Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
மார்ச் 2008

மக்களுக்கான மாநாடு... வித்தியாசமாய்...
நிசார் அகமது

“இது ஒரு கனாக்காலம்’’ ஆம் கொள்கை இருக்கின்றதோ, கோட்பாடு இருக்கின்றதோ.. மனம் நிறைய ஆசை இருக்கிறது என்பது போல அவரவர் அடுத்து நான் தான் முதல்வர்.. அடுத்து எங்கள் கட்சிதான் ஆட்சியில் என விதவிதமாய் கொடி-களைப் பறக்கவிட்டு வேக வேகமாய் சிலர் கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தி வருகின்றனர். “என் கையில் மட்டும் ஆட்சி கிடைத்தால்’’ எனவும் “நாப்பதும் என் கையில் வந்தால்’’ எனவும், ஏதோ உலகையே புரட்டிப் போட்டுவிடுவதைப் போல ஒருவர் திருமண விழாக்களில் சபதம் போட்டு வருகிறார்.

விட்டதைப் பிடிக்கும் பேராசை வெறி சூதாட்டத்தில் மட்டுமல்ல. அரசியலிலும் தான் என்பதைப் பறைசாற்றும் வகையில் ஒருவர் “வாழ்நாளில் நான் செய்யக் கூடாத தவறைச் செய்துவிட்டேன். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இனி ஒருபோதும் இது போன்ற தவறை மீண்டும் செய்ய மாட்டேன்’’ என பல லட்சம் மக்கள் முன்னிலையில் பகிரங்கமான மன்னிப்பு கோரினாரே அவர், மீண்டும் அதே தவறைச் செய்ய துடியாய் துடித்துக் கொண்டுள்ளார்.

இப்படி முதலமைச்சர் கனவிலும், பிரதமர் கனவிலும், மிதந்து கொண்டிருப்பவர்கள், மக்களைப் பற்றியோ, மக்கள் படும் இன்னல்களைப் பற்றியோ, உண்மையில் கவலைப்படுகின்றவர்களாக இல்லை. மாறாக, பாசாங்கு செய்பவர்களாக மட்டுமே இருக்கின்றனர். இப்படி திரும்பிய பக்கமெல்லாம் வெத்து ஆர்ப்பாட்டங்களும், பகட்டு விளம்பரங்களும் செய்யப்பட்டு வரும் இன்றைய தமிழக சூழலில், ஆர்ப்பாட்டமோ, பகட்டோ, வெளி வேஷமோ, துதிபாடலோ கொஞ்சம் கூட இல்லாமல்... ஒரு மாநாட்டுப் பணிகள் அதுவும் அகில இந்திய மாநாட்டுப் பணிகள், திட்டமிட்டபடி வேக... வேகமாக நடைபெற்று வருகின்றன.

கோவை மாவட்டத்தின் பட்டிதொட்டியெல்லாம், திரும்பிய பக்கமெல்லாம் வண்ணமயமான பெரிய, பெரிய சுவர் விளம்பரங்கள் கோவையில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 3 முடிய நடைபெற உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் 19 வது அகில இந்திய மாநாட்டின் நோக்கங்களை பறைசாற்றிய வண்ணமுள்ளன. எந்தவொரு விளம்பரத்திலும்... “அம்மா அழைக்கிறார்’’ என்றோ “அய்யா அழைக்கிறார்’’ என்றோ “பிரகாஷ் காரத் அழைக்கின்றார்’’ என்றோ “ஜோதிபாசு அழைக்கிறார்’’ என்றோ குறிப்பிடப்படவில்லை. தனிநபர் துதிபாடவோ... முன்னிலைப்படுத்தவோ கிஞ்சிற்றும் காணப்படாத அந்த விளம்பரங்களில் மனித குல விடுதலைக்கான தத்துவங்களை உலகிற்களித்த தத்துவ ஆசான்களின் முகங்களும் பெயர்களுமே.. மின்னலெனப் பிரகாசிக்-கின்றன.

“உலக சமாதானம் காக்க ஓங்கிக் குரல் கொடுப்போம்’’ ஏகாதிபத்தியக் கோரப்பிடியிலிருந்து உலக மக்களை பாதுகாப்போம், தேச விடுதலையின் லட்சியங்களை உயர்த்திப் பிடிப்போம், “பஞ்சம், பட்டினி, வறுமை, ஏழ்மை, கல்வியின்மை, வேலையின்மைக்கு முடிவு காண்போம்’’, “மதவெறியை.. இனவெறியை.. மாய்த்தொழிப்போம்’’ சாதி மத பேதங்களை சாய்த்தழிப்போம் என உலகின் வளர்ச்சிக்கான, தேச நலன்களுக்கான, மக்கள் ஒற்றுமைக்கான கோஷங்களையே இந்த விளம்பரங்களை படிப்பவர் மனதில் பளிச்செனப் பதிந்துவிடுகின்றன.

