப்பதால், அரசு பேருந்து வரும் வரை காத்திருந்து செல்ல வேண்டியிருப்பதால் அதற்கு இடைப்பட்ட காலத்தில் உப்பு சர்க்கரை, கரைச்சலை தொடர்ந்து உட்கொண்டிருக்கவேண்டும் என நாகராணி அறிவுறுத்தியிருந்தார். வேலுசாமி கண்மணியையும், லட்சுமியையும் அழைத்துக்கொண்டு காலை 8.30 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தை வந்தடைகிறார். 9.30 மணிக்கு மருத்துவர் வரும்வரை காத்திருந்து கண்மணியை மருத்துவரிடம் அழைத்து செல்கின்றனர். மருத்துவர் கண்மணியை பரிசோதித்துவிட்டு அவளின் நிலைமை மோசமாக உள்ளதாகவும், உடனடியாக குளுக்கோஸ் போட வேண்டுமெனவும் கூறி, உள் நோயாளியாக அவளை அனுமதிக்கிறார். குழந்தைக்கு ஏன் இந்த அளவிற்கு நிலைமை மோசமாக ஆனது என வேலுசாமி மருத்துவரிடம் கேட்கிறார்.

சில வைரஸ் அல்லது பாக்டீரியா கிருமிகளின் தாக்கத்தினால் குடலில் ஏற்படும் உபாதையே வயிற்றுபோக்கு எனவும், நாம் சாப்பிடும் உணவு மற்றும் நீர் அப்படியே பேதியாக வெளியேறாது எனவும், உடலில் உள்ள நீரை குடல் உறிஞ்சி மலத்துடன் கலந்து கூழ் போன்று வேகமாக வெளியேற்றப்படுகிறது எனவும், மருத்துவர் விளக்கமளிக்கிறார். மேலும் நாம் உணவோ, நீரோ உட்கொள்ளாமல் இருந்தாலும் உடலில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்படும் எனவும், இதனால் உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு இறுதியில் மரணம் கூட ஏற்படும் எனவும் விளக்குகிறார். உணவு மற்றும் நீர் முன்பைவிட அதிகமாக கொடுக்க வேண்டுமெனும் மருத்துவரின் விளக்கத்தை கேட்டுக்கொண்டிருந்த லட்சுமி மருந்தீடு எடுப்பது, மந்திரம் போடுவது போன்ற நம்பிக்கைகளில் தான் காலம் தாழ்த்தியதால் கண்மணிக்கு இந்த அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டதே என வேதனைப்பட்டாள்.

நீங்கள் வேதனைப்பட வேண்டாம் என்றும், மருத்துவத்தின் விளக்கத்தை இப்போதாவது புரிந்து கொண்டீர்களே அதுவே போதும் என்றும் லட்சுமிக்கு வேலுசாமி ஆறுதல் கூறினான். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் வயிற்றுபோக்கினால் வருபவர்கள் என்பதையும், இதற்காக அரசும் மக்களும், தங்களுடைய வருமானத்தின் பெரும் பகுதியை இதற்காக செலலிட நேர்கிறது என்பதையும், வேலுசாமி லட்சுமிக்கு விளக்குகிறான். மதியம் 2.00 மணியளவில் மருத்துவர் கண்மணியை பரிசோதித்துவிட்டு அவளின் நிலை ஓரளவு சீரடைந்துள்ளதாகவும், வாய் வழியாக உப்பு, சர்க்கரை கரைச்சல் அல்லது அரிசி கஞ்சியை கொடுக்கலாமென்றும் அன்று இரவு ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே தங்கியிருக்குமாறும் அறிவுறுத்தினார். லட்சுமியை கண்மணிக்கு பாதுகாப்பாக விட்டுவிட்டு ஊரில் உள்ளவர்களுக்கு தன் விவரத்தை கூறிவிடுவதாகவும், நாளை வந்து கண்மணியை பார்ப்பதாகவும் கூறிவிட்டு வேலுசாமி விடைபெறுகிறார்.

