Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
மே 2008

ஏறி மிதிக்கும் விலைவாசி
ஆர்.சந்திரா

முன்பெல்லாம், நடுத்தர வர்க்க குடும்பங்களில் சில பொருட்களை வாங்க வேண்டும் என்று முடிவு செய்யும் போது, பட்ஜெட் தாக்கல் செய்து முடித்தபின் வாங்கலாம். அப்பொழுது தான் விலை ஏறுவது, இறங்குவது பற்றி நன்கு தெரியும் என்று கூறுவதுண்டு. பெரும்பாலும், பட்ஜெட் காலத்தில் தான் விலை மாற்றங்கள் ஏற்படும். அதைத் தாண்டி, விலை மாற்றங்கள் என்பது அடிக்கடி நிகழாது. ஆனால், சமீபகாலமாக, விலை மாற்றம் அன்றாட நிகழ்வு என்று கூறும் வண்ணம் விலை உயர்வு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சிமெண்ட், இரும்பு கம்பி என கட்டுமான பொருட்களின் விலையிலிருந்து துவங்கி, அன்றாடம் நாம் உட்கொள்ளும் பால், முட்டை, காய்கறி விலைகள் வரை தாறுமாறாக அதிகரித்துள்ளன. அரசு செயலிழந்து விட்டதா என்ற கேள்வி எழாமலில்லை. இந்த விலைவாசி உயர்வின் பின்னணி, காரணங்கள், தீர்வை இங்கே ஆராய்வோம்.

முன்னுரை:

சர்வதேச சந்தைகளில் பெட்ரோலியம் விலை பீப்பாய் ஓன்றுக்கு 1997ல், 20 டாலர்களாக இருந்தது. 2007 ஜனவரியில், இது கிட்டதட்ட 60 டாலர்களாக உயர்ந்தது. ஒரே ஆண்டில் (ஜனவரி 2008ல்) பீப்பாய் ஓன்றின் விலை 110 டாலர்களாக ஆகி விட்டது. டீசல், பெட்ரோல் விலை உயர்வு, ஒட்டுமொத்த விலைவாசி உயர்வுக்கு இட்டுச் செல்கிறது என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. ஆனால், இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த குறிப்பாக, எண்ணெய் மீது விதிக்கப்படும் வரியை விட்டு விட்டு, வேறு வரிகள் மீது அரசு கவனம் செலுத்தி நஷ்டத்தை ஈடு செய்யலாம். ஆனால், அதை செய்ய அரசுக்கு அரசியல் திராணி இல்லை. இடதுசாரிகள் அமுல்படுத்தத்தக்க பல ஆலோசனைகளை முன்வைத்தும் அரசு ஏற்க தயாரில்லை.

1) உலக சந்தையில் வேளாண் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக 2002லிருந்து, அதிலும் 2006லிருந்து, இந்த விலை உயர்வு கூடுதலாக உள்ளது.

2) உணவு தானியங்களின் விலை வெகு வேகமாக உயர்ந்துள்ளது. 2007 புள்ளி விவரங்களை நோக்கும் பொழுது, சர்க்கரை பொருட்களின் விலையும் மிகவும் அதிகரித்துள்ளது. எடுத்துக்காட்டாக: பால் மற்றும் முட்டை விலை கடந்த ஓராண்டில் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

3) பன்னாட்டு சந்தையில் அரிசியின் விலை டன் ஒன்றுக்கு 500 டாலர்களாக (மார்ச் 2008ல்) தாண்டி விட்டது. அரிசி உற்பத்தி 2007_08ல் வெறும் 0.8 மில்லியன் டன் மட்டுமே அதிகரிக்கும் என உணவு வேளாண் கழகம் தெரிவித்துள்ளது.

4) கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் சோயாபீன்ஸ் மற்றும் பாமாயில் விலை மிகவும் அதிகரித்துள்ளது. பாமாயில் விலை 2007 மார்ச்சில் டன் ஒன்றுக்கு 350 டாலர் என்றிருந்தது. தற்போது 1250 டாலர். ஆய்வின்படி, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி 2006_07 உடன் ஓப்பிடுகையில் 2007_08ல் 2சதம் குறைந்துள்ளது.

5) ரிசர்வ் வங்கி விலைவாசி உயர்வு 5 சதவீதத்திற்குள் இருக்குமென கணித்ததற்கு மாறாக, விலை வாசி உயர்வு 16.7 சதவீதத்தை தாண்டிக் கொண்டிருக்கிறது.

