Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
மே 2008

ஆகர்ஷிக்கும் வல்லமை கொண்ட டி.ஒய்.எப்.ஐ.
எஸ்.கண்ணன்

அன்புமிக்க தோழனே, வணக்கம்.

நலம், நலமறிய ஆவல்.

நீண்ட இடைவெளிக்குப் பின் கடிதம் எழுதும் உணர்வு பிறந்துள்ளது. அழுத்தும் பாரம், பிரவாகம் எடுத்துப் பொங்கும் எழுச்சி, கண் முன்னே விரிந்து கிடக்கும் வளர்ச்சிக்கான வாய்ப்பு, ஆகிய மூன்றுமே இக்கடிதத்திற்கான அடிப்படைக் காரணம், டி.ஒய்.எப்.ஐ இயக்கம் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறபோது, பெரியார் வளர்த்த சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம் போன்றவை வரலாற்றில் நீண்டு கொண்டே இருப்பதைப் பார்க்கிறது. தமிழகத்தின் பல நகரங்களில் அந்த கிழவருக்கு சிலைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அதைப் பார்க்கிறபோதெல்லாம், இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும் சமூக அவலங்கள் நினைவுக்கு வர வேண்டும். ஆனால் இன்றைய தமிழகத்தில் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் மிச்சங்கள் நினைவுக்கு வராமலேயே போய்விட்டன.

மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவின் உத்தப்புரம் கிராமத்தில் எழுப்பப்பட்டுள்ள சுவர், தீண்டாமைக் கொடுமையை உச்சத்திற்கு கொண்டு சென்றதன் அடையாளம். பெரியார் முன்வைத்த சீர்திருத்தங்களைக் கடந்து, அடுத்த கட்டமாக உருவெடுக்க வேண்டிய சமூக மாற்றம் நடைபெறாததால், சீர்திருத்தம் சில இடங்களில் பின்னோக்கிப் பாய்கிற ஆபத்தைப் பார்க்க முடிகிறது.

வறுமை, பசி, நோய்களின் தாக்கம், இயற்கை சீற்றத்தின் தாக்குதல்கள் போன்றவற்றில் இருந்து மீள வழி தெரியாத ஏழை மக்களை, ஏறி மிதிக்கும் விலைவாசி மனதை அழுத்தும் பாரமாக இருக்கிறது. தினமும் உயருகிறது. முன்பேர வர்த்தகம், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பெருமந்தம், போன்ற காரணங்கள் பதுக்கலையும், விலைவாசி உயர்வையும் வளர்க்கிறது. வெறும் 7 சதவிகித மக்களே உயர்கல்வி (கல்லூரி) கற்கும் சூழலில் அரசியல் பொருளாதாரத்தை உணர முடியாமல் உழைக்கும் மக்கள் உள்ளனர். நிவாரணம் தேடி அலையும் கூட்டமாக, வேறு ஒரு முதலாளித்துவ கட்சியின் மூலம் நிவாரணத்தைப் பெற முடியும் என்று செயற்கையாக ஆனால் வழக்கம் போல் நம்பிக்கையூட்டப்படுகிறார்கள்.

மேலே குறிப்பிட்ட இரண்டு பிரச்சனைகளை ஒரு சேர எதிர்த்துப் போராடும் இயக்கமாக டி.ஒய்.எப்.ஐ விளங்குகிறது. சமீபத்தில் இடதுசாரித் தலைவர் பிரகாஷ் காரத், “வறுமைக்கு எதிரான பொருளாதாரப் போராட்டத்தை, நிலப்பிரபுத்துவக் குணங்களுக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்க வேண்டும். சாதியைத் தாங்கி நிற்கும் சமூகமாகவே இந்திய சமூகம் இருக்கிறது. நேபாளத்தில் அத்தகைய போராட்டத்தையும், மாற்றத்தையும் பார்க்க முடிகிறது.’’ என்று பேசினார். இந்த வரிகளை வழிகாட்டியாகக் கொள்வதன் மூலமே, தமிழத்தில் தொடரும் சமூகக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தையும், ஏழைகளை வஞ்சிக்கும் பொருளாதாரக் கொள்கைகளையும் எதிர்க்கும் துணிவு வலுவாகும். டி.ஒய்.எப்.ஐ துணிவு கொண்ட பேரியக்கம், கடந்த 2007_ம் ஆண்டில் 11 லட்சம் உறுப்பினர்கள் தேசிய அளவிலும், 65 ஆயிரம் உறுப்பினர்கள் மாநில அளவிலும் அமைப்பில் புதிதாக சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற இடதுசாரி இயக்கங்களின் மாநாடுகளில் எதிர்பார்த்ததையும் விட அதிகமான இளைஞர்கள் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தின் முகத்தோற்றத்தை மாற்றுவதற்கு இளைஞர்களின் பங்கேற்பு மிகப்பெரிய அளவில் பங்களிப்பு செய்ய முடியும், என்பதன் அடையாளமே இவை.