மறுநாள் காலை கண்மணியை பார்ப்பதற்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வேலுசாமி வருகிறார். கண்மணியின் உடல்நிலை சீரடைந்து சற்று உற்சாகத்துடன் காணப்பட்டாள். அப்போது அங்கு கண்மணியின் பெயர் மற்றும் விலாசத்தை அப்பகுதி சுகாதார ஆய்வாளர் நீலமேகம் விசாரிக்க, எதற்காக இதையெல்லாம் கேட்கிறீர்கள் என வேலுசாமி கேட்கிறார். உங்கள் பகுதியில் குடிநீர் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தப்படாததால்தான் இவ்வாறு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது எனவும், பாதுகாப்பற்ற குடிநீர் மூலம் வயிற்றுபோக்கு, சீதபேதி, மஞ்சள் காமாலை, காலரா, டைபாய்டு மற்றும் போலியோ போன்ற நோய்கள் வரும் ஆபத்து இருக்கிறது என்றும் விளக்குகிறார். ஆனால் நாங்கள் பஞ்சாயத்து குழாயில் வரும் நீரை குடத்தில் பிடித்துதான் குடிக்கிறோம். எப்படி கண்மணிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது என லட்சுமி கேட்கிறாள்.

பாதுகாப்பான முறையில் நீர் வழங்கப்பட்டாலும், நீர் நுகரப்படும் இடத்தில் அசுத்தமாக வாய்ப்புள்ளது எனவும், குடிநீரை குழாய்கள் மூலம் பிடிக்கும் முன்பு, நீர் பிடிக்கும் பாத்திரத்தை நன்றாக கழுவ வேண்டுமென்றும், நீர் பிடித்தபின் பாத்திரத்தை சுத்தமான மூடியால் மூடப்படவேண்டும் என்றும் விளக்குகிறார், அப்போது நுகரப்படும் இடத்தில் மட்டுமே நீர் அசுத்தமடைவதாக கூறுகிறீர்களா என வேலுசாமி கேட்கிறார். இல்லை, நீர் மூலத்திலிருந்தே அசுத்தமடைய வாய்ப்புள்ளது எனவும், அதைத் தவிர்ப்பதற்கு தினமும் மேல்நிலை நீர் தொட்டிகளில் குளோரின் மருந்து கலக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படவேண்டும் என்றும் நீலமேகம் விளக்கமளிக்கிறார்.

எப்போதாவது மருந்து கலந்துவரும் நீரின் துர்நாற்றத்தால் அதை குடிக்காமல் பழைய தண்ணீரைதான் நாங்கள் இதுவரை குடித்து வந்துள்ளோம் என லட்சுமி கூறுகிறார். தினமும் குளோரின் மருந்து கலக்கப்படவேண்டுமென்றும், அதனால் எந்த பக்க விளையும் இல்லையெனவும் பழக்கப்பட்டால் துர்நாற்றமாக தெரியாது எனறும விளக்கமளிககிறார். தினமும் குளோரின் மருநது கலக்காத சூழலில் பாதுகாப்பான குடிநீரை பெற வேறு வழியில்லையா என வேலுசாமி நீலமேகத்தை கேட்கிறார். அரிசி உலையில் நீர் கொதிக்குமளவிற்கோ அல்லது இருபது நிமிடங்களோ நீரை நன்றாக கொதிக்க வைத்து பின்பு நன்றாக ஆறவைத்து சுத்தமான பாத்திரத்தில் சேமித்து வைக்கவேண்டும் என்றும் பாத்திரத்திலிருந்து நீரை வெளியே எடுக்கும்போது கையை உள்ளே நுழைக்கக்கூடாது என்றும் விளக்கமளிக்கிறார்.