6) உணவு வேளாண் கழகத்தின் ஆய்வின்படி 2006ன் சராசரி விலைவாசி புள்ளிகளுடன் ஒப்பிடும் போது 2007ல் உணவுப் பொருட்களின் விலைவாசி 25 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அனைத்துப் பொருட்களின் விலையும் டாலரில் 45 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அரசு என்ன செய்கிறது?

மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகமாக உள்ளதாம். அதனால் பொருட்களின் தேவை அதிகமாகி, விலையை உயர்த்தியுள்ளதாம். மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் கொடுக்கும் இந்த விளக்கம் வினோதமாக இருக்கிறது. தென்னிந்தியர்களும் நிறைய சப்பாத்திகள் சாப்பிட ஆரம்பித்து விட்டார்களாம். அதனால், கோதுமை பற்றாக்குறை, ஏற்பட்டுள்ளதாம்.

அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொண்டாலும் தென்னிந்தியர்களின் உணவுப் பழக்கம் கடந்த 6 மாதங்களில் வெகுவாக மாறிவிட்டதா? சரத்பவார் கூறும் காரணம் ஒரு புறமிருக்கட்டும் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் என்ன சொல்கிறார்? உலக நாடுகளில் எல்லாம் இதே நிலைதான். அதனால் இந்தியா மட்டும் எதிர்நோக்கும் பிரச்னை இல்லை என்கிறார். வளர்ச்சி விகிதமும் கூடுகிறதாம். அதனால் தான் விலைவாசி உயர்வு என்கிறார். பொருளாதாரம் படித்தவர்கள் புள்ளி விவரங்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்.

விலைவாசி உயர்வுக்கு காரணங்கள் என்ன?

மொத்த விலைக்கும், சில்லரை விலைக்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகரித்துள்ளது. இந்த இடைவெளி எப்போதும் இருக்கும் என்பது உண்மை தான். இருப்பினும், கடந்த 6 மாதங்களில் இந்த இடைவெளி மிகவும் அதிகரித்துள்ளது. எடுத்துக்காட்டாக: அரிசி விலையை எடுத்துக் கொண்டால், மொத்த விலை குறியீட்டெண்ணை வைத்து கணக்கிடுகையில், மார்ச் 15, 2008, விலை உயர்வு 7.88 சதவீதமாக இருந்தது. ஆனால் சராசரி சில்லறை விலைகளை வைத்துப் பார்க்கையில், இந்த அரிசி விலை உயர்வு 20.86 சதமாக இருந்துள்ளது. வனஸ்பதியை எடுத்துக் கொண்டால், இது 8 மற்றும் 22 சதவீதமாக உள்ளது. (மொத்த விலை _சில்லரை விலை அடிப்படையில் விலைவாசி உயர்வு சதவீதத்தில் கணக்கிடுவது உண்டு. இந்த இடைவெளியை குறைக்கும் முயற்சியை அரசு மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு விதமாக அரசு விலைவாசி உயர்வை எதிர் கொண்டிருக்க முடியும். அரசே தானியங்களை நியாய விலையில் கொள்முதல் செய்திருக்க வேண்டும். உணவு பொருள் விநியோகத்திலும் அரசு தலையீடு சரியாக இல்லை. தேவை அதிகரித்தாலுமே, அதை சமாளிக்கும் வண்ணம் “உபரி இருப்பு’’ இருப்பதை அரசு உத்தரவாதம் செய்திருக்க வேண்டும்.

விலைவாசி உயர்வுக்கு மிக முக்கியமான காரணம் தனியார் வர்த்தகத்திற்கு அரசு ஊக்கமளித்துள்ளது என்பதைப் பற்றி எந்த அமைச்சரும் பேசுவதில்லை. அரசு நிறுவனமான இந்திய உணவு கார்ப்பரேஷன் எவ்வளவு கொள்முதல் செய்துள்ளது? இது தொடர்பாக, வேளாண் செலவு மற்றும் விலை கமிஷன் கூறுவதென்ன? கோதுமை இருப்பு 11 மில்லியன் டன்கள் இருக்க வேண்டும். ஆனால் 10.12 மில்லியன் டன் என கணக்கிடப்பட்டுள்ளது. 2006_07ல் அரசு 7.5 மில்லியன் டன் கோதுமையை இறக்குமதி செய்தது. உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகும் விலையை தர மறுக்கும் அரசு, மிகவும் அதிக விலை கொடுத்துக் இறக்குமதி செய்கிறது.