அகில இந்திய அளவில் காங்கிரஸ், பி.ஜே.பி ஆகிய கட்சிகளின் தலைமை, பொருளாதாரக் கொள்கை, சமூகத்தின் மீதான அணுகுமுறை ஆகியவற்றிற்கு மாற்றாக, மூன்றாவது மாற்று என்ற முழக்கம் வலிமை பெற்று வருகிறது. நாம் மேலே பேசிய சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளில் இருந்தே ‘மூன்றாவது மாற்று என்ற’ முழக்கம் வலிமை பெறுகிறது. 2009_ம் ஆண்டு வர இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான தயாரிப்பு பணிகளை ஆளும் கட்சிகளும், பிரதான எதிர்க்கட்சிகளும் துவக்கி விட்டன. கடந்த 4 ஆண்டுகளில் துவக்கப்பட்டு செயல்பட துவங்கி உள்ள தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டம் பாதுகாக்கப்படவும், முறையாக அமலாக்கப்படவும் தேவையாக உள்ளது. வேலை காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் நிர்ப்பந்தத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது.

முறைசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு சமூகப் பாதுகாப்பை பெற வேண்டியுள்ளது. எனவே அதற்கான அரசையும், நிர்பந்திக்கும் சக்திகளையும் உருவாக்குவதில் இந்திய இளைஞர்களுக்குப் பெரும் பங்குண்டு. 54 கோடி இளைஞர்கள் 15_35 ஆகிய வயதுகளுக்கு இடையில் உள்ளனர். 2.88 கோடி இளைஞர்கள் தமிழகத்தில் உள்ளனர். எனவே வாழப்போகும் எதிர்காலத்தை காவிக் கூட்டத்திடமும், கொள்ளைக் கூட்டத்திடமும், இளைஞர்கள் ஒப்படைக்காமல் இருந்திட, முதல்பெரும் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எப்.ஐ வழக்கத்தை விட கடுமையாக உழைக்க வேண்டும்.

உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும், போராட்டங்களும் நமது பணிக்கு உரமூட்டுவதாக அமைந்துள்ளன. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், இலத்தீன் அமெரிக்காவில் பிரேசில், வெனிசுலா, பொலிவியா, அர்ஜென்டினா, ஹைதி, ஈகுவேடார், நிகரகுவா, சிலி ஆகிய நாடுகளின் வரிசையை புதிதாக அலங்கரித்துள்ள பாராகுவே, ஐரோப்பா கண்டத்தில் மாற்றத்திற்கான கதவுகளைத் திறந்துள்ள சைப்ராஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் நமது போராட்ட வலிமையை மேலும் உந்தித் தள்ளுகின்றன. முதலாளித்துவமும், தனியார் மயமாக்கலும், தாராளவாதத்தையும் ஊட்டி வளர்க்கும் ஏகாதிபத்திய உலகமயமாக்கலும் தோல்வியை நோக்கிப் பயணப்பட துவங்கியுள்ளது. அமெரிக்காவே கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டு, மீளும் வழி தெரியாமல், ஹிலாரி கிளின்டனையும், பாரக் ஒபாமாவையும் உலகுக்கு காட்டி ஜனநாயகத்தின் பேரில் கூத்து நடத்திக் கொண்டு இருக்கிறது.

எனவே நமது போராட்டம், செயல் அனைத்தும் பெரும் சக்தியாக வளர வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. உலகில் ஏற்பட்டுள்ள இத்தகைய மாற்றங்கள் தானாக உருவாகவில்லை. அமைப்புகளின் அணி திரட்டலில் நடந்தது. இந்தியாவிலும், தமிழகத்திலும் மாற்றம் தானாக வரும் என்று கனவு கட்டிலில் படுத்துக் கொண்டிருக்க முடியாது. நம் நாட்டில் ஏற்பட்டுள்ள இன்றைய நிலை, நமது நேற்றைய செயல்கள் கொண்டு வந்தவை. இன்றைய செயல்கள், நாளைய மாற்றத்திற்கான திறவுகோல்...

நாம் சேர்த்தவர்களை அமைப்பாக்குவதும், அரசியல்படுத்துவதும் நடைபெறாவிட்டால், கனவுக் கட்டிலில் இருந்து நாம் மீளவில்லை என்றே அர்த்தம். அமைப்பாக்கிடவும், அரசியல்படுத்திடவும் டி.ஒய்.எப்.ஐ மாநாடுகளைத் தீர்மானித்து உள்ளது. கிளை துவங்கி மாநிலம் வரையிலான மாநாடுகள் நடைபெறப் போகின்றன. அவற்றில் நமது கொள்கைகளையும், திட்டத்தையும் பேச வேண்டிய பொறுப்புக் கொண்ட தோழன் நீ என்பதை மறந்து விடாதே. உலகின், தேசத்தின் பாதையில் ஏற்பட்டுள்ள திசை மாற்றத்தை நம்பிக்கையோடு சுட்டிக் காட்டுவோம். எழுச்சியையும், போராட்டங்களையும் அதிகப்படுத்துவோம். கூடிக் களைய அல்ல மாநாடு. கிளை மாநாட்டில், நகர, ஒன்றிய மாநாட்டில் ஸ்தல கோரிக்கைகளுக்கும், சமூக வளர்ச்சிக்கான கோரிக்கைகளுக்கும், போராட்டங்களுக்கும் முன்னுரிமை தருவோம். பெரும் திரளாய் பங்கேற்கும் மக்கள் கூட்டத்தின் காரணமாக உரிமைகளையும், வெற்றிகளையும் பெறுவோம்.

கிளை துவங்கி மாநில மாநாடு வரை தமிழகம் முழுவதும் இளைஞர் திருவிழாக்கள் எழுச்சி கொள்ளட்டும். ஆர்ப்பரிக்கும் இளைஞர் கூட்டத்தை ஆகர்ஷிக்கும் வல்லமை டி.ஒய்.எப்.ஐக்கு உண்டு என்பதை நிரூபிப்போம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com