கருவேலன் காட்டில் சமையலுக்காக விறகு எடுப்பதற்காக தான் படும்பாட்டை எண்ணியும், குடிநீர் காயவைக்க எங்கே போவது என்று மனதில் ஆயிரம் கேள்விகளோடு நீலமேகம் விளக்கத்தை லட்சுமி கேட்டுக்கொண்டிருந்தாள். மேலும் குளோரின் மருந்து கலக்கப்பட்ட நீரோ, கொதிக்க வைக்கப்பட்ட நீரோ குடித்தால் நீரின் சுவை மாறிவிடுவதாகவும், மேலும் நீரிலிருந்து சத்துக்கள் வெளியேறி விடுவதாகவும் சிலர் நினைப்பதும் தவறான கருத்துகள் எனவும் விளக்குகிறார்.

கிராமங்களில் நீர் மாசுபட வாய்ப்புள்ள பகுதிகளை சுத்தப்படுத்தவும், தினமும் குடிநீரில் குளோரின் மருந்து கலப்பதற்கும், நீர் தேங்கியுள்ள இடங்களில் உறிஞ்சி குழிகளை அமைப்பதற்கும், ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராம சுகாதார செவிலியர், அடங்கிய கிராம குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மை குழுக்கள் இருப்பதாகவும், அக்குழுக்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10, 000 வழங்கப்படுவதாகவும், டவுன் பஞ்சாயத்துக்கு ஒவ்வொரு 3000 மக்கள் தொகைக்கு ஆண்டுக்கு ரூ. 10, 000 வழங்கப்படுவதாகவும் நீலமேகம் வேலுசாமியிடம் விளக்கினார்.

மேலும் தேசிய கிராமப்புற சுகாதார மேம்பாட்டு லட்சிய திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களில் மக்கள் பங்கெடுக்க வேண்டுமெனவும் விளக்கமளித்தார். நீங்கள் கூறுவதை நானும் பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன், ஆனால் எங்கள் ஊரில் கிராமப்புற சுகாதார குழுவின் மூலம் எந்த விதமான தூய்மைப்படுத்தும் வேலையும் நடந்ததாக தெரியவில்லையே என வேலுசாமி கேட்கிறார். இவ்வாறு மக்கள் நலனுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் மக்கள் பணம் மேலிருந்து கீழ்வரை பல மட்டங்களில் தங்கள் சுயநலத்திற்காக தவறான முறையில் பயன்படுத்தப்படுவதையும், இதுபோன்ற பல ஒதுக்கீடுகள் மக்களை சென்றடையாமல் வீணாக்கப்படுவதையும் மனம்விட்டு வெளியே கூறமுடியாமல் நீலமேகம் வாயடைத்து நின்றார்.

தினமும் லட்சக்கணக்கான கண்மணிகள் வயிற்று போக்கினால் பாதிக்கப்பட்டு, அவதிக்குள்ளாவதும், சரியான சிகிச்சை இல்லாமல் இறப்பதும், அதற்கான சிகிச்சைக்காக தங்களின் வருமானத்தின் பெரும்பகுதியை செலவிட கூடிய லட்சுமியின் வறிய குடும்பத்தினரைப்போல் பல வறிய குடும்பங்கள் மேலும் வறிய நிலைக்கு தள்ளப்படக்கூடிய சூழ்நிலையில், சுதந்திரமடைந்து அறுபது ஆண்டுகள் கழிந்த பிறகும், பாதுகாப்பான குடிநீரை பெறமுடியாமல் போனதற்கு இதுவரை இருந்த அரசுகள் வெட்கி தலைகுனிய வேண்டுமென்றும் இதை மாற்ற ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஆதங்கத்துடனும், கண்மணியை குணமாக்கிய மன திருப்தியுடனும் அவர்களை அழைத்துக்கொண்டு வேலுசாமி ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வெளியேறி நடந்து கொண்டிருந்தார்.

வேலுசாமியின் பயணம் தொடரும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com