“நாங்கள் எழைகளுக்காகவே பிறந்திருக்கிறோம்’’. நாங்கள் ஏழைகளுக்காகவே மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறோம் என பேசிக் கொண்டே டாடாக்களிடமும், பிர்லாக்களிடமும், கோடி கோடியாய்.. கேட்டு வாங்கி அவர்களுக்காகவே கட்சிகளை நடத்தி வருபவர்களுக்கிடையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய அகில இந்திய மாநாட்டிற்கு... மக்களிடையே.. வீடு வீடாகப் போய் நிதிவசூல் செய்து வருகின்றது. மக்களும்... நீங்கள் தான் எங்களுடைய தோழர்... நீங்கள் தான் எங்களுக்கு பாதுகாப்பு என தானாகவே முன்வந்து... ஐந்தும், பத்தும், ஐம்பதும்... என நிதியை வாரி வழங்கி வருகின்றனர். பல இடங்களில் வீடுகளுக்குள் அழைத்து உட்கார வைத்து.. டீயும், காபியும் கொடுத்து, காசும் கொடுத்து மகிழ்ச்சியுடன் அனுப்பி வைப்பதே சர்வசாதாரணமாக காண முடிகின்றது. யோக்கியக் காரன் வர்ரான் சொம்பை எடுத்து உள்ளே வை... என சில கட்சிக்காரர்களைப் பார்த்தாலே மக்கள் கதவுகளை சாத்திக் கொள்ளும் இந்தக் காலத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு கிடைத்து வரும் வரவேற்பும், மரியாதையும் அலாதியாகவே உள்ளது.

சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மட்டுமின்றி சிறு குறு தொழிலதிபர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் - பொருளாதார நிலைபாடுகளாலும், இடைவிடாத போராட்டங்களாலும் தான் தங்களுடைய தொழில்கள் நீடிக்கின்றன என்பதை உணர்ந்து தாங்களாகவே முன் வந்து மாநாட்டிற்கான உதவிகளைச் செய்து வருகின்றார்கள். அதே போலவே தான் சிறு வணிகர்களும், தொழிலாளர்களைப் பொறுத்தவரை சொல்லவே வேண்டியதில்லை... தங்களுடைய ஊதியத்தில் ஒரு நாள் ஊதியம்... ஏன் அதற்கும் மேலும் என தங்களுடைய மாநாட்டிற்கான நிதியை மனநிறைவோடு குவித்து வருகின்றனர்.

மாநாட்டின் முத்தாய்ப்பாக நடக்கவுள்ள செந்தொண்டர் - சீருடை அணி வகுப்பிற்கான பயிற்சியும் ஏற்பாடுகளும், தமிழகம் முழுவதும் ஜரூராக நடைபெற்று வருகின்றன. சின்னஞ்சிறு சிறார் முதல் பள்ளி செல்லும் பாலகர் மட்டுமின்றி ஒரு மிகப் பெரிய இளைஞர் பட்டாளமே மிடுக்காக பயிற்சி எடுத்து வருகின்றன. தொழிலாளி வர்க்கத்தின் அளப்பரிய தியாகங்களின் மூலம் ஏற்கனவே சிவந்துள்ள கோவை மண்ணை, அந்த தியாகிகளின் வழித்தோன்றல்கள் ஏப்ரல் 3 ல் மேலும் சிவப்பாக்க காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

“தலைவன் சொல்லே வேதவாக்கு’’ “தலைவியின் முச்சுக் காற்றே எங்கள் கொள்கை கீதம்’’ என தங்கள் கட்சிகளின் கொள்கை, கோட்பாடுகளை தனிநபர்களின் காலடியில் வைத்துள்ள கட்சிகளுக்கிடையே, ஒரு மாநாட்டிற்கும், அடுத்த மாநாட்டிற்கும் இடையிலான இடைப்பட்ட காலத்தில் கட்சி, எப்படிப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் தங்களுடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என அனைத்தையுமே கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் தீர்மானிக்க முடியும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மட்டுமே பார்க்க முடியும்.
அகில இந்திய மாநாட்டிற்கான அரசியல் கொள்கை தீர்மானம் வடிவமைக்கப்பட்டு, அது பகிரங்கமாக வெளியிடப்பட்டு, அந்தந்த மாநில மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, கீழ் மட்டத்தில் உள்ள ஒவ்வொரு யூனிட்டிற்கும் அது விநியோகம் செய்யப்பட்டு, அதை ஒவ்வொரு யூனிட்டும் படித்து விவாதித்து, வார்த்தைக்கு வார்த்தை திருத்தங்-களையும், ஆலோசனைகளையும் வழங்கும் வாய்ப்பு வேறு எந்த அரசியல் கட்சியிலாவது உண்டா.. என்ன?