அரசு உணவு தானிய வர்த்தகத்தில் தனியாரை குறிப்பாக பன்னாட்டு வணிக நிறுவனங்களை அனுமதிக்கிறது. நமது உள்நாட்டு சந்தை மீது அவை ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்திய விவசாயிகளுக்கு அவர்கள் விரும்பிய வண்ணம் யாருக்கு வேண்டுமானாலும் விற்கும் சுதந்திரத்தை அரசு அளிக்கிறதாம். போதிய எண்ணிக்கையில் கொள்முதல் நிலையங்கள், தேவையான இடங்களில் இருப்பதில்லை. குறைந்தபட்ச கட்டுப்படியாகும் விலை கிட்டாத சூழலில், கிடைக்கும் விலைக்கு விற்கும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். கொள்முதல் வெகுவாகக் குறைந்துள்ளது. தனியாரை அனுமதித்ததன் விளைவு? பதுக்கல் அதிகரித்துள்ளது. ‘வேளாண் பொருள் விற்பனை கமிட்டி சட்டம்’ என்ற பழைய சட்டத்தை ஊற்றி மூடியாகி விட்ட சூழலில் உற்பத்தியாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. பதுக்கலை தடுக்கும் நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு வற்புறுத்துவதன் மர்மம் என்ன? பதுக்கல் வியாபாரிகள் புகுந்து விளையாடுகிறார்கள் என்பது தெரிந்ததே.

வேளாண் துறையைப் பற்றி கண்டு கொள்ளாமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை அரசு இப்போதாவது உணருமா? இடுபொருள் விலை உயர்வு, வேளாண் துறையில் அரசு முதலீடு குறைவு, உத்தரவாதமற்ற நீர்ப் பாசன வசதி, பன்னாட்டு கம்பெனிகளின் பொறியில், வேளாண் வர்த்தகம் சிக்கியிருத்தல் என அடுக்கிக் கொண்டே போகுமளவுக்கு நெருக்கடிகள் அதிகமாகியுள்ளன.

முன்பேர வர்த்தகம் நிலைமையை மேலும் மோசமாக்கவே உதவும். முன்கூட்டியே விலை தீர்மானிக்கப்படும் போது, ஏற்கனவே பற்றாக்குறையில் உள்ள உணவு தானியங்கள் பருப்பு, எண்ணெய் போன்றவற்றில் பாதிப்பு கடுமையாக இருக்கும். ஊக வணிகர்களை ஊக்குவிக்கும் முன்பேர வர்த்தகத்தால், தனியார் கொள்ளை லாபம் ஈட்ட முடியுமேயன்றி, நுகர்வோர்க்கு எந்த பயனுமில்லை. பதுக்கல்காரர்கள் எதிர்கால விலையை தங்களுக்கு சாதகமாக நிர்ணயம் செய்வார்கள். ஆன் லைன் வர்த்தகம் வேறு ஊக வணிகத்தை மேலும் ஊக்குவிக்கும். இப்படிப்பட்ட ‘செட்_அப்பில்’ விவசாயிகளால் பங்கு பெற முடியாது.

என்ன செய்யலாம்?

இந்திய வர்த்தகம் உலக வர்த்தகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சூழலில், நம்மை பாதுகாத்துக் கொள்ள சில நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டியுள்ளது. சீனாவும் விலைவாசி உயர்வை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. தெற்கு சீனாவில் பயிர் நாசம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு மானியம் தரப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 52 சதவிகிதம் மானியத்தை உயர்த்தியுள்ளது. சிரியா உணவு தானிய ஏற்றுமதியை முற்றிலுமாக தடை செய்துள்ளது.

உடனடியாக சில நடவடிக்கைகளையும், நீண்டகால அடிப்படையில் சிலவற்றையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. வசதியை அதிகரித்தல், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை கறாராக அமுல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் தேவை. தனியார்மயத்தை தவிர்த்து, உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வேண்டும். உணவு இறக்குமதி சார்பு தன்மையை ஏற்படுத்தும் அரசுக்கு இவை தெரியாமல் இல்லை. ஆனாலும் அமுல்படுத்த தயாரில்லை. நிலைமை இன்னும் மோசமாகும் என்பதுதான் உண்மை.

வளர்ச்சியுடன் கூடிய பணவீக்கம் என்று தற்போதைய விலைவாசி உயர்வை மத்திய அரசு நியாயப்படுத்தலாம். ஆனால், யதார்த்தத்தில், வளர்ச்சியுடன் கூடிய பணவீக்கம் இல்லை மாறாக, இது தேக்கத்துடன் கூடிய பணவீக்கம் நிலவுகிறது. அரசும், அலுவாலியா, ப.சி போன்றவர்களும், புள்ளி விபரங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தலாம். ஆனால் மக்கள் ஒன்றுமறியாதவர்கள் அல்ல. ஏழைகளை ஏறிமிதிக்கும், நடுத்தர மக்களை நசுக்கும் இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிணைந்து போராடுவோம்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com