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டால், அறிக்கையை முழுமையாகப் படித்து விட்டீர்களா? அறிக்கையின் மீதான ஆலோசனை மற்றும் திருத்தங்களை அனுப்பிவிட்டீர்களா? என விவாதித்துக் கொள்வதன் மூலம் அவர்களுடைய கட்சிப் பிடிப்பையும், கொள்கையின் மீது அவர்கள் கொண்டுள்ள அக்கறையும் வெளிப்படுவதைக் காணலாம்.

முடிந்த வரை கட்சியின் தொண்டர்களை மூடர்களாகவே வைத்திருக்க வேண்டும் எனவும், அவர்கள் சொல்லுகின்ற வேலையைச் செய்பவர்களாக மட்டுமே இருந்தால் போதும் எனவும், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களை அமுக்கியே வைத்திருக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு மத்தியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய எல்லாவித நடைமுறைகளிலும் வித்தியாசமாகவே இருப்பதை இந்த மாநாட்டின் எல்லா நடைமுறைகளிலும் காண முடிகிறது.

அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் உலகையே தன்னுடைய காலடியின் கீழ் கொண்டு வந்து அடிமைப்படுத்தி, அடக்கியாள நினைக்கும் இன்றைய கால கட்டத்தில், உலக மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒளிக்கீற்றாய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டு வருகின்றது,
கோடிக்கணக்கான மக்கள் ரத்தம் சிந்தி தியாகம் புரிந்து பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தை அமெரிக்காவின் காலடியில் வைக்க இந்திய அரசு துடியாய் துடித்து வரும் நிலையில், நாட்டின் சுயாதிபத்தியம், இறையாண்மை பாதுகாக்கப்படவும், சுதந்திரமான வெளிநாட்டுக்கொள்கை உருவாக்கப்பட்டு, இந்திய தேசம் உலக அரங்கில் தலை குனிவின்றி பீடு நடை போடவும், “ஏழை மேலும்.. மேலும் ஏழையாகிக் கொண்டே இருக்கின்றனர், பணக்காரர்கள் மேலும்... மேலும் பணக்காரர்களாகிக் கொண்டே இருக்கின்றனர்’’ என மீண்டும் மீண்டும் இதே பாடலை பாடிக்-கொண்டிராமல் நாட்டின் எல்லா தரப்பு மக்களின் வாழ்வும் மலரும் வகையிலான ஒரு அரசியல் - பொருளாதார - சமுக அமைப்பை உருவாக்கிட பாடுபட்டு வரும், இந்த மாநாட்டின் முடிவுகளை உலகமே எதிர் நோக்கியுள்ளது.

இப்படிப்பட்ட அருமை, பெருமைகளுக்குரிய மகத்தான மாநாடு கோவையில் நடப்பதைப் பொறுத்துக்கொள்ள இயலாத சிலர் “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டால் மக்களுக்கு தொல்லைகள் உருவாகும். லட்சக்கணக்கானவர்கள் கோவைக்கு வந்தால் கோவை தாங்காது... மாணவர்களின் படிப்பு கெடும்’’ என நீலிக்கண்ணீர் வடித்து மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என கூப்பாடு போடுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்களால் கோவைக்கும் கோவை நகர மக்களுக்கும் கடந்த காலத்தில் எப்படிப்பட்ட துன்பங்கள் வந்தன என்பதை கோவை மக்கள் மட்டுமல்ல நாடே நன்கறியும். மாணவர்களைப் பற்றியும், மக்களைப் பற்றியும் இவர்கள் நீலிக்கண்ணீர் வடிப்பது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாகத்தான் உள்ளது. மாணவர்களைப் பற்றியும், மக்களைப் பற்றியும் கூப்பாடு போடும் இவர்கள் மாணவர்களின் நலன்களைப் பற்றியும் மக்களுடைய நலன்களைப் பற்றியும் என்றாவது கவலைப்பட்டதுண்டா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பலமும், செல்வாக்கும் வெளிப்பட்டு எங்கே தங்களுடைய குட்டும் பலவீனமும் அம்பலமாகிவிடுமோ என்கிற அச்சத்தில் தான் அவர்கள் இவ்வாறு கூப்பாடு போடுகின்றனர். உலக வரலாற்றில் கம்யூனிஸ்ட்கள், சந்தித்த தடைகளும், இடையூறுகளும் கொஞ்ச நஞ்சமல்ல. கொன்று குவித்தாலும், தீயிட்டுப் பொசுக்கினாலும் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து வரும் பீனிக்ஸ் பறவை போன்றது தான் கம்யூனிஸ்ட் இயக்கம். ஆயிரமாயிரம் தடைகள் வந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு ஜாம், ஜாம் என்று நடந்தேறும் என்பதும், உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு, இந்தியர்களுக்கும் சரியான திசை வழியைக் காட்டி தொடர்ந்து களத்தில் நின்று போராடி மக்கள் நலன் காக்கும் என்பதும் வெள்ளிடை,
“ஆயிரம் கைகள் தடுத்தாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை’’